ஜன கண மன

நாவல் பிறந்த கதை
காந்தி
காந்தி
Published on

இடுப்பில் தொங்கும் கடிகாரமும், இதழில் மிளிரும் சிரிப்பும், வலக்கையில் ஒரு புத்தகமும், வரிந்து கட்டிய அரை வேட்டியுமாய், நடக்கிற காந்தியின் ஓவியம் ஒன்று என் பாட்டன் வீட்டுக் கூடத்தில் நடு நாயகமாகத் தொங்கும். அதன் இடமும் வலமுமாய் சற்றே அதை விடச் சிறியதாய், நேரு,படேல், போஸ், அபுல் கலாம் ஆஸாத், மாளவியா, தாகூர், பாரதி படங்கள். அகத்திற்கு வரும் எவருக்கும் தாத்தாவின் அரசியல் சார்பு என்ன என்பது ஐயம் திரிபற அவற்றைப் பார்த்த நொடியில் விளங்கிவிடும்.எட்டு வயது வரை அந்தப்  படங்களை அன்றாடம் பார்த்து வளர்ந்தவன்  நான்.அந்த வீட்டையும் ஊரையும் விட்டுப் பெயர்ந்து வந்த வெகுநாள்களுக்குப் பின்னும் அந்தச் சித்திரங்கள் மனதில் தொங்கிக் கொண்டு கிடந்தன. சற்று வளர்ந்து பாடப்புத்தகத்தில் காந்தியைப் பற்றிப் படித்த போது அவற்றோடு ஒரு கேள்வியும் சேர்ந்து மனதில் தொங்கத் தொடங்கியது. அது:

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

பனிக்கட்டியுள் உறங்கும் நீர் போல, மனதில் சலனமின்றிக் கிடந்த அந்தக் கேள்வி, ஒருநாள் உடைந்து பெருகியது.

அந்த நாளை இன்றும் மறக்க முடியவில்லை. காரணம் அம்மா. முகத்துச் சதை கோண, விம்மலோடு அவள் எழுந்து விரைந்த அந்தத் தருணம். எங்கள் வீட்டுச் சாப்பாட்டு மேஜை ரத்தமில்லாத யுத்தகளம். உற்சாகமான சர்ச்சை மடம். இரவு உண்ண ஒரு சேர எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என்பது ஓர் எழுதப்படாத ஆனால் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி. சினிமாக்கள் எங்கள் உரையாடல்களை அப்போது அதிகம் நிரப்பியிருக்கவில்லை. வாசித்தப் பத்திரிகைத் துணுக்குகள், செய்திகள், குட்டிக் கதைகள், ஜோக்குகள், கலாய்ப்புகள், கண்ட கார்ட்டூன்கள் எனப் பொதுவாகப் பலநேரம் பகிரப்பட்டாலும் சில நேரம் அங்கே அரசியல் சூடு பறக்கும், இலக்கியம் பரிமாறப்படும், சரித்திரம் மெல்லப்படும்.

என்ன நடந்தது, யார் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும், எங்கு தவறினார்கள், ஏன் தவறினார்கள், என்று தர்க்கங்களோடும் தரவுகளோடும், ‘நடைமுறையில் சரிப்படாத சிறுபிள்ளைகளின் லட்சிய நோக்கோடு' வாதிடும் நான் எப்போதும் ‘மிஸ்டர் கோணக் கட்சி' அனுபவம், உலக சரித்திரம், விரிந்த வாசிப்பு, இந்தச் சூழ்நிலையில் இதுதான் சாத்தியம், மனிதர்கள் என்றால் சற்று முன் பின் இருப்பார்கள் என்ற பெரிய மனம், இவை கொண்டு அப்பா எனக்கு / எங்களுக்கு பதில் சொல்வார். அன்று இந்திய அரசியலில் ஒரு புயல் மையம் கொண்டிருந்தது. அவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

அநீதியான அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு ராணுவம் கட்டுப்பட வேண்டியதில்லை; அவரவர் மனசாட்சியின் அடிப்படையில் முடிவெடுத்தால் போதும் என்ற ரீதியில் அவர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்

‘‘காந்தியோடு பழகியவர். எத்தனை பெரிய மனிதர், அவர் இப்படிப் பேசலாமா?'' என்று அப்பா கவலைப்பட்டார்.

‘‘அவர் சொல்வது முற்றிலும் சரி. நேர்மையை இழந்து விட்ட அரசாங்கம் ஆளும் தகுதியை இழந்து விட்டது அதன் ஆணைகளுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. இன்று காந்தி இருந்திருந்தால் அவர் கூட அப்படித்தான் சொல்லியிருப்பார்'' என்று நான் சொன்னேன் அப்பா என் முகத்தை அரைக் கணம் கூர்ந்து பார்த்தார். பின் சொல்ல ஆரம்பித்தார்:

‘‘உனக்குத் தெரிந்திராது மாலன். ஒரு கட்டத்தில், பெஷாவர் என்ற இடத்தில் கார்வாலி ரெஜிமெண்ட் என்ற இந்திய ராணுவம், தங்களது எஜமானர்களான பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக, மக்களோடு சேர்ந்து கொண்டு கிளர்ந்து எழுந்தது. கிட்டத்தட்ட ஒருவார காலம் பிரிட்டீஷ் அரசுக்குத் தண்ணி காட்டியது. அரசு அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை அவிழ்த்து விட்டது. அவர்களைக் கைது செய்து அந்தமானில் கொண்டு அடைத்தார்கள். பெஷாவர் எங்கே, அந்தமான் எங்கே!. பின்னாளில் காந்தி இர்வின் பிரபுவோடு ஓர் ஒப்பந்தம் போட்டார். என்னவென்று? அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், கார்வாலி ரெஜிமெண்ட் தவிர.''

மாலன்
மாலன்

‘‘துரோகம்!'' என்று என் தம்பி கத்தினான். பொருட்படுத்தாமல் அப்பா சொல்லிக் கொண்டு போனார்:

‘‘பம்பாயில் நடந்த ‘நேவல் மியூட்டினியை'க் கூட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எதற்குச் சொல் கிறேன் என்றால் ராணுவம் புரட்சி செய்வதை அவர் ஒருபோதும் ‘அரசியலாக' ஏற்றுக் கொண்டதில்லை.''

அடுத்த சில நிமிடங்களில் காந்தி பகத்சிங்கின் விடுதலைக்கு உதவ மறுத்ததைச் சுட்டி ‘நம்பிக்கை துரோகி' என்று காந்தி மீது ஒரு கல் வந்து விழுந்தது. அவர் சுபாஷ் போஸுக்கு எதிராக பட்டாபி சீதாராமய்யாவை ஆதரித்தது, பெரும்பாலான மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் படேலுக்கு ஆதரவாக நின்ற போதும், அவர் நேருவை பிரதமராக ஆக்கியது இவற்றைச் சுட்டி அவர் ஒரு ஜனநாயக விரோதி என்று இன்னொரு தாக்குதல் நடந்தது. அவர் தனது பிரம்மச்சாரிய விரதத்தின் உறுதியைச் சோதிக்க மேற்கொண்ட சோதனைகள் வரை அவரது மீது கற்கள் வீசப்பட்டன. வீசியவர்கள் அவ்வளவு பேரும் சுதந்திரத்திற்குப் பின் பிறந்த ‘சிறுவர்கள்' அப்போதுதான் அது நடந்தது கட்டுக்கடங்காமல் வெடித்துப் பீறிடுகிற விம்மல் எழுந்தது. நாசி விரிய, கன்னத்துச் சதை கோணி முகம் சிவக்க, கண்களில் நீர்கட்டித் ததும்ப, அம்மா விசும்பி விசும்பி அழுதார். ஏதோ சொல்ல வாய் திறந்தார். ‘‘போங்கடா!'' என்பதைத் தாண்டி வார்த்தை வரவில்லை. தொண்டையை கனமான துக்கம் கவ்வியிருந்தது. சாப்பாட்டை அப்படியே கைவிட்டு அவசரமாக எழுந்து அடுத்த அறைக்குள் போய் விட்டார்.

அவர் ஏதும் சொல்லவில்லை. ஆனால் காந்தியைப் பற்றிய இந்த விமர்சனங்களால் அவர் மிகவும் புண்பட்டுவிட்டார் என்பது அனைவருக்குமே புரிந்தது. இந்த நியாயமான அரசியல் விமர்சனத்திற்கு அம்மா ஏன் புண்பட வேண்டும்? அவர் தொட்டாற் சுருங்கி அல்ல. இதை விடக் கடுமையாக இந்திரா காந்தியும் ராஜாஜியும் விமர்சிக்கப்பட்ட போது அவர் சரிக்குச் சரியாக பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால் இன்று ஏன் இப்படி நடந்து கொண்டார்? யோசிக்க ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல விடை துலங்கிற்று. சுதந்திரத்திற்கு முந்தைய தலைமுறை அவரை ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. தலைவராகக் கூடப் பார்க்கவில்லை. அதற்கும் ஒரு படி மேலே, எந்தக் கேள்வியும் கேட்காமல், தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக, தெய்வ நிலையில் வைத்துப் பார்த்துத் தங்களை ஒப்படைத்தார்கள். மனிதர்களால் தொடமுடியாத சிகரங்களைத் தொட்ட மாமனிதன் என்ற வியப்போடும் பக்தியோடும் பார்த்தார்கள். இந்தப் புரிதல் நேர்ந்ததும் அடுத்தொரு கேள்வி மனதில் எழுந்தது. மாமனிதனாக அவரைப் பார்த்த அவர்களால் ஓர் அரசியல்வாதியாக அவரைப் பார்க்க முடியவில்லை. சரி, அவரை அரசியல்வாதியாகப் பார்க்கும் இளைய தலைமுறை அவரை ஒரு மனிதன் என்ற கோணத்தில் பார்க்க முயன்றிருக்கிறதா?

அவரது செயல்களின் சரி, தப்பு, நியாயம், முரண் இவற்றை விலக்கி வைத்து, அவரைச் செலுத்திய மனப்போக்குகள், அதன் பின்னிருந்த அவரது இயல்புகள் இவற்றை வாசிக்கவும் யோசிக்கவும் தொடங்கினேன். அவருக்கு சோதனை ஏற்பட்ட தருணங்கள், அவற்றை அவர் எதிர்கொண்ட விதம், அப்போது அவர் நடந்து கொண்ட விதம் இவற்றைத் தேடி வாசித்தேன். சில பிரமிப்பாக இருந்தன. சில நெகிழ்ச்சியாக இருந்தன. சில சிரிப்பிற்கிடமாக இருந்தன. அப்போது அந்தக் கேள்வி மீண்டும் எழுந்தது. இவ்வளவு உயர்ந்த மனிதனை ஏன் கோட்ஸே கொன்றார்?

கோட்ஸேயைப் பற்றியும் படிக்கத் தோன்றியது. ஆனால் அதிகம் படிக்கக் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றைப் படித்த போது இருவருக்குமிடையே அபூர்வ ஒற்றுமைகள் இருந்தன.தன் மனதிற்குச் சரியென்று பட்டதை எத்தனை எதிர்ப்புக்கும், இகழ்ச்சிக் கும், ஏன் உயிருக்கும் கூட, அஞ்சாமல் வெளிப்படையாகச் சொல்லும் நேர்மை இருவருக்கும் இருந்தது. இருவரும் தத்தம் கருத்துக்களுக்காகப் பத்திரிகை நடத்தினார்கள். எதிரெதிரானவை என்றாலும் இருவருக்கும் தேசத் தைப் பற்றிய கனவு ஒன்று இருந்தது. காந்தி பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார். கோட்ஸே பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.காந்தி எளிமையை விரும்பினார். கோட்ஸே எளிய உடைகள், எளிய வசிப்பிடம், கயிற்றுக் கட்டில் என எளிய வாழ்க்கை வாழ்ந்தார். காந்தி தனக்கென சொத்துக்கள் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.கோட்ஸே தன் குடும்பச் சொத்தில் தனக்குரிய உரிமைகளை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்தார். இடவலமாக மாற்றிக் காட்டுகிற கண்ணாடி பிம்பம் போல இருவரும்.

காந்தியைப் பற்றி நமக்கு நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது. கோட்ஸேவைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அவருடைய தரப்பை அறிந்து கொள்ள மிகவும் மெனக்கிட வேண்டிருந்தது. அவர் 1949ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலத்தைத்தேடிப் பல இடங்களில் அலைந்தேன். அது முப்பது ஆண்டுகளுக்கு அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. நான் இந்த நாவலை எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதினேன். அப்போது அது நூலாகவோ பத்திரிகைக் கட்டுரையாகவோ வெளி வந்திருக்கவில்லை. அல்லது எனக்குக் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது இரு நாடுகளும்  சொத்துக்களையும் (கடன்களையும்) பிரித்துக் கொள்வது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்தியா பாகிஸ்தானுக்கு 75 கோடி ரூபாய் தர வேண்டும். முதல் தவணையாக இந்தியா இருபது கோடி கொடுத்தது. பாக்கி 55 கோடியைக் கொடுப்பதற்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற கூலிப்படை காஷ்மீரைத் தாக்கியது. அந்தச் சூழ்நிலையில் அந்தப் பணத்தைக் கொடுத்தால் அது இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று எண்ணிய இந்திய அரசு அதைக் கொடுக்க மறுத்தது. பாகிஸ்தான் மவுண்ட் பேட்டனிடம் முறையிட்டது, மவுண்ட்பேட்டன் காந்தியை அணுகினார். காந்தி அந்தப் பணம் உடனடியாக பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். பின் உண்ணாவிரதம் தொடங்கினார். கோட்ஸே செய்த கொலைக்கான காரணங்களில் ஒன்று இந்த உண்ணாவிரதம்.

இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்களைப் பார்வையிட விரும்பினேன். கணையாழி கஸ்தூரி ரங்கன் தன்னிடமிருந்த தட்டச்சு செய்யப்பட்ட பிரதியைக் கொடுத்து உதவினார். அப்போது அவரிடம் கோட்ஸேயின் வாக்குமூலத்தைப் பார்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டேன். அவர் ஒரு வேளை நேருவின் வீட்டிலுள்ள நூலகத்தில் இருக்கலாம் என வழி காட்டினார். இறுதியில் நேரு வசித்த இல்லத்தில் உள்ள நூலகத்தில், அவரது சேகரிப்புகளில் இருந்த ஆவணங்களில் அது எனக்கு அகப்பட்டது.

அந்த வாக்குமூலம் வாசிக்கும் எவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது. அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான கோஸ்லா, கோட்ஸே தன் வாதங்களை வைத்த காட்சியைப் பற்றி எழுதுகிறார்: ‘‘அவர் பேசி முடித்ததும் நீதிமன்ற அறையில் கனத்த மௌனம் நிலவியது. வழக்கைக் காண வந்திருந்தவர்கள் நெகிழ்ந்து போயிருந்ததைக் காணவும் கேட்கவும் முடிந்தது. பெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.ஆண்கள் தொண்டையைச் செருமிக் கொண்டு தங்கள் கைக்குட்டைகளைத் தேடினார்கள். விசும்பல்களும் அடக்கிக் கொள்ளப்பட்ட செருமல்களும் அந்த அமைதிக்கு மேலும் கனமேற்றின. அன்று அங்கு வந்திருந்த பார்வையாளர்களைக் கொண்டு ஜூரி குழு அமைக்கப்பட்டிருக்குமானால் மிகப் பெரும்பான்மையாக அவர்கள் கோட்ஸே குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளித்திருப்பார்கள்.'' இந்த நாவலில் நான் காந்தி குறித்தோ, கோட்ஸே குறித்தோ தீர்ப்பேதும் எழுதவில்லை.சம்பவங்களையும் கொலைக்குப் பின்னிருந்த திட்டத்தையும் திரட்டி விவரித்திருக்கிறேன்.

காந்தி படுகொலை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. காந்தி என்றில்லை, எந்த மனிதனின் உயிரும் வன்முறையையோ அதிகாரத்தையோ பயன்படுத்திப் பறிக்கப்படுவதில் எனக்கு சம்மதமில்லை. அதே போல கோட்ஸேவின் வாதங்களைப் பரிசீலிக்காமல், உருவாக்கப்பட்ட பிம்பங்களின் அடிப்படையில் இகழ்வதையும் புகழ்வதையும் நான் நியாயம் எனக் கருதவில்லை.

உயிரைப் பறிப்பதை மாத்திரம் நம்மில் பலர் கொலை என்று கருதி வருகிறோம். ஆனால் மனிதன் என்பவன் எலும்புகளாலும் தசைகளாலும் மட்டுமே ஆனவன் அல்ல. அவன் எண்ணங்களால் ஆனவன். நினைவுகளில் வாழ்பவன். காந்தியின் கொள்கைகள், எண்ணங்கள் பலமுறை கொலை செய்யப்பட்டிருக்கின்றன. காங்கிரஸைக் கலைத்து விட வேண்டும் என்று அவர் தனது இறுதி நாள்களில் சொன்னார். அதன் பின் காங்கிரஸ் ஏறத்தாழ 50 வருடங்கள் நாட்டை ஆண்டது. உலகத்திற்காக இந்தியாவும், இந்தியாவிற்காக ஒவ்வொரு தனிமனிதனும் தியாகம் செய்ய வேண்டும் என்றார் காந்தி. எங்கும் சுயநலம் தலை விரித்தாடுகிறது. இந்தியப் பொருளாதாரம் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்று சொன்னார். உலகமயப் பொருளாதாரத்தை நாம் முப்பது ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறோம். இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு அமெரிக்கா அணுகுண்டைக் கைவிட வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.1974ல் பொக்ரானில் அந்த அறிக்கையையும் சேர்த்து நாம் வெடித்தோம்.

காந்தியைக் கொல்வது என்றால் அவரது உடலைக் கொல்வது மட்டும்தானா? இந்த நாவலைப் புனைவற்ற புனைவு (Non fiction - fiction) என்ற வடிவில் கட்டினேன். அதாவது புனைவின் மொழியில் புனைவற்ற ஒன்றைச் சொல்வது. இன்னும் எளிதாகச் சொல்வதென்றால் இதில் வரும் பாத்திரங்கள் (ஒன்றே ஒன்றைத் தவிர) யாவரும் உண்மையே. சம்பவங்களும் நிகழ்ந்தவையே. ஆனால் உரையாடல்கள் புனைவு. இந்த வகைப் புனைவற்ற புனைவுகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நார்மென் மெயிலர், டாம் உல்ஃப் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழில் நான் மேற்கொண்ட முயற்சி இது.

இது எழுதப்பட்டு நாற்பது வருடங்களாகின்றன. இன்றும் பலர் நினைவில் தங்கியிருக்கிறது என்பதற்குச் சாட்சியாக அது பல பதிப்புகள் கண்டுவிட்டது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. மின்னூலாகவும் ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது.

அவற்றையெல்லாம் விட வழக்கமான காதல்கதைகளே நாவல் என்ற பெயரில் தொடர்கதைகளாக வந்து கொண்டிருந்த காலத்தில் அவற்றிலிருந்து விலகி வித்தியாசமான பொருளில் வித்தியாசமான வடிவில் நான் தமிழ்ப் பத்திரிகை உலகிற்கும் இலக்கிய உலகிற்கும் அளித்தேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜனவரி 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com