இங்கிலாந்து பாராளுமன்றத்திற்குச் செல்பவர்கள் இன்றும் பார்க்கலாம். ஆளும் கட்சி வரிசை, எதிர்க்கட்சி வரிசை இவற்றின் முன்னால் தரைக் கம்பளத்தில் நீண்ட சிவப்புக் கோடு வரையப்பட்டிருக்கும்.
அந்தக் கோட்டிற்குள் நின்றுதான் உறுப்பினர்கள் பேச வேண்டும். இரண்டு வரிசைகளுக்குமிடையேயான தூரம் 390 செ.மீ. இருக்க வேண்டும் என்று ஒரு விதி முன்பு இருந்தது. 390 செ.மீ என்பது இரண்டு வாள்களின் நீளத்துடன் கூடுதலாக ஒரு அடி.
காரணம் ஒரு காலத்தில், இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதங்கள் முற்றி ஓரிரு முறை ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளுக்கிடையே கத்திச்சண்டைகள் நடந்ததுண்டு எனச் சொல்வார்கள். ஜனநாயகத்தில் கத்திப் பேசலாம், ஆனால் கத்திகள் பேசக் கூடாது, ‘பேச்சு பேச்சாகத்தான் இருக்கணும்' என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த 390 செ.மீ. விதி உருவாக்கப்பட்டது.
இப்போது அங்கே மாண்புமிகு உறுப்பினர்கள் கத்திகளை எடுத்து வருவதில்லை என்பதாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், (இத்துனூண்டு தேசத்திற்கு 650 எம்.பிக்கள்!) வரிசைகளைக் கூட்ட வேண்டியிருந்ததாலும் இந்த விதி அவ்வளவு கண்டிப்பாகப் பின்பற்றப் படுவதில்லை.
ஜனநாயகத்தின் தொட்டிலான இங்கிலாந்தில் சுகப்பிரசவத்தில் ஜனநாயகம் ஜனித்துவிடவில்லை. 1642ல் அரசருக்கும் பாராளுமன்றத்திற்கும் (அங்கு 1341லேயே ஒரு மக்கள் பிரதிநிதித்துவ சபை இருந்தது) யுத்தம் நடந்து ‘ஆயுத கேஸ்' -ஆகத்தான் ஜனநாயகம் பிறந்தது. அங்கு மட்டுமல்ல, மேற்குலகில் பல நாடுகளில் அப்படித்தான். எதேச்சாதிகாரம், மன்னராட்சி, ஜனநாயகம் என்ற வளர்ச்சிப்படிநிலைகள் 19, 20 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாறுகள் எங்கும் விரவிக் கிடக்கின்றன.
ஆனால் இந்திய மக்களுக்கு ஜனநாயகம் எதிர்பாராத தருணத்தில் தங்கத் தட்டில் வைத்து அளிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கல்வி பயின்ற நீதிமான்கள், காந்தி, நேரு, அம்பேத்கர், அதை
சாத்தியமாக்கினார்கள். புரட்சி நடந்து, வர்க்கங்கள் புரண்டு, அதிகாரங்கள் கை மாறி ஒரு இயல்பான பரிணாம வளர்ச்சியில், இங்கு ஜனநாயகம் அறிமுகமாகிவிடவில்லை.
வீட்டுக்கு ஒரு தலைவன் (தகப்பன்), ஜாதிக்கு ஒரு தலைவன் (தலைக்கட்டு), ஊருக்கு ஒரு தலைவன் (நாட்டாமை) என்று தனிமனிதர்களின் ஆளுகையின் கீழ் சமூகம் இருந்தபோது இங்கு ஜனநாயகம் அறிமுகமானது. அதுவரையில் இந்தத் ‘தந்தை'கள் எல்லா நல்லது கெட்டதிலும் முடிவெடுப்பார்கள். தன்னைச் சார்ந்தவர்களுக்கு எது நீதி என்று முடிவு செய்வார்கள். நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்கள் முற்றிலும் மாறிவிடாத நிலையில் நாம் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டோம்.
நாம் என்றால் இந்தியா மட்டுமல்ல. தெற்காசியாவே அப்படித்தான். இந்தியாவில் நேருவின் மகளும், பேரனும், பாகிஸ்தானில் புட்டோவின் மகளும், இலங்கையில் சாலமேன் பண்டாரநாயகவின் மனைவியும், மகளும், பங்களா தேஷில் முஜிபூர் ரஹ்மானின் மகளும், ஜெனரல் ஜியாவின் மனைவியும் மியான்மரில் ஆங் சானின் மகளும் ஆளும் பொறுப்பிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் பின்னுள்ள சமூக உளவியல் இதுதான்.
இந்தச் சூழலை மேற்குலகில் கல்வி கற்று, ஜனநாயகத்தை அனுபவப்பூர்வமாக அறிந்த அதன் ரசிகர்களாகிய இவர்கள் உற்சாகத்தோடு தழுவிக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த வரத்தைக் கொண்டு தங்களையும் வளர்த்துக் கொண்டு, அமைப்பைக் கலைத்துவிடாமல் (அமைப்புதான் அவர்களைத் தலைவர்களாகத் தக்க வைக்கும்) அடித் தள மக்களின் விருப்பத்தை ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றிவிட முயன்றார்கள். நெடுங்காலம் பிரிட்டீஷ் அதிகாரத்திற்குப் பழகிப் போயிருந்த மக்களுக்கு அதிகாரத்தின் மீது பெரிய ஆசை இல்லை. இந்த நாடுகளில் அதிகாரம் கோரிப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் ஆங்கிலம் படித்த மேல்தட்டு மக்களே. அவர்களுக்குத்தான் அதிகாரத்தின் மீது, அதைப் பெறும் புதிய வாய்ப்பின் மீது, ஈர்ப்பு இருந்தது. அடித்தள மக்கள் வறுமையிலிருந்து வெளியேறுவது, சமூக இழிவுகளிலிருந்து வெளியேறுவது இவைகளுக்குத்தான் ஆசைப்பட்டார்கள்.
அரை நிலப்பிரபுத்துவ - அரைக் காலனிய சமூகத்தில் அறிமுகமான ஆங்கில ஆட்சி முறையான ஜனநாயகம் மேட்டுக் குடி மக்களுக்கு ஆபரணமாக இருக்கிறேதன்றி சமூக விடுதலைக்கு உதவவில்லை என்ற எண்ணம், சில சிந்தனையாளர்களை தேர்தல் வழியான ஜனநாயகம் தேவைதானா என்ற கேள்வியை நோக்கிச் செலுத்தியது.
‘‘ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயர் இருந்து வந்ததை திராவிடர் கழகம் என்று மாற்றிய போது சிலர் ஆட்சேபித்தார்கள்.. சிலர் கட்சியை விட்டே ஓடி விட்டார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் நான் அந்தப் பெயர் பிடிக்காததால், அதாவது ஜஸ்டிஸ் கட்சி என்றால் ‘பதவி வேட்டைக் கட்சி' என்பதாகப் பார்ப்பனர் பேர் சுமத்தி விட்டதாலும், பதவி பெறுவதால் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய் விட்டதாலும், பதவிக்கு வருபவன் கூட அவன் எவ்வளவு ஒழுக்கமானவனாக இருந்தாலும், பதவி பெறுவதற்கு அனேக அயோக்கியத்தனம் செய்ய வேண்டியிருப்பதாலும், பெற்ற பிறகு ஸ்தாபனத்திற்கே துரோகியாக வேண்டியதாவதோடு, அதனால் மரியாதையே போய்விடுவதாலும், கட்சியை திராவிடர் கழகம் என்று மாற்றித் திராவிடர் கழகத்தில் கட்சியின் பெயரால் யாரும் தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்றும், சர்க்கார் தயவில் ஒரு நியமனமும் பெறக் கூடாது என்று தீர்மானம் போட்டேன்'' என்று பெரியார் 1944ல் எழுதியிருப்பது ஆரம்ப நாள்களில் நம் நாட்டில் ஜனநாயகம் எப்படிச் செயல்பட்டது என்பதற்கு ஒரு சான்று ( குடி அரசு 02-09-1944).
ஆனால் இங்கிலாந்தில் சென்று படித்ததன் மூலமாக ஜனநாயகத்தை அனுபவபூர்வமாக அறிந்தவர்கள் எந்த அளவு அதன் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, சற்றேறக் குறைய அதே அளவு நம்பிக்கையை, அயல் நாடு செல்லாமல், இந்தியாவிலேயே ஆங்கிலக் கல்வி பெற்று அதன் வாயிலாக உலக அரசியல் நடைமுறைகளையும் ஆட்சி வகைகளையும் அறிந்திருந்தவர்களும் கொண்டிருந்தார்கள். அதற்கு ஓர் சிறந்த உதாரணம் அண்ணா.
ஜனநாயகம் என்பது மேட்டுக்குடியினரது பிறப்புரிமையாகிவிடக் கூடாது, அதை சமூக விடுதலைக்குப் பயன்படுத்த முடியும் என்று அவர் கருதியிருந்தார். அப்படிப் பயன்படுத்த வேண்டுமானால் அதில் வெகுஜனங்களை ஈடுபடுத்த வேண்டும், அவர்களை வாரிசுரிமையைப் பலப்படுத்தும் பணம், ஜாதி, அரசு அளித்த பட்டங்கள் போன்ற பாரம்பரியப் பெருமிதங்களிலிருந்து விடுவிக்க வேண்டும், அதற்கு மாற்றாக, கலை/சிந்தனைத் திறனைக்குறிக்கும் அடையாளங்களையும், இனம் - மொழிப் பெருமிதங்களையும், கல்வியால் பெற்ற பட்டங் களையும் முதன்மைப்படுத்தினார்கள். நீதிக்கட்சித் தலைவர்கள் தங்கள் பெயரின் முன் சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராஜா போன்ற பட்டங்களைப் பயன்படுத்தியது போல திமுகவினர் அந்நாளில், அறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர் என்ற பட்டங்களை பெயரின் முன்னொட்டாகவும், பி.ஏ, எம்.ஏ, பி.எல் பட்டங்களை பெயரின் பின்னும் பயன்படுத்தினார்கள். நாங்கள் ஜமீன்தார்கள், மிராசுதார்கள், பெருவணிகர்கள் என்று மக்களிடம் பேசிவந்தவர்களிடையே இவர்கள், நாங்கள் ஏழைப்பங்காளர்கள், சாமான்யர்கள், என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
தேர்தல் ஜனநாயகம் சமூக விடுதலையை சாத்தியமாக்கியதோ இல்லையோ, அரசியல் கட்சிகள் என்ற அதன் உறுப்பைத் தவிர்க்க இயலாததாக்கியது. தேர்தல் வெற்றிகள் முக்கியம் என்று ஆன போது, கட்சிகள் ஒரு வித Brand ஆகின. அப்படி ஆக்க முதலீடுகள் தேவைப்பட்டன. பணம் மட்டுமல்ல, பிரச்சாரம், அமைப்புத் திறன், தலைமையின் ஆளுமை போன்ற முதலீடுகளும்தான். தங்கள் வாழ்நாள் முழுவதையும் அப்படி ஒரு Brand Image உருவாக்கச் செலவிட்டவர்கள் அதன் பலன்கள்&அதிகாரம், பணம், புகழ் - தங்களுக்குப் பிறகு தங்கள் வாரிசுகளுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினார்கள். அதாவது வணிகக் குடும்பங்களில் தாங்கள் பாடுபட்டு உருவாக்கிய நிறுவனங்கள், தங்கள் வாரிசுகளுக்குப் போக வேண்டும் என்று நிறுவனர்கள் விரும்புவது போல.
அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தங்களது நெடிய அரசியல் பயணத்தில் நேற்றுவரை நண்பர்களாகத் தோள் கொடுத்தவர்கள் இன்று எதிரிகளாக மாறிக் காலை வாருகிற அனுபவங்களையும் சில தலைவர்கள் பெற்றார்கள். இதனால் அவர்கள் நெருங்கிய உறவுகளை கட்சி, ஆட்சி அமைப்பிற்குள் அதிகாரப்படுத்தினார்கள். இந்தக் கணக்குகள் பிசகியதும் உண்டு. முலாயம் சிங் யாதவ் - அகிலேஷ் யாதவ் போல.
இவற்றுக்கப்பால் இன்னொன்றும் உண்டு. அது நம் தேர்தல் முறையில் நேர்ந்த சீரழிவு. நம் தேர்தல் முறை, முதலில் வந்தவரே வென்றவர் (First -past-the- post) என்ற ஓட்டப் பந்தய முறையைச் சார்ந்தது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் போல் கருத்தியலை முன்னிறுத்தி நடத்தப்படுவதல்ல. இங்கு கருத்தியலைவிடக் கணக்குகள் முக்கியம். வாக்கு வங்கிகளை உருவாக்கவும், கூட்டணியை அமைக்கவும், களத்தில் செலவிடவும் ஏராளமான பணம் தேவைப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த தேவ ரகசியம். குறுகிய காலத்தில் ஏராளமான பணம் தேவைப்படுவதால் அது முறையற்ற வழிகளில் குவிக்கப்படுகிறது. அதை தன் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்பதால் இப்போதெல்லாம் கட்சி துவக்கப்படும் போதே வாரிசுகளும் பொறுப்புக்கு வந்துவிடுகிறார்கள்.
இவற்றால் எல்லாம் நம் ஜனநாயகத்தில் வாரிசுகள் காலுன்றி நிற்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் நாம் ஜனநாயகம் மீண்டும் பணக்காரர்களின் ஆபரணமாக ஆகிவிட்டது. சமூக விடுதலைக்கான கருவியாக வேண்டுமானால் அது வாரிசுகளிடமிருந்து விடுபட வேண்டும். பொது அமைப்பில் வாரிசுரிமையை ஏற்க மறுத்த அண்ணா போல் இன்னொருவர் வரவேண்டும். என் கண்ணுக்கு யாரும் தட்டுப்படவில்லை. உங்களுக்கு?
--------------------------------------------------
1. Some Traditions and Customs of the House& Fact sheet published by House of Commons Information Office
2. The House of Commons Procedure and Practice of O'Brien and Bosc Footnote # 38
செப்டெம்பர், 2018.