பேரிடர் என்றாலே அவை பெரும்பாலும் இயற்கைப் பேரிடர்கள்தான். மழையின்றி தொடர்வறட்சி, பெரு மழையால் ஏற்படும் வெள்ளம், சுனாமி போன்ற நிகழ்வுகள், புயல்கள், நில நடுக்கங்கள் போன்றவை இவை. அதே சமயம் போபால் விஷவாயுக் கசிவு போன்ற நிகழ்வுகள், பெரிய ரயில்விபத்துகள், ஆலை வெடிப்புகள் போன்றவையும்கூட பேரிடர்கள்தான். ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான இயற்கைப் பேரிடர் வாய்ப்புகள் உள்ளன. இதைப் பொறுத்து அந்த பகுதிகள் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு சில இடங்களில் மின்னல், இடி போன்றவைகூட அதிகம் நடக்கும். இதைக்கூட பேரிடர்களில் சேர்த்து முன்னெச்சரிக்கை கொடுப்பது நடக்கும்.
முன்னெல்லாம் ஓரிடத்தில் புயல் வீசினால் பதினைந்து நாள் கழித்துத்தான் செய்தித் தொகுப்பில் அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம். ஆனால் இன்று புயல் வருவதற்கு பல நாட்கள் முன்னிருந்தே அதன் எச்சரிக்கை தொடர்ந்து அளிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் மீட்புப் பணிகள் எளிதாக உள்ளன. நான் ஒடிஷாவில் பணியாற்றியபோது முதலில் எதிர்கொண்ட பேரிடர் எனில் மழையில்லாமல் ஏற்பட்ட நீண்ட கடும் வறட்சியைத்தான் சொல்லவேண்டும். அதைச் சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.
1998-மே மாதத்தில் எங்கள் மாநிலத்தில் பெரிய அனல் காற்று (Heat wave) வீசியது. பகல் நேரத்தில் வாகனத்தில் இருந்து இறங்கி தண்ணீரைத் தேடி ஓடுவார்கள். அப்படியே சுருண்டு விழுந்து இறந்துவிடுவர். நூற்றுக்கணக்கில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. அந்த சமயத்தில் பெரிய புரிதல் ஒடிஷாவில் இல்லை. அதன் பின்னர்தான் இதை எதிர்கொள்ள நடைமுறை விதிகள் வகுக்கப்பட்டன. நீர் இழப்பைத் தவிர்க்க எலுமிச்சை பழங்களை வைத்துக்கொள்ளுதல், பள்ளிகளை காலையில் விரைவாகத் தொடங்குதல், பேருந்துகளை வெயில் அதிகம் அடிக்கும் நேரங்களில் இயக்காமல் இருத்தல், தண்ணீரை குறிப்பிட்ட இடைவெளியில் அருந்துதல் போன்றவற்றை நடைமுறையாக்கினோம். ஏனெனில் இந்த வெப்ப அலை என்பது அந்த மாநிலத்துக்குப் புதிது.
1999-இல் வீசிய பெரும்புயல் நேரடியான பேரிடர் அனுபவத்தைத் தந்தது. அப்போது புயலைக் கணிக்கும் தொழில்நுட்பம் நம் நாட்டில் அவ்வளவாக வளரவில்லை. அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமெரிக்க கப்பற்படை தரும் புயல் தரவுகளைப் பின்பற்ற ஆரம்பித்திருந்த நேரம். அப்போது நான் மாநில முதலீட்டு நிறுவன மேலாண்மை இயக்குநாக இருந்தேன். மாவட்ட ஆட்சித் தலைவராக இல்லை. இருப்பினும் புயல் எங்கே தாக்கும் என கண்காணித்துக் கொண்டிருந்தோம். அது தாக்கும் எனக் கருதப்பட்ட பகுதிகளில் இருக்கும் இளம் நிலை அதிகாரிகளுக்கு எதாவது உதவி தேவை என்றால் ஆலோசனை சொல்வதற்காக என்னை அனுப்பி இருந்தார்கள்.
அந்தப் புயலோ வங்காள விரிகுடாவில் அதிக நேரம் நிலை கொண்டு இருந்தது. அப்படியெனில் அது ஆபத்து. ஏராளமான நீரைக் கொண்டுவந்து அது செல்லும் வழியில் கொட்டும். அந்தப் புயலால் எந்தப் பகுதி பாதிக்கப்படும் என நினைத்து முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு மாநில தலைநகரம் உட்பட்ட சில மாவட்டங்களை நோக்கித் திடீரென திசை மாறித் தாக்கிவிட்டது. மரங்கள் முறிந்து விழுந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தலைமைச் செயலகமே இருளில் மூழ்கிவிட்டது. இந்தப் புயலில் சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்த துயரம் நேர்ந்தது. இதில் நான் பலவகையான மீட்புப்பணியில் ஈடுபட்டேன். பொறுப்புகளை நாமே முன்வந்து ஏற்றுக்கொண்டு செய்யவேண்டி இருந்தது.
உயரதிகாரிகளையோ முதல்வரையோ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நம் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுக்கு பொறுப்புள்ள அதிகாரியாக நீங்கள் எப்படி இயல்பாக எதிர்வினையாற்றுவீர்களோ அதைச் செய்யவேண்டும். எனவே அந்தப் பகுதிக்கு பேரிடரை சமாளிக்கும் பொறுப்பு கொண்ட அதிகாரியாக என்னை நானே நியமித்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கும் தேவை உருவானது. அதன்பின்னர் நானே எழுத்துபூர்வமான ஆணைகளை கீழதிகாரிகளுக்குப் பிறப்பித்துப் பணிகளை முடுக்கிவிட்டேன். அப்போதுதான் சட்டப்படி அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். பேரிடர் சமயங்களில் விதிப்புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருக்கமுடியாது என்கிற அனுபவத்தை அது எனக்குக் கற்றுத்தந்தது.
2001-இல் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. அதைச் சமாளிக்க பேரிடர் மேலாண்மை ஆணையராக என்னை நியமித்தார்கள். 2003-இல் வரலாறு காணாத வெள்ளம் வந்தது. அதைச் சமாளிக்க 1999-இல் நாங்கள் கற்றுக்கொண்டிருந்த பாடங்கள் எங்கள் செயல்முறையாக ஆகி இருந்தன. தரமான வீடுகள், பாதுகாப்பான குடி நீர், புயல் பாதுகாப்பு இல்லம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சுற்றி உள்ள பாதிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் யாருக்காகவும் காத்திராமல் தானாகவே செயலில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபடுதலுக்கு அனுமதி ஆணை வழங்கி இருந்தோம். பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் ்பொறுப்பான அதிகாரிகள், பேரிடரை சமாளிக்க தனி நிதி வரும் என்று எதிர்பார்த்து இராமல் கைவசம் இருக்கும் வேறு திட்டங்களுக்கான நிதியை, உணவுப்பொருளைச் செலவழிக்கலாம் என்ற செயல்முறையைக் கொண்டுவந்தோம். ஓர் உயிரைக் காப்பாற்ற நூறு ஆணைகளை மீறலாம் என எழுத்துபூர்வமாக கொடுத்தோம்.
ஒரு மாவட்டத்தில் ஒன்றிய அரசின் கிடங்கில் ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இருந்தன. அங்கே மக்களுக்கு அரிசி தேவைப்பட்டது. பொறுப்பான கிடங்கு அதிகாரி அப்போது அங்கில்லை. இதற்கு என்ன செய்வது என்று காவல்துறை அதிகாரிகள் தங்களுக்குள்ளாக தகவல்களைப் பறிமாறிக்கொண்டிருப்பதைப் பார்த்து நானாகவே என்ன பிரச்னை எனக் கேட்டேன். நானோ அப்போது 250 கிமீ தூரத்தில் இருந்தேன். உடனே தகுந்த சாட்சியங்களுடன் கிடங்கின் பூட்டை உடைத்து அதை வீடியோ பதிவும் செய்துகொண்டு தேவையான மூட்டைகளை எடுக்குமாறு கூறினேன். அதன் பின்னர் புதிய பூட்டைப் போட்டு பூட்டி அதையும் வீடியோ எடுத்துக்கொண்டு கிளம்புங்கள் என்றேன். அதன்படி செய்தனர். இதைப்பற்றி எந்த கேள்வியும் எழவே இல்லை. (இச்சம்பவம் பற்றி தமிழ் நெடுஞ்சாலை நூலிலும் எழுதி உள்ளேன்). ஏனெனில் அந்நேரத்தில் உங்கள் நோக்கம் என்ன என்பதுதான் முக்கியம்.
இதைத் தொடர்ந்து ஒடிஷா மாநிலம் பேரிடர் மேலாண்மையில் நாட்டில் ஒரு முன்னணி மாநிலமாக மாறிவிட்டது. அதனால் 1999-இல் வந்தது போன்ற ஒரு பெரும்புயல் மீண்டும் பதினான்காண்டுகள் கழித்துத் தாக்கியபோது மரணங்களின் எண்ணிக்கை வெறும் 12 தான். வெறும் 24 மணி நேரத்துக்குள் பன்னிரெண்டு லட்சம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றினோம். மின் கம்பங்கள் விழுந்தால் அதை மாற்ற வேறு எங்கோ இருந்து கொண்டு வர தாமதமாகும் என்பதால், சம்பவ இடத்தில் முன்கூட்டியோ கொண்டுபோய் வைத்துவிடுவோம். சைரன் ஒலித்தால் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மக்களுக்கு பயிற்சி அளித்திருந்தோம். பேரிடர் நடக்கும் எனக் கருதும் இடங்களிலும் முன்பே அதிகாரிகள் இருப்பார்கள். ஊடகங்கள் அங்கே போகும்போது பொறுப்பான அதிகாரி அவர்களை எதிர்கொள்வார். குறை சொல்ல வழியில்லாமல் போகும். உணவுப் பொருட்களும் முன்கூட்டியே சென்றிருக்கும். செயல்பாட்டுக்கான அதிகாரங்களும் பகிர்ந்துகொடுக்கப்பட்டிருந்தன.
தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உருவாவதற்கு முன்பாகவே இரண்டே இரண்டு மாநிலங்களில்தான் இந்த பேரிடர் அமைப்புகள் இருந்தன. ஒன்று ஒடிஷாவிலும் இன்னொன்று குஜராத்திலும் இருந்தது. தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு பின்னால் உருவானபோது, அதற்கான கலந்துரையாடல் குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன் என்பது மகிழ்வுக்கு உரிய விஷயம். அதுமட்டுமல்ல 2003 பெருவெள்ளத்தை சமாளித்த பிறகு அந்த அனுபவங்களை பிரதமர் வாஜ்பாயியை அவருடைய இல்லத்தில் அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சென்று சந்தித்து காலை உணவின்போது அவருக்கு விவரிக்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.
பேரிடர் மேலாண்மையில் பல கட்டங்கள் உள்ளன. முன் கணிப்பு, உடனடி எதிர்வினை, மீட்பு, பாதிக்கப்பட்டோர் நிவாரணம் (குறுகிய கால, நீணட காலம்), சமூகத்தை இதை எதிர்கொள்ள தயார்ப் படுத்துதல் - இவை எல்லாம் சேர்ந்ததுதான் பேரிடர் மேலாண்மை.
பன்னெடுங்காலமாக நம் நினைவில் உறைந்திருப்பது பேரிடர் பற்றிய நினைவுகள்தான். ’பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்கிற வரிகள் அதுபோன்ற பேரிடர் நினைவுதான். சிந்துவெளியில்கூட சுட்ட செங்கல்லால் கட்டப்பட்ட வெள்ளத் தடுப்பு சுவர்கள் இருக்கின்றன. சங்க இலக்கியம் முழுக்க வெள்ளம் பற்றிய குறிப்புகள் உள்ளன. பேரிடருக்காக இயற்கையை சபிப்பதைவிட அதை எப்படி எதிர்கொள்ளலாம், பாதிப்பைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்பதுதான் முக்கியமானது.
(ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்(ஓய்வு), ஒடிஷா மாநில முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர். நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)