இந்தியா, பொழுதுபோக்கு ஊடகங்களின் நிலம். இங்கு எந்த வடிவில் கதை சொல்லப்பட்டாலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மக்கள் உண்டு. தெருக்கூத்துகள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பொழுதுபோக்கு ஊடகங்களின் வருகையும் மாற்றமும் இந்தியச் சமூகத்தில் பெருமளவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இப்போது ஓடிடிக்கள். நெட்ப்ளிக்ஸ், அமேசான், சோனி லைவ், ஹாட்ஸ்டார், முபி , ஜீ ஃபைவ் என ஒவ்வொரு தளத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெப்சீரீஸ்கள் மாதந்தோறும் வெளியிடப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எது மாதிரியான கதைக்களங்கள் சீரீஸ்களாக மாற்றம் பெறுகின்றன என ஆய்வு செய்வது ஆர்வம் தருவது. இதோடு ஓரளவு வட இந்தியச் சமூகத்தின் இன்றைய நிலையையும் அறிந்து கொள்ள முடியும்.
பொழுதுபோக்கு, யதார்த்தம் என இரு வகையான திரைப்படங்கள் எப்போதுமே திரைத்துறையை சமன் செய்யும். இரண்டினுடைய கதை சொல்லும் விதமும் வெவ்வேறு வகையானவை. இந்தியாவில் எடுக்கப்படும் வெப்சீரிஸ்களில் இந்த பொழுதுபோக்கு, யதார்த்தம் என இந்த இரண்டு அம்சங் களையும் பார்க்கவியலும். யதார்த்தமான சூழலைக் கதைக்களங்களாகக் கொண்டு வணிகரீதியான படங்கள்கொண்டிருக்கிற பரபரப்பான திரைக்கதையோடு கதை சொல்லப்படுகிறது.
அரசியல், பாலியல், மதம், சாதி, அதிகாரம் என எவற்றையெல்லாம் திரைப்படங்கள் தயங்கித் தயங்கிச் சித்தரித்தனவோ அவற்றை உடைத்ததில் வெப்சீரீஸ்கள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின. Sacred Bags தொடரின் சில காட்சிகள் வெளிவந்த போது இப்படியும் வெளிப்படையாகக் காட்சிகளைக் காட்ட முடியுமா என்கிற ஆச்சரியத்தைத் தந்தது. மாட்டிறைச்சியைக் கொண்டு கலவரம் ஏற்படுத்த முடியும் என்பதும், இந்திய அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நபரை பெரும் குற்றவாளியாக மாற்றமுடியும் என்பதையும்வெளிப்படையாகக் காட்டியது.
வட இந்தியாவைப் பொறுத்தவரை அது மத்திய அரசியலின் மையம். மதமும், அரசியலும், அண்டர்கிரவுண்டு உலகமும் கைகோர்த்துக்கொள்ளும் ஒரு பிரதேசம் அது. நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லாத பகுதிகள் அவை. மும்பை, டெல்லியை மையப்படுத்திய சீரீஸ்கள் பெரும்பாலும் உருவாவதற்கு காரணம், இதுவரை அங்கே நிகழ்ந்த நிகழ்வுகள் தான். இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு இந்த நாட்டில் நடைபெற்ற மறக்கவியலாத அதிர்வு தரும் சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் பெரும்பாலும் வடிந்தியாவில் தான் நடந்திருக்கும். அதனால் தான் இந்தியில் கதைக்களங்களுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லை.
உதாரணத்துக்கு சமீபமாக வெளிவந்த The Railway Man தொடரை எடுத்துக் கொள்ள முடியும். போபால் விஷவாயு தாக்குதல் ஏற்படுவதற்கு முன், பின் என பல விளைவுகளையும் கிளைக்கதைகளையும் சொல்லும் தொடர் இது. வெப் சீரீஸ் என்பது பரவலாக அனைவருக்கும் அறிமுகமாகும் சமயம் வெளிவந்த Sacred Games, Delhi Crime , Mizarpur போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். டெல்லியில் நடந்த நிர்பயா வன்புணர்வு சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்கு முன்னும், பின்னும் கூட கொடூரமான வன்புணர்வு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், நிர்பயா வழக்கு மட்டும் வெப் சீரீஸாக எடுக்கப்பட்டதற்கு அந்த வழக்கு பெற்றிருந்தவெளிச்சம் ஒருமுக்கியக் காரணம். எதுவொன்றும்ஆள்பவர்களுக்கு அருகில் நடக்கையில் கவனம் பெற்றுவிடுகிறது. தமிழகத்தின் தென்கோடியில் டெல்லி நிர்பயா அளவுக்கு கொடூரத்தை சந்தித்த வழக்கு பற்றி எடுத்தால், அது இந்த அளவுக்கு கவனத்தை ஈர்க்காது என்பதே உண்மை.
அண்டர்கிரவுண்ட் உலகம் எனப்படும் இருண்ட உலகங்கள் குறித்த பார்வையைத் தொடர்ந்து இந்தியத் தயாரிப்புத் தொடர்கள் கொடுத்து வருகின்றன. Patal Lok தொடரில் ஒரு சாதாரண வழக்கு என்று தொடங்கப்பட்ட ஒன்று அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே போவதன் வழியாக ஓர் இருண்ட உலகத்தினை நம் கண் முன் காட்டியது. Mizarpur இரண்டுகுழுவினருக்கும் இடையே நடக்கும் மோதலைக் காட்டியது. The Family Man சராசரியான குடும்பத் தலைவனாக அறியப்படுகிற ஒருவர் இந்தியப் பாதுகாப்புப்பிரிவில் உயர்பதவியில் இருந்து கொண்டுஅச்சுறுத்தல்களை சமாளிப்பது குறித்துப் பேசியது. இவையெல்லாம் உதாரணங்களே. இப்படி எடுக்கப்படும் சீரீஸ்கள் வரவேற்பு பெறுவதின் காரணம், அதன் விறுவிறுப்பு மட்டுமல்ல, யதார்த்த வாழ்க்கையின் உணர்வுகளையும் சேர்த்தே காட்டுவது தான். அரசியல்வாதிகளையும், காவல்துறையையும், அதிகாரத்தையும் இப்படி கதைகளின் வழியாக கேள்வி கேட்கும்போதும், அதிகார மட்டத்தில் நடக்கும் தவறுகளைக் காட்டுகிறபோதும் மக்களுக்கு விருப்பமானொன்றாக மாறிவிடுகிறது. இதோடு, இரண்டு மதத்தினருக்கிடையே ஏற்படுகிற உரசல்கள், ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை நடத்துகிற விதம் போன்றவற்றையும் வெளிப்படையாக எந்த மறைவும் இல்லாமல் நேரடியாகவும் சீரீஸ்களில் காட்டமுடிவது இந்தத் தொடர்களின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. திரைப்படங்களில்இவற்றையெல்லாம் சொல்ல முடியாததன் தேக்கத்தினை வெப் தொடர்கள் சுலபமாகக் கடந்து கொண்டிருக்கின்றன.
மற்றொரு கதைக்களமாக நிஜவாழ்வில் ஜெயித்த , தோற்ற, போராடிய மனிதர்கள் குறித்த கதைகள். Rocket இல் விக்ரம் சாரா பாய், ஹோமி பாபா இருவரைப் பற்றிய கதையைச் சொல்லியிருக்கிறார்கள். பங்குச்சந்தை ஊழலில் எல்லாரையும் அதிரவைத்த ஹர்ஷத் மேத்தாவின் குஞிச்ட் 1992 கதையும் உண்டு. இந்தப் பிரிவில் முற்றிலும் வித்தியாசமான முயற்சி Masaba Masaba. பாலிவுட்டின் கதாநாயகியாக எல்லாரையும் கவர்ந்த நீனா குப்தா, அவரது மகளான மஸாபாவின் வாழ்க்கைக் கதை. இக்கதையில் அவர்களே நடித்திருந்தார்கள். இந்தத் தொடர் இரண்டு சீசன்களாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றதன் காரணம், அதன் அசல்தன்மை. மஸாபா மற்றும் நீனா தங்களது வாழ்க்கையில் எங்கெல்லாம் மனமுடைந்தார்கள், தங்களை எப்படி மீட்டுக் கொண்டார்கள் என்பதை அவ்வளவு சுவாரஸ்யத்தோடு காட்டியத் தொடர் இது.
தொடர்கதைகள் எழுதும் காலந்தொட்டே துப்பறியும் கதைக்களங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் உண்டு. அது ஓடிடி வரையிலும்தொடர்கிறது. தொடர்கொலைகள், அதை விசாரிக்கும் காவல்துறை, கொலையாளி யார்? இந்தொற்றை லைனில் ஏராளமான தொடர்கள் வந்தாலும் அனைத்துமே விரும்பிப் பார்க்கப்பட்டன. Aakri Sach , Delhi Crime 2, Ma, Breathe 1, 2 போன்றவை சில உதாரணங்கள். இவற்றில் Breathe 1, 2 சற்று வித்தியாசமானது கொலையாளி யார் என்பதும், எதற்காக கொலைகள் என்பதும் தெரிய வந்துவிடும், இப்போது பார்வையாளர்கள் கொலைகாரன் பிடிபட்டு விடக்கூடாது என்கிற தரப்பிலும், பிடிபடத் தான வேண்டும் என்றும் இரு வித ஆட்டங்களை மனதுக்குள் ஆடிக்கொண்டேயிருந்தார்கள்.
இதுவரை திரைப்படங்கள் நிகழ்த்தாத ஒரு பாய்ச்சலை இந்தத் தொடர்கள் ஏற்படுத்தியிருக்கின்றன என்றால், பெண் மைய கதாபாத்திரங்களைக் காட்டிய விதத்தினைச் சொல்ல முடியும். பொதுவாக இந்திய சினிமாக்களில் கதாநாயகியின் கதாபாத்திரம் எப்போதும் நல்ல பெண்களின் வார்ப்பாகவே காட்டப்படுவார்கள். கருணையும், அன்பும், உறுதியும் கொண்ட பெண்களாக இருப்பார்கள். இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இயல்பான பெண் கதாபாத்திரங்களைக் காட்டியது வெப் தொடர்களின் மிகப்பெரிய அம்சமாக இருக்கிறது. Four Shots ஐ எடுத்துக் கொள்ளலாம். நான்கு தோழிகளுக்கு இடையேயான நட்பு, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், திருமண உறவு, அதில் பிரிவு, வேலையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவது, காதலால் ஏற்படும் காயங்கள் இவையெல்லாம் பொதுவான நிகழ்வுகள் தான என்றாலும் இவற்றை சமகாலத்தில் பெண்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைக் காட்டிய விதத்தில் இந்த சீரிஸ் வேறு ஒரு தளத்தை எட்டியிருந்தது.
இந்த வகைமையில் மற்றுமொரு தொடரையும் குறிப்பிட வேண்டும். ஐந்து பெண்கள். வெவ்வேறு விதமான பின்னணிகள். ஒரு வங்கியின் தலைமை செயல் அலுவலர் தொடங்கி மும்பையின் பார்களில் ஆடும் பெண் வரையிலான வெவ்வேறு பின்புலத்தைக் கொண்ட பெண்களின் கதை. இவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்கள். ‘பெண்கள் பிழைத்திருப்பதே போராட்டம் தான்' என்று இதில் ஒரு வசனம் வரும். இந்த வசனத்தின் ஒட்டுமொத்த கதை தான் Bombay Begums.
இந்தப் பிரிவில் குடஞு தொடரையும் கூட சேர்க்கலாம். வருவதும் போவதும் தெரியாத அளவுக்கு அமைதியான ஒரு பெண் கான்ஸ்டபிள் எப்படி ஒரு ஆளுமையாக மாறுகிறாள் என்பதைச் சொன்னவிதத்தில் உள்ள உளவியல் தான் இந்தத் தொடரை முக்கியமானிடத்தில் வைத்திருக்கிறது. அடக்கப்பட்ட ஒரு பெண்ணின் வன்மத்தையும், அவள் ஆளுமையாக மாறுகையில் எதிர்கொள்ளும் தைரியத்தையும் விவரித்த விதம் பல பெண்பார்வையாளர்களை இந்தத் தொடர் நோக்கித் திருப்பியது.
இந்தியத் தயாரிப்பில் அதிகம் தொடாத பகுதி கற்பனை உலகக் கதைகள். அவதார் போன்ற கதைகளுக்கான களம் நமக்கு இருந்தாலும் சர்வதேச சந்தையில் அவை எந்தளவுக்கு வரவேற்பு பெறும் என்பது தயக்கம் தருவதால், அந்தப் பகுதி மிக சொற்பமாகவே கையாளப்படுகிறது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் வெப் சீரீஸ்களைப் பார்க்கும்போது ஓரளவுக்கு அந்த நாட்டின் கலாசா ரம், நிலவியல், அரசியல் போன்றவற்றை புரிந்து கொளள முடியும். அதே போல இந்தியாவை வெளிநாட்டினர் புரிந்து கொள்ளும் விதங்களில் சீரீஸ்கள்இங்கு தயாரிக்கப்படுகின்றனவா என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா இந்த விஷயத்தில் ஒடிடி நிறுவனங்களுக்கு சவால் விடக்கூடிய நாடு. அமெரிக்கா, பிரான்ஸ், கொரியா என ஒரு நாடு, ஒரு மொழி என்கிற நாடுகளில் தயாரிக்கப்படும் வெப் சீரீஸ்களின் தன்மையை இந்த நிறுவனங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சில நூறு கிமீ தூரங்களில் ஒரு மொழி, ஒரு கலாசாரம், ஒரு அரசியல் என மாறும் நாட்டில் எந்த மாநிலத்தை மனதில் கொண்டு சீரீஸ்கள் எடுக்க முடியம்?
இந்திய சினிமா என்பதையே இந்தி சினிமாவாக மட்டும் பார்க்கக்கூடாது என்று சொல்லிக் கடந்திருக்கும் வேளையில், இந்திய வெப் சீரீஸ்கள் என்று வகைப்படுத்த இயலாது என்பதே யதார்த்தம். வெளிநாடுகளில் வசிக்கும் ஒருவர் Little Things, Permanent Roommate, Four Shots, Masaba Masaba வகை சீரியல்களைப் பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் நகரக் கலாச்சாரம் என்பது இவற்றில் காட்டப்படுவது போல மாறிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
சென்னையும், டெல்லியும் நகரங்களே தவிர, இரண்டும் இங்கு ஒன்றல்ல. ஆனால் இவற்றுள் இந்தியத் தன்மை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் Little Things தொடரில் வருவது போல லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை என்பது சகஜமாகிவிட்டது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிறுவ முடியாது. அதே போல Four Shots. இப்படியான பெண்கள் இந்தியா முழுவதும் உண்டு என்றும், இது மாதிரியான வாழ்வியலை சகஜமானமுறையில் இந்தியா முழுவதும் உள்ள மேல்தட்டுப் பெண்கள் பின்பற்றுகிறார்கள் என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. வடக்கில் உள்ள அரசியலுக்கும், சாதி பாகுபாடுக்கும் தெற்கில் உள்ளவற்றுக்கும் வேறுபாடுகள் உண்டு. மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களின் அரசியலும், வாழ்வியலும் ஏதோவொரு வகையில் இந்தியா முழுமையையும் பாதிக்கிறது என்பதால் அந்தப் பின்னணியில் எடுக்கப்படும்தொடர்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும் சீரீஸ்களில் உள்ள பிரச்னைகள் வடநாட்டில் உள்ளவர்களுக்கு விசித்திரமாகக் கூடத் தெரியும்.
Panchayat என்கிற தொடர் இரண்டு சீசன்கள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றது. ஒரு படித்த இளைஞன் கிராம நிர்வாக அதிகாரியாக ஒரு குக்கிராமத்துக்கு வருகிறார். அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் முன்வைக்கிறது இந்தத் தொடர். இதே பிரச்சனையும், சிக்கல்களையும் இந்தியாவின் எந்தக் கிராமத்தின் நிர்வாக அதிகாரியும் எதிர்கொள்வார் என்றாலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் பஞ்சாயத்து அளவில் வேறுபாடுகள் உண்டு. கல்வி குறித்த விழிப்புணர்வு ஓரளவு தமிழகக் கிராமங்களுக்கு உண்டு. இங்குள்ள சாதி அமைப்பு முறையும், அதை வெளிக்காட்டும் விதமும் வேறு. இந்தத் தொடரில் காட்டப்படும் பிரச்னைகள் வேறு. இதுவே நமது இந்தியக் கிராமங்களின் கதி என்று முத்திரை குத்திவிட முடியாது.
அதனால் இந்தி மொழியில் வெளிவரும் பெரும்பாலான வெப் சீரீஸ்கள் இந்தியத் தொடர்கள் என்கிற ஒற்றைத் தன்மைக்குள் அடங்குவதில்லை. ஆனால் இந்தியத் தன்மை கொண்ட கதைகளும், சாயல்களும், அம்சங்களும் உண்டு. இந்தியர்கள் கலாசாரம் என்ற பெயரில் எதைக் கொண்டாடுகிறார்கள் , உயர்கல்விக்காக எப்படிப் போராடுகிறார்கள், நடுத்தர மக்கள் முன்னேறுவதற்காக கல்வியை எப்படி நம்புகிறார்கள் போன்றவை வேறு எந்த நாட்டு சீரீஸ்களிலும் இத்தனை ஆழமாகக் காண்பிக்கப்படுவதில்லை. மற்ற நாட்டின் படங்களைக் காட்டிலும் அதன் வெப் தொடர்கள் அந்த நாட்டு மக்களை சற்று நெருக்கமாகக் காட்டுகிறது என்பது உண்மை. இதனை கொரியத் தொடர்களில் பார்க்க முடியும். வெளிநாட்டினர் இந்திய தொடர்களைப் பார்த்துவிட்டு, இந்தியா குறித்த கற்பனையோடு கன்னியாகுமரியில் இறங்கினால் அவருக்குக் கிடைக்கக்கூடிய அனுபவம் என்னவாக இருக்கும் என்பது தான் இந்திய வெப் சீரீஸ்களா, இந்தி வெப்சீரீஸ்களா என்பதைத் தீர்மானிக்கும்.