சந்தோஷமும் இனிப்பும் வேறு வேறல்ல!

Thenkasi_sweets
Published on

ஏலேய்! தென்காசிக்குப் போறேன் எதுவும் பண்டம் வாங்கிட்டு வரணுமா?” சிறுவயதில் என் மேல் பிரியம் கொண்ட பெரியவர்கள் நிறைய பேர் கேட்பது வழக்கம். அப்படியே வாங்கியும் வருவார்கள். எங்கள் ஊரான இடைகால் தென்காசியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தென்காசியில் பண்டம் வாங்குதல் என்றாலே காசிவிஸ்வநாதர் கோவில் சுவாமி சன்னதியில் இருக்கும் பெரிய லாலா கடை தான். 1904இல் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடையின் நிஜப்பெயர் கிருஷ்ண விலாஸ் லாலா கடை. மிளகு போட்ட காரச்சேவும், குண்டு மிச்சரும், அல்வாவும், சோன்பப்டியும் எங்களுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள்.

சோறு சாப்பிடாமல் பண்டங்களை நான் காலி செய்யும் வேகத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குற்றாலத்து ஆச்சி, “உன்னையெல்லாம் லாலா கடைல தாம்ல வேலைக்குச் சேக்கணும்” என்பார். அப்போது நான் ஒண்ணாப்பு படித்து வந்தேன் என்று நினைக்கிறேன். அப்போதே எதிர்கால வாழ்க்கைக்கான மிகப் பெரிய லட்சியங்களைக் கொண்டிருந்திருக்கிறேன் போல. “நான் ஏன் வேலைக்குச் சேரணும்? சொந்தமாவே லாலா கடை வைப்பேன்” என்று சொல்வேன்.

லாலா கடை, லாலா கடை என்கிறீர்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்டாள் வட தமிழகத்தைச் சேர்ந்த தோழி ஒருத்தி. நான் பிறந்த இடைகால் ஊருக்கும், தற்சமயம் வசிக்கும் சங்கரன்கோவில் ஊருக்கும் நடுவில் இருப்பது தான் சொக்கம்பட்டி. பெரிய ஜமீனாக இருந்த ஊர். இன்றும் ஜமீன்தாரின் வாரிசுகள், வீடுகள் எல்லாம் உண்டு. ஏதோ ஒரு ஜமீன்தாருக்குக் குதிரைகள் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். அந்த குதிரைகளை வளர்ப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் லாலாக்கள். சிலரின் பெயருக்குப் பின்னால் சிங் என்று முடியும். சிங் லாலா கடை என்றும் சொல்வார்கள். அவர்கள் வடக்கே இருந்து கொண்டு வந்த இனிப்பு தான் அல்வா. சொக்கம்பட்டியில் இருந்து ஒரு குழு திருநெல்வேலிக்குப் பிரிந்து போய் தான் திருநெல்வேலி அல்வாவை உலகப் புகழ்பெறச் செய்தது. மதுரை பிரேமா விலாஸ் அல்வா கடையைத் தொடங்கியவர்களுக்கும் சொக்கம்பட்டி தான் பூர்வீகம். அதேபோல் தென்காசியில் கரையொதுங்கிய இன்னொரு குழுவின் படைப்புதான் கிருஷ்ண விலாஸ் லாலா கடை. காலங்களைக் கடந்து இன்றும் தென்காசியின் முக்கிய இனிப்புக் கடைகளில் ஒன்றாக இது இருக்கிறது. தற்போது சுப்பு சிங் என்பவர் அதை நடத்திவருகிறார். பெரிய லாலா கடையில் அல்வா மாஸ்டராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பெரியவர் ஒருவரிடம் பேசியபோது, ‘திருவனந்தபுரம் மகாராஜா ஒருவர் தென்காசிக்கு வந்திருந்த போது எங்கள் கடை அல்வாவை சாப்பிட்டுவிட்டு அங்கும் அல்வா தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று சிலரைக் கையோடு கூட்டிச் சென்றாராம். இப்போது எங்கள் கடையின் விழுதுகள் திருவனந்தபுரத்திலும் உண்டு’ என்கிறார்.

தென்காசியில் இருந்து கொஞ்சம் தள்ளிப் போனால் இலஞ்சி என்ற அழகு கொஞ்சும் சிற்றூர் வரும். இலஞ்சியில் தயாராகும் போளிகள் மிகப் பிரபலமானவை. எங்கள் வீட்டில் விசேஷங்களுக்கு எல்லாம் இலஞ்சியில் இருந்து தான் சமையல். அவர்களது மெனுவில் தவறாமல் போளியும் இடம்பெற்றிருக்கும். “போளியும், சொதி சாப்பாடும் வேணும்” என்று சொல்லித் தான் ஒப்பந்தம் செய்வோம். இலையைப் போட்டு தண்ணீர் தெளித்ததும் முதலில் போளியை வைப்பார்கள். மிருதுவான அந்த போளி அரை நிமிடத்தில் காலியாகி விடும். “இன்னொரு போளி வைங்க” என்று விருந்தினர் கேட்டு, அதனால் போளி தட்டிப் போகும் அபாயம் இருக்கிறது என்பதால் இலைக் கணக்கிற்கு மேலாகக் கூடுதலாக ஐம்பது, அறுபது போளிகள் வாங்கி வைத்துக் கொள்வோம்.

பெரும்பாலான ஊர்களில் தேங்காய்ப் போளி தான் கிடைக்கும். மைதா மாவைத் தேய்த்து, தேங்காயும், சீனியும் கலந்த பூரணத்தை உள்ளே வைத்து தயாரித்த எண்ணை மினுங்கும் போளியை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து மாலை நேரங்களில் விற்றுக் கொண்டு வருவதைப் பல ஊர்களில் பார்க்கலாம். இன்றைய ஸ்வீட் ஸ்டால்கள் பலவற்றில் கடலைப் பருப்பும், வெல்லமும் போட்டுச் செய்திருக்கும் மஞ்சள் நிற போளியும் கிடைக்கிறது. ஆனால் இலஞ்சி போளியில் கடலைப் பருப்பும், சீனியும் இருக்கும். தொட்டால் பொலபொலவென்று உதிர்ந்து விடும் தன்மையுடையதாக இருக்கும். அரை வட்டமாக மடிக்கப்பட்ட, நிலவு போன்றிருக்கும் அந்தப் போளியில் ஒரு சொட்டு கூட கையில் எண்ணெய் ஒட்டவே ஒட்டாது. இலஞ்சி போளியின் தயாரிப்பில் ஒரு பாட்டி தான் ரொம்ப நாளாக பிரபலமாக இருந்தார் என்பார்கள். அவரது பெயரை அப்போது கேட்டுக் கொண்டதில்லை. இப்போது தென்காசியில் தெப்பக்குளத்திற்கு எதிரில் ஆச்சி போளிக் கடை என்றே பெயரில் கடை நடத்தி வரும் அவரது மகன் சேது, “எங்க அம்மா பேரு சங்கர வடிவு. வடிவாச்சின்னு சொல்லுவாங்க. 50 வருஷமா கடை நடத்தினாங்க. இதோ இப்ப ரெண்டு வருஷம் முன்னாடி அவங்க கடைசிக் காலம் வரைக்கும் தொழில்ல இருந்தாங்க” என்றார். “குற்றாலம் காலேஜ்ல கேண்டீன் வச்சிருந்தாங்களே! அந்த வடிவாச்சியா?” என்று கேட்டேன் பரபரப்புடன். “அவங்களே தான்!” என்று அவர் சொல்ல, “அட! நானும் அந்த காலேஜோட சேர்ந்த ஸ்கூல்ல தான் படிச்சேன். பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சி சுட்ட பண்டங்களை சாப்பிட்டிருக்கேன் சார்!” என்றேன். என்னைப் போலவே அவரும் குஷி ஆகிவிட்டார். “இப்ப ஒரு போளி 13 ரூபாய் ரேட்க்கு கொடுக்கிறோம். மும்பை, டில்லி சென்னை, பெங்களூர்னு நூற்றுக்கணக்கில் அனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இலஞ்சியில் முன்பு பிரபலமாக இருந்த இன்னொரு இனிப்பு சீனி முறுக்கு. அதை இப்போது செய்வதற்கு ஆள் இல்லை என்கிறார் என்னைப் போன்ற இனிப்புப் பிரியரான காந்தி மாமா. சீனியை (சர்க்கரை) மையாகத் திரித்து ஒரு தட்டில் பரப்பி வைத்து விடுவார்களாம். நன்றாகப் பொரித்து எடுக்கப்பட்ட கைச் சுற்று முறுக்கை அப்படியே சுடச்சுட அந்த சீனியில் போட்டால் பொடி செய்து வைத்த சீனி, முறுக்கில் அப்பிக் கொள்ளுமாம். இன்றுவரை எனக்கு அந்த சீனி முறுக்கை சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லை. இந்த தீபாவளிக்கு வீட்டில் முயன்று பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

தென்காசியிலிருந்து இலஞ்சி ஒரு மூன்று கிலோமீட்டர் இருக்கும் என்றால் குற்றாலத்தை நோக்கிய பாதையில் அடுத்த இரண்டாவது கிலோமீட்டரில் மேலகரத்தில் நடுநாயகமாக இருப்பது ஜீவா ஸ்டோர். கடையில் ஜீவா ஸ்வீட் என்ற பலகை தான் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து தொங்குகிறது. ஆனால் பேச்சு வழக்கில் ஜீவா ஸ்டோர் என்று தான் சொல்வார்கள். அங்கே கிடைக்கும் மனோகரமும் சீடையும் மனோகரமாக இருக்கும். “மனோகரமா?அப்படின்னா என்ன?” என்ற கேள்வியும் என்னிடம் பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. இனிப்புச் சேவு என்று மற்ற ஊர்களில் சொல்வார்களே, கடலைமாவை உப்பு, காரம் சேர்க்காமல் பிசைந்து, பிழிந்து, பொறித்து, சீனி பாகு போட்டு எடுத்தால் அது இனிப்புச் சேவு. சீனிப்பாகுக்குப் பதில் கொதிக்கக் கொதிக்க வெல்லப்பாகை வைத்து அதில் சேவினைப் போட்டு எடுத்தால் அதுதான் மனோகரம். இதில் லேசாக சுக்கு சேர்த்திருப்பார்கள். லேஸ் சிப்ஸ் விளம்பரத்தில் சொல்வார்களே, No one can just eat one என்று, அது மனோகரத்திற்கும் பொருந்தும். மற்ற ஊர்களில் எல்லாம் ஒரு கிலோ ஸ்வீட் விலை படுபயங்கரமாக இருக்கையில் ஜீவா ஸ்டோரில் மட்டும் சந்தை விலையை விட 40, 50 ரூபாயாவது குறைவாகவே இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தரமும் நிறைவாக ஒன்று போலவே இருக்கிறது. ஜீவா ஸ்டோரின் தற்போதைய முதலாளியான சதீஷ் அவர்களும் அதே கருத்தை எதிரொலிக்கிறார். “1977ல் எங்கள் தாத்தா சிவசுப்பிரமணியன் இந்தக் கடையைத் துவங்கினார். எங்களின் மனோகரம் நிறைய பேருக்குப் பிடித்திருந்தது. அந்த செய்முறையை இப்போதும் நாங்கள் அப்படியே கடைப்பிடித்து வருகிறோம். மூலப் பொருட்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்வதில்லை. நியாயமான லாபம் தான் வைக்கிறோம். மனோகரமும் சீடையும் தான் அதிகம் விற்பது. இருந்தாலும் முறுக்கு, தட்டை, அல்வா லட்டு என்று அனைத்து பொருட்களும் நன்றாகவே விற்பனையாகின்றன” என்கிறார். “ஓ அப்படியா! சரி, உங்க அப்பா பேர் என்ன?” என்று கேட்பதற்கு “மனோகரன்!” என்றார் சதீஷ் சிரித்துக் கொண்டே.

‘தென்காசியின் பிரபலமான இனிப்புகள் பற்றி எழுதுறீங்களா, ஒரு டாக்டரை இனிப்பு பத்தி எழுத சொல்றதான்னு தான் யோசனையா இருக்கு’ என்று ஆசிரியர் அவர்கள் சொல்கையில், “அதுக்கென்ன சந்தோஷமா எழுதித்தாரேன்.. ஏன்னா சந்தோஷமும் இனிப்பும் வேறு வேறு அல்ல! அப்படித்தான் எங்க சங்கரன்கோவில்ல இருக்கிற சாத்தூர் ராஜரத்னா ஸ்நாக்ஸ் கடையோட டப்பால போட்டிருக்காங்க” என்று சந்தோஷமாகவே சொன்னேன் நான்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com