எட்டு முறை தோல்வி… ஆனாலும் துவளாத முயற்சி!

விநாயக முருகன் ஸ்வீட் – பேக்கரி, புதுச்சேரி
Vinayaga_murugan
Published on

இனிப்புக் கடைக்கு இப்படி ஒரு கடின வரலாறா என ஆச்சர்யப்பட வைக்கிறது இந்தக் கதை. சிறு வயதிலேயே ஓய்வில்லா உழைப்பு. தொடங்கிய தொழிலில் தொடர் தோல்விகள் என அனுபவப்பட்டவர் ராஜசேகர். பாண்டிச்சேரியில் ஆறு கிளைகளுடன் இன்று செயல்பட்டு விநாயக முருகன் ஸ்வீட் கடையின் உரிமையாளர் இவர். கொரோனாவில் இவர் துரதிருஷ்டவசமாக இறந்துவிட, தொழிலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறார் அவர் மகன் சதீஷ் குமார். எம்.பி.ஏ. பட்டம்பெற்ற அவரிடம் பேசினோம்.

“வறுமை அப்பாவை பாண்டிச்சேரிக்கு துரத்தியது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் அவர். விருத்தாசலத்திலிருந்து பாண்டிக்கு வந்தவர் பிரபலமான ஸ்வீட் கடையில் கிளாஸ் கழுவும் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு மாலை 7 மணிக்கு வேலை முடிந்ததும், தியேட்டருக்கு முறுக்கு விற்கப்போவார். இதற்கிடையே, அங்குள்ள டீ கடையில் கிளாஸ் கழுவுவார். ஒன்பது வயதில், மூன்று நான்கு வேலை பார்த்துள்ளார்.

பதினெட்டு வயதில், தான் வேலை பார்த்த கடையில் மேனேஜர் ஆனார். அடுத்த வருடத்தில் வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக ஸ்வீட் கடை திறந்தார். அவர் ஆரம்பித்த எந்த கடையும் ஓடவில்லை. புதிதாகக் கடை திறந்து, ஒருவரும் வராமல், ஸ்வீட்டுகள் அனைத்தும் கெட்டுபோய் கடையை மூடிய துயரம் எல்லாம் நடந்திருக்கிறது. இப்படி எட்டு கடைகளை அப்பா திறந்து மூடியுள்ளார்.

எங்க பெரியப்பாவும் பெரிய ஸ்வீட் மாஸ்டர். அப்பா தான் தொடங்கிய ஒன்பதாவது கடைக்கு பெரியப்பாவை பெயர் வைக்க சொல்லியிருக்கிறார். அவர் வைத்த பெயர்தான் ‘விநாயக முருகன்’.

டீ கடையாகத்தான் முதலில் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் கடைக்கு வந்த ஒருவர், யாரிடமோ ஸ்வீட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன், அவர் செய்துதரவில்லை என புலம்பி இருக்கிறார். அதைக்கேட்ட அப்பா, அன்று இரவே அவருக்கு ஸ்வீட் செய்து கொடுத்திருக்கிறார். அந்த ஆர்டர் கொடுத்த நம்பிக்கை டீ ஸ்டால், ஸ்வீட் ஸ்டாலாக மாறியது. வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில், அப்பா வெவ்வேறு புது தொழில்களில் முதலீடுகளை செய்யத் தொடங்கினார். அதில் ஏற்பட்ட இழப்பு, செய்துவந்த தொழிலையும் பாதித்தது. இதற்கிடையே, அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே அப்பாவுக்கும் விபத்து ஏற்பட்டது. ஒரே சமயத்தில் இருவருமே மருத்துவமனையில் இருந்தார்கள். கடையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து 2015லிருந்து கடையை நானும் என் தம்பியும் நடத்தத் தொடங்கினோம்.

வங்கிகளுக்கு கடன் உதவி கேட்டு சென்றபோது ஆரம்பத்தில் ஏளனம் செய்தார்கள். ஆனால், இப்போது எங்களுக்கு ஆறு கடைகள், ஒரு பெரிய தொழிற்சாலை உள்ளது. ஒருநாளைக்கு பத்தாயிரம் பேர் எங்களின் இனிப்புகளை, தின்பண்டங்களை வாங்கி சுவைக்கிறார்கள்.

பேக்கரி ஐட்டம், ஸ்வீட், காரம் போன்றவற்றை நாங்களே உற்பத்தி செய்கிறோம். அன்றே தயாரித்து, அன்றே விற்பனை செய்கிறோம். இதில் மில்க் ஸ்வீட்டும், நெய் ஸ்வீட்டும் எங்களிடம் ஸ்பெஷல். எங்கள் கடையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரசாதம் படைத்து வாடிக்கையாளர்களுக்குத் தருகிறோம்.

பாண்டிச்சேரியில் முதல் முறையாக நாங்கள் தான் டின்பாக்ஸ் கொடுத்தோம். நாங்கள் தரும் ஸ்வீட் பாக்ஸ், பேக் ரொம்ப பேன்ஸியாக இருக்கும். எளிதில் மக்கள் அதை தூக்கிப்போட மாட்டார்கள். அது கடை மீதான மதிப்பைக் கூட்டும். இதுபோன்ற சில விஷயங்களை செய்தாலும், விலையை கூட்டமாட்டோம். எங்கள் கடையில் 90 வகையான உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறோம். தீபாவளிக்கு ஜம்போ டின்பாக்ஸ், நட்ஸ் பேக் அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒவ்வொரு வருடம் ஒரு ஸ்வீட் அறிமுகப்படுத்துவோம். இந்த வருடம் தோதா பர்பி, ஹனி அல்வா அறிமுகப்படுத்தி உள்ளோம்.

கொரோனாவில் அப்பா இறந்துவிட்டார். அப்பா உருவாக்கிய அந்த பெயர் பல மக்களுக்குச் சென்று நேர வேண்டும். அவர் இல்லாவிட்டாலும், அவர் உருவாக்கிய பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை!’ என்கிறார் சதீஷ் குமார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com