சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!

Climate
Published on

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பரவலான உரையாடல் மேற்சொன்ன நாளில் மட்டுமே அதிகம் நடப்பதால், சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்தும், அக்குற்றங்களுக்கும் பேரிடர்களுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றியுமான விவாதங்கள் மிகக்குறைவே.

எது சுற்றுச்சூழல் குற்றம்?

எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால் சட்டத்திற்குப் புறம்பான ஏதேனும் ஒரு செயல், நேரடியாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின், அதுவே சுற்றுச்சூழல் குற்றம் என வரையறுக்கப்படுகிறது. அதே வேளையில், விளக்கமான வரையறை என்பது எந்தவொரு மனித செயலானது உள்நோக்கத்துடன், அறிந்து, அச்செயலின் விளைவுகள்பற்றி கவலைப்படாமல் அல்லது கட்டுப்பாடுகளை புறக்கணித்து, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறுவதாக இருக்கிறதோ அதுவே சுற்றுச்சூழல் குற்றமாக கருதப்படும். நமது நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சில சிறப்பு சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றுள் முதன்மையானது நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986, வன பாதுகாப்பு சட்டம், 1927 மற்றும் காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972. ஆனால் இச்சட்டங்களை நடைமுறைபடுத்துவதில் அக்கறையற்ற நிலை மிகப்பரவலாக காணப்படுகிறது. உதாரணத்திற்கு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2022 தரவுகளின்படி மேற்சொன்ன ஐந்து சட்டங்களில் இந்தியா முழுமைக்கும் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 2863. அதில் தமிழ் நாட்டில் பதியப்பட்ட வழக்குகள் 24 மட்டுமே.

சுற்றுச்சூழல் குற்றங்களின் வகைகள்

சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் பன்முகத்தன்மை கொண்டவை.

(i) காட்டுப் பகுதிகளில் வாழும் உயிரினங்களான மான், யானை, காண்டாமிருகம், எறும்பு திண்ணி, புலி மற்றும் பறவைகள், ஊர்வனவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொல்வதும், வேட்டையாடுவதும், கடத்திச் சென்று விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். காட்டுயிர்கள் என்பது மிருகங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் மரம், செடி, கொடிகளையும் உள்ளடக்கியதே! எனவே, சட்டத்திற்குப் புறம்பாக மரங்களை வெட்டுவதும், அதனைக் கடத்துவதும் குற்றமாகும்.

(ii) கடலில் காணப்படும் அரியவகை தாவரங்களை அழித்தல், மீன் வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டுதல், தடை செய்யப்பட்ட வழிமுறைகளில் மீன் பிடித்தல் மற்றும் மீன்பிடி வலைகளை பயன்படுத்துதல், பவளப் பாறைகள், கடல் அட்டைகள், கடல் குதிரைகள், கடல் ஆமைகள் போன்றவற்றைக் கடத்துதல், விற்பனை செய்தல் மற்றம் பிற பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுதலும், அலையாத்திக் காடுகளை அழித்தல் உட்பட அனைத்தும் குற்றமாகும்.

(iii) அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளிலும் இரசாயன ஆலைகளிலும் உருவாகும் ஒவ்வொரு கழிவுப்பொருளும் அரசின் பரிந்துரைக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்டபின் தான் வெளியேற்றப்பட வேண்டும். ஏதேனும் ஒரு வகையில் அக்கழிவுப் பொருட்கள் நிலம், நீர், காற்று மற்றும் வளிமண்டலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துமாயின் அது குற்றமாகும்.

(iv) சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆறு, தாது மணல்களைக் கொள்ளையடித்தல், கனிமங்களை வெட்டி எடுத்தல் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்யப்படும் பெருங்குற்றங்களாகும்.

(v) உலக நாடுகள் அனைத்தும் ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் குளோரோ புளோரோ கார்பன் (CFC) எனப்படும் வாயுவின் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டுவரும் இச்சூழலில், சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக CFC வாயு கடத்தப்படுவதும், பயன்படுத்தப்படுவதும் குற்றமாகும்.

(vi) நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் திடக்கழிவுகளை முறையாக வகைப்படுத்தி, அரசு பரிந்துரைத்துள்ள வழிமுறைகளில் அவற்றை அகற்ற வேண்டும். விதிகளுக்கு எதிராக குப்பைகளை கையாள்வதும் குற்றமாகும்.

அதிகரிக்கும் ஆபத்தும் தாக்கமும்

மேற்சொன்ன வெவ்வேறு வகையான சுற்றுச்சூழல் குற்றங்கள் பல்வேறு வழிமுறைகளில் இயற்கைக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கின்றன. மேலும், அவை இயற்கை மற்றும் மனித உந்துதலால் ஏற்படும் பேரிடர்களின் தாக்கத்தையும் மோசமாக்குகிறது. உதாரணத்திற்கு, தீவிர காடழிப்பு, மலை முகடுகளில் கனிமங்களை வெட்டி எடுப்பது போன்று சுற்றுச்சூழல் விரோத செயல்கள் சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்று பேரிடரை மோசமாக்கி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி தமிழ் நாட்டில் மட்டும் ஏறக்குறைய 8000 மனித உயிரிழப்பு ஏற்பட்டது. அறிவியல் பூர்வமாக அலையாத்திக்காடுகள் இப்படிப்பட்ட பேரலைகளின் தாக்கத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. அந்தவகையில் கடல் சார்ந்த வளங்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, இரசாயன, பூச்சிக்கொல்லி மற்றும் உர உற்பத்தி, சாயப்பட்டறை, தோல் பதனிடுதல், பெரு மற்றும் சிறு இயந்திர உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படாமல் போவது மனிதரால் உந்தப்படும் பேரிடருக்கு வழிவகுக்கும். மேலும் பெருமழைக்காலங்களில், குறிப்பாக நகரங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட, நெகிழிப்பொருட்களை சரியான வகையில் கையாளும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளாததும் காரணம். மேற்சொன்ன செயல்கள் ஒரு சங்கிலித் தொடர் முறையில் பல்வேறு வகைகளில் இயற்கைக்கும், மனிதர்களுக்கும் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இப்படித் தான் சுற்றுச்சூழல் குற்றங்கள் இயற்கை பேரிடரின் தாக்கத்தை அதிகரிப்பதிலும், தொழிற்சாலைகள் தொடர்புடைய மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பேரிடர்கள் நிகழ்வதற்கும் ஓர் காரணியாக இருக்கிறது என்பதை மறுக்க இயலாது!

உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்களின் கள்ளச்சந்தை பொருளாதார மதிப்பு 91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 7.6 இலட்சம் கோடி ரூபாய்) வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள், உலக அளவிலான ஒட்டு மொத்த குற்ற நடத்தைகளில் நான்காம் இடம் பிடித்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் ஐந்து முதல் ஏழு விழுக்காடு வரை சுற்றுச்சூழல் குற்றங்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன.

மாற்றத்திற்கான நேரம் இதுவே

இத்தகைய மனிதர்கள் மற்றும் இயற்கைக்கு மிகப்பெரும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தவல்ல குற்றங்களானது, ஆட்சியாளர்களின் போதுமான கவனத்தை ஈர்க்காததற்கு காரணம் என்ன? சுற்றுச்சுழலுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் உரிய பதிலை ஆராய்வதற்கு முன், மக்கள் எதனை குற்றம் என்று நினைக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். பொதுவாக ஒரு செயல் தனிநபரையோ, அவர் சார்ந்த குடும்பத்தையோ பாதிக்கின்றது என்றால் அச்செயலே குற்றமாகக் கருதப்படும். எனவே தான் நம் வீட்டில் திருட்டோ, கொள்ளையோ அல்லது பிற நபரால் காயப்படுத்தப்பட்டாலோ, மிரட்டப்பட்டாலோ காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றோம். மேற்சொன்ன நிகழ்வுகளில் நாம் ‘நேரடியாக பாதிக்கப்படுகிறோம்’. ஒருவேளை நாம் எந்த நிகழ்வுகளாலும் பாதிக்கப்படவில்லை எனில், புகார் தெரிவிப்பதைப் பற்றிய எந்த எண்ணமும் நமக்கு வராது. ஆகவே, எந்த ஒரு குற்றச்செயலிலும், ‘பாதிக்கப்படுதல்’ என்பது ஒரு முக்கிய காரணி. மாறாக அநேக நேரங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்ற நடத்தைகளில் நேரடியாக பாதிப்பிற்கு உட்படுவது இயற்கையும் அது சார்ந்த சூழலியலும் தானே என பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். எனவேதான் என்னவோ சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன என்று அமைதி காத்துக்கொண்டிருக்கிறோம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது மக்களைத்தான் பாதிக்கிறது என்று உணர மறுக்கிறோம்! இதனால் தான் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரசு மற்றும் மக்கள் மத்தியில் போதுமான முக்கியத்துவம் கிடைக்கப் பெறவில்லை. மாறாக, பேரிடர்கள் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தவல்லதாக இருப்பதால், அதனால் விளையும் அபாயங்களும் அதிகம். எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை, காவல்துறை, தொழில் துறை, நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரசு துறைகளை சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட வைக்க மக்களாகிய நாமும், மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும்.

(அ. சங்கர் பிரகாஷ், வளம் காப்பு குற்றவியல் ஆராய்ச்சியாளர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com