திராவிட இயக்கமும் தலித்தியமும்!

திராவிட இயக்கமும் தலித்தியமும்!
Published on

தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைப்பதா, தலித் என்று அழைப்பதா, ஆதிதிராவிடர் என்று அழைப்பதா என்பதே கூட சர்ச்சையாக இருக்கிறது.

இதுபோன்ற சர்ச்சைகளில் நாம் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்போது ஆதிக்க ஜாதியினர், போராடிப் போராடிப் பெற்ற சமூக நீதியின் அடி வேரை வீழ்த்தும் வேலையில் இறங்கி வருகின்றனர். 'நீட்' என்பது அத்தகைய கண்ணி வெடிதான்!

தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில் தாழ்த்தப்பட்டவருக்கென்று மட்டும் இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை; அதனை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் பேதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை வீழ்த்துவதையே தமது முதன்மைப் பணியாகக் கொண்டவர்.

இதுபற்றி தந்தை பெரியாரின் வார்த்தைகளில் அறிவது சரியாக இருக்கும்.

"பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான வகுப்புவாரி உரிமை என்று வரும்போது, அதில் தீண்டப்படாத மக்களின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தான் முக்கியம் என்பதைக் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்வோம்.

தீண்டாமை ஒழிவதன் மூலமாகத்தான் - நாடு சுயராஜ்யம். ஆதலால் தீண்டாமை விலக்கில் கவலை உள்ளவர்களும் தீண்டாதாரென்று சொல்லப்பட்டு வருபவர்களும் அவசியம் காஞ்சிபுரத்துக்கு வந்து அதற்கென்று ஓர் மாநாடு கூட்டி காரியத்தில் பயன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்".

31ஆவது காங்கிரஸ் மாநாடு 1925 நவம்பர் 21, 22 நாட்களில் - காஞ்சிபுரத்தில் நடக்க இருந்ததற்கு முன்னதாக தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை (15.1.1925).

6.4.1926 அன்று தந்தை பெரியார் காரைக்குடிக்கு அழைக்கப்பட்டார் - மேளதாளத்துடன் வரவேற்றார்கள். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக வெட்டப்பட்ட கிணற்றைத் திறந்து வைப்பதாகும்.

அங்கே சென்ற தந்தை பெரியார் பேசியது என்ன?

"இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை பெருமையாகக் கொண்டு எனக்கு அளித்திருந்தாலும், உண்மையைச் சொல்லுகிறேன்- இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கக் கொஞ்சங்கூட என் மனம் இடம் தரவில்லை. இதுபோல தனிக் கிணறு வெட்டுவது, ஆதி திராவிடர்களை நம்மை விடத் தாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்கள் அல்லர் என்று எண்ணிக் கொள்வது ஒரு நிரந்தரமான வேலியும் நினைவுக் குறிப்பும் ஏற்படுத்துவதாகத் தான் அது அர்த்தமாகும். பட்சிகளும், மிருகங்களும், குளங்களில் தண்ணீர் குடிப்பதில்லையா? அப்படிப்பட்ட தண்ணீரை இந்த ஆதித் திராவிடத் தோழர்கள் எடுத்துச் சாப்பிடுவதால் என்ன கெடுதி ஏற்பட்டு விடும்?

அருமை ஆதி் திராவிடர் தோழர்களே! நீங்கள் உங்கள் ஜாதிக்கு இழிவு தேடிக் கொள்கிறீர்கள். எவரைக் கண்டாலும், இரு கை தூக்கி "சாமி" என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்களுடைய ரத்தத்தில் கலந்து இருக்கிறது. அதை மாற்றிட வேண்டும். சுயமரியாதையில் கவனம் இல்லாத ஜாதியாரை எவ்வளவுதான் உயர்த்தினாலும் உயராது" என்று சுயமரியாதை உணர்வின் அவசியத்தை தமக்கே உரித்தான முறையில் பேசினார் பெரியார்.

கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை தேவை என்பதற்காகப் போராடினார். தனது வாழ்நாளின் இறுதிப் போராட்டமாகவே இதனை அறிவித்தார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

தந்தை பெரியார் மறைந்திருக்கலாம் இன்று அவர் கொள்கை வெற்றி பெற்றுள்ளார். 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். பெண் ஒருவர் ஓதுவாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயில் நுழைவுப் பிரச்சினையில் தந்தை பெரியாருக்கும் காந்தியாருக்கும் அடிப்படையே வேறுபாடு கொண்டதாகும். குருவாயூர் ஆலயப் பிரவேசத்தினை பொறுத்தவரை கூட காந்தியார் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தாழ்த்தப்பட்டோர் அனுமதி, பின்னர் ஆலயத்தினைச் சுத்திகரித்து பிற இந்துக்கள் பயன்படுத்துதல்" என்ற திட்டத்தினையே முன் வைத்தார். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குச் சென்று வெளிவந்தபின், கோயில் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பது புதிய வகை தீண்டாமை என்பதல்லாமல் வேறு என்ன? என்பது தான் தந்தை பெரியாரின் கேள்வி.

தாழ்த்தப்பட்டவர்கள் சாலைகள், கிணறுகள், குளங்களில் புழங்கும் உரிமையை இரட்டை மலை சீனிவாசன் முன்மொழிய, நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் ஆணை பிறக்கப்பட்டது (ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924).

லேபர் கமிஷன் என்ற துறை தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மறுத்தால் உரிமம் மறுப்பு: பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் கட்டாயம் சேர்ப்பு என்பன போன்ற ஆணைகளை செயல்படுத்தியதும் நீதிக்கட்சி ஆட்சியே! மற்ற மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது - தமிழ்நாட்டில் மேம்பட்ட நிலையில் இருந்தாலும், ஜாதி தொடர்பான ஆணவக் கொலைகளும், சர்ச்சைகளும் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கத் தான் செய்கின்றன.

கலைஞர் அவர்கள் ஆட்சியில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டபோது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோரில் ஒரு பிரிவினர் எதிர்த்த கொடுமையும் நடந்ததுண்டு,

முதுகுளத்தூர் ஜாதி கலவரத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கம் உறுதியாக நின்றவர் தந்தை பெரியார். 1957 நவம்பர் 3இல் தஞ்சையில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாட்டில் கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சிகளைத் தொடங்குவதற்கு, தலைவர்களாக வருவதற்குக் கோட்பாடுகளும், இலட்சியங்களை முன்னின்று செயல்படுத்துவதும் கடினம் என்பதால், எளிதாக திரட்டுவதற்கும், தலைவர்கள் ஆவதற்கும் ஜாதி என்கிற முதலீடு மலிவாகி உள்ளது ஒரு கெட்ட வாய்ப்பே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்-தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவதைப் புரிந்து கொள்ள முடியும் மற்றவர்கள் நிலையை நியாயப்படுத்த முடியாது.

காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்தி, கலவரங்கள் மூள்வதற்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக செயற்குழு, பொதுக்குழு மற்றும் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. இதனை அரசு கவனத்தில் கொண்டு செயல்படுத்த முன்வரவேண்டியது அவசரமாகும்.

பாடத் திட்டங்களில் ஜாதி மறுப்பு - சகோதரத்துவம் பற்றிய அம்சங்கள் இடம்பெற வேண்டும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பாடங்களை இடம் பெறச் செய்ய வேண்டும். ஜாதிக் கலவரம் நடக்கும் இடங்களில் தண்ட வரிப் போட வேண்டும் என்ற தந்தை பெரியார் கருத்தையும் இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com