திண்டுக்கல் இரயில்நிலையத்துக்கு அருகில் உள்ள நாகல்நகர் பகுதியில், 90ஆவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது, ஜிலேபி ஐயர் கடை. திண்டுக்கல் மட்டுமல்லாமல் சுற்று வட்டார இனிப்பு, பலகாரப் பிரியர்கள் இப்படித்தான் அந்தக் கடையைச் சொல்கிறார்கள். ஜவுளித் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்த விஜயகுமார், ஒரு சூழலில் குடும்பத் தொழிலுக்குள் வந்துவிட்டார். தம்பி கணேசும் இவரும்தான் ஜிலேபிக் கடைக்கு இப்போது அச்சாரம்!
“எங்க தாத்தா எஸ்.ஆர். கிருஷ்ண ஐயர்தான் இந்தக் கடையை ஸ்தாபிச்சாரு. தொடக்கத்தில அவர் ஜிலேபி, பூந்தி, மைசூர்பாகு, லட்டு, முறுக்கு, மிக்சர், காராச்சேவுனு இருபது பலகாரங்களைத் தயாரிச்சு தள்ளுவண்டியில் வச்சு வியாபாரம் செஞ்சாரு. 1936இலதான் இந்த எடத்துல சின்ன பொட்டிக்கடையப் போட்டு உட்காந்திருக்காரு. அடுத்து, அப்பாவும் பெரியப்பாவும் குடும்பமா சேர்ந்து செஞ்சாங்க. மூணாவது தலைமுறையா நானும் தம்பியும் 1989-90 காலகட்டத்துல தலையெடுத்தோம். இப்போ நாலாவது தலைமுறையா நல்லபடியா செஞ்சுகிட்டு வரோம்...” என்று சுருக்கமான அறிமுகம் தந்தார்.
எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு 2006இல் கடையைக் கொஞ்சம் எடுத்துக் கட்டி யிருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் சுடச்சுட வியாபாரம் நடந்துவிடுகிறது.
“எங்களுக்குனு இருக்கிற வாடிக்கையாளுக தலைமுறைகளா வர்றாங்க. பெரிய வெளம்பரமெல்லாம் செய்றதில்ல. முன்னாடி வைகை எக்சுபிரசுக்குப் (சென்னைக்கு) போறவங்க வரும்போது அந்த நேரத்துல கூட்டமா இருக்கும். இப்போ சுத்திசுத்தி கடைகள் பெருத்தாலும் நம்மளத் தேடி வர்ற ஆளுக குறையல. அதுதான் எங்களுக்கு உந்துசக்தி.” என்கிற விஜயகுமார், இடையில் கடையையொட்டி புதியதாக மேம்பாலம் கட்டத் தொடங்கியபோது, வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்களோ என யோசிக்கவைத்தது என்பதையும் மறைக்காமல் சொல்கிறார்.
ஆனாலும் பாலம் கட்டப்பட்டபோதும், கட்டியபிறகும்கூட ஜிலேபி அய்யர் கடையெனத் தேடிவருகிறார்கள், பலகாரங்களுக்குப் பயன்படுத்தப்படும் உளுந்து, பச்சரிசி போன்றவற்றை மிகவும் கவனமாகக் கையாள்வதும் வாடிக்கையாளர் கருத்துகளைக் கவனமெடுத்து பொறுப்பாக நடந்துகொள்வதிலும் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை என்கிறார், விஜயகுமார்.
“இப்போதைக்கு நம்ம மேல அக்கறையுள்ள எல்லாரும் தொழிலை விரிவுபடுத்தணும்னு சொல்லிகிட்டே இருக்காங்க. நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஜிலேபி மிசினு ஒண்ணக் கொண்டுவந்தாங்க. அது சரிப்பட்டு வரல. என்னதான் மிசினா இருந்தாலும் கைப்பக்குவம்னு ஒண்ணு இருக்குதில்லைங்களா, அதான்... ஆனாலும் ரொம்ப காலமா (தோல் நீக்கிய வேர்க்கடலை) பொட்டு அடுப்புதான் பயன்படுத்துறோம். இப்போ புகை, சுற்றுச்சூழல்னு ஒட்டல்கள்ல எல்லாமே கேஸ் அடுப்புக்கு மாறிட்டதால, மாத்தவேண்டிய சூழ்நிலை. பொட்டு அடுப்புன்னா சில மணி நேரம் சூட்டு கணப்பு இருக்கும். அது பலகாரம் தயாரிப்புக்கு ரொம்ப ஒத்தாசையா இருக்கும். கேஸ் அடுப்புன்னா ஆன், ஆஃப்தான். ஆனாலும், காலத்துக்கு ஏத்தாப்புல மாறியாகணும்கிறது இன்னொரு பக்கம் சரிதான். எங்களைப் பொறுத்தவரைக்கும் வாடிக்கையாளருங்களுக்கு எந்தக் கொறையும் இருந்துடக்கூடாது,” என அழுத்தமாகச் சொல்கிறார், விஜயகுமார்.
ஓட்டல், பேக்கரி தொழில்களில் புதியவர்கள் வருவதற்கு வசதியாக அவை தனி படிப்புகளாகக் கற்றுத்தரப்படுவதைச் சுட்டிக்காட்டியவர், இனிப்பு, பலகாரம் செய்வதற்கான படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் திறன்மிகு பணியாளர்கள் (Skilled labourers) கிடைப்பார்கள் என யோசனையையும் முன்வைக்கிறார். இந்த ஆதங்கம் அர்த்தமுள்ளதுதானே?