தமிழில் தலித் சினிமா : காட்சி அழகியல்!

தமிழில் தலித் சினிமா : காட்சி அழகியல்!
Published on

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் சினிமாக்களை பற்றி பேசும்போது அந்த சினிமாக்களின் அரசியலை மட்டுமே பெரும்பாலும் கவனத்தில் கொள்கிறார்கள். அதைப்பற்றியே விவாதிக்கிறார்கள். ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற தலித் இயக்குநர்களின் திரைப்படங்களின் காட்சி அழகியல் முக்கியமானதும் தனித்துவமானதுமானது என ஒரு ஓவியக்கலைஞனாக, காட்சி அழகியலின் மீது ஆர்வம் கொண்டவனாக நான் நினைக்கிறேன்.

ரஞ்சித் அடிப்படையில் ஓவியர் என்பது நமக்கு தெரியும். அந்த ரசனை ரஞ்சித்தின் சினிமாக்களின் போஸ்டர் டிசைன்களிலிருந்தே ஆரம்பித்து விடும். அவரது முதல் படமான அட்டகத்தியின் போஸ்டர் டிசைகளில் ஒன்று ஓவியர் க்ளிம்ப்டின் ஓவியப் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும். மெட்ராஸ் படத்தில் முதல் பார்வை போஸ்டர் ஒரு விதத்தில் சுவரோவியக் கலைஞன் பேங்க்ஸியின் ஓவியங்களை ஞாபகப்படுத்தும். கபாலி, காலாவின் போஸ்டர்களும் தனித்துவத்துடன் இருக்கும். சார்பட்டா பரம்பரை போஸ்டர்கள் அந்தக் கால விண்டேஜ் போஸ்டர்களை மறுஉருவாக்கம் செய்தது போல இருக்கும். நட்சத்திரம் நகர்கிறது படத்தின் முதல் போஸ்டர் நீர்வண்ண ஓவியம் போலவே உருவாக்கப்பட்டிருக்கும்.

மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாளின் முதல் போஸ்டரில் கறுப்பி என்னும் நாயை பிரதானப்படுத்தி பின்னனணியில் பரியனும் பிற மக்களும் இருப்பார்கள். ஒரு போஸ்டர் கலர் ஓவியம் போன்ற நுட்பத்துடன் அது உருவாக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல படத்தின் ப்ரமோ பாடலாக வந்த'கறுப்பி என் கறுப்பி’ பாடலில் கறுப்பி நாயின் தலை மட்டும் ஒரு ‘விஷுவல் மோடிஃப்’ ஆக பயன்படுத்தப்பட்டிருக்கும். கர்ணன் படத்தின் முதல் போஸ்டரில் நிறைய கைகள் இணைந்து ஒரு வாளைத் தூக்கிப் பிடித்திருக்கும் காட்சி இருக்கும், படத்தின் உள்ளடக்கத்தை எதிர்ப்புணர்வை சொல்லும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் ப்ரமோ பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலில் கலை இயக்குநர் ராமலிங்கம் தீப்பந்தம் கொண்டு வரையும் கதைநாயகனின் கரி ஓவியம் முழுமையடைவதும் அட்டகாசமான காட்சி அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கும். மாமன்னன் படத்தின் முதல் போஸ்டர் ஒரு நடுகல் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். மாரியின் அழகியலில் கருப்பு வெள்ளைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. அவரது போஸ்டர்கள் முதல் ப்ரமோ பாடல்கள் வரை அதைப் பார்க்கலாம்.

அட்டகத்தி திரைப்படம் சென்னை என்கிற பெருநகருக்கும் அதன் அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்கும் இடையிலான மனிதர்களின், குறிப்பாக இளைஞர்களின் ஊடாட்டத்தை சொல்லும் சினிமா. ஆகவே பஸ் அந்த திரைப்படத்தில் ஒரு பிரதான ’விஷுவல் ஐடெண்டி’யாக பயன்படுத்தப்பட்டிருக்கும். பேருந்துக்காகக் காத்திருக்கும் மனிதர்களின் கால்களின் காட்சித் துண்டு ஒன்று படத்தின் ஓரிடத்தில் வரும். அது போன்ற காட்சி நறுக்குகள் எந்த திணித்தலும் இல்லாமல் ரஞ்சித் படங்களில் வருவதைப் பார்க்கலாம். மெட்ராஸ் படத்தில் காலை விடிவது ஒரு கோழியின் கண்களினூடாக தெரியும்.

மெட்ராஸ் படத்தில் சுவர் ஓவியம். அதுவே அந்த படத்தின் மையக் கதாபாத்திரம். முன்பெல்லாம் சென்னை ஓவியக்கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் செலவுக்கு பணம் தேவைப்படும்போது அரசியல் சுவர் விளம்பரங்கள் வரைய செல்வது வழக்கம். ரஞ்சித் கூட ஒரு நேர்காணலில் அப்படி அரசியல் சுவர் விளம்பரங்கள் வரைய செல்லும்போது தான் மெட்ராஸ் படத்தின் இந்த ஐடியா ஒரு விதையாக தனக்குள் விழுந்ததாக சொல்லியிருந்தார், மெட்ராஸ் படத்தின் காட்சி அழகியல் அதன் துவக்க பாடலான ‘எங்க ஊரு மெட்ராஸு’ பாடலிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது. மக்கள், அவர்களின் வாழ்வியல், கட்டடங்கள் குறிப்பாக அவர்கள் வாழும் நிலப்பரப்பு சார்ந்த காட்சி மற்றும் அதன் வண்ணக்கலைவைகள் என்று ஒரு வகையான ’ஹைப்பர் ரியலிச பாணி ஓவியங்கள் போல டீடெயிலான காட்சி அமைப்புகள். இடைவேளையின் போது அந்த சுவர் மீது விழும் கதைநாயகனின் நிழல் முதல் கடைசி காட்சியில் சுவரில் வந்து விழுந்து சிதறும் ‘நீல வண்ணம்’ வரை ஓர் ஓவியனுக்கே உரிய விஷுவலைசேஷன்கள் அவை.

காலாவில் ஒரு வகையில் இயற்கையின் அடிப்படை மூலக்கூறுகளான நிலம் நீர் நெருப்பு காற்று வானம் போன்றவை காட்சி அழகியலுடன் படம் முழுக்க கையாளப்பட்டிருக்கும். நிலம் தான் படத்தின் பிரதான பிரச்சினை. நீர் என்பதை வில்லனான ஹரிதாதா அணுகும் விதமும் காலா அணுகும் விதமும் வெவ்வேறு வகையில் காட்சிகளாக வரும். நெருப்பு எப்படி ஹரிதாதா போன்ற ஆதிக்க சக்திகளின் ஆயுதமாக இருக்கிறது என்றும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். காற்றில் எழும் கருப்பு சிவப்பு நீலம் வண்ண சிதறல்கள் வானத்தை நிறைப்பதுடன் ‘கற்றவை பற்றவை’ என்று முடியும் கிளைமாக்ஸ் காட்சி அமைப்பு தமிழ் சினிமாக்களில் வந்த சிறந்த விஷுவலைசேசன்களில் ஒன்று என்று சொல்வேன்.

சார்பட்டா பரம்பரையில் வண்ணங்கள், காலகட்டத்தின் மறு உருவாக்கம், உடைகள் என்று விண்டேஜ் தன்மை கொண்ட காட்சி அழகியல் அட்டகாசமாகக் கொண்டு வரப்பட்டிருக்கும். பாக்ஸிங் சீக்குவன்ஸ்களின் பல்வேறு கதாபாத்திரங்களின் வெவ்வேறு எக்ஸ்பிரஷன்கள் முதல் கொண்டு சண்டை காட்சிகள் வரை அனைத்தையும் எடிட்டிங்கில் இணைத்து ஒரு முழுமையைக் கொண்டு வந்திருப்பது என்று உலக திரைப்படங்களின் வரிசைகளில் தயக்கமின்றி சார்பட்டா பரம்பரையை வைக்க முடியும்.

நட்சத்திரம் நகர்கிறது படம் நாடக உலகம் என்கிற விஷுவல் ஆர்ட் சார்ந்த பின்னணி என்பதால் அதில் காட்சி அழகியலின் அதிகபட்ச சாத்தியங்களை முயன்றிருப்பார் ரஞ்சித். ஒரு கனவு போல விரியும் அதன் பல்வேறு காட்சிகள் ரெனே என்கிற கதைநாயகியின் மன ஓட்டங்களை ஓவியருக்கு உரிய வகையில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

ரஞ்சித்தின் சினிமாக்களில் குறியீடுகளோ உருவகங்களோ தனியாக உருவாக்கப்பட்டிருக்காது. காட்சியின் போக்கில் அவை கலந்திருக்கும். அது அவரது பாணியாக இருக்கிறது. ஆனால் மாரியின் பாணி வேறு. சிறிய அட்டைப் பூச்சிகள் முதல் கொண்டு நாய்கள், பன்றிகள், கழுதைகள் என்று இயற்கை சார்ந்த உயிரினங்கள், நாட்டுப்புற தெய்வங்களின் முகங்கள் வரை ’விஷுவல் மெடஃபர்’கள் தனித்து தெரியும் காட்சி அழகியல் அது.

பரியேறும் பெருமாளில் ‘நான் யார்?” பாடலின் காட்சி ஆக்கம் ஒரு ‘சர்ரியலிஸ’ தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கும். நீல வண்ணத்தை அந்த பாடலில் பயன்படுத்தி இருக்கும் விதமும், ரயில் தண்டவாளங்களை காட்சி படுத்தி இருக்கும் விதமும் அட்டகாசமான விஷுவல்களாக இருக்கும். பரியேறும் பெருமாள் படத்தின் எதார்த்த அழகியலிலிருந்து விலகி இந்த பாடல் தனியான ஒரு காட்சி அழகியலுடன், கண்டெம்ப்ரரி உலக மியூஸிக் ஆல்பம் பாடல்களின் காட்சியமைப்பு போன்று உருவாக்கப்பட்டிருக்கும். பரியேறும் பெருமாள் படத்தின் கிளைமாக்ஸில் வரும் இரண்டு தேநீர் குவளைகளின் காட்சித் துண்டு அழுத்தமான உருவக ஓவியம் போல பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிட்ட ஒன்று.

கர்ணன் படத்தின் துவக்கத்தில் வருகிற ‘கண்டா வரச்சொல்லுங்க’ தலைப்பு பாடலின் காட்சி படுத்தல் இன்னொரு அட்டகாசமான உதாரணம். பல்வேறு கதை சொல்லும் மக்களின் முகங்களை க்ளோஸப் காட்சி நறுக்குகளாக அடுக்கி இருப்பதும் அவர்களின் மன அவஸ்தையை சின்னஞ்சிறு பூச்சிகளின் துடிப்புகள் வழியாக ஒரு கொலாஜ் பாணி அசையும் ஓவியம் போலவே உருவாக்கி உச்சத்தில் அழைத்தும் செல்வதும் மாரிக்கென்று தனித்ததொரு காட்சி அழகியல் இருப்பதை உறுதி செய்பவை. கர்ணன் படத்தில் வரும் இசக்கியம்மன் டெரகாட்டா சிற்ப முகம் அழுத்தமான எதிர்ப்புணர்வின் உருவகம். அந்த முகமூடிகளைப் பொருத்திக்கொண்ட பெண்களின் உடல்மொழி ‘விட்ராதீங்க யெப்போ’ பாடலில் வெளிப்படும் காட்சி அழகியலும் அற்புதமாக இருக்கும்.

மாமன்னன் படத்தில் துவக்க காட்சிகளான நாய் ஓட்டப்பந்தயமும் வில்லனின் அறிமுகமும் அதற்கு இணையாக பன்றிகளுக்கு தண்ணீரும் உணவும் வைக்கும் கதைநாயகனின் காட்சிகளும் மாறிமாறி காட்டப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் மாண்டேஜ் காட்சிகள் வசனங்களின் உதவியின்றி நல்லதொரு காட்சி அனுபவமாக திரைப்படத்தை ஆரம்பித்து வைப்பதாக இருக்கும். பன்றி, நாற்காலி போன்றவை காட்சிப்படிமங்களாக படம் முழுக்க பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இவை மட்டும் இல்லாமல் ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் வெளிவந்த படங்களான அதியன் ஆதிரையின்  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ஃப்ராங்கிளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’, தமிழ் இயக்கத்தில் வந்த ‘சேத்துமான்’ மற்றும் சோதனை முயற்சியாக வெளிவந்த ‘குதிரைவால்’ போன்ற எல்லா படங்களும் அதன் காட்சி அழகியல் மற்றும் காட்சி குறியீட்டு தன்மைகள் என்று ஒரு ‘விஷுவல் கல்ச்சரை’ தமிழ் சினிமாக்களில் உருவாக்கும் வகையில் அமைந்தவை.

வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு வெளியே சாதியற்றவர்களாக வரலாற்றில் இருந்து வரும் தலித்துகள் அமெரிக்க கறுப்பினத்தவர் போன்று தங்களுக்கென்று தனித்த அழகியல் உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு வகையில் விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட கலை வடிவமாக இருக்கிறது. கறுப்பினத்தவரின் ஓவிய, இசை, சினிமா காட்சிப் படுத்தல்களில் அவ்வகையான அழகியல் வெளிப்படுவதை பார்க்கிறோம். ஒரு வகையான்ட ‘கௌண்டர் கல்ச்சர்’ அது. அதற்கு இணையானது இங்கே தலித் கலை அழகியல். அது ஒரு வகைமையாக கலைக்குள் இயங்கும். தமிழ் சினிமாவில் அது ரஞ்சித்தில் துவங்கி பல கலைஞர்கள் வழியாக பயணிக்கும் ஒன்றாக இருக்கிறது.

நான் இங்கே ஓவியனாக காட்சி அழகியலை மட்டுமே சுட்டி பேசுகிறேன். ஆனால் காட்சி அழகியல் என்று மட்டும் இல்லாமல் மேலே சொன்ன திரைப்படங்கள் திரைக்கதை உருவாக்கத்திலும், படத்தொகுப்பு, இசையை, ஒலிகளை பயன்படுத்திய விதம், என்று சினிமா அழகியலின் எல்லா வடிவத்திலும் முழுமையை நோக்கி நகரும் நகர முயலுபவை. அவ்வகையில் தமிழில் தலித் உள்ளடக்கம் சார்ந்த இந்த திரைப்படங்கள் அதன் அரசியலுக்காக மட்டுமின்றி அதன் கலை நுட்பங்களுக்காகவும், தமிழ் சினிமா காட்சி அழகியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடியதாகவும் அமைந்து கொண்டாடப்பட வேண்டிய திரைப்படங்களாகவும் இருக்கின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com