புது டி.எஸ்.பிக்கு அமைகிற முதல் வழக்கே இவ்வளவு பெரிய திருட்டு வழக்காகப் போய்விட்டதே... என்றார் என் முகாம் அலுவலக தலைமைக் காவலர் ராதாகிருஷ்ணன். அதில் சின்னதாக ஒரு கிண்டல் இருந்தது.
பெரிய திருட்டுதான்... ஒரு வீட்டில் 174 சவரன் நகைகள் திருடு போய்விட்டன. பரபரப்பான செய்தி ஆகிவிட்டது! விருதுநகரில் 2003 ஆம் ஆண்டு என் முதல் காவல் பணியிடம் அமைந்தது. அங்கே டிஎஸ்பியாக பணிபுரிந்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது.
விருதுநகர் டவுன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தோடு குற்றாலம் சென்றுவிட அதை அறிந்த யாரோ ஒருவர் அன்று மாலையே வீட்டுக்குள் புகுந்து 174 பவுன் திருடி சென்றுள்ளார்கள்.
காவல் துறையைப் பொருத்தவரை காணாமல் போன பொருட்களை முழுமையாக திரும்ப பெற்று மக்களுக்கு கொடுப்பது மகத்தான புண்ணிய பணி. சட்ட ஒழுங்கு பிரச்னை என்றால் நிறைய அலுவலர்கள் ஒன்று கூடி அதை சமாளித்து விடுவோம்.
சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு மாவட்ட ஆட்சித் தலைவருடைய பொறுப்பில் வருகிறது. குற்றத்தடுப்பு மற்றும் கண்டுபிடிப்பு என்பது முழுக்க முழுக்க காவல்துறையின் வேலை.
அதனால்தான் மாதாந்திர சட்ட ஒழுங்குக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியரும், குற்றக் கூட்டத்தை காவல் கண்காணிப்பாளரும் நடத்துவார்கள். அந்த கூட்டத்தில் இந்த திருட்டு பற்றி அதீத கவனம் செலுத்தப்பட்டது.
என்னைக் கிண்டல் செய்த ஏட்டையாவிடம் நான், ‘காணாமல் போன நகைகளில் 100 சதவீதம் என்ன? நூற்றைம்பது சதவீதமாகவே மீட்டு விடலாம்‘ என்று சொன்னேன்.
அதையும் அவர் சரியாகப் பிடித்துக் கொண்டார். ‘காணாமல் போனதற்கு மேல் எப்படி மீட்பீர்கள். கற்பனையாக சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா?' என்றார்.
இருந்தாலும் நான் சொன்னதை நியாயப்படுத்த விரும்பினேன். கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னேன்.
‘ஒரு சினை ஆடு காணாமல் போய்விட்டது என்றால் அதனுடைய மதிப்பு 1000 ரூபாய். ஒரு சில மாதங்கள் கழித்து நம் ஆட்டை மீட்கிறோம். அப்பொழுது அது இரண்டு மூன்று குட்டிகள் போட்டிருந்தால் அதனுடைய மதிப்பு 1500 வரும். ஆக எப்படியும் காணாமல் போன மதிப்பை விட அதிக மதிப்பில் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது' என்று சொன்னேன். நான் சொன்னதை ரசித்த அவர், ‘நீங்க இன்னும் படித்த கால்நடை மருத்துவத்தை மறக்கல,' என்றார்.
ஆனாலும் மீண்டும் ‘ஐயா இந்த வாய் சமாளிப்பு நல்லாதான் இருக்கு. 174 பவுனை கண்டுபிடிக்க வழியை பாருங்க' என்று உரிமையோடு சொன்னார்.
ஒரு எதிர்பாராத பொருத்தமாக, அந்த வழக்கின் குற்ற எண்ணும் 174/2004 (காணாமல் போனது 174 சவரன்கள்) என அமைந்தது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. அறிவுச் செல்வம் அவர்கள், தினம் தினம் இந்த வழக்கு பற்றிய முன்னேற்றத்தைப் பற்றிக் கேட்பார்.
எதையாவது சொல்லி சமாளிக்க அனுபவம் இல்லாத காரணத்தினால், உண்மையைச் சொல்லி திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன்.
இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அதே நினைவாக கவலையாக இருந்தேன். என் பொறுப்பில் முதல் வழக்கு அல்லவா?
எனக்கு நானாகவே விருதுநகர் உட்கோட்டத்தில் இரவுப்பணியைப் போட்டுக் கொண்டேன்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணி சென்று இனி திருட்டு நடக்காமல் தடுத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இருந்தேன்.
நான் நான்கு சக்கர வாகனத்தில் இரவு ரோந்து செல்லும் பொழுது, பாதாம் பால், பிஸ்கட் ,கேக் வைத்திருப்பது வழக்கம்.
ஒரு நாள் இரவு, விருதுநகர் சத்திரிய ரெட்டியார்பட்டி பகுதியில் இரவு ரோந்து சென்ற போது அங்கு இரண்டு தலைமைக் காவலர்களைக் கண்டேன். அவர்களோடு பேசிக்கொண்டு கேக், பாதாம் பால் சாப்பிட்டோம்.
அதில் ஒரு ஏட்டையா, ‘ஐயா முகம் ரொம்ப வாடி இருக்கே' என்று கேட்டார்.
‘அதிகாலை 2 மணிக்கு கண் விழித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்' என்றேன்.
‘அப்படி இல்லை.. அந்த நகை திருட்டு நடந்ததிலிருந்து ஐயா முகம் வாடியிருக்கிறது,' என்றார். அதில் அக்கறை இருந்தது.
‘ஆமாம்' என்று ஒப்புக் கொண்டேன்.
பின்பு அவரே தொடர்ந்தார். ‘ஐயா அந்த வழக்குல எனக்கு சில தகவல்கள் தெரியுது... ஆனா நான் சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டேங்குறாங்க. எனக்கு கொஞ்சம் குடிக்கிற பழக்கம் இருக்கு. அதனால மொத்தமாக என்னை முட்டாள்னு ஒதுக்கிட்டாங்க. கிட்ட வரவே கூடாதுன்னு சொல்றாங்க' என்று ஏக்கத்தோடு சொன்னார்.
என் காதுகள் அந்த இரவில் கூர்மை ஆகின. ‘ஏட்டையா நீங்க சொல்லுங்க நான் கேட்கிறேன்,' என்றேன்.
அவர் சொல்ல ஆரம்பித்தார். ‘ஐயா விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்கிற ஆட்டோ டிரைவர் இருக்கிறார். இப்ப ரெண்டு ஆட்டோ புதுசா வாங்கி வாடகைக்கு விட்டு இருக்காரு. அவருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது? என்று தெரியவில்லை. நல்லா விசாரிச்சு பார்த்தேன். அவர் மைத்துனர் பெயர் சுந்தர். பல மாவட்டங்களில் திருட்டு செஞ்சி இருக்காரு. இந்தத் திருட்டு போன சமயத்தில் முதல் நாள் அவரை அந்த வீட்டுப் பக்கம் பார்த்திருக்கிறார்கள்.' என்று அருமையான துப்பு கொடுத்தார்.
நான் சற்று யோசித்தேன். எதிர்பாராமல் கிடைத்த அந்தத் துப்பு எனக்குக் கிடைத்த பற்றுகோல்!
‘ ஐயா என்னை நீங்கள் நம்பவில்லையா?' என்றார் அவர்.
‘ நம்புகிறேன். என்னுடன் வாருங்கள்' என அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அல்லம்பட்டி ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு வந்தோம்.
ஏட்டையாவின் முரட்டு உருவத்தையும் என்னுடைய நான்கு சக்கர வாகனத்தையும் பார்த்து மிரண்டு போன ராமமூர்த்தி என்ன விஷயம் என்று நடுங்கியபடி கேட்டார்.
ஏட்டையா அதிரடியாக ஆரம்பித்தார். ‘திருட்டுப் பயலே.. உனக்கு எப்படி பணம் கிடைத்தது? ஆட்டோ வாங்க உனக்கு பணம் கொடுத்தது சுந்தர் தானே' என்று கேட்க நானும், அவரை அடிக்கப் பாய்வது போல போக்குக் காட்ட, ‘ஆமாம்' என்று உண்மையை ஒப்புக்கொண்டார் ராமமூர்த்தி.
ராமமூர்த்தியின் மைத்துனர் சுந்தர் திருடுவதில் பலே கில்லாடி. திருடிய பிறகு மறைவு வாழ்க்கை வாழ்வதிலும் மிகப்பெரிய கில்லாடி. சுந்தரமூர்த்தி என்பவர் குடும்பத்தோடு குற்றாலம் சென்று விட்டதாக தகவலைக் கொடுத்தது ராமமூர்த்தி. உடனே ஆள் இல்லாத வீட்டில் நிதானமாக உற்சா கமாக 174 சவரன் நகைகளைத் திருடியவர் சுந்தர்.
சுந்தர் எவ்வளவு கில்லாடி என்று பாருங்கள். திருட்டு நடந்த அன்றே அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது யாருக்கு சந்தேகம் வர வாய்ப்பே தரவில்லை. இது அவர் கடைப்பிடித்த உத்தி.
அன்றைக்கு மாலை வேளையிலேயே திருட்டை முடித்துவிட்டு, பஸ்ஸில் புறப்பட்டு திருநெல்வேலி சென்று எல்லோர் பார்வையிலும் தெரியும்படியாக ஒரு பயணியிடம் பிக்பாக்கெட் அடித்து கையும் களவுமாக பிடிபட்டு அன்று இரவே பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
விருதுநகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சுந்தர் ஈடுபட்டாரா என்று நாம் சந்தேகப்பட்டால், இல்லை அவர் அன்று இரவு திருநெல்வேலியில் இருந்தார். ஒரு வழக்கில் பாளையங்கோட்டையில் சிறைக்கு சென்று விட்டார் என்று திசை திருப்பும் நோக்கத்தில் சுந்தர் இதை நிகழ்த்தி இருந்தார். பாபநாசம் படத்தில் கமல் சார் செய்ததற்கு முன்பே சுந்தர், தனக்கு ஆதாரமாக சாட்சியங்களை உருவாக்கி இருந்தார்.
அப்புறம் என்ன? ராமமூர்த்தியிடன் விசாரித்துவிட்டதால் அடுத்த நாளே காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் தனிப் படை பாளையங்கோட்டை சிறைச் சாலைக்கு சென்று சுந்தரத்தை விசாரித்தார்கள்.
எங்கே நகை?
சுந்தர் தான் திருடிய நகைகள் அனைத்தையும் மைத்துனர் ராமமூர்த்தியிடம் கொடுத்ததாகச் சொன்னார்.
மீண்டும் ராமமூர்த்தியிடம் விசாரிக்க, அனைத்து நகைகளையும் சென்னையில் ஒரு இடத்தில் கொடுத்ததாக சொல்ல, காவல் ஆய்வாளர் பாஸ்கர் சென்னைக்கு வந்து நகைகளை மீட்டு எடுத்தார்.
ஆனாலும் இன்னும் 64 சவரன் நகைகளை மீட்க வேண்டியிருந்தது. அது எங்கே போனது என்று தெரியவே இல்லை.!
நகையைப் பறிகொடுத்த சுந்தரமூர்த்திக்கு மிக சந்தோசம். காணாமல் போனதில் பெரும்பகுதி கிடைத்து விட்டது என்று. இருந்தாலும் மீதி நகையும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எனது அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார்.
ஒருநாள் அவரை என்னுடன் அழைத்துக் கொண்டு காவல் ஆய்வாளரும் நானும் மீண்டும் ராமமூர்த்தி வீட்டுக்கு சென்று அதிரடியாக கிடுக்கிப்பிடிபோட்டு மிரட்ட ஆரம்பிக்க, அவர் தனது வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள வாழைத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மண்ணில் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.
ஒரு சிறு கடப்பாறை கம்பியால் நானே மண்ணைக் குத்தித் தோண்டினேன். கொஞ்சம் ஆழத்தில் ஒரு எவர்சில்வர் டிபன் பாக்ஸ். அதை எடுத்துத் திறந்தால் 64 சவரன் நகைகள் சிரித்தன.
நகைகளைப் பார்த்த சுந்தரமூர்த்தி உணர்ச்சி வயப்பட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
‘என்னை மன்னிச்சிடுங்க' என்று ராமமூர்த்தி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அவர் மன்னித்தாலும் சட்டம் மன்னிக்காது. இந்த வழக்கில் சுந்தரமும் ராமமூர்த்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
எந்தத் துறையிலும் உயர் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே அனைத்தும் அறிந்திருப்பார்கள் என்றும் சாதாரண நிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு திறமை, அறிவு இல்லை என்ற நினைப்பு இப்போதும் இருக்கிறது. அது தவறு என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துகொண்டேன். இன்றும் கூட எந்தக் குற்றச்சம்பவம் நடந்தாலும் அதை கீழ் நிலையில் உள்ள காவலர்களிடமும் விவாதிக்கத் தவறுவதில்லை.
மே, 2023 அந்திமழை இதழ்