ஆடு மேய்க்க ஆள் வேணும்
ஓவியம்: ரவி பேலட்

ஆடு மேய்க்க ஆள் வேணும்

இரண்டாம் பரிசு ரூ.7500 பெறும் கதை

நஞ்சன் கொரங்காட்டில் கருவேல மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தான். செம்புளி ஆடுகள் கொரங்காட்டின் கடைக்கோடியில் கிலுவை வேலிக்கு அருகாமையில் குட்டானாய் மேய்ந்தபடியிருந்தன. நஞ்சன் தன் பிறந்த ஊரான பள்ளிப்பாளையத்துக்கே திரும்பி வந்து ஆறேழு மாதங்கள் தானாயிற்று. முன்பாக சென்னிப்பாளையத்தில் பொடுசாவின் வழுவிலேயேதான் இருந்தான்.

பிள்ளைவரம் வேண்டி நஞ்சன் தன் ஊரைவிட்டு மனைவியின் ஊரில்போய் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அங்கு பாளையத்தார் பண்ணையத்தில்தான் பத்துவருட காலம் இருந்தான். இவனது அப்பனான சுப்பனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை சாக்காட்டிக்கொண்டு பையன் சண்முகனோடும், பொடுசாவோடும் சொந்த ஊருக்கே வந்தவனுக்கு செங்குந்தர் பண்ணையத்தில் வேலை காத்துக்கொண்டிருந்தது.

ஊருக்குள் முன்புபோல யாரும் விவசாயத்தை முழுநேரமும் செய்வதில்லைதான். பல தோட்டங்களில்தென்னைமரங்கள் காய்ந்து மொட்டையாய் நின்றிருக்க சிலரே விடாப்பிடியாய் விவசாயத்தை மாடு கன்னுகளுக்கு தீவனத்துக்காவது ஆகட்டுமென பாங்கு பார்த்து வைத்திருந்தார்கள். சாலையோரத்தில் நிலம் வைத்திருந்தவர்கள் அதை தொகைக்கு விற்றுவிட, அவை கம்பிவேலி போடப்பட்டு நிற்கின்றன.

செங்குந்தருக்கு குறுநகரில் அரிசி ஆலை இருந்தது. அவரின் பெரியபையன் அதை கவனித்துக்கொள்கிறான். இருந்தும் செங்குந்தர் தன் புல்லட்டை தினமும் எடுத்துக்கொண்டு புடுபுடுவென குறுநகருக்குப் போய்வருவதை வழக்கமாய் வைத்திருந்தார். உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் இரண்டுமுறை நின்று இரண்டுமுறையும் ஐம்பது வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றவர்தான். சின்னவன் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து மனைவியோடு அங்கேயே தங்கிவிட்டான். நோம்பிநொடிக்கு பள்ளிப்பாளையத்துக்கு வருவதோடு சரி.

நஞ்சனுக்கு யோசனைமேல் யோசனை ஓடியபடியே இருந்தது. எல்லாம் பெரியம்மா இரண்டு நாட்களுக்கு முன்பாக பேசிய பேச்சுக்கள் தான். இத்தனைக்கும் கத்திரி, வெண்டை, தக்காளி போடப்பட்ட பாத்திகளைத் தாண்டி வரப்பிலும் அதனைச்சுற்றிலும் புல் பூண்டுகள் வளர்ந்துவிட்டதாயும், மூன்று ஏக்கரா நிலத்தில் உயர்ந்து வான்தொட நின்றிருக்கும் தென்னை மரங்கள் நிறைந்த தோப்பினுள் புல் பூண்டுகள் ஏராளமாய் வளர்ந்துவிட்டனவென்றும் சொல்லி, மருந்தடிக்கிற மருதாசலத்துக்கு ஒரு போனுப்போட்டால் வந்து ஒருபுடி புடிச்சுட்டுபோனான்னா அமுட்டும் செத்துப்போயிருமுங்களே சாமீ! என்று இவன்தான் பெரியம்மாவிடம் சொன்னான்.

“மருதாசலத்துக்கு பணம் அவுக்கறதுக்கு நானென்ன மடியில எந்தநேரமும் முடிஞ்சா வெச்சிட்டிருக்கேன்? அவன் காத்தால வந்தான்னா மத்தியானத்துக்குள்ள படபடன்னு அடிச்சு வீச்சீட்டு சொளையா ஆயிரத்தி ஐநூறு குடுங்காயாம்பான்! பெரியமனுசனைக்கேட்டா மூஞ்சிய உர்ருனு வெச்சுட்டு பாப்பாரு! சனி ஞாயிறு உம்பட பையனுக்கு லீவுதானே! கூடவே சின்னிப்பாளையம் தறிக்குடோனுக்கு தாருப்போடப்போற உம்பொண்டாட்டியையும் ரெண்டு நாளைக்கி லீவப்போடச்சொல்லி கூட்டியாந்தீன்னா அவுங்க வந்து புடுங்குனாங்கன்னா வேரோட அத்துப்போயிருமுல்லோ!”

“சாமி, படிக்கிற பையனை புல்லுப்புடுங்க வெல்லாம் வான்னு சொன்னா வரமாட்டானுங்க! அவன் லீவுநாள்னாலும் ஊட்டுல குக்கீட்டு படிச்சுட்டுத்தான் இருப்பானுங்க சாமி! என் பொண்டாட்டி தார்போட குடோனுக்குப்போனா தினமும் முன்னூறு ரூவாய்க்கி போட்டுருவாளுங்க!” என்றான்.

“உம்பட பையனென்ன படிச்சிக்கிழிச்சி கலெக்டராவா போப்போறான்? எம்பட பையனவிட நாலு மார்க்கு எச்சா வாங்கீட்டு பெரிய கல்ட்டியாட்டம் பள்ளிக்கோடத்துல இருக்கறானாமா? வாத்தியாருங்க எப்பம்பார்த்தாலும் அவன்கிட்டயே கேள்விமேல கேள்வியா கேக்காங்கலாம்! யாருகிட்ட காது குத்துறேடா நஞ்சா? இவம்பையன் லீவுநாள்லயும் படிச்சிகிழிக்கறானாமா! பாத்துப்போடறேன்!” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டது பெரியம்மா. அதுதான் செங்குந்தார் காலையில் இவனிடம் ஆரம்பித்துவிட்டார். பெரியம்மாதான் அவருக்கு சொல்லியிருக்கவேண்டும்!

“ஏன்டா நஞ்சா.. உனக்கு பையன் ஒருத்தன் இருக்கானாடா? ஏன் நீ ஊருக்கு வந்த உடனேயே என்கிட்ட சொல்லல அவனெப்பத்தி? சொல்லியிருந்தீன்னா அவனை ஆடுமேய்க்கப் போட்டுட்டு உன்னை முழுநேரமும் தோட்டத்துலயே போட்டிருப்பனே! சரி இப்பவும் ஒன்னும் கெட்டுப்போவுலடா நஞ்சா. அவனை நாளையில இருந்து நம்ம தோட்டத்துக்கு கூட்டியாந்திரு. அவனுக்கும் ஒரு சம்பளத்தை நாம மாசம் இவ்ளோன்னு அப்புறம் பேசிக்குவோம். இப்பயிருந்து பையனும் சம்பாதிச்சாத்தானடா உம்பட குடும்பம் நல்லா இருக்கும்! என்ன நாஞ் சொல்றது?”

“சாமி அவன் நம்ம உள்ளூரு பள்ளிக்கோடத்துல அஞ்சாப்பு படிச்சுட்டு இருக்கானுங்க! படிச்சுட்டு இருக்குற பையனை ஆடுமேய்க்க கொண்டாந்து எப்பிடீங்க சாமி உடறது? அதெல்லாம் என்னையோட போவட்டுமுங்க!”

“ஏண்டா, நீயென்ன திருவாத்தானா? பணங்காசுன்னு மனுசன் பறவாப்பறந்துட்டு இருக்கான்டா உலகத்துல! நாளைக்கி மேல படிக்க உம்பையன் போனா செலவாகும்ல. அதுக்கு உன்கிட்ட பணம் வேணும்லடா! அது உனக்கேது? நாளைக்கி பையனை கூட்டியா!” சொல்லிவிட்டு புல்லட்டை எடுத்துக்கொண்டு போய்விட்டார் செங்குந்தர்.

சென்னிப்பாளையத்திலும் பாளையத்தார் பண்ணையத்தில் இருந்தபோதும் இதே பிரச்சனைதான் நஞ்சனுக்கு. அவரும் பையனை படிப்பை நிப்பாட்டிவிட்டு ஆடுமேய்க்க வரச்சொல்லி உத்தரவு போட்டுவிட்டார். பேசுகிறவர்கள் எல்லோருமே ‘பையன் படிச்சு கலெக்ட்ராவா போகப்போறான்?’ என்றே பேசுகிறார்களே!

நஞ்சனுக்கோ தன் ஒரே மகனை படிக்க-வைத்தேயாக வேண்டுமென்ற நினைப்புத்தான். நஞ்சன் அந்தக்காலத்தில் இதே பள்ளிப்பாளைய துவக்கப்பள்ளியில் ஐந்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அப்போதெல்லாம் இப்போதுமாதிரி அரசாங்கமே புத்தகங்களை தரவில்லை. ஆனால் இவன் அப்பன் குஞ்சான் எப்படியும் பழைய புத்தகத்தையேனும் இவனுக்கு பிடித்துக்கொடுத்துவிடுவான்.

இவன் மூன்றாம் வகுப்பில் படிக்கிறானென்றால் நான்காம் வகுப்பு புத்தகத்தை எந்தப்  பையன் ஐந்தாம் வகுப்புக்கு போகிறானென விசாரித்து அவன் வீட்டில் போய் வாசலில் உட்கார்ந்துகொள்வான். நாலுநாளேனும் நடையாய் நடந்து பழைய புத்தகத்தை வாங்கிவந்துவிடுவான். அவனும் செங்குந்தர் பண்ணையத்தில்தான் இருந்தான். ஐந்தாம்வகுப்பு முடித்ததும் தினமும் குறுநகருக்கு பேருந்தில் அனுப்பி படிக்கவைக்கும் வசதி குஞ்சானிடம் இல்லாதபோது செங்குந்தர் பண்ணையத்திற்கு வந்துசேர்ந்தான் நஞ்சன். இப்போதுதான் எட்டாம் வகுப்புவரை உள்ளூர் பள்ளியில் படிப்பை உயர்த்தியிருக்கிறார்கள்.

நஞ்சன் குறுநகர் சென்று வாரத்தில் ஒருநாளேனும் சினிமா பார்க்காமல் இருக்க மாட்டான். ஊருக்குள் வரும் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏறினான் என்றால் இரவில் ஏழுமணி பேருந்தில் திரும்பிவிடுவான். அப்போது அவன் கையில் சில புத்தகங்களும் இருக்கும். எல்லாமும் பழைய புத்தகக்கடையில் எடுத்துவந்த மாதப்பத்திரி்கைகளும் நாவல்களுமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கும் மேலாக ஆடுகள் பட்டியில்தான் கிடக்கும். ஆனால் அவைகளுக்கு தீனிக்கும், தண்ணீருக்கும் எந்தக்குறைபாடும் இருக்காது.

செங்குந்தர் அதற்காக அவனை திட்டுவதுமில்லை. சின்னப்பயல்தானே.. சினிமா பார்த்தால் பார்த்துவிட்டுப்போகட்டுமென விட்டுவிட்டார். கொரங்காட்டில் ஆடுகள் அதது பாட்டுக்கு மேய்கின்றன என்றால் நஞ்சன் கதைப்புத்தகத்தில் ஆழ்ந்திருப்பான். அதுமட்டும் செங்குந்தருக்கு இன்றுவரை தெரியாதுதான். ஒருமுறை பெரியம்மா அதைக்கவனித்து கேட்டபொழுது.. ‘அதெங்கியோ ரோட்டோரமா கெடந்துச்சுங்க சாமி.. படம் பாத்துட்டு வீசீடலாம்னு தூக்கியாந்தனுங்கொ!’ என்று சொல்லிவிட்டு அதிலிருந்து புத்தகம் படிக்கையில் அக்கம்பக்கம் கவனமாய் இருந்தான்.

நஞ்சன் சென்னிப்பாளையத்துக்கு பொடுசாவின் ஊருக்கே பிழைக்கச்செல்லும் காலம் வரை செங்குந்தர் பண்ணையத்திலேயே தான் இருந்தான். அங்கிருந்து ஊருக்கு வந்ததும் அவரிடமே போய் சேர்ந்துகொண்டான். செங்குந்தருக்கு அவன் திரும்ப ஊருக்கே வந்ததில் மகிழ்ச்சி தான். முன்பு வருடத்தொகை என்றும் நோம்பி நொடிக்கு வேட்டி சட்டை துண்டு என்று வாங்கிப்பழக்கப்பட்டவன் இப்போது வாரம் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கேட்டான். காலையில் ஆறுமணிக்கு வந்தானென்றால் மாலையில் வீடு செல்கையில் மணி ஏழு ஆகிவிடும்.

மோட்டார் போடுவதிலிருந்து வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் பாச்சுவது, மிளகாய், தக்காளி, கத்திரிக்காய் பாத்திகளுக்கு தண்ணீர் விடுவதுவரை எல்லாமும் பார்க்கவேண்டும். மிகுதி நேரத்தில் ஆடுகளை காட்டுக்கு ஓட்டிப்போக வேண்டும். இவனை விட்டால் தோட்ட வேலைக்கென யாரும் வருவதில்லைதான் என்றாலும் தொகையை குறைக்கப்பார்த்தார். ஆனால் அவனோ காரைச்சட்டி தூக்கப்போய்விடுவதாய் சொன்னான். அவரால் தோட்டத்திற்குள் குனிந்து வேலை செய்யவும் முடியவில்லை. சேர்த்திக்கொண்டார். இப்போது என்னடாவென்றால் பையன் சண்முகனையும் இழுத்து தன் காட்டுக்குள் போட்டுக்கொள்ளப்பார்க்கிறார்.

காலை, மதியம், மாலையென முந்தைய காலத்தில் பெரியம்மாவிடம் தன் போசியை நீட்டி சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டவன் இப்போது வீட்டிலிருந்தே டிபன்போசியில் மதியச்சாப்பாட்டை கொண்டுவந்து விடுகிறான். பொடுசா சொன்ன ஒரே கண்டிசன் அது ஒன்றுதான்.  ‘சாப்பாடு எப்பவும் நம்மூட்டுசாப்பாடாத்தான் இருக்கோணும் பாத்துக்க! பிச்சைக்காரனாட்டம் அவிங்க ஊத்துற பழைய சோத்தை திம்பீன்னா நீ போவே வேண்டாம் ஊட்டுலயே கெட!’

எப்போதும் இரவு சாப்பாட்டை முடித்தபிறகு பையன் சண்முகனிடம் தினமும், அன்று பள்ளியில் என்ன நடந்தது? என்று பேசுவது நஞ்சனின் வழக்கம். வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலைப்போட்டு தலையணையில்லாமல் கால்நீட்டிப் படுத்திருப்பான் நஞ்சன். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே தலையணை வைக்கும் பழக்கமெல்லாம் இல்லை. குளிர்காலத்தில் மட்டுமே போர்த்திக்கொள்ள போர்வையை எடுத்துக்கொள்வான். அதே பழக்கத்தை சண்முகனுக்கும் பழக்கப்படுத்திவிட்டான். சண்முகனும் வீட்டினுள் பாயில் படுத்து தூங்கினாலும் தலையணை வைத்துக்கொள்வதில்லை.

அன்று சண்முகன் கணக்குப்பாடத்தை நோட்டில் குனிந்தபடி போட்டுக் கொண்டிருக்கவே, ‘சரி முடித்துவிட்டு வரட்டும்’மென வெளிவாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்தான். ஊரின் வீதிகளில் டியூப்லைட் வெளிச்சம் பகல்போல பிரகாசித்துக்கொண்டிருந்தது. ஊரின் ஒவ்வொரு வீதிகளிலும் காங்கரீட் சாலை தண்ணீர்போக வசதியாய் டிச்சுக்குழிகளோடு இருந்தது. சின்னப்பிள்ளைகள் தான் பார்த்துப்போக வேண்டும். தவறி டிச்சினுள் விழுந்துவிடலாம். யாரேனும் போய் தூக்கிவிட வேண்டும் என்கிறபடி டிச்சுக்குழி ஆழமாய் இருந்தது. ஒவ்வொரு வீடுகளுக்கும் முன்பாக டிச்சின்மேல்புறமாக கல்போட்டு பூசியிருந்தார்கள்.

வீட்டின் பின்பக்கமாய் உடல்நிலை சரியில்லாமல் குடிசையில் படுத்திருக்கும் அப்பன் குஞ்சானுக்கு ராச்சாப்பாட்டை கொடுத்துவிட்டு வந்தாள் குஞ்சாள். வந்தவளை தன் அருகில் அமரவைத்து செங்குந்தர் சொன்ன விசயத்தை சொன்னான் நஞ்சன். குஞ்சாளும் ஐந்தாவதுவரை படித்துவிட்டு, வீட்டு நிலைமையால் அப்போதே தார்ப்போட சின்னவயதில் சென்றவள் தான். அவளுக்கும் தன் மகன் மேலே மேலே படிக்கவேண்டுமென நினைப்பிருந்தது. அதுவும் நஞ்சன் வீட்டினுள் ஆங்காங்கே படித்துவிட்டு போட்டிருக்கும் புத்தகங்களை புறட்டிப்பார்த்து படிக்க ஆரம்பித்த சமயமே மனதில் எழுந்த விசயம். ’படி படி’ என்று எந்த நேரமும் இருவருமே சண்முகனிடம் சொல்வதுமில்லை. அவனாகவே வீட்டினுள் சும்மாயிராமல் படிப்பிலேயே கவனமாயிருந்தான்.

“அவரு தோட்டத்துக்கு போகாதே! நீயி நின்னுக்கோ. அவரு தேடி வரட்டும். அப்ப சொல்லிடு.. இந்தமாதிரிங்க.. நான் திலுப்பூருக்கு காரை வேலைக்கி ரயில்ல காத்தால போயிட்டு ரயில்லயே திரும்பிடுவேன். எங்க சனத்துல நிறையப்பேரு போறாங்க. நானும் போலாம்னு இருக்கேன்னு!”

“அப்படி திடீருன்னு அவருகிட்ட நான் எப்பிடிச் சொல்லுவேன்?”

“சரி என் பொண்டாட்டி போக வேண்டாம்னு சொல்லிட்டான்னு சொல்லிடு! ஆமா அவிங்க பேரனும் நம்ம சண்முகான்கூடத்தான படிக்கான். அவனை நிப்பாட்டிட்டு ஆடுமேய்க்க போடலாம்ல! இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. பெரியமனுசங்கன்னா நம்மை அண்டி பிழைக்கறவங்க நல்லா-யிருக்கோணுமுன்னு நினைக்கவே மாட்டாங்களா?”

“இந்த வேண்டாத நாயமெல்லாம் நமக்கெதுக்கு.. நான் எப்பயும்போல போறேன்! மறுபடியும் பையனைப்பத்தி அவரு பேசினாருன்னா.. கும்புடு போட்டுட்டு வந்துடறேன். போதுமா!” என்று நஞ்சன் சொல்லவும், ‘செரி!’ என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள் குஞ்சாள்.

திண்ணையிலிருந்து எழுந்தவன் நேரே வடபக்க சாலைக்குள் சென்று இவனது லொடக்லஸ் ஹீரோ சைக்கிளையொட்டிக் கிடந்த கட்டிலை எடுத்து வந்து வாசலில் போட்டு சாய்ந்தான். அவன் நினைவுகள் சண்முகனைச்சுற்றியே ஓடின.

“பாடஞ்சொல்லிக்குடுக்குற வாத்தியாரை நாம சாமீன்னு தானப்பா சொல்லணும்! நீ எல்லோரையும் சாமீ! சாமீனு தானே கூப்பிடுறே.. இன்னிக்கி மொதவாட்டியா ஸ்கூலுக்கு போனனா.. எல்லாப்பசங்களும் பொண்ணுங்களும் என்னையே ‘ஆ’ன்னு பார்த்தாங்கப்பா! அப்புறம் அஞ்சாம் வகுப்பு எதுன்னு பார்த்து உள்ளார போயி என் பையை பெஞ்சுல வெக்காம தரையில ஓரத்துல வச்சுட்டு நின்னேன். முதல் பாடவேளைக்கு தமிழ் வாத்தியாரு வந்து எல்லாரு பேரையும் கேட்டாரு. என் பேரையும் கேட்டப்ப நான் சண்முகன்னு சொன்னேன். என்னையமட்டும் புதுசா வந்தவனான்னு கேட்டுட்டு, அப்பா அம்மா பேரையெல்லாம் கேட்டாரு. முன்ன படிச்ச ஸ்கூல்ல இருந்து ஏன் வந்துட்டேன்னு கேட்டாரு. எங்கப்பாருக்கு ஒடம்புக்கு சுகமில்லைன்னு இந்த ஊருக்கு வந்துட்டோம் சாமீன்னேன்! எல்லாரும் சிரிச்சாங்கப்பா! ஆனா வாத்தியாரு ஒன்னும் சொல்லல! அப்புறம் தான் ரமேஷ்னு ஒருபையன் என்னைய தனியா உக்கார வையுங்க சார்னான்! அந்தப்பையன் தோட்டத்துலதான் நீயி வேலை செய்யுறியாப்பா? ஆடு மேய்க்கிறியாமா! அவந்தான் வாத்தியார்கிட்ட சொன்னான். அப்புறம் கடைசி பெஞ்ச்சுல நான் மட்டும் தனியா உக்காந்துக்கிட்டேன்! பசங்க யாரும் என்கிட்ட பேசவேயில்லப்பா! பழையஸ்கூல்ல கூட நாலு பசங்க பழனி, குமாரு எல்லாரும் பேசினாங்கப்பா!”

“போகப்போக கொஞ்சம் நாள்ல எல்லாரும் உன்கூட பேசுவாங்க சாமி!”

“சேரீப்பா.. ஆனா மத்தியானம் சோத்துக்கு உட்டாங்க! நான் என் வட்டிலைக்கொண்டி நீட்டி ஆயாகிட்ட சாப்பாடு வாங்கிட்டேன். முட்டை போட்டாங்க! அப்ப அந்த ரமேஷ் பையன் என்கிட்ட, ‘இங்கெ பள்ளிக்கூடத்துல மாட்டுக்கறியெல்லாம் போடமாட்டாங்கடா!’ அப்பிடின்னான். அவந்தான் எப்பவும் எல்லாப்பரீட்சையிலயும் மொதல் மார்க்கு வாங்குவானாமாப்பா!”

“நீயி யாரு எது சொன்னாலும் திருப்பி ஒன்னும் சொல்லக்கூடாது சாமி! அவுங்க எதுவேணா சொன்னா சொல்லிச்சாட்டாறாங்க!”

“நானு யாருகூடவும் வம்பு வச்சுக்க மாட்டனப்பா.. நாம்பாட்டுக்கு படிப்பேன்” என்று முதல்நாள் பள்ளிக்கு போய்வந்தவன் சொன்னதை மனதில் அசைபோட்டான். போகப்போக தினமும் பள்ளியில் நடந்த சம்பவங்களை நஞ்சனுக்கு சொல்லிவிட்டுத்தான் சண்முகன் தூங்கவே சென்றான். காலாண்டு பரிட்சையில் சண்முகன் தான் கிளாஸ் பர்ஸ்ட் என்றான். ’அரையாண்டில் உன்னைவிட எச்சா மார்க்கு வாங்கிக்காட்டுறேண்டா!’ என்று செங்குந்தரின் பேரன் ரமேஷ் சொன்னதாய் சொன்னான். ஆனால் அரையாண்டுத்தேர்விலும் சண்முகனே வெற்றிபெற்றான். இதனால் வகுப்புக்கு பாடம் சொல்லித்தரவரும் ஆசிரியர்கள் சண்முகனை பாராட்டினார்கள், என்றான்.

சென்ற வாரத்தில் பாரதியார் பற்றி பத்துநிமிடம் பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் ஈரோட்டில் பள்ளியொன்றில் நடைபெறும் சர்க்குலர் ஒன்று வந்ததாக சண்முகன் சொல்லவே, அதில் கலந்துகொள்ளச்சொல்லி நஞ்சன் தான் பையனை தூண்டினான். தன்னிடம் சாக்குப்பையினுள் கிடந்த புத்தகங்களில் தேடித்தேடி பாரதியார் பற்றிய கட்டுரைகள் வந்த புத்தகங்களை மகனுக்காக எடுத்து வைத்தான். இவனே மேடையில் பேசுவதுபோல பையனுக்கு நடித்தே காட்டினான். பையன் அதைக்கண்டு சிரித்தபடியே கனுப்பாய் கவனித்தான். பள்ளியில் தமிழ் ஆசிரியரே அவனை போட்டி நடைபெறும் நாளில் அழைத்துப்போனாராம். செலவெல்லாம் அவரே பார்த்துக்கொண்டாராம். இறுதியில் வெற்றி இவனுக்கே.

அடுத்தநாள் பள்ளித்தலைமை ஆசிரியர் தேசியகீதம் பாடிமுடித்ததும், பிரேயரிலேயே இவன் பெயர் சொல்லி அழைத்து சண்முகனுக்கு வெற்றிபெற்றதற்கான கேடயம், மற்றும் சர்டிபிகேட் கொடுத்து, ‘நம் பள்ளிக்கு சண்முகனால் நல்லபெயர்! ஒவ்வொருவருமே சண்முகனைப்போல பயப்படாமல் போட்டிகளில் கலந்து வெற்றிபெற வேண்டும்’ என்றும் பேசினாராம். எல்லா மாணவிகளும், எட்டாம் வகுப்பு மாணவர்களும் கூட கைதட்டினார்கள் என்றான் சண்முகன்,

இப்படியெல்லாம் பள்ளியில் பிரேயர் சமயத்தில் நடக்குமென தெரிந்திருந்தால் நஞ்சனும் கூட பள்ளியின் காம்பெளண்டு சுவற்றுக்கும் வெளியே நின்று எட்டிப்பார்த்திருக்கலாமே! என்று தோன்றியது. அவன் கொண்டுவந்த வெற்றிக்கேடயத்தை இவன் டிவி பெட்டிமீது நிற்கவைத்திருந்தான். அதை குஞ்சாளிடம் சாப்பிடுகையிலெல்லாம் கண்ஜாடையால் காட்டிக்காட்டி, ‘எப்டி?’ என்பான். குஞ்சாளுக்கு வெட்கமாயும், பெருமையாயும் இருக்கும் அப்போது.

ஒன்பது மணியைத்தொடும் சமயத்தில் தான் சண்முகன் கட்டிலில் இவனருகில் வந்து படுத்தான். வந்ததுமே பள்ளியில் நடந்த விசயங்களை துவங்கிவிடுபவன் அன்று அமைதியாய் படுத்திருக்கவே நஞ்சனே, ‘என்னாச்சு சாமி?’ என்றான் மகனிடம்.

“அப்பா.. நாளையிலயிருந்து நானும் உன்கூட ஆடுமேய்க்கிறதுக்கு அந்த ரமேஷான் காட்டுக்கு வரணுமாப்பா? அவன் இன்னிக்கி அப்பிடித்தான் என்கிட்ட சொன்னான். ’நாளையில இருந்து எங்க கொரங்காட்டுல உக்கோந்துட்டு இவன் படிப்பாண்டா!’ அப்படின்னு சொன்னான். வகுப்புல எல்லாரும் சிரிச்சாங்கப்பா!”

“அவன் சொன்னா சொல்லிட்டுப்போறான் சாமி! நீ பள்ளிக்கூடம் போ. ஆடுமேய்க்கிறதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்!” என்று சொல்லவும் ‘செரீப்பா எனக்கு தூக்கம் வருது’ என்று கட்டிலிலிருந்து எழுந்து சென்றான் வீட்டினுள்.

அடுத்தநாள் நஞ்சன் செங்குந்தர் தோட்டத்திற்குச்சென்று சாலையில் செருவி வைத்திருந்த பனமட்டையை சாணி வழிப்பதற்காக எடுத்துக்கொண்டு மாடுகள் கட்டியிருந்த கட்டுத்தாரை நோக்கிச் சென்றான். பெரியம்மா சலதாரையில் பெரிய அண்டாவை புளிப்போட்டு தேய்த்துக்கொண்டிருந்தது. இவனைப்பார்த்ததும் கழுவுவதை நிறுத்தியது பெரியம்மா,

“எங்கடா நஞ்சா உன் பையனைக்கூட்டிட்டு வரலியாடா? அப்ப பெரிப்பன் சொன்னதை நீயி காதுலயே போட்டுக்கமாட்டே.. உனக்கெல்லாம் எங்கிருந்துடா இவ்ளோ ஏத்தம் வந்துச்சு?” என்று பேசவும், நஞ்சன் மீண்டும் திரும்பிப்போய் பனமட்டைகளை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து நடையைக்கட்டினான். பெரியம்மா, ‘டேய்! டேய் நஞ்சா! செவிட்டுக்காசி!’ என்று கத்தியதை இவன் கண்டுகொள்ளவேயில்லை. நேராக வழுவுக்கு வந்தவன் மதுரைவீரன் கோவில் திண்ணையில் அமர்ந்துகொண்டான். அவன் மனது படக் படக்கென இன்னமும் அடித்துக்கொண்டேயிருந்தது.

அப்படியே எவ்ளோநேரம் அமர்ந்திருந்தானோ.. செங்குந்தரின் புல்லட் வழுவுக்குள் நுழைந்து வந்து இவன் முன்பாகத்தான் நின்றது. இவன் அவரைக்கண்டதுமே திண்ணையிலிருந்து இறங்கி உருமாலைத்துண்டை தலையிலிருந்து உருவி கிக்கத்தில் வைத்துக்கொண்டான். ‘சாமி வாங்க!’ என்றான்.

“தேண்டா கூப்புடக்கூப்பிட முட்டீட்டு வந்துட்டியாமா? நேரா பள்ளிக்கூடத்துக்கு போயி வாத்தியாங்கிட்ட சொல்லி எங்கெ கையெழுத்து போடணுமோ போட்டு முடிச்சுட்டு, பையனை கூட்டிட்டு நேரா நம்ம தோட்டத்துக்கு வா! சீக்கிரம் போடா.. மண்டையச் சொறிஞ்சிட்டு நின்னீன்னா எனக்கு கோவம் வந்துருமாமா!” என்றார்.

”சாமி.. நீங்க போங்க! என் பையனை நான் படிப்பை நிறுத்தீட்டெல்லாம் ஆடு மேய்க்கிறதுக்கு கூட்டீட்டு வரமாட்டனுங்க!” என்றதுமே, ‘சரி பார்த்துடறன்டா!’ என்று முனகிக்கொண்டே புல்லட்டை கிளப்பிக்கொண்டு சென்றார் செங்குந்தர்.

மேலும் நான்கு நாட்கள் பார்த்துவிட்டு இனிமேல் நஞ்சனும் வரமாட்டானென நினைத்தவர் உள்ளூர் கோவில்மணியத்திடம் போய் விசயத்தை சொன்னார்.

“யார்றா நீயி? இந்தக்காலத்துல போயி ஆளுக்காரனை மெரட்டீட்டு திரிஞ்சிருக்கே? இனி அவனை நான் கூப்பிட்டு நாயம் கேக்கனுமா? அதும் உனக்காக! காட்டுவேலைக்கி வந்தவனை முடுக்கி உட்டுட்டு மறுபடியும் காட்டுவேலைக்கி வரச்சொல்லுங்கன்னு இங்க வந்து நிக்கே? எல்லாருமாதிரியும் காட்டை வித்துட்டு காசைக்கொண்டி பேங்க்ல போட்டு வட்டிக்காசை வச்சு வாழு போ!’ கோவில்மணியம் நேம்பாய்ப்பேசி தாட்டி அனுப்பிவிட்டார் செங்குந்தரை.

நஞ்சன் இரண்டே நாட்களில் இரண்டு கிலோ மீட்டர் கிழக்கில் இருக்கும் பிச்சாம்பாளையத்தில் பெரியசாமி பண்ணையத்தில் வாரக்கூலி ஆயிரத்தி ஏழுநூற்றைம்பது எனப்பேசி சேர்ந்துகொண்டான். இதற்காக அவன் சைக்கிளில் சென்றுவர வேண்டியிருந்தது. அவனுக்கு ஏனோ ரயிலில் ஏறிப்போய் காரைச்சட்டி தூக்கும் வேலை செய்ய விருப்பமில்லாமல் இருந்தது.

முழுஆண்டுத்தேர்வு பள்ளியில் நடந்து கொண்டிருந்தது. நாளை கடைசிப்பரிட்சை என்கிறபோது சண்முகன் நஞ்சனின் கட்டிலில் வந்து இரவில் படுத்தான்.

“அப்பா.. அந்த ரமேஷும் இன்னும் ரெண்டு பசங்களும் இன்னிக்கி என்னை அடிச்சுட்டாங்கப்பா!” என்றான். இவன் கட்டிலிலிருந்து திடுகுப்பென எழுந்தான். ‘என்ன சொல்ற சாமி.. பெரிய வாத்தியார்கிட்ட சொல்லலாம்ல!’

“நாளைக்கி கடைசி பரிட்சை எழுதினதும் நான் படிப்பை உட்டுடணுமாம். பள்ளிக்கூடத்து பக்கமே வரக்கூடாதாம்! ஆடுமேய்க்கத்தான் போகணு மாம்பா!” என்று சொல்லிவிட்டு

அழ த்  துவங்கினவனைக் கட்டிக்கொண்டான் நஞ்சன். ‘நாளைக்கி நான் வந்து உங்க பெரிய சாரை பாக்குறேன் சாமி!’ என்ற நஞ்சனுக்கு அவன் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

மாலையில் பரிட்சை முடிந்து பள்ளிப்பிள்ளைகள் எல்லோரும் மகிழ்வாய் அவரவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் நஞ்சன் பள்ளிக்கூடம் போய் தன் சைக்கிளை புங்கை மரத்தினடியில் நிறுத்தினான். கொஞ்சம் நேரத்தில் பள்ளிப்பையை முதுகில் சுமந்தபடி வந்த சண்முகனை கூட்டிக்கொண்டு தலைமையாசிரியர் அறைக்கு முன்பாகச் சென்று நின்றான். ஒரு ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அவரை அனுப்பி வைத்துவிட்டு நஞ்சனை உள்ளே கூப்பிட்டார். நஞ்சன் கும்பிடு வைத்துக்கொண்டு சென்றான் மகனுடன். பின்பாக தன் மகனின் விசயங்கள் அனைத்தையும் பொறுமையாய் அவரிடம் சொன்னான் நஞ்சன். எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டார் அவர். பின்பாக-

“என் பேரு என்னதெரியுமா சண்முகா?” என்றார் சண்முகனைப்பார்த்து.

“தெரியலீங்க சாமி!” என்றான் சண்முகன்.

“சாமின்னெல்லாம் யாரையும் நீ கூப்பிடக்கூடாது. சார்னு சொல்லணும்.”

“செரீங்க சார்!”

“என் பேரும் உன்னோட அப்பா பேரு தான். நஞ்சன். இங்கே என் பேரு நஞ்சுண்டன். எங்கப்பாவும் என்னை ஊரு ஊரா உன்னைய உன் அப்பா இழுத்துட்டு படிப்புக்காக வர்றமாதிரி என் அப்பா மருதாச்சலம் கூட்டிட்டு அலைஞ்சாரு. ஒரு கட்டத்துல என்னை ஹாஸ்டல்ல போட்டுட்டாரு. உனக்கும் அதுதான் இனி வழி பார்த்துக்க! உனக்கு இப்ப நான் படிச்ச ஸ்கூலுக்கும், ஹாஸ்டலுக்கும் ரெண்டு லெட்டர் எழுதித்தர்றேன். அதை நீ கொண்டு போனீன்னாவே உன்னை பல்லடத்துல சேர்த்திப்பாங்க! என்ன சரியா? இல்ல அப்பா அம்மாவை விட்டு தூரமாப்போய் படிக்கணுமேன்னு பயப்படுறியா?”

“பயமெல்லாம் இல்லங்க சார் எனக்கு. நான் படிக்கணும்!”

“அப்ப சரி.. ரிசல்ட் வந்ததும் வந்து டீசியை வாங்கிக்க! ஒன்னும் கவலைப்படாதே! என்ன நஞ்சா.. எல்லாம் சரித்தானே? பையனை ஊரு உட்டு ஊரு அனுப்பறமேன்னு கவலைப்படாதே.. இந்த ஊர்ல இவன் படிச்சா ஆடுமேய்க்கவும் எருமை மேய்க்கவும்தான் கூப்பிடுவாங்க!”

“என் பையன் எந்தூர்ல இருந்து படிச்சாலும் நல்லாப்படிச்சாச் சரீங்க சாமி!”

“அப்புறம் எனக்கும் குலதெய்வம் மதுரைவீரன் தான்! சுள்ளிப்பட்டீல இருக்கு” என்றார். இருவரும் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு கிளம்பினார்கள்.

அடுத்தநாள் நஞ்சன் பண்ணயத்தி லிருக்கும் பிச்சாம்பாளையம் பெரியசாமி தோட்டத்தினுள் சைக்கிளில் சென்று இறங்கினான். சைக்கிளை சாலைக்குள் நிறுத்திவிட்டு திரும்பினான். தோட்டச்சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த டைகர் நாய் அவனைக்கண்டதும் வாலை ஆட்டி முனகியது! அதனை சங்கிலியிலிருந்து கழற்றி விட்டுவிட்டு மோட்டாரைப்போட்டுவிட கிணற்றை நோக்கிச் சென்றான்.

வேப்பங்குச்சியால் பல்லை துலக்கிக்கொண்டிருந்த பெரியசாமி ‘வாடா!’ என்றார். ‘வாழைத்தோப்புக்கு இன்னிக்கு தண்ணி கட்டீருடா! தென்னைமரத்துக்கு நாளைக்கி கட்டுனாப்போதும்! ஆடுங்களை மேய்க்கிறதுக்கு உங்க வழுவுல சின்னப்பசங்க யாருமே இல்லியாடா? உனக்கு இருக்கணுமே.. பையன் தானே?”

“எனக்கு பையனுமில்ல பொண்ணுமில்லீங்க சாமி!” என்று சொல்லிக்கொண்டு மோட்டார்ரூம் கதவை நீக்கினான் நஞ்சன்.

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல். ஆட்டக்காவடி, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரது சிறார் புத்தகங்கள் பாரதி புத்தகாலயம் வாயிலாக வெளிவந்துள்ளன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com