அரசியல்வாதிகளுக்கான ஆயுதம்!

அரசியல்வாதிகளுக்கான ஆயுதம்!
Published on

செல்லப்பா ஒரு புத்தகப் பிரியர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைத் தாரோ அல்லது வாசிக்கப்படுவதைத் தவிர புத்தகங்களுக்கு வேறு என்ன பயன் இருக்கும் என்று நினைத்தாரோ தெரியாது. தன்னிடமுள்ள புத்தகங்களைக் கொண்டு தன் வீட்டின் முன்னிருந்த அறையில் வாசகசாலை ஒன்றை உருவாக்கினார்.

புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கு வந்து போக ஆரம்பித்தார்கள். நாளடைவில் இந்த வாசகசாலையை ஏன் ஒரு நூலகமாக விரிவாக்கம் செய்யக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள், ஐசக் தம்பையா என்ற உயர்நீதிமன்ற நீதிபதியைத் தலைவராகவும் செல்லப்பாவைச் செயலராகவும் கொண்டு ஒரு குழுவை அமைத்தார்கள். உள்ளூரில் ஒரு இடத்தை வாடகைக்குப் பிடித்து 844 புத்தகங்களுடன் 1934ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நூலகத்தைத் தொடங்கினார்கள். 1981ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அந்த நூலகம் எரிக்கப்பட்ட போது அங்கிருந்த நூல்களின் எண்ணிக்கை 97000. இது யாழ் நூலகத்தின் கதை. நூல்களின் எண்ணிக்கை யாழ்ப்பாண மக்களுக்குப் புத்தகங்களின் மீதிருந்த நேசத்தையும், எரிக்கப்பட்ட சம்பவம் நூல்கள் மீது அரசியல்வாதிகளுக்கு இருந்த அச்சத்தையும் சொல்லும்.

யாழ்ப்பாணத்தின் முன்னோடி பெர்லின். சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் பெர்லின் வீதிகளில் தினம் தினம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. ‘நவீன சிந்தனைக்கு ஒத்து வராத அந்தக் குப்பைகளை' எழுதியவர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மெண்ட் பிராய்ட் போன்ற யூத மேதைகள். யூதரல்லாத ஒருவரின் புத்தகமும் குறி வைத்துத் தேடி எடுத்துக் கொளுத்தப்பட்டது. அவர் ஹெலன் ஹெல்லர். மாற்றுத் திறனாளிகள் மண்ணிற்குச் சுமை என்பது ஹிட்லரின் சித்தாந்தம். அதைப் பொய்யென்று நிரூபித்தவர் ஹெலன் ஹெல்லர்.

புத்தகங்களைப் பொசுக்கும் இந்தப் போக்கிரித் தனத்தின் உச்சம் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி நிகழ்ந்தது. அன்று பெர்லின் நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் வீதிக்குக் கொண்டுவரப்பட்டுக் கொளுத்தப்பட்டன.இதை முன்னின்று நடத்தியவர் ஹிட்லரின் பிரசார அமைச்சரான கோயபல்ஸ்

துப்பாக்கிகளைக் கண்டு கூட மிரளாத கொடுங்கோலர்கள், புத்தகங்களைக் கண்டு மிரள்கிறார்களே ஏன்? துப்பாக்கிக்கு மாற்றாக, ஏன் அதை விட வலிமையாக ஒரு ஆயுத்தத்தை இயந்திரங்கள் தயாரித்து விட முடியும். ஆனால் புத்தகங்களை உருவாக்க எழுத்தாளனும் சிந்தனையாளனும் வேண்டும்.

சிந்தனைகளோடு சம்பந்தப்பட்டவை புத்தகங்கள். அதனால் அதைக் கண்டு மிரள்கிற அரசியல்வாதிகளைப் போல அதே  காரணத்திற்காக அவற்றின் பால் ஈர்க்கப்பட்ட அரசியல்வாதிகள் உண்டு. இதை மெய்ப்பிக்க இந்தியாவிலேயே ஒரு நெடும் பட்டியலுண்டு. ஜவஹர்லால் நேருவின் சேகரிப்பில் இருந்த நூல்களைக் கொண்டு தில்லியில் அவர் வாழ்ந்த தீன் மூர்த்தி பவனில் ஒரு நூலகத்தை உருவாக்கினார்கள். அதில் நான் சில நாள்களைச் செலவிட்டிருக்கிறேன். நேரு, காந்தி, ராஜாஜி, வ.உ.சி, பாரதி போன்றவர்கள் எழுத்தாளர்களாக மட்டுமின்றி வாசகர்களாகவும் இருந்தார்கள்.வாசிப்பால் வளர்ந்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். வாசிப்பை வளர்த்த இயக்கம் திராவிட இயக்கம். இந்துத்வ அமைப்புகளிலும் ஏராளமான வாசகர்கள், எழுத்தாளர்கள்.

வாசிக்கும் பழக்கம் கொண்ட அரசியல்வாதிகளைச் சற்றே விலகி நின்று  நுணுகி ஆராய்ந்தால் ஒரு பொதுவான அம்சத்தைக் காணலாம். அது அவர்கள் அனைவருமே இருப்பதை மாற்ற வேண்டும் -'Change the status' என்பதை நோக்கமாகக் கொண்டவர்கள்.

இந்த அற்புதத்தைப் புத்தக வாசிப்பு செய்யும். அது லட்சியம் தரும். கனவுகளை விதைக்கும். செயலுக்கு உந்தும். சிறுமை கண்டு பொங்கும். அவை அனைத்தையும் வரலாற்றின் வெளிச்சத்தில், சமூக யதார்த்தத்தின் வெப்பத்தில் சமைக்கும். புத்தகங்கள் வரலாற்றைக் கூர்ந்து நோக்க வாய்த்த தொலை நோக்கு ஆடி. சமூகத்தை ஆழ்ந்து காண அமைந்த நுண் நோக்கி.

அரசியல்வாதிகள் வாசிக்க வேண்டியதன் அவசியம் புத்தகங்கள் நிகழ்த்தும் இந்த அற்புதத்தின் காரணமாக எழுகிறது.

வளர்ந்து வரும் ஓர் அரசியல்வாதி கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் எவை என்று என்னைக் கேட்டால்&

1.Freedom at Midnight:Larry Collins and Dominique Lapierre

பிரிட்டீஷ் ஆட்சியின் கடைசி நாட்களை சுவாரஸ்யமாக விவரிக்கும் நூல். மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்கு வருவதில் தொடங்கி காந்தியின் படுகொலையில் முடியும் நூல் லாரி காலின்ஸ் அமெரிக்கப் பத்திரிகையாளர். லாப்பியர் பிரன்ச் எழுத்தாளர்.

2.Experiment with Untruth: Michael Henderson எமெர்ஜென்சியின் போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும். ஊகங்கள், வதந்திகள் மிகையான கற்பனைகள் இல்லாமல் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். மைகேல் ஹெண்டர்சன் பிரிட்டீஷ் பத்திரிகையாளர், ஆறு வார காலம் தலைமறைவாக இருந்து ஜாக் கார்ப்பெண்டர் என்ற புனைப் பெயரில் எழுதினார். முப்பதற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி பதிப்பிக்க மறுத்தன. எமர்ஜென்சி நீங்கிய பின் மாக்மில்லன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது

3.Ethenicity and Populist Mobilization: Narendra subramanian

திராவிடக் கலாசாரம், அதன் வளர்ச்சியும் சரிவும், ஜாதிய அரசியல், 1960&80களில் நடந்த ஜாதி மோதல்கள் இவற்றைப் பேசும் புத்தகம். இதன் ஆசிரியர் நரேந்திர சுப்ரமணியன் கனடாவில் சமூகவியல் பேராசியராகப் பணியாற்றுகிறார். டாக்டர்.கே. சுப்ரமணியன்& வசந்திதேவி அவர்களின் மகன்.

4. Castes in india: B.R.Ambedkar

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த போது கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் நூல் வடிவம்.அம்பேத்கரின் முதல் நூல் எனக் கருதத்தக்கது. அவரது சாதி ஒழிப்பு என்ற நூல் பிரபலமானது. ஆனால் இதை முதலில் வாசித்துவிட்டு அதன் தொடர்ச்சியாக அந்த நூலை வாசிப்பது நல்லது. அவரது பிற்காலக் கருத்துக் களையும் விளங்கிக் கொள்ளவும் உதவும். 

சற்றே தயக்கத்துடன் பரிந்துரைக்கும் ஐந்தாவது நூல்

The Discovery of India: Jawaharlal Nehru: ஒச்தீச்டச்ணூடூச்டூ  Nஞுடணூத பழைய பொக்கிஷம். அகமத்நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த போது 1944இல் நேரு எழுதிய நூல். வேதகாலத்திலிருந்து பிரிட்டீஷ் ஆட்சி முடிவுக்க்கு வருவதற்கு சற்று முந்தைய

 காலம் வரை உள்ள அரசியல் - சமூக - கலாச்சார வரலாறு. பத்து அத்தியாயங்கள். சற்றே பாடப் புத்தகம் போல இருக்கும் அவசரமாகப் படிப்பவர்கள் முதலிரண்டு அத்தியாயங்களை விட்டு விடலாம். அவை அகமத்நகர் கோட்டை, கமலாவுடனான திருமணம், அவர் நோய்வாய்ப்பட்டு சுவிஸ் போனது, அவரது மரணம் ஆகியவற்றைப் பேசுகின்றன. இன்றையச் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய பகுதிகள் மதங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் பலவும் இணையத்தில் கீஊ ஆகக் கிடைக்கின்றன. இவற்றில் சில பழைய நூல்கள்தான். ஆனால் இவை ஆரம்பத்தில் படிக்க வேண்டிய அடித்தள நூல்கள். ஐந்து நூல்கள் மட்டுமே பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டதால் பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. மன்னிக்க.

பிப்ரவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com