4 கோடுகள், 75,000

4 கோடுகள், 75,000
Published on

பத்தாம் வகுப்புத் தேர்வு(1990) முடிந்த மறுநாள் வீட்டுக்குத் தெரியாமல் பேருந்து ஏறி

சென்னையில் வந்து இறங்கிவிட்டேன். சிந்தாதரிப் பேட்டையில் நின்ற தனியார் பேருந்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை, பேருந்து ஓட்டுநர் உலுக்கி எழுப்பிவிட்டார். கோடம்பாக்கம் எந்த பேருந்து போகும் என்று கேட்டுக்கொண்டு இறங்கிய என் கண்ணில் பட்டது ஒரு பத்திரிகை போஸ்டர்!

ஷ்யாம் கைது! என்று அதில் அச்சிடப்பட்டிருந்தது. எனக்குப் பெரும் அதிர்ச்சி. இப்போதுதானே வந்து இறங்கி இருக்கிறோம். அதுக்குள்ள நம்மை யார் கைது செய்தது என்று பார்த்தால் தராசு ஆசிரியர் ஷ்யாம் என்றதும் எனக்கு திகில் குறைந்தது.

நான் எதற்கு வந்துள்ளேன்? என்னிடம் ரஜினி, கமல் இருவரின் ஓவியங்களை வரைந்து பாலித்தீன் பையில் வைத்துள்ளேன். இருவரில் ஒருவரையாவது பார்த்து கையெழுத்து வாங்கி, ஊருக்குத்திரும்பி பள்ளிக் கூடத்தில் சக மாணவர்களிடம் காட்டவேண்டும்! மாற்றுத் துணி ஏதும் இல்லை. பென்சில், ரீஃபிள் பேனா, ரப்பர் இவற்றுடன் முந்நூறு ரூபாய் பணம், இவ்வளவுதான் என் சொத்து. இன்று மாலையே  ஊருக்குத் திரும்பிவிடுவேன் என நினைத்துக்கொண்டேன்.

பேருந்து ஏறி நான் போய் இறங்கிய இடம் வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ. உள்ளே போனேன். குற்றவாளிகள் என்ற படத்துக்கு படப்பிடிப்பு. அங்கே இருந்தவர் பூரணம் விசுவநாதன். கால்சட்டை அணிந்து பள்ளிச் சீருடையுடன் நடமாடிய என்னை அழைத்து விசாரித் தார். என் ஓவியங்களைப் பார்த்தவர், கிண்டலாக என்னையெல்லாம் வரைய மாட்டியா என்று கேட்டார். உடனே அங்கேயே அமர்ந்து அவரை வரைந்துகொடுத்தேன். மகிழ்ந்தவர், அங்கே போய்க்கொண்டிருந்த ஒருவரை அழைத்து தி.நகர்தானே போறே, நடிகர் சிவகுமார் வீட்டிலே விட்டுடு இந்த பையனை என்று அனுப்பி வைத்தார். ரஜினியைப் பார்க்க வந்தோம்; சிவகுமாராவது கிடைக்கிறாரே என்று அவருடன் பைக்கில் தொற்றிகொண்டேன். அவரது வீட்டருகில் இறக்கிவிட்டு 10 ரூபாய் வாங்கிக்கொண்டார் அந்த மனிதர். என் துரதிருஷ்டமோ அதிர்ஷ்டமோ  சிவகுமார் வீட்டில் இல்லை. பிறகு மீண்டும் பஸ் பிடித்து எனக்கு சென்னையில் தெரிந்த ஒரே இடமான ஏவிஎம் ஸ்டூடியோவுக்கே மீண்டும் வந்தேன்.

மாலை என்பதால் படப்பிடிப்பு முடிந்து எல்லாம் காலி செய்திருந்தார்கள், காலையில் என்னைப் பார்த்திருந்த ஊழியர்களில் ஒருவர் கூப்பிட்டு அம்புலிமாமாவில் ஓவியர் வேலைக்கு இண்டர்வியூ நடக்கிறது போய்ப்பார் என வழிகாட்டினார். விஜயவாஹினி என்று எழுதப்பட்டிருந்த ஓரிடத்துக்குள் நுழைந்தேன். அங்கே வாசலில் இருந்தவர், ஓவியர் இண்டர்வியூவா எனக்கேட்டு 64வது எண் டோக்கன் கொடுத்து, நாளைக்கு காலையில் பத்துமணிக்கு வந்துவிடுப்பா என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஏதோ நம் வருகைக்கு ஒரு நோக்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். நாளைக்கு ஒருநாள் இதையும் ஜாலியாக பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என நினைத்து அங்கிருந்து நடந்தே சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தேன். அந்த இரவு ரயில் நிலையத்தில் உறங்கினேன். மறுநாள் ஒரு ஜீன்ஸை ப்ளாட்பாரத்தில் வாங்கி கால்சட்டை மேலே மாட்டிக்கொண்டேன். பஸ் பிடித்து அம்புலிமாமா ஆபீஸ் போனேன். காலையில் ஸ்டேஷனில் பொங்கலும் இட்லியும் சாப்பிட்டிருந்தேன். சுமார் 100 ஓவியர்கள் காத்திருந்த இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்தவுடன் தூங்கிவிட்டேன்.

என் முறை வந்தபோது உலுக்கி எழுப்பிவிட்டார்கள் ஓடிப்போனேன். அங்கே இருந்தவர் தெலுங்கிலேயே அன்பாகக் கேள்வி கேட்டார். எனக்கும் தெலுங்கு தெரியும் என்பதால் அவரிடம் பேச முடிந்தது. என் ஓவியங்களைப் பார்த்தவர்,‘இதெல்லாம்... சினிமா நடிகர் கள் ஓவியம் எல்லாம் எங்களுக்கு ஆகாது. ராஜா ராணி படம் தான் வேண்டும்,‘ என்றார். அவ்வளவுதானே என்று ரஜினி, கமல் படங்களை அவர் கண்ணெதிரே ராஜா ராணியாக மாற்றிக் கையில் கொடுத்தேன். பார்த்தவர், உடனே வெளியில் இருந்த ஆளைக் கூப்பிட்டு இவனை மேலே அழைத்துப்போ என்றார்.எதுக்கு என்னை கூட்டிட்டுப் போறீங்க என்று உடன் வந்தவரிடம் கேட்டேன். ‘ நீ.. செலக்ட் ஆயிட்டே.. உனக்கு வேலை கிடைச்சுடுச்சு' என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே கையில் 350 ரூபாய் கொடுத்தார்கள். இதுக்கே இவ்வளவு காசா என்று வாயைப் பிளந்தேன்.

அன்று மாலையே அங்கிருந்த ஒருவர் சொன்னார். ஏம்பா அம்புலிமாமாவில் சேர்ற..குமுதம் போன்ற பத்திரிகையில் சேர்ந்தால் இன்னும் கூடுதல் சம்பளம் கிடைக்குமே என்றார். அன்றே குமுதம் அலுவலகம் போன அவருடன் ஒட்டிக்கொண்டேன். பாக்கியம் ராமசாமியும் ராகி ரங்கராஜனும் இருந்தார்கள். எனக்கு அவர்களை யாரென்றே தெரியாத நிலையில் தாத்தா என வெள்ளந்தியாக அழைத்ததும், சார் என அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதும் ஞாபகமிருக்கிறது.

பாக்கியம் ராமசாமி,  ‘நீ யாருப்பா?' என்றார். என்ன வென்று சொல்வது என தெரியாத நிலையில் ஆர்டிஸ்ட் என சொல்லி வைத்தேன்.

 ‘படம் போடத் தெரியுமா?'

 ‘போடுவேன். நீங்கள் எப்படி வேண்டுமென கேட்டால் போட்டுத் தருகிறேன்!'

அவர் ஒரு கதையில் குறிப்பிட்ட காட்சியைச்

சொல்லி, ‘நாளைக்குப் போட்டு எடுத்துக்கொண்டு வா' என்றார் சுவாரசியமில்லாமல்.

உடனே அவருக்கு ஆசிரியர் அறையில் இருந்து அழைப்பு வர, கிளம்பியவர் எனக்கு கொஞ்சம் முறுக்கு, கடலை போன்றவற்றைத் தந்துவிட்டுப் போனார்.

நான் அங்கிருந்த வெள்ளைத் தாளை எடுத்து அவர் சொன்ன காட்சியை ஓவியமாக வரைந்து வைத்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து வந்தவர்,‘இன்னும் கிளம்பலையா நீ?' என்றவாறு நாற்காலியில் அமர்ந்தார்.

அவர் முன்னால் இருந்த ஓவியம் கண்ணில் பட்டது. ‘என்னது? அதுக்குள்ள வரஞ்சிட்டயா?' என்றார் நம்ப முடியாமல்.

என்னுடைய பலமே வேகமாக வரைவதுதான். மீண்டும் அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு எடிட்டர் அறைக்குப் போனார். திரும்பி வந்தவர்,‘இது ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளர் எழுதும் ஆகஸ்ட் அதிர்ச்சி என்ற தொடர்கதை.. நீதான் இனி வரையப்போகிறாய்‘ என்றார். எனக்கு அப்போது ராஜேஷ்குமார் என்றால் யாரென்றே தெரியாது என்ற உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

‘எங்களுக்கு நீ வரைந்தால் வாரம் 4000 ரூபாய் கிடைக்கும்‘ என அடுத்ததாக அவர் சொல்ல, அம்புலிமாமாவின் 350 ரூபாயுடன் இதை ஒப்பிட்டு ‘ரைட்டு' என ஒப்புக்கொண்டேன்.

அடுத்த மூன்று மாதங்களில் சென்னையில் இருந்த எல்லா பத்திரிகைகளிலும் என் ஓவியங்கள் வர ஆரம்பித்துவிட்டன. தங்குவதற்கு அறையே இல்லாமல் ரயில் நிலையத்தில் தங்கிய நான், ஒற்றை அறை கொண்ட வீட்டை அந்த மூன்றே மாதத்தில் விலைக்கு வாங்கிவிட்டேன்.

அன்றிலிருந்து ஓயாமல் வரைந்துகொண்டே இருக்கிறேன். ஒரு கட்டத்துக்குப் பின் நானே எல்லா படங்களையும் வரைவதைகுறைத்துக்கொண்டேன், பிறருக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என நான் எடுத்த முடிவுதான் அது! வேகமாக வரைவதும், ப்ளாட்பாரம் முதல் வீட்டின் படுக்கையறை வரை எந்த இடமாக இருந்தாலும் எந்த மூடும் தேவையில்லாமல் வரைய முடிவதும் இறைவன் கொடுத்த வரம்!

பல ஆண்டுகளுக்கு முன்னால் பாண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சுமார் 100 ஓவியர்களை விளம்பர ஓவியம் தயாரிக்க பெங்களூர் அழைத்திருந்தார்கள். எனக்கும் அழைப்பு இருந்தது. எல்லோரும் பிரமாண்டமான ஓவியங்களுடன் வந்திருந்தனர். எனக்குத் தெரியாது, நான் சும்மாதான் போனேன். என் முறை வந்தபோது, உள்ளே போனேன். ‘எதாவது ஓவியம் உண்டா?' எனக் கேட்டார்கள். ‘ என்னிடம் யாரும் சொல்லவில்லை‘ நான் எதையும் கொண்டுவரவில்லை. அனுமதி கொடுத் தால் இங்கேயே வரைந்து தருகிறேன்‘ எனச் சொல்லி ஒரு பேப்பரை எடுத்து நான்கு கோடுகள் போட்டு அளித்தேன். ஒரு பெண் உருவம்; காற்றில் அவளே வாசனையாகத் தோன்றுவது போன்ற ஓவியம்.

ஆச்சர்யகரமாக அந்த ஓவியத்தைத் தேர்வு செய்தனர். எனக்குக் கிடைத்த பணம் 75,000 ரூபாய். நான் மலைத்துப் போனேன். ‘ இந்த பணம் திருப்திதானே?‘ என்று என்னிடம் கேட்டபோது சிரித்துக்கொண்டேன்.

ஒரு பென்சிலோடும் ரப்பரோடும் சென்னைக்கு வந்த எனக்கு கலை, எக்கச்சக்கமாகக் கொடுத்திருக்கிறது!

(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)

பிப்ரவரி, 2023.

logo
Andhimazhai
www.andhimazhai.com