1971 கலைஞரின் வெற்றி வியூகம்!

1971 கலைஞரின் வெற்றி வியூகம்!

Published on

1971பொதுத் தேர்தல். தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். காமராஜர், ராஜாஜி தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர் வரை பல அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர ஏற்படுத்திய தேர்தல்.

இந்தத் தேர்தல்தான் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஆகப்பெரிய கட்சியை உருவாக்கிய தேர்தல். ஆம், அந்தத் தேர்தலின் முடிவில் ஆளுங்கட்சியான திமுக பெற்ற எண்ணிக்கையை அதற்கு முன்பும் பின்பும் எந்தவொரு கட்சியும் பெற்றதில்லை. அந்த அளவுக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றது திமுக என்றால் அதன் பின்னணியில் இருந்தவை திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி வகுத்த தேர்தல் வியூகங்கள்.

தேர்தலைச் சந்திக்கத் தயாரானது முதல் கூட்டணியை முடிவுசெய்தது, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது, பிரசார உத்திகள், சர்ச்சைகளைக் கையாண்டது என அனைத்து நகர்வுகளிலும் தான் கற்ற அரசியல் உத்திகளை அதிரடியாகவும் அநாயாசமாகவும் பயன்படுத்தியிருந்தார் கருணாநிதி. முதலில் தேர்தலைச் சந்திக்கத் தயாரானதிலிருந்து தொடங்கலாம்.

அறுபதுகளின் இறுதியில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபிறகு மத்தியில் மைனாரிட்டி அரசை நடத்திவந்தார் பிரதமர் இந்திரா. அந்த அரசுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. ஆனாலும் மைனாரிட்டி அரசைத் தொடர்ந்து நடத்த விரும்பாத இந்திரா, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்கப் போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான நொடியில் புதிய தேர்தல் கணக்கைப் போடத் தொடங்கினார் கருணாநிதி.

தமிழகத்தில் கட்சியும் ஆட்சியும் கையில் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் போன்றோரின் ஏகோபித்த ஆதரவும் இருக்கிறது. கட்சிக்குள்ளும் கலகம் ஏதுமில்லை. மக்கள் மத்தியிலும் எதிர்ப்பலை ஏதுமில்லை. எல்லா அம்சங்களும் சாதகமாக இருந்ததால்தான் ஓராண்டுக்கு முன்னரே தேர்தலுக்குத்  தயாரானார் கருணாநிதி. உடனடியாக டெல்லி சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்த அவர், சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போவதாக அறிவித்தார்.

அடுத்தது, கூட்டணி வியூகம். 1971 தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார் கருணாநிதி. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நெருப்பிலே பிறந்து, வளர்ந்து, ஆட்சியைப் பிடித்த கட்சி திமுக. நேரு காலம் தொடங்கி காங்கிரஸுடன் தொடர்ச்சியான கொள்கைச் சமர் புரிந்தவர் அண்ணா. ஆனால் அவரது மரணத்துக்குப் பிறகு அதே காங்கிரஸின் பிரிவு ஒன்றுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்கி அதிர்வுகளைக் கிளப்பியிருந்தார் கருணாநிதி. திடீரென கருணாநிதி வகுத்த கூட்டணி வியூகம்தான் ராஜாஜியையும் காமராஜரையும் கூட்டணி வைத்துக் களம் காணவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளியிருந்தது.

என்னதான் இந்திரா காங்கிரஸ் இந்தியாவின் ஆளுங்கட்சியாக இருந்தபோதும், தமிழ்நாட்டில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு குறைவு. ஆகவே, இந்திரா காங்கிரஸ் மட்டுமன்றி, இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழரசு கழகம், ஃபார்வர்ட் ப்ளாக் உள்ளிட்ட கட்சிகளையும் திமுக அணியில் இடம்பெறச் செய்தார்.

கூட்டணி உருவானதைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டைத் தொடங்கினார் கருணாநிதி. முதலில் இந்திரா காங்கிரஸ் சார்பில் வந்த பக்தவத்சலமும் சி. சுப்பிரமணியமும் 80 சட்டமன்றத் தொகுதிகள்; 20 மக்களவைத் தொகுதிகளைக் கோரினர். ஆனால் கருணாநிதியோ, 10 முதல் 15 சட்டமன்றத் தொகுதிகள்; 5 முதல் 7 மக்களவைத் தொகுதிகள் தரமுடியும் என்றார். ஆத்திரமடைந்த அடைந்த சி.சுப்பிரமணியம், ‘‘கூட்டணியே வேண்டாம், இந்திரா காங்கிரஸ் தனித்தே களமிறங்கும்'என்று சொல்லி, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை பாதியில் முறிந்த தகவல் இந்திராவை எட்டியது. அவருக்கு சட்டமன்றம் இரண்டாம் பட்சம். மக்களவையே பிரதானம். கூட்டிக்கழித்துப் பார்த்த அவர், சற்றே இறங்கிவந்தார். அப்போது சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது சாத்தியமில்லை. வேண்டுமானால், பத்து மக்களவைத் தொகுதிகளைத் தருகிறேன் என்றார் கருணாநிதி. அதையும் ஏற்காவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதை உணர்ந்த இந்திரா, பத்து தொகுதிகளை ஏற்றுக்கொண்டார். அதன்படி, தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் ஒரு சட்டமன்றத் தொகுதியில்கூட போட்டியிடவில்லை. இது கருணாநிதி வகுத்த வியூகத்தின் அதிமுக்கியப் புள்ளி.

இந்திரா காங்கிரஸே இறங்கிவந்துவிட்ட நிலையில் இதர கட்சிகளைச் சமாளிப்பதில் சிக்கலேதும் இருக்கவில்லை. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை 201 தொகுதியில் போட்டியிட்ட திமுக, எஞ்சிய தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்தது. அந்தத் தேர்தலில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டது திமுக.

தேர்தல் அறிக்கை வெளியிட்டுப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தார் கருணாநிதி. நான்காண்டு காலம் நல்ல முறையில் செய்த பணிகள் தொடரவும், புதிய பணிகள் தொடங்கவும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கோரிய கருணாநிதி, தனது ஆட்சிக்கால சாதனைகளை எல்லாம் பிரசாரத்தில் முன்வைத்தார். இந்தத் தேர்தலில் திமுகவின் சக்திவாய்ந்த பிரசார பீரங்கியாக எம்ஜிஆரைக் களமிறக்கியிருந்தார் கருணாநிதி.

திமுக தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலில் சொற்ப தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், 1971 தேர்தலில் நீண்ட சுற்றுப் பயணத் திட்டம் வகுத்துக்கொண்டு, வேன் மூலம் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். ஒரே நாளில் இருபது தொகுதிகளில் பிரசாரம் செய்யவேண்டிய அளவுக்கு நெருக்கடி இருந்தது. திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலரது தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார் எம்ஜிஆர்.

எதிர்க்கட்சிகளோ திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஊழல் மலிந்த ஆட்சி, அமைச்சர்கள் சொத்துகளைக் குவித்துவிட்டனர் என்றார் காமராஜர். தேசத்தை நாசப்படுத்தும் அபாய சக்தி இந்திரா. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார் கருணாநிதி. ஆகவே, இரண்டு பேரையும் எதிர்க்கிறேன் என்றார் ராஜாஜி. மேலும், தொழிலதிபர்களிடம் ஏகப்பட்ட தொகையை தேர்தல் நிதியாக வசூலித்துள்ளது திமுக என்றும் விமரிசித்தார், ராஜாஜி.

திமுகவுக்காக எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்தபோது, காமராஜர் & ராஜாஜி கூட்டணிக்காகப் பிரசாரம் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

திருத்தணி முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டு, கையில் வேல் சகிதம் பிரசாரத்தில் இறங்கினார் சிவாஜி. பிரசாரக் களத்தில் எம்.ஜி.ஆர் & சிவாஜி இடையே சொற்போர் நடந்தது.

''என்னோடு நடித்து நீ ஜெயிக்கமுடியுமா?' என்று கேட்டார் சிவாஜி. ‘‘எனது படங்களின் வசூலை உனது படங்கள் எட்டிப்பிடிக்க முடிந்ததா? நான் வாங்கும் சம்பளத்தை நீ வாங்க முடியுமா?, நடிப்புப் போட்டிக்குத்தானே சவால் விட்டாய், நான் தயார், எப்போது, எங்கே வைத்துக் கொள்ளலாம்?' என்று எதிர்ச்சவால் விடுத்தார் எம்.ஜி.ஆர்.

இந்தச் சவால்களுக்கு மத்தியில் புதிய சர்ச்சை ஒன்று திராவிடர் கழகத்தின் பெயரால் வெடித்தது.  ஆம், தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் வேகமெடுத்த சமயத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை சேலத்தில் நடத்தினார் பெரியார். தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற செயல்களை விமரிசிக்கும் ஓவியங்களைத் தாங்கியபடி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இந்து மதத்தைக் கேலி செய்யும் வகையில் மாநாடு நடத்துகிறார் என்று பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் சேலம் ஜனசங்கத்தினர். 23 ஜனவரி 1971 அன்று திட்டமிட்டபடி ஊர்வலம் தொடங்கியது. பெரியார் கலந்துகொண்ட ஊர்வலப் பாதையின் ஒரு பகுதியில் கறுப்புக்கொடி காட்டுவதற்காக வந்திருந்த ஜனசங்கத் தொண்டர்களும் குழுமியிருந்தனர். ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென செருப்பு ஒன்று ஊர்வலத்துக்கு நடுவில் வந்து விழுந்தது. ஜனசங்கத்தினர் வீசிய செருப்பு என்றார்கள் திராவிடர் கழகத்தினர். இல்லவே இல்லை என்று மறுத்தனர் ஜனசங்கத்தினர். அதற்குள் கீழே விழுந்த செருப்பைக் கையில் எடுத்த திராவிடர் கழகத் தொண்டர் ஒருவர், ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட ராமனின் படத்தைத் தாக்கினார். அது பெரிய சர்ச்சையாக வெடித்தது.

திமுக கூட்டணிக்கு பெரியார் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த சமயம் அது என்பதால் ராமர் அவமதிப்பு விவகாரம் திமுகவுக்கு எதிராக மாறியது. ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று கேள்வி எழுப்பினர் எதிர்க்கட்சியினர்.

ராமர் படம் அவமதிப்பு விவகாரம் தேர்தல் பிரச்னையாக மாறிவிட்டதைக் கவனித்த பெரியார், ‘‘முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நடந்த தற்செயல் நிகழ்வுக்கு திமுகவைப் பலிகடா ஆக்குவதில் அர்த்தமில்லை. என்றாலும், நான் தேர்தல் பிரசா ரத்துக்குப் போவதில்லை'என்று அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் ராமர் படம் அவமதிப்பு விவகாரத்தைக் கைவிடுவதாக இல்லை. ஊர்வலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோ ராமசாமியின் துக்ளக் இதழ் வெளியிட இருப்பதாக செய்திகள் கசிந்தன.

உடனடியாக துக்ளக் அலுவலகத்துக்குச் சென்று சம்பந்தப்பட்ட துக்ளக் இதழ்களைப் பறிமுதல் செய்தது காவல்துறை. அரசின் இந்த நடவடிக்கை பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஊடக சுதந்தரம் நசுக்கப்படுவதாக விமரிசனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து திமுகவுக்கு எதிரான பிரசாரத்தில் சோ ராமசாமி தீவிரம் காட்டினார்.

அப்போது காமராஜரும் ராஜாஜியும் கலந்துகொள்ளும் கூட்டங்களில் மக்கள்திரள் பிரமாண்டமாக இருந்தது. திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி உருவாகியிருப்பதாக ஊடகங்கள் எழுதின.

ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு திசையில் இருந்தன. இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருந்தது, உண்மையில், பிரசாரக் கூட்டங்களுக்குத் திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்த உளவுத் துறையினர், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அதிகாரிகள் பலரும் காமராஜரை மரியாதை நிமித்தம் சந்தித்து, மாலை அணிவித்து அச்சார வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது அத்தனை கணிப்புகளும் அடியோடு மாறிப்போயிருந்தன.

சற்றேறக்குறைய எண்பது சதவிகித இடங்களைக் கைப்பற்றிய திமுக, ஆட்சியைத் தக்கவைத்தது. இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் கருணாநிதி. உண்மையில், அண்ணா ஆட்சியைப் பிடித்தபோது கிடைத்த இடங்களைவிட அதிக அளவிலான இடங்கள் 1971 தேர்தலின் முடிவில் திமுகவுக்குக் கிடைத்திருந்தன.

மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி கிடைத்திருந்தது. திமுக போட்டியிட்ட 24 தொகுதிகளில் ஒற்றைத் தொகுதியைத் தவிர அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருந்தது. திமுக தோல்வி அடைந்த நாகர்கோவில் தொகுதியைக் கைப்பற்றியவர் காமராஜர். தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் பத்து இடங்களில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகபட்ச இடங்களையும் (184), மக்களவையில் அதிகபட்ச இடங்களையும் (24) திமுக பெறுவதற்கு திமுக தலைவர் மு.கருணாநிதி வகுத்த வெற்றிவியூகங்கள் முக்கியமானவை!

(கட்டுரையாளர் ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ''திராவிட இயக்க வரலாறு'', ‘‘தமிழக அரசியல் வரலாறு'', ‘‘இந்தியத் தேர்தல் வரலாறு'', ‘‘இந்துத்வ இயக்க வரலாறு'' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு:Writermuthukumar@gmail.com)

மார்ச் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com