+1, +2 மாணவர்கள் கவனத்துக்கு – மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அப்பால்......

+1, +2 மாணவர்கள் கவனத்துக்கு – மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அப்பால்......
Published on

நன்றாகப் படிக்கிற எந்த மாணவனைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு நான் எஞ்சினியராகப் போகிறேன், மருத்துவராகப் போகிறேன் என்று சொல்வதைத் தான் கேட்க முடிகிறது. ஆனால் இதைத் தாண்டியும் வேறு சில அருமையான படிப்புகளும் உள்ளன. இதற்கு மாணவர்கள் மனதளவில் பள்ளியில் படிக்கும்போதே தயாராகிக் கொள்ள வேண்டும் என்பதுடன் அந்த படிப்புகள் பற்றிச் சொல்கிறார் கல்வியியல் ஆலோசகர் நெடுஞ்செழியன். அண்ணா பல்கலையில் பொறியியல் முடித்த இவர், 10 ஆண்டுகள் கணினித் துறையில் பணியாற்றிவிட்டு, கல்வி ஆலோசனையில் இறங்கிவிட்டார். தனியார் நிகர்நிலை பல்கலைகளின் நிர்வாகம் பற்றிய தாண்டன் ஆய்வுக் குழு, தமிழ்நாடு நுழைவுத்தேர்வு முறை நீக்கக் குழு ஆகியவற்றில் பங்களித்துள்ளார். 2009-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் துறை விருதும் நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் சர்வதேச அளவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. வெவ்வேறு துறைகளுடன் இணைந்து அந்தந்த துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதில் உலகத் தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு, பிஎம்டபிள்யூ ஜினா என்ற புதுவகை காரில், ஆச்சர் யப் படத்தக்க புதுநுட்பங்களைக் கொண்டுவந்தது, வழக்கமான ஆட்டோமொபைல் துறை அல்ல. இந்த காரின் கதவுகளை பக்கவாட்டில் இருந்தும் மேல்நோக்கி இழுத்தும் திறக்கமுடியும். மேலும், காரின் வடிவமைப்பையே அதாவது அதன் நீள அகலத்தை மாற்றியமைக்கக்கூடிய வகையில், இழுவைத்தன்மை கொண்ட உலோகத்தைக் கொண்டு இந்த காரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த புதுமையைச் செய்தது, மெட்டலர்ஜி என சொல்லப்படும் உலோகவியல், பொருண்மை அறிவியல் (மெட்டீரியல் சயன்ஸ்) ஆகிய துறைகள்தான். இது போன்ற பல்வேறு நவீன மாற்றங்களை, இங்குள்ள கல்விக்கூடங்களின் முதலாளிகள் கூர்ந்துபார்க்கத் தவறுகிறார்கள். 

சுதந்திரம் பெற்ற தருணத்தில் இதற்கு நேர்மாறாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதலாளிகள் நாட்டின் உயர்வை நோக்கமாகக் கொண்டு, ஏராளமான கல்விக்கூடங்களைத் தொடங்கினார்கள். அவர்களில் யாருமே கல்வியின் மூலம் வியாபாரம் செய்யலாம் என்று பார்க்கவில்லை. சமுதாய முன்னேற்றத்துக்கு கல்வியே முக்கிய கருவி என்ற கண்ணோட்டத்தில் செயல்பட்டார்கள். பிட்ஸ் (ராஜஸ்தான்)பிலானி பிர்லா, ஜிடிநாயுடு, மதுரை தியாகராஜர் போன்றவர்கள், சொந்த இடங்களை, பணத்தை இதற்காக வழங்கினார்கள். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் பயனை இன்னும் நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இன்றைய கல்விக்கூட அதிபர்களோ தொலைநோக்கோடு பார்க்காமல், மாணவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில்கொள்ளாமல், உலக அளவில் போட்டிபோடக்கூடிய அளவு திறமை படைத்தவர்களாக நம் மாணவர்களை உருவாக்குவதில்லை  என்பதே வருத்தம். இதே சமயத்தில், கொரியா, சீனா, தைவான் போன்ற நாடுகளோ, வளர்ச்சிப் பாதையில் சர்வதேச அளவில் தங்கள் இளைய தலைமுறையினர் கால்தடம் பதிக்கவும் அரசும் தனியாரும் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் கல்விக்கொள்கையை உருவாக்குகின்றனர். உயர்கல்வியிலும் ஆராய்ச்சியிலும் அதிக முதலீடு செய்து வளர்ச்சிப் பாதையைத் திட்டமிடுகின்றனர். ஆனால், இந்தியாவிலோ பொறியியல் மட்டுமே வளர்ச்சிக்கான ஏணி எனத் தவறாக எண்ணி, மற்ற துறைகளுக்கு உரிய வாய்ப்பு அளிப்பதில்லை. இதனால், நம் நாட்டில் துறைகளுக்கு இடையில் சமனற்ற தன்மை, பாகுபாடான நிலைமை அதிக அளவில் காணப்படுகிறது.

 உதாரணமாக, பொறியியல் துறையில் 20 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், உயிர் காக்கும் அவசரம் மற்றும் விபத்து சிகிச்சை படிப்பில் இந்தியாவிலேயே 200 பேர்தான் படிக்கின்றனர். இதேபோல ஆடியாலஜி, ஸ்பீச், லாங்குவேஜ் தெரஃபி படிப்பவர்கள் 5 ஆயிரத்துக்கும் குறைவுதான். சொல்லப்போனால், இந்த தலைமுறையினர் காதில் எப்போதும் பேசிக்கொண்டே, இயற்கை அளித்த- மாற்று உறுப்பு பொருத்தமுடியாத காதின் அருமையை உணராமல், ஆபத்தான, அபாயகரமான எச்சரிக்கையையும் மீறி நடந்துகொள்ளும் நிலையில், காதுகேளாமை தொடர்பான படிப்புகள் குறைவாக இருக்கின்றன!

வளர்ச்சி அடைந்த நாடுகளில் கல்விக்கொள்கையைப் பற்றி திட்டமிடவும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லவும் சிந்தனை மையங்களை (திங்க் டேங்க்) உருவாக்கி, கல்வித்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டி, ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்கின்றனர். தொலைநோக்கோடு செயல்படும் இந்த சிந்தனை மையங்களுக்கு, அரசுகளே நிதியுதவி செய்கிறது. சர்வதேச அளவில் தங்கள் நாட்டின் கல்வித்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல திட்டமிடுகின்றனர். இது அந்தந்த நாடுகளின் மொத்த வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. அந்த அளவுக்கு முன்னேற்றம், நம் நாட்டில் இல்லாவிட்டாலும், இங்கும் பல மேன்மையான அனுபவத்தைத் தரும் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன” என்கிற நெடுஞ்செழியன் அவை பற்றிய விவரங்களை இங்கே தருகிறார்.

டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோஷியல் சயன்ஸ்

மகராஷ்டிர மாநிலம் மும்பை, துல்ஜாப்பூர், ஆந்திர மாநிலம் ஐதராபாத், அசாமில் கவுஹாத்தி ஆகிய இடங்களில் அமைந்துள்ள, டிஸ் எனப்படும் டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில், இளநிலைப் பட்டமும் இளநிலையுடன் இணைந்த முதுநிலை ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் பட்டமும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. உலகமயமாக்கமும் தொழிலாளரியலும், மனிதவள மேம்பாடும் தொழிலாளரியலும், வளர்ச்சியியல், பெண்களியல் ஆகிய துறைகளில் எம்.ஏ. எம்.எஸ்.சி. பட்டங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர, நகரமயமாக்கமும் ஆட்சிநிர்வாகமும், ஒழுங்குபடுத்தும் ஆட்சிநிர்வாகம், நீர்க்கொள்கையும் ஆட்சிநிர்வாகமும் ஆகிய பாடங்களிலும் முதுநிலை பட்டப் படிப்புகள் இங்கு உள்ளன. இதே பாடங்களில் நாட்டின் மற்ற பகுதிகளில் பட்டப்படிப்புகள் இருந்தாலும், இங்கு சொல்லித்தரப்படுவது உலகத் தரம் வாய்ந்தது. அதைப்போலவே, வேலைவாய்ப்பும் உலக அளவிலானது. ஐநா மன்றத்தின் பல்வேறு அமைப்புகளில் உலகம் முழுவதும் சென்று பணியாற்றக்கூடிய வாய்ப்புகள், இந்தப் படிப்பு முடித்தவர்களுக்கு கிடைக்கும். உள்நாட்டிலும் மத்திய அரசின் துறைகளில் ஆய்வுநிலை அதிகாரிகளாகவோ அரசுசாரா அமைப்புகளில் உயர்நிலைகளிலோ அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். எங்கு பணியாற்றினாலும் மக்களுக்காக நேரடிப் பணியாற்றும் உணர்வும் ஆத்மதிருப்தியும் இதில் கிடைக்கும்.

சென்னை மேத்தமெட்டிகல் இன்ஸ்டிட்யூட், (சிஎம்ஐ) சிறுசேரி

இதேபோல, சென்னையின் அருகில் உள்ள சிறுசேரியில் சென்னை கணிதவியல் நிறுவனம்- சி.எம்.ஐ. எனும் தனியார் பொது கூட்டு நிறுவனமானது, இந்தியாவிலேயே இந்த வகைமாதிரியில் மிகச் சிறந்ததாகும். இங்கு, +2 முடித்த மாணவர்களுக்கு, கணிதமும் கணினி அறிவியலும் இயற்பியலும் கணினி அறிவியலும் என  இரண்டு பி.எஸ்சி (ஆனர்ஸ்) பட்டப் படிப்புகள் உள்ளன. பிரபல இணைய நிறுவனமான கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், இதுபோல பிஎஸ்சி (ஆனர்ஸ்) பட்டம் படித்தவர்தான். இங்கு படிக்க மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், ஒரு பருவத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.750 மட்டுமே. கல்வியாளர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தை தனிச்சிறப்பானதாகவே பார்க்கின்றனர்.

இந்திய பயிர்ப் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்

 இன்னொரு நிறுவனம், தஞ்சையில் உள்ள இந்திய பயிர் பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம். மத்திய உணவுத்துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் பி.டெக். எம்.டெக், பி.எச்.டி. படிப்புகள் உள்ளன. மத்திய அரசின் நேரடி நிறுவனம். உணவு பதப்படுத்தல் பொறியியல், உணவு நுண்ணுயிரியல், உணவுப்பொருள் மேம்பாடு, தரக்கட்டுப்பாடு உள்பட பல துறைகளைக் கொண்டு நடத்தப்படும் தேசிய கல்விநிறுவனம் என்பதால், இந்த படிப்புக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மதிப்பு அதிகம். மற்ற பி.டெக். படிப்புகளைவிட இதற்கு வேலைவாய்ப்பும் அதிகம்.

உணவுப்பொருள் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் நிர்வாகத்துக்கான தேசிய கல்விநிறுவனம், (நிஃப்டெம்) சோனிபெட், ஹரியானா 

ஹரியானா மாநிலம் சோனிப்பெட் எனும் இடத்திலும், மத்திய உணவுப்பொருள் தொழில்கள் துறையின் கீழ் என்.ஐ.எஃப்.டி.இ.எம்--  அதாவது உணவுப்பொருள் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் நிர்வாகத்துக்கான தேசிய கல்விநிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. உலகமய சூழலில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் அங்கிருந்து நம் நாட்டுக்கும் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவது மென்மேலும் அதிகரித்துவரும் காலம் இது. மேலும், சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியாவிலும் உணவுப்பொருள் உற்பத்தி, வணிகம் மாற்றப்பட்டு வருவதால், இவை குறித்த தரம், சட்டங்களுக்கு ஏற்ப உற்பத்திசெய்வது கட்டாயம் என்பதால், இந்தத் துறைக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். இங்கு வழங்கப்படும் பிடெக், எம்டெக், பிஎச்டி படிப்புகளுக்கு உலக அளவில் மதிப்பு உண்டு. உள்நாடா, வெளிநாடா எந்த வாய்ப்பு என்பதை படிப்பவர்களே முடிவுசெய்யும் அளவுக்கு இதன் முக்கியத்துவம் இருக்கிறது.

இதுவரை கூறப்பட்ட தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தனித்தனியான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். வழக்கமான, ஐஐடி வகையறா அகில இந்திய நுழைவுத்தேர்வு மட்டுமே உயர்ந்தது எனச் சொல்லப்படுவதுபோல உண்மையில் இல்லை. கணிதவியல், சமூகவியல், உணவுப்பொருள் துறை போன்றவையும் மதிப்பானவை மட்டுமின்றி, ஆத்மார்த்தமான திருப்தியையும் ஆராய்ச்சி மகிழ்வையும் அளிக்கக்கூடியவைதான். இவையெல்லாம் ஒரு படிப்பா என இருந்தவர்கள், இப்போது இந்தப் படிப்புகளைப் பற்றி ஆஹா ஓஹோவெனச் சொல்வதை கல்விப்புலத்தில் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது.

அரிய படிப்பான, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பி.எஸ்சி படிப்பானது, சென்னையில் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன், வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் கற்றுத்தரப்படுகிறது. பிஎஸ்சி நர்சிங் படித்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்தான், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அனுபவம் பெறமுடியும். ஆனால், இந்தப் படிப்பு முடித்தவுடனேயே, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சொல்லப்பட்டவற்றைத் தவிர, குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கான படிப்புகளும் கணிசமாக இருக்கின்றன.

அவசர சிகிச்சை டெக்னீசியன், சுவாசமண்டல சிகிச்சை டெக்னீசியன், மயக்கமருந்து டெக்னீசியன், அறுவை சிகிச்சைக்கூட டெக்னீசியன், கார்டியோ சோனோகிராபி டெக்னீசியன், ஆர்த்தோபெடிக் டெக்னீசியன் உள்பட்ட ஓராண்டு படிப்புகள், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கற்றுத்தரப்படுகின்றன. ஆண்டுதோறும் 3,200 இடங்கள் உள்ள இந்தப் படிப்புகளுக்கு தனியாரில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அளிக்கும் 24 படிப்புகளுக்கு ஏறத்தாழ 6 ஆயிரம் இடங்கள் உள்ளன. மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீஷியன், ஈசிஜி டெக்னீஷியன், உள்ளிட்ட ஆறுமாதம் முதல் இரண்டாண்டுவரையிலான பல்வேறு டிப்ளமோ படிப்புகள் சேர்த்து இங்கு 6 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கிங் நிறுவன மாணவர்களுக்கு அதிலும் சிறப்பாகத் தேறும் மாணவர்களுக்கு மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள் அளிக்கும் வரவேற்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

சென்னை தரமணி மத்திய தொழில்நுட்ப வளாகத்தில் இயங்கிவரும், உணவக நிர்வாகம் மற்றும் உபசரிப்புக் கல்வி (ஐ.எச்.எம்.) நிறுவனமும், பயனுள்ள படிப்புகளை வழங்குகிறது. முழுக்கமுழுக்க மத்திய சுற்றுலா துறையின் கீழ் இயங்கிவரும் இந்த நிறுவனம், விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகத்தில் 3ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பையும் (265 இடங்கள்) உணவு தயாரிப்பு (80 இடங்கள்), வெதுப்பகம் மற்றும் திண்பண்டத் தொழில், உணவு மற்றும் பான வழங்கல், அலுவலக முகப்புப் பணி ஆகியவை தொடர்பான 1 ஆண்டு பட்டயப் படிப்பையும் (தலா 40 இடங்கள்) கற்றுத்தருகிறது. இன்ன பாடம்தான் என்றில்லாமல் பொதுவாக எந்த பட்டதாரியும் சேரும்வகையில் Graduate Diploma Course in Accommodation Operation & Management ( 30 இடங்கள் ) படிப்பையும், மனையியல் பட்டம் படித்தவர்களுக்கு Post Graduate Diploma Course in Dietetics & Hospital Food Services  (20 இடங்கள்) படிப்பையும் வழங்குகிறது. இதைத்தவிர, 12-ம் வகுப்பில் மிக மோசமான மதிப்பெண்கள்தான்  பெறமுடிந்தது என மனம் கலங்குபவர்கள், 10-ம் வகுப்பில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்களுக்கு இதே வகையினங்களில் சான்றிதழ், பயிற்சிப் படிப்புகளும் இருக்கின்றன. நல்ல தொழில், வேலைவாய்ப்புக்கு உறுதி சொல்லமுடியும். மாநிலம் முழுவதும் புற்றீசல் போல, உணவகத்தொழில் கல்வி நிறுவனங்கள் முளைத்துவிட்ட நிலையில் அரசின் இந்த நிறுவனத்தில் படிப்பது மதிப்புக்குரியதாகவும் எளிதில் வேலைவாய்ப்பு பெறக்கூடியதாகவும் இருந்துவருகிறது” எனச் சொல்லும் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், ’எதிலும் கொஞ்சம் இறங்கிப்பார்த்தால், ஏற்புடைய இலக்கை அடைவது எளிது’ என்கிறார், நம்பிக்கை தரும் புன்னகையோடு! 

ஜாலியா படிக்கலாம்!

எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தப் படிப்பை எடுத்துப் படித்தால் சுவாரஸ்யம்தான். இருப்பினும் சுவாரசியமானது என்று நீங்கள் கருதும் சில படிப்புகளைப் பரிந்துரையுங்களேன் என்று பல்வேறு துறை  சார்ந்த பிரபலங்களிடம் கேட்டோம்.

மாலன் ஆசிரியர், புதிய தலைமுறை

  1. ஃபிலிம் டெக்னாலஜி (காலேஜை கட் அடிக்காமல், காலேஜிலேயே படம் பார்க்கலாம்)

  2. ஃபேஷன் டெக்னாலஜி (நீ என்ன படிச்சு கிழிச்சே என்று யாரும் கேட்க முடியாது)

  3. ஓவியக் கல்லூரிப் படிப்புகள் (நிறைய கலர் பார்க்கலாம்)

  4. அலைவது பிடிப்பவர்கள் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் படிக்கலாம்

  5. புத்தகப் பிரியர்களுக்கு லைப்ரரி சயின்ஸ்

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

  1.  தமிழ் இலக்கியம்

  2. ஆங்கில இலக்கியம்

  3. இதழியல்

  4. சுற்றுலா

  5. விஷுவல் கம்யூனிக்கேஷன்

இறையன்பு ஐஏஎஸ்

  1. ஆங்கில இலக்கியம்

  2. கணிதம்

  3. ஹாஸ்பிடாலிட்டி தொடர்பான படிப்புகள் (சுற்றுலா வளர்ச்சி ஏற்படுவதால் ஹோட்டல்கள், விடுதி-கள் உருவாகும்)

  4. ஹ்யூமானிடிஸ்

  5. துணை மருத்துவ படிப்புகள்

தங்கம் தென்னரசு

  1. முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர்

  2. சமூகவியல்

  3. வரலாறு

  4. காட்டுயிர் அறிவியல்

  5. விஷுவல் கம்யூனிகேஷன்

  6. தமிழ் இலக்கியம்

ஆனந்த் ராகவ், எழுத்தாளர்

  1. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த துறைகள் -முக்கியமாக Waste Management  என்கிற, கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செய்து மறுபடியும் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய  துறை மிகப் பிரபலமாகப்போகிறது.

  2. வடிவமைப்பு - சோப்பிலிருந்து விமானம் வரை பொருட்களை வடிவமைக்கும் Product Designing.

  3. கட்டிடக்கலை, இண்டீரியர் டிசைனிங், புராதான கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு.

  4. வனவிலங்குகள் பாதுகாப்பு, வனவிலங்கு காப்பகங்கள் பராமரிப்பு. விலங்கினம் பற்றிய கல்வியறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் வனவிலங்குப் பாதுகாப்பிடங்கள் உதவி புரிகின்றன.

  5. விவசாயம். குறிப்பாக உயிரி வேளாண்மை என்கிற Organic Agriculture.  

குணசேகரன்,  துணைப் பொது மேலாளர், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

  1. வணிகவியல்

  2. கணினி அறிவியல்

  3. பொருளியல்

  4. கார்ப்பரேட்ஷிப்

  5. மனித வளத்துறை

பர்வீன் சுல்தானா. பேராசிரியர், நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி

  1. தாவர உயிரியல் மற்றும் பயோடெக்னாலஜி

  2. பிசினஸ் மேனேஜ்மெண்ட்

  3. விஷுவல் கம்யூனிகேஷன்

  4. கேட்டரிங் டெக்னாலஜி

  5. பேஷன் டெக்னாலஜி

ஜூன், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com