பாராட்டு

பாராட்டு
Published on

‘அதிமுக 50 ஆண்டுகள் பொன்மனச்செம்மல்' கட்டுரை சேதியும் தேதியுமாக ஜொலிக்கிறது. இனி, அதிமுக வரலாறு என எழுதுபவர்கள் இக்கட்டுரையையும் பார்வையிட வேண்டியதிருக்கும். பல புதிய செய்திகள், நிகழ்ச்சிகள், கட்டுரையில் பளிச்சிடுகின்றன. கட்டுரையாளர் செங்குட்டுவன் தம்பியை அவருடைய உழைப்பிற்கும், இந்த படைப்புக்காக மெனக்கெடலுக்கும் பாராட்டியே தீரவேண்டும்

 சி.பொன்ராஜ், மதுரை

 ஆத்மாவின் ராகம்

மூன்று பெண்களின் கதையை யதார்த்தமாகப் பிட்டுவைத்த லட்டுபோல்,‘சிவரஞ்சனியும் சில பெண்களும்' படத்திற்கு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இயக்குநர் வசந்த் எஸ் சாய் நேர்காணல் சிறப்பு. இசையே இல்லாமல் அமைந்த அவரது படம் விருதுகளைக் குவித்தாலும் ராஜா இசை சேர்ந்த பின் படம் ஆர்த்தெழுந்த விதம் ஆத்மாவின் ராகம் தான்!

 மருதூர் மணிமாறன், நெல்லை - 627 651

எதிர்காலம்

ஒரு நடிகர் கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த உலக அதிசயம்: அதிமுக! திரையுலகிலிருந்து, வெற்றிப்பட நாயகனாகவே விடை பெற்று, சாகும் வரை அசைக்க முடியாத முதல்வராகத் திகழ்ந்த எம்ஜிஆரின் அதிமுகவுக்கெனத் தனிப் பெருமைகளும் உண்டு. இரண்டு முறை கட்சி பிளவுபட்டு, சின்னம் முடக்கப்பட்டும் ஃபீனிக்ஸ் பறவை போல உலகளவில் மீண்டும் உயிர்த்தெழுந்த ஒரே கட்சி. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி. ஆளுமை தலைமை இல்லாமல், இழுபறி, மிரட்டல்கள், பிரச்னைகள், உள்குத்துகளுக்கு மத்தியில் புதுமுகம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்தாண்டு ஆட்சியைப் பூர்த்தி செய்து, தொடர்ந்து எதிர்க்கட்சியான ஒரே கட்சி.

கூட்டணியே இல்லாமல் தனித்து (ஜெயலலிதா தலைமையில்) ஜெயித்து ஆட்சியமைத்த ஒரே கட்சி. இத்தனை சிறப்புகளோடு பொன்விழா கொண்டாடிய கட்சி இனி முட்டிக்கொள்ளும் இரட்டை தலைமையால் கரை சேருமா! என்பது தான் எதிர்கால த்ரில்லிங் சஸ்பென்ஸ்

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை - 611102

உற்சாகம்

ஜி.எம்.சுந்தரின் பேட்டி உற்சாக டானிக். போராட்டங்கள் ஒரு நாள் வெற்றியைக் கண்டிப்பாகத் தரும் என்கிற உண்மை ஜி.எம்.சுந்தர் மூலம் உணர்ந்தேன். இப்பத்தான் எல்லாம் கிடைத்தது என்கிற அவரது பேட்டியால் இதயம் நெகிழ்ந்தது. இனி எல்லாம் கிடைக்கும் சார்.

கோ.குப்புசாமி, சங்கராபுரம்

இலக்கணம்

துப்பறியும் மூர் சிறுகதை சிறப்பான தமிழ்வாணன் கதை போல் உள்ளது. சிறப்புக்கட்டுரை இப்பொழுது சசிகலா வந்தால் ஆளமுடியுமா? என்ற சில சிந்தனைகளைக் கேள்வி கேட்டு உள்ளது.

செங்குட்டுவன் தம்பி தனக்குத் தெரிந்த வரையில் எழுதியுள்ளார். பொதுவுடைமையாளர்களுக்கு எம்ஜிஆர் கடைசி வரை உதவினார். அதோடு பிரபாகரன் போன்ற தமிழ் போராளிகளுக்கு செய்த உதவி சரித்திரத்தில் இடம் பெற வேண்டியதாகும்.

வாழ்கின்ற போது வாழ்பவன் தான் மனிதன் என்ற பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்.

இரா.சண்முகவேல், தென்காசி

பாராட்டு

பண்டிகை காலங்களில் கிடைக்கும் விதவிதமான பலகாரங்களைப் போலவே அந்திமழை பக்கங்களில் விதவிதமான டேஸ்டில் பக்கங்கள் படைக்கப்பட்டுள்ளது.

ஜி.எம்.சுந்தர் நேர்காணல் பகுதி, பதினைந்து வருட பிரேக் கூட ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

ஆர்ஜே கல்யாணி, திசையன்விளை - 627 657

ஆவணம்

அதிமுக 50 ஆண்டு வரலாற்றினையும் அதன் எதிர்காலம் பற்றியும் அறிந்து கொள்ள, ஒவ்வோர் அதிமுக தொண்டரின் கைகளிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு ஆவணமாகும், பிப்ரவரி 2022 அந்திமழை இதழ்!

வெ.லட்சுமி நாராயணன், வடலூர்

பதிவு

அதிமுக 50 ஆண்டுகள் தொகுப்பு கட்சியில் உள்ள அறிஞர் பெருமக்களை கூட கரம் குவித்து வணங்க வைக்கும். செங்குட்டுவன் தம்பியின் கை குலுக்க வைக்கும் தொகுப்பை படிக்கும் வாசகர்களின் கரங்களையே தட்டி ஒலி மழைகொட்டவைக்கும். பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் துவக்கம் என்பதை 50 ஆண்டு தாண்டிய வரலாறு புரட்சிகரமாகப் பதிவு செய்கிறது. எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்டு 18 ஆண்டு வரை தொடர்ந்து கட்சியை மேலும் முப்பது ஆண்டுகளுக்கு மேல் அலுங்காமல் குலுங்காமல் நிர்வகித்த செல்வி அம்மாவாக மாறி அசத்திய புரட்சி அபாரம்!

என்றாலும் எடப்பாடியோ, பன்னீரோ எம்ஜிஆரைப் போன்று வள்ளலாகவோ அம்மாவைப் போல் வீராவேச நிர்வாகமோ கொண்டிருக்கவில்லை என்பதால் கட்சிக்கு ஆரம்ப பிரகாச முகங்கள் தேவைப்படுகிறது.

 எஸ்.எஸ்.ஜார்ஜ், கொம்மடிக்கோட்டை - 628653

அரசியல் அவதானிப்பு

 ஆபத்தான அரசியல் நேரத்தில் அதிமுக பிறந்தது! அன்றைய இன்றைய அரசியல் மாற்றங்களை உரிய தரவுகள் வழி படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் கட்டுரையாசிரியர் ராவ். டெல்லி அரசியலில் காய்கள் நகர்த்தப் பெற்ற சூழல்கள், அதிமுக பிறக்கக் காரணமான காரணங்கள், மாநிலங்களின் கடிவாளத்தை மத்திய அரசு இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் சூழலும், நடுவண் அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பேசும் அரசியல் தலைவர்களையும், மாநில அரசுகளையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும்

சாதூர்யத்தையும், இப்படியான அரசியல் பின்னணியில் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தது, பின்னர் அனைத்திந்திய அதிமுகவாக மாற்றியது, அவசரக்காலத்தில் கிடுக்குப்பிடியில் சிக்கிய திமுக ஆட்சியை இழந்து, மெரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி மத்தியில் மலர்ந்தது, எம்ஜிஆர் இந்திராவுக்குக் கொடுத்து ஆதரவை விலக்கிக் கொண்டது, ராஜீவ் காந்தி பத்திரிகைக்கு நெருக்கடி தந்தது போன்ற அரசியல் அவதானிப்புகளை மிக ஆழமாக எழுதி சிறப்பிக்கிறார் கட்டுரையாளர்.

ஆர்.விநாயகராமன், திசையன்விளை

அபாரம்

முள்ளரும்பு மரங்கள்-7 வரிசையில் ‘கஞ்சா வியாபாரி' என்ற அஞ்சுபக்க இலக்கியக் கொத்து வரிக்கு வரி இதயத்தின் கெத்து என்றானது!

கஞ்சாவும் போதை மதப் போதகரின் மதவெறியும் போதை என்பதைப் புரிந்து கொள்ள நேர்ந்தது. இரண்டுமே பாதை மாறச் செய்து உபாதை தரக் கூடியது என்ற நியாயத்தை வியாபாரம் என்று கூற முடியாது. ஆனால் அபாரம் என்று அடிக்கடி செல்லலாம்!

 ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

மாநிலப்பிரச்னை

1970 களில் இந்தியாவில் தமிழகம் தீவு போல காங்கிரசுக்கு உறுத்தியது என்று ஒரு புலனாய்வு அதிகாரி சொன்னது தான். 2020இல் பாஜக (மத்திய) ஆட்சியிலும் தொடர்கிறது. காரணம் 55 ஆண்டுகளாக தமிழகத்தை மாநிலக் கட்சிகளே (திமுக, அதிமுக) ஆட்சி செய்கின்றன.

ஒருவேளை, அண்ணா முதல்வரானதும், மறையாமல் தொடர்ந்து ஆட்சி செய்திருந்ததால் அல்லது பீஜூ பட்நாயக் முயற்சியில் திமுகவும் அதிமுகவும் இணைந்திருந்தால், ஒரே கட்சி தான் தமிழகத்தை ஆட்சி செய்திருக்குமோ! அதன் மூலம் தமிழகம் வளமாகியிருக்குமோ! திராவிட இயக்கம் பிளவுபட்டு மோதிக் கொள்வதாலேயே மாநிலம் பாதிக்கிறதோ! ஆளுமை தலைமையில்லாமல் அதிமுக திணறுவது போல், 2021 தேர்தலில் ஆட்சியமைக்க முடியாமல் போயிருந்தால் திமுகவும் தான் திண்டாடியிருக்கும். பலவீனப்பட்டு பாஜகவுக்கு வழிவிடாமல் கழகங்களைக் காப்பாற்றுவது இன்றைய தலைமைகளின் கௌரவ பிரச்சனை மட்டுமல்ல, மாநில பிரச்சனையுமாகும்.

 அ.யாழினி பர்வதம், சென்னை - 78

பொழுதுபோக்கு

‘இப்பதான் எல்லாம் கிடைக்குது' ஜி.எம்.சுந்தரின் பேட்டி வாசித்தேன். பத்து பதினைந்து வருடங்களாக கிடைக்காமலிருந்த அனைத்தும் இப்போது எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று யதார்த்த நடிப்பின் மூலம் திரைத்துறையில் புகழ்பெற்ற இவரின் முந்தைய வாழ்க்கை எவ்வாறு சிரமத்தோடு பயணித்திருக்கிறது என்பதை நிலை நிறுத்துகிறது. வா.மு.கோமு எழுதிய சிறுகதை நல்ல பொழுதுபோக்கு சித்திரமாக மிளிர்கிறது.

பிரேமா அரவிந்தன்,  பட்டுக்கோட்டை 614 602

அருமை

அந்திமழை இதழின் பிப்ரவரி இதழ் அட்டைப் படம் சூப்பர்!  டைரக்டர் வசந்தின் பேட்டி சூப்பர்! அவரது படங்களைப் போல வித்தியாசமாக இருக்கிறது. நன்று. ஜி.எம்.சுந்தரின் பேட்டி அருமை.

அ.முரளிதரன், மதுரை

கூடுதல் கவனம்

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்...

அந்திமழையின்...அதிமுக 50- வரலாறும் எதிர்காலமும்...என்கிற தங்களின் பார்வை அழுத்தமான கூடுதல் கவனத்திற்கு உள்ளாகிறது...அறிமுக புத்தகங்கள் பற்றிய திறனாய்வு அருமை. அதில் இரண்டு புத்தகங்களை முன்பே படித்திருந்த நிலையில் அதை உணர முடிந்தது. மற்ற இரண்டு நூல்களையும் வாங்கி விட்டேன்... வாசிப்பு வளர்கிறது.

 தஞ்சை கந்தமாறன்,

சென்னை-89

மார்ச், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com