துல்லிய மேற்கோள்

துல்லிய மேற்கோள்
Published on

புதிதாக மணமானவர்கள் மனம் மகிழ, நமது ‘அந்திமழை' வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழ்ந்திடும் முதிய தம்பதிகளைப் பேட்டிக் கண்டு & புதிய இளந்தம்பதியரை ஆற்றுப்படுத்துவது, தமிழ் இதழியல் துறையில் வித்தியாசமான புது முயற்சி.

பிரபலமான படைப்பாளிகளின் பிள்ளைகள், திராவிடர் கழகம் கி.வீரமணி , காந்தி கண்ணதாசன், லேனா தமிழ்வாணன், , நடிகர் சிவகுமார், எழுத்தாளர் இந்துமதி, கவிஞர் வெண்ணிலா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், புதுயுக கவிஞர் கலாப்ரியா என எல்லாம் மிக மிக மிகவும் நன்று.

‘வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்! இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?' என கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை கலாப்ரியா துல்லியமாக மேற்கோள் காட்டியுள்ளார். அந்திமழை ஏட்டிற்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகள்.

இரா.கோவிந்தசாமி, கச்சிராயர்குப்பம்

சிந்திப்பு

பலரும் முந்தியில் முடிச்சுப் போட்டு அடிக்கடி எடுத்துப் படிக்கும் அளவிற்கு அருமையான தொகுப்பை பகிர்ந்துள்ளது அந்திமழை! ‘மணவாழ்க்கை ரகசியங்கள்' சிறப்புப் பக்கங்கள் வரிசையில் பிரபலங்களை வலம் வரவைத்து எதிர்கால சந்ததிகள் பலமும் நலமும் பெற வழிகாட்டியிருப்பது சிந்திக்க வைத்துவிட்டது!

ஆர்.உமாராமர், திசையன்விளை

நன்று

‘இன்றுவரை தொடரும் முதல் நாளின் காதலுடன் இருப்பதுதான்' கவிஞர் வெண்ணிலா அவர்களின் கட்டுரை கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்து ஆழமான நல்ல புரிதலுடன் வாழ்க்கை மாறியிருப்பதையும், நான் உணர்வெழுச்சிகளில் சஞ்சரிப்பவள், முருகேஷ் யதார்த்த உலகின் தெளிவான நபர்' என்றெல்லாம் கவிஞர் வெண்ணிலாவின் மனம் திறந்த நேர்காணல் நன்று.

‘விட்டுக் கொடுத்து ஒத்துப்போக வேண்டும், சரியான செய்தி பரிமாற்றம் எங்களிடையே உண்டு, திருமணத்திற்குப் பிறகுதான் நல்ல உடைகளை அணிகிறேன்.' இல்லத்தரசிகளின் சிறப்புகளை இனிமை பொங்க சொல்லியிருக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்!

‘சாதி ஒழிந்து சமத்துவ சமுதாயம் அமைய சாதி மறுப்புத் திருமணம் அதிகம் நடைபெறுதல் அவசியம்' என்பதை வலியுறுத்தும் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கட்டுரை சமூக மாற்றத்தை முன் வைக்கிறது!

‘எங்கள் வம்சத்தின் பழக்க வழக்கங்களை மாறாமல் தொடரும் என் மனைவியின் நல்ல பழக்க வழக்கங்களை எனது மருமகளும் பின்பற்றுவார்' என்ற காந்தி கண்ணதாசன் கருத்து அருமை. திருமண பந்தத்தை நட்போடு தொடர்ந்தால் நானிலம்

செழிக்கும் என்பதை மிக அழகாக வலியுறுத்தி பல்துறைகளில் சிறப்புப் பெற்றவர்களின் மண வாழ்க்கை இரகசியங்களை வெளிக்கொண்டு வந்து சிறப்பிக்கும் அந்திமழை இளங்கோவனை பாராட்டத் தோன்றுகிறது.

நவீன்குமார், நடுவிக்கோட்டை

பாடம்

ஆகஸ்ட் அந்திமழை விவாகரத்து கூடிக் கொண்டு செல்லும் காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளீர்கள். எல்லோருமே உலகத்திற்கு அறிமுகமானவர்கள். வாழ்ந்த வாழ்க்கையைப் பதிவு செய்தது போல் சாதாரண கிராமத்தில் லட்சியத்தோடு வாழ்ந்து வருபவர்களை பற்றியும் எழுதியிருக்க வேண்டும். படிக்காத பாமரர்கள் கூட உயர்ந்த லட்சிய வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கிறோம். வாழ்க்கையை எந்தப் பள்ளியிலும் கற்றுக் கொடுப்பதில்லை. அதற்கு ஞானப்பார்வை தேவை. மிருகங்களின் வைத்தியம் பற்றி மாதம்தோறும் எப்படியாவது பதிவு செய்துவிடுகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சி. முத்துக்குமார் எழுதிய கட்டுரை பழைய சரித்திரம். இன்றைய தலைமுறைகள் கற்க வேண்டிய பாடம் அதிகம். மன்னர் மானியம் ராஜ்யசபையில் தோற்க எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஒரு காரணம். சிறப்பான பதிவு. பழைய காலத்தில் நடந்ததை நினைவுபடுத்தியதற்கு நன்றி

இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்

அத்தனையும் மெய்

இளசுகள் - நடுத்தரங்களுக்கு இணையத்தில் என்ன பார்க்கலாம்? என்று ‘தி டிண்டர் ஸ்வின்ட்லர்‘ ஆவணப்படம் மூலம் இணையற்ற அட்வைஸ் பண்ணியுள்ளது ‘அந்திமழை!' ‘ராயல்' சிந்தனை மேலோங்கும் போது நிகழும் ‘அட்டகாசங்கள்' இறுதியில் ‘காயில்' போன மோட்டார் போலாகிவிடும் என்பதைச் சூப்பராக சித்திரித்துள்ளார். கண்ணால் காண்பதும் பொய் தான். ஆனால் அந்திமழையைக் கண்ணால் படித்தபோது அத்தனையுமே மெய் அல்லவா?

மருதூர் மணிமாறன், இடையான்குடி

பொருத்தம்

கணவனும், மனைவியும் ஒருவருக்கான இடத்தை மாற்றொருவர் ஆக்கிரமிக்கவோ, தட்டிப்பறிக்கவோ கூடாது என்பதையும் பொறுப்பும் பொறுமையும் இருவருக்குமே பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்துணர்வு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகிய இரண்டும் தான் இல்லற வாழ்வின் நீடிப்பிற்கு அடிப்படையானவை என்பதையும் உணர்த்திய மண வாழ்க்கை ரகசியங்கள் என்ற சிறப்புப் பக்கங்கள் மெய்யாகவே சிறப்பான பக்கங்களாகும்.

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், ஆசிரியர், மருத்துவர், இயக்கத் தலைவர், பதிப்பாளர், பேராசிரியர், ஓவியர் என்ற பலதரப்பட்ட ஆளுமைகளின் இல்லற வாழ்-வின் அனுபவங்களையும் அறிவுரை-களையும் அடுத்த தலைமுறைக்குப் பெரும் பயன் விளை-விக்கும் வகையில் தொகுத்-தளித்-திருப்பது பாராட்டிற்-குரியதாகும்.

கவிஞர். மேலை.தமிழ்க்குமரன், முத்தரசநல்லூர்

தோலுரித்த படம்

அடிவருடி, ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே பக்கத்தில் இருக்க முடியும் என்ற நிலையிலும் அடிமாட்டு விலையில் திறமைகள் விலைக்கு வாங்கப்படும் நிலையிலும் தமிழ் சினிமா உலகம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை வே.எழிலரசு-வின் ‘இப்படியாகச் சில' சிறுகதை தோலுரித்துக் காட்டியது.

மு.இராமு, திருச்சி

எங்களிடமும் கேட்டிருக்கலாம்!

பிரியாத வரம் வேண்டும் கட்டுரை சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகும். திருமண வாழ்க்கையில் 25 ஆண்டுகள் கடந்தவர்களின் கருத்துகள் + படங்கள் சூப்பர். வாசகர்களிடமும் (எங்களது) அனுபவங்களையும் கேட்டு வெளியிட்டிருக்கலாம்.

அ.முரளிதரன், மதுரை

நல்ல முயற்சி

கோர்ட் படியேறாமல் இருக்கப் பிரியாத வரம் வேண்டும் எனக் கூறி, இளம் தம்பதிகள் கட்டாயம் படிக்க வேண்டும் இந்த இதழை எனச் சொல்லி, அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, திருமண வாழ்வில் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக கடந்தவர்கள்

சொல்லும் வழிகாட்டும் முறைகள் நேர்த்தி. ‘அண்ணா முதல் இளையராஜா வரை மாநிலங்களவை நட்சத்திரங்கள்' என்ற கட்டுரையில் 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றை சொல்லித் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். ஆர்.முத்துக்குமார். அவருக்கு எனது பாராட்டுகள்.

கால்நடைகள் சம்பந்தமாக நமது அந்திமழையில் அடிக்கடி கட்டுரைகள் வரக் காண்கிறேன். வேறு எந்த இதழிலும் காணாத சிறப்பு. நல்ல முயற்சி.

கடின உழைப்பு, ஒருவரை எதிர்பாராத உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பதற்கு ‘மண்டேலா‘ படத்திற்கு வசனமும், இயக்கமும் செய்த இயக்குநர் மடோன் அஸ்வின் சிறந்த உதாரணம்.

லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை

கவனிப்பு

பிரியாத வரம் வேண்டும் சிறப்புக் கட்டுரைகள் இன்றைய வாழ்வியலை படம் பிடித்துக்காட்டுகின்றன. ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியார் சொன்ன வாழ்த்துகள் முக்கியமானவை.

நடிகர் சிவகுமார், கவிஞர் கலாப்ரியா, இந்துமதி, மணியம் செல்வன், பவா செல்லதுரை ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு புதிய புதிய செய்திகளைச்

சொல்கின்றன. குடும்பத்தில் உள்ள முரண்களை களைவதும் அடுத்தகட்டத்திற்கு வாழ்க்கையை நகர்த்துவதும் முக்கியம். கவிஞர் வெண்ணிலாவின் காதல் பயணம் நம்மைக் கவனிக்க வைக்கிறது.

கணவனின் கவனத்திற்கு வராமல் அற்புதமாக இல்லறம் பேணும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் அனுபவங்கள் பலருக்கு பாடமாக வேண்டும். வே.எழிலரசுவின்

சிறுகதையில் திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகளில் ஒரு பிரச்னையை மையப்படுத்தி நமக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

விழி.பா.இதயவேந்தன், விழுப்புரம்

பொறுமை

கால்நடை மருத்துவப் பேராசிரியர் எஸ் சிவராமனின் & தேடி வந்த கிடேரி &அது பற்றிய அரிய தகவல்களின் கூட்டுத்தொகையாக இருந்தது. பலருக்கு உதவும். நடிகர் காளி வெங்கட்- நேர்காணல் தனக்கான அடையாளத்தை உருவாக்க ஒருவர் பொறுமை, சகிப்பு, செயல் என்பதை எப்படிக் கையாள வேண்டும்என்பதை அழுத்தமாக உணர்த்தியது.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை

எழுத்தாளர் ஷாஜியின் முள்ளரும்பு மரங்கள் தொடர் தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த இதழில் இடம்பெறவில்லை. அடுத்த மாதம் வெளியாகும்.

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com