துணுக்கு துணுக்காக அப்பப்போ இரண்டொரு பக்கங்களில் விமர்சித்து விட்டு சென்றுவிடும் இதழ்களின் மத்தியில் முக்கியமான ஓர் அரசியல் அடையாளத்தை ஆழமாகச் சித்திரிக்க அந்திமழை களம் இறங்கி கவனத்தை ஈர்த்துவிட்டது. 28 பக்கங்களில் அதுவும் சிறப்புப் பக்கங்கள் என்ற சிக்னலுடன் அரசியல் கட்சிகளின் மரணம் என்ற கடந்த 50 ஆண்டுக்காலத்தின் அலாரம்! அதை அந்திமழை ஆய்வு செய்திருக்கும் விதம் அபாரம்! மறக்க வேண்டிய கட்சிகள் + மறக்க முடியாத கட்சிகள் + மறக்கவே முடியாத கட்சிகள் என்று கடந்து வந்த தடத்தில் பதிவிட்டுள்ள காட்சிகள் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று என்னைப் போன்ற குடுகுடுக்களை அசைபோட வைத்தது!
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை - 627657
பலம் கூட்டிவிட்டது
காதம்பரியின் திரைவலம் படிக்க மனசு திரை விலக்கிக் கொண்டு (மற்ற பக்கங்களை அகற்றிவிட்டு) குத்திட்டு நிற்கிறது. ‘குருதி ஆட்டம்‘ குறித்து சுருதி சேர்த்த சூட்டோடு, பொய்க்கால் குதிரைக்கு பெவிக்கால் போட்டு ஒட்டிவிட்டு, விருமன் படத்தை வெறுமனே விடாமல் சற்று பாராட்டிவிட்டு, ஜீவி-2 படத்தைப் பார்க்கலாம் என்று கொடி அசைத்த வேகத்தில் திருச்சிற்றம்பலம் புகுந்ததுமே படம் நல்ல படம் என்று காட்டியிருப்பது பலம் கூட்டிவிட்டது - திரைவலம் பகுதிக்குத்தான்
ஆர்.ஜே.கல்யாணி, திசையன்விளை - 627 657
பயன்மிகுந்த தொகுப்பு
தமிழகத்தில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, குமரிஅனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி, சிவாஜியின் தமிழக முன்னேற்ற கட்சி ஆகியவையும் இந்தியாவில் சரண்சிங்கின் பாரதிய லோக்தளம் ஜனதாக் கட்சி ஆகியவையும் எப்படித் தோன்றின. எப்படி வளர்ச்சியும் எழுச்சியும் பெற்று, பின் எப்படி வீழ்ச்சியுற்றுக் காணாமல் போயின என்பதை அலசல் விமரிசனத்தின் மூலம் விரிவாகவும் விளக்கமாகவும் பேசிய ‘அரசியல் கட்சிகளின் மரணம்' என்ற தலைப்பிலான சிறப்புப் பக்கங்கள் அரசியல் சரித்திர நிகழ்வுகளின் அரியதொரு ஆவணத் தொகுப்பாக சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தன. பயன் மிகுந்த தொகுப்பு.
கதை சொல்லிகள் கடந்த, நிகழ், எதிர் என்னும் மூன்று காலத்திலும் கதை சொல்லியாகவே இருக்க விரும்புவார்கள், இருப்பார்கள். கதை சொல்லி பெண்ணாக இருப்பின் கன்னியாயினும், மனைவியாயினும், தாயாயினும், பாட்டியாயினும் கதை சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள். இதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியது ஹரன்பிரசன்னாவின் ‘கதை சொல்லியின் கதை' பாராட்டுகள்.
மு.இராமு, திருச்சி - 620008
நம்பிக்கை
அந்திமழை இளங்கோவன் ‘கனவுகள் + நம்பிக்கைகள் = அந்திமழை' என்று தந்துள்ள விவரத்தில் வினயம் பளிச்சிடுகிறது. கனவுகள் குறித்த அறிஞர்கள் அனுபவத்தை ஆழமாகப் பதிவிட்டு அதன் பாதையில் அந்திமழை சக பயணியாகத் தொடரும் அற்புதத்தை அழுத்தமாக குறிப்பிட்டதில் நம்பிக்கை துளிர் + தளிர் = பளீர்!
மருதூர் மணிமாறன், இடையான்குடி - 627657
வாழ்த்துகள்
அந்திமழையின் பதினோராவது ஆண்டு தொடக்க இதழ் படித்தேன். வள்ளலார் சொற்களில் நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நிறைந்து படிக்க வைத்தன கட்டுரைகள்.
பொன்விழாவைக் கடந்து வெளிவரும் இதழ்போல கட்டுரைத் தொகுப்பு, எழுத்துச் சிற்பிகள் குமரி அனந்தன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மா.கண்ணன், ப்ரியன் ஆகியோரின் கட்டுரைகளால் கௌரவமாகப் பதிக்கப்பட்டிருந்தன.
சுருங்கக் கூறினால் அக்கால ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்‘ (மினி) ஆகவும் தோன்றுகிறது. அந்திமழையின் இதழியல் தொண்டு, வளமுடன் தொடர வாழ்த்துகிறேன்.
நெல்லை ஆ.சுப்பிரமணியன், கருமண்டபம் - 620001
மகிழ்வுக்கு வழி
பத்தாண்டுகள் நிறைவு பெற்ற அந்திமழையின் சாரலில் நான் ஐந்தாண்டுகள் தான் பின்பாதியில் நனைந்திருக்கிறேன்! முந்தைய இதழ்களை சுவைக்க விரும்பிய நான் ஆரம்பக்கால இதழ்களில் வந்த பல கட்டுரைகளை அந்திமழை வெளியீடுகள் மூலம் சுவைக்க ஆரம்பித்துள்ளேன்.
எண்பது ஆண்டுகால இந்திய அரசியல் நிகழ்வுகள், புதுமுறையில் இந்திய பத்திரிகை உலகில் முதன் முறையாக 'அரசியல் கட்சிகளின் மரணம்' என்ற விவாதமேடையில் அரங்கேறியுள்ளது. அந்த அனைத்து நிகழ்வுகளையும் காணும் பேறு பெற்ற என் போன்றோருக்கு மீண்டும் எங்கள் மனத் திரையில் திரைப்படம் போல் ஓடும் காட்சிகளைக் காணும் நற்பேறு கிடைத்துள்ளது. நல்ல முயற்சி!
லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை
வரவேற்பு
அந்திமழை இலக்கிய விளைச்சலை அமோகமாக அறுவடை செய்திருக்கும் ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள். சிறப்பான இடத்தை வாசகர்களிடையே நிலைநிறுத்தியிருப்பதென்பது வரவேற்கத்தக்கது. தரமான, நடுநிலை தவறாமல் செய்திகளை சுவை குன்றாமல் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு அந்திமழை சான்றாகிறது. சிற்றிதழ் நடத்த விழைவோர் அனைவரும் அந்திமழை இளங்கோவன் தந்திருக்கும் பயன் தரும் பத்து வாசகங்களைப் படித்தறிவது நலம். யுகபாரதியின் நேர்காணல் நல்ல சினிமா ஒன்றைப் பார்த்த நிறைவைத் தந்திருக்கிறது.
பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை - 614602
மரணத்தின் தன்மை
அரசியல் ஆய்வுக் கலைக்களஞ்சியம் என்றே அரசியல் கட்சிகளின் சிறப்புப் பக்கங்களைக் குறிப்பிடலாம். கர்ணன் படப்பாடலான ‘மரணத்தின் தன்மை சொல்வேன்‘ என்பதை உணர்த்தும் விதக் கட்டுரைகள். படிக்கும் வழக்கமுள்ள அரசியல்வாதிகள் விரும்புவார்கள். குறிப்பாக அப்பாடலில் வரும்‘ மானுடர் ஆன்மா மரணமெய்தாது‘ என்பதை அரசியல் ஆன்மா என எடுத்துக் கொண்டால் அதைச் சரியாக உணர்த்தும். கலாப்பிரியாவின் நெல்லை (முக்) கண்ணன் பற்றி படைப்பு சிறப்பு. கோணங்கி நேர்காணல், யுகபாரதியுடனான சந்திப்பு முதலிய முத்திரைப் பதிவுகள்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை -89.
பிரமாதம்
அட்டைப் படக் கட்டுரை பிரமாதம். தமிழ் பத்திரிகை உலகில் காணமுடியாதது. நியூயார்க்கர் போன்ற பத்திரிகையை வாசிப்பது போல் தோன்றியது.
- சைபர் சிம்மன் (வாட்ஸப் வழியாக)
வாழ்த்துங்கள். வளர்கிறோம்!
பத்தாண்டு நிறைவை முன்னிட்டு அந்திமழை ஆசிரியர் குழுவுக்கு நல் வாழ்த்துகள். ஒவ்வொரு துளியிலும் உங்கள் முகம் தெரிய மேலும் பொழிக.
- வண்ணதாசன்
கனவுகள் அழகானவை கனவுகள் விழிக்கவைப்பவை- பழநிபாரதி
நிறுவனர் அந்திமழை இளங்கோவன் அவர்கள் பாரதி சொன்ன மனதில் உறுதி வேண்டும் என்ற வார்த்தைக்கு இலக்கணமானவர் இல்லையென்றால் இதுபோன்ற இதழை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க முடியுமா? அவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இதழ் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வாழ்த்துகிறேன்.
ப. திருமலை
10 ஆண்டுகள் என்பது பெரிய சாதனைதான். வாழ்த்துகள்! - பஷீர்
கனவுகளை துரத்தி பிடிப்பதில் உலகத்தின் கடந்து வெற்றி அடைந்த தங்களுக்கு எப்படி பாராட்டு தெரிவிப்பது என்றே தெரியவில்லை. Hats off to your genuine passion.
- இந்திரன்
கனவு நனவானதோடு தொடர்வது தான் இன்னும் சிறப்பு!! 10,18 என வளர்ந்து கொண்டே இருக்க அன்பு வாழ்த்துகள்!!
-செந்தமிழ்செல்வன்
பத்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்,கனவு மெய்ப்பட வேண்டும்
-இரா.முருகன்
வாழ்த்துகள். உச்சம் தொடுங்கள். வானம் என்பது வெறும் கூரைதான்.
- கடற்கரய்
கனவுகளை நினைவுகளாக்கி அந்திமழை மூலம் அனைத்து இதயங்களையும் கவர்ந்த தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் .....
-வீரமணி, சூரப்பள்ளம்
நல்வாழ்த்துகள், பத்து நூறாகட்டும் - மாலன்
கனவுகள் மெய்ப்படட்டும் வானம் வசப்படட்டும் அன்பான வாழ்த்துகள் - பெ. கருணாகரன்
சில முக்கியமான சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறீர்கள்.தொடரட்டும் பணி. துணை நிற்கிறோம்
-தமிழ்செல்வன்
உங்கள் உணர்வுகளை வார்த்தை-களால் அல்ல, உணர்வு-களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவர்களால் மட்டுமே உங்கள் மனதின் உன்னதத்தை அறிந்துகொள்ள முடியும்.
- ரவி பாலட்
அந்திமழையின் பத்து ஆண்டுகளுக்கு இனிய வாழ்த்துகள். திரும்பிப்பார்த்தால் மிகச் சிறந்த பயணம். மனப்போக்கை விரிவாக்கும் சிறப்பிதழ்கள்... ஆழமான பார்வைகள்... கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள்... பெருமைக்குரிய இதழியல் பங்களிப்பு.
- சுந்தரபுத்தன்
That's awesome Congratulations! i remember how it all started. I'am so happy about this. keep going All the very best.
- Asha Rajini
அக்டோபர், 2022