திரை இரட்டையர்களின் சிறப்பிதழ் - அபாரம். எனக்கு பிடித்த இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு , தேவராஜ் - மோகன் இவர்களை பற்றி சினிமா மார்க்கண்டேயன் - நடிகர் சிவகுமாரின் கட்டுரை பல தகவல்களை அள்ளித்தந்தது. சூர்யா நடித்த சிங்கம் படத்தின் பட்ஜெட் 45 கோடி ரூபாய், ஆனால் நான் நடித்த 192 படங்களுக்கும் மொத்த பட்ஜெட்டே அதுதான் என்று அவர் சொன்னது மனதில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்திவிட்டது. அந்திமழையின் ஒவ்வொரு இதழும் பட்டையைக் கிளப்புகிறது என்றால் மிகையல்ல!!
எஸ் .மந்திர மூர்த்தி, புதுச்சத்திரம்.
ஐந்தாண்டுகளுக்கு மேல் நியுசிலாந்தில் இருந்தவன் என்ற முறையில் மோவ்ரி (மாவோரி அல்ல) இன மக்களை மிக நெருக்கமாகப் பார்த்தவன் என்பதால் இதனை எழுதுகிறேன் . மோவ்ரி இன மக்கள் மிக மிக தடியாக குண்டாக அதே சமயத்தில் உயரமாக (வியப்புதான்) இருப்பர். பெண்களும் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். அவர்களும் ஆண்களைப்போலவே இருப்பர். அந்த இனத்தில் ஒல்லியான பெண்களைக் காண்பதரிது. இவர்களின் பழக்க வழக்கங்களில் தமிழ் கலந்துள்ளது. இந்த இனத்தில் தாய் மாமனுக்கு மிக மிக மரியாதை அதிகம். எந்த நிகழ்ச்சியிலும் ‘தாய்மாமன்' இருந்தாக வேண்டும். நாம் ‘வேணா' என்கிறோம். அவர்கள் ‘மாணா' என்கிறார்கள். மோவ்ரி இனப்பெண்கள் பிரசவித்த ஒரு மணி நேரத்தில், பழைய படி தங்கள் பணியை செய்கின்றனர். மோவ்ரி இன மக்கள் பார்ப்பதற்கு தான் கடோத்கஜன்கள் போல் இருந்தாலும் அவர்கள் நம்மை போன்றவர்களை கண்டால் நட்புடன் புன்னகை செய்வர் இந்தியர்கள் என்றால் தனி மரியாதை. மோவ்ரி மொழியில் திருக்குறளை ஒரு தமிழ் மகன் மொழிப்பெயர்க்க முயன்று வருகிறார். இது பற்றி அவரே ஒரு மேடையில் பேசும் போது நான் செவி மடுத்துள்ளேன். அவர்தான் மோவ்ரி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நெருக்கம் உள்ளது என்று சொன்னார். அப்படி மோவ்ரி மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டால் அது திருக்குறளின் மகுடத்தில் இன்னுமோர் இறகாகும்.
கே.ஏ.நமசிவாயம் , பெங்களூரு
தமிழ்த் திரையுலகில் பல அபூர்வ சாதனைகளுக்கு உரித்தான, இரட்டையர்கள் குறித்த தொகுப்பு மிக சுவாரஸியமானது. நடிகர் சிவகுமாரின் கிருஷ்ணன் - பஞ்சு , பி.ஜி.எஸ் மணியனின் விஸ்வநாதன் ராமமூர்த்தி , தேவராஜ் - மோகன், லெனின் -வி.டி.விஜயன், ராபர்ட் - ராஜசேகர், பாரதி - வாசு, சங்கர் - கணேஷ், ஜே.டி - ஜெர்ரி , சுபா , ஹரி - ஹரிஷ் , ஆகியோரின் சாதனை வாழ்க்கைச் சரிதங்கள் வியப்பூட்டின. உறவுகளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் உருவாகிப் பிரிகின்ற காலத்தில் பரஸ்பர புரிதலையும், பவித்ரமான அன்பையும் மட்டும் அஸ்திவாரமாய்க் கொண்ட இவர்கள் படைத்த திரைக்காவியங்கள் வாழும் வரை வரலாறே! இந்த இணைகளில் சுபாவின் வளர்ச்சியை எழுத்தாள நிலையிலேயே அறிந்ததால் இன்று வரை இணைபிரியாத நட்புணர்வையும் வாழ்க்கை பகிர்தலையும் கூடுதலாய் ரசிக்க முடிந்தது. அந்திமழை தந்த இந்த புதுமைத் தொகுப்பும் எங்கள் நெஞ்சில் நிலைத்த படைப்பே.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
எமக்குள் பிரிக்க முடியாத ஈர்ப்புகளை ஏற்படுத்தியது இரட்டையர் சிறப்பிதழ். தேவராஜ் - மோகன், கிருஷ்ணன் - பஞ்சு, பாரதி - வாசு, ஆகியோர் சினிமாவிற்கு வந்த கதையை அநேகமாக அந்திமழைதான் இன்றைய இளைய வட்டத்திற்கு சொல்லியுள்ளது. இசை இரட்டையர்களின் (விஸ்வநாதன் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் ) சாதனை கதைகளும் மனதில் இராகமிசைத்தது. இவர்களில் சங்கரும் ராமமூர்த்தியும் இல்லாமல் போனது காலக்கொடுமை, அடுத்து இரட்டை வேட சிறப்பிதழ் அந்தி மழையில் பொழியலாமே?
சூர்ய நிலா , சேலம் - 9
ஒரு மாதத்தில் வந்த மொத்தப்படத்தையும் காய்ந்த (விமர்சன) எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, மிளகாய் தாளிப்பது போல தாளித்து ஊடாக, படம் வெளியாவதே வெற்றிதான் என்று ஹாஸ்யமும், தொடர்ந்து நான் கடவுள் ராஜேந்திரன் ஹீரோவாகவும் நடிக்கலாம் என டெரர் மூட்டி, மொத்தத்தில் புது யுத்தியாய் திரை விமர்சனம் தரும் கே.கே யின் திரை வலம் சூடான சுவையான கொத்து பரோட்டா .
அ.யாழினி பர்வதம்
சென்னை - 78.
இந்த இதழ் காமிரா கண்கள் பக்கம் கண்ணை பறித்தது. அஸ்தமனமும் பறவை அணிவகுப்பும் , அரங்கின் அழகும், மசூதியின் நிழல் / ஒளி வடிவும், கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருந்தது. மன மார்ந்த பாராட்டுக்கள் சாய்ப்ரியா! எப்போதுமே இரட்டையர் கதை சுவாரஸ்யமாகவே இருக்கும், திரைத்துறை இரட்டையர் கதைகளிலும் சுவைக்கு குறைவில்லை.
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை - 16
லீ அவர்களுக்கு அஞ்ச ‘‘லீ'' ! செலுத்தும் விதமான கட்டுரை கண்களைக் குளமாக்கியது! பன்முகத்தன்மை கொண்டவர் லீ. தொலை நோக்கு சிந்தனை மிக்க அவரது இழப்பு , ஈடு செய்யவே முடியாத இழப்புதான் ! தவறுகள் நேராத தேசமாக இன்று சிங்கப்பூர் உருவாகி இருப்பதே அவரது கனவுக்கு கிடைத்த வெற்றி ! அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
இ.டி. ஹேமமாலினி
கோவை மாவட்டத்தில் உழவர்களின் உற்ற நண்பனாக திகழும் துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) பற்றி இதுவரை இவ்வளவு விரிவாக அண்மையில் எந்த ஊடகத்திலும் வரவில்லை. நாட்டிற்கே முன் மாதிரியாகப் பணியாற்றி வரும் இக்கூட்டுறவு நிறுவனம் எப்படித் தோன்றியது, எவ்வாறு வளர்ந்தது , அதற்கு வித்திட்டவர்கள் யார் யார், என்பதையெல்லாம் அழகுடன் வெளியிட்ட அந்திமழைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
பழமன் , கோவை -35
இரட்டையர் சிறப்பிதழ் - SUPER, நாம் இருவர் - SUPER ,காமிரா கண்கள் அருமை. லீ குவான் யு பற்றிய கட்டுரை அருமை .
அ.முரளிதரன். மதுரை - 3
பிறப்பில் இரட்டையர்களாக இல்லாமல் படைப்பில் இணைந்து சாதனை செய்த , செய்துவரும் இரட்டையர்கள் பற்றிய சிறப்புக் கண்ணோட்டக் கட்டுரைகளுக்கு இரட்டைப் படையலான பாராட்டுகளை வழங்கி மகிழ்கிறேன்.
ப.மூர்த்தி, பெங்களூர் - 97.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அன்னக்கிளி, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு அனுபவங்கள் எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் நடித்த நினைவுகள் என இரட்டை இயக்குநர்களின் இறுதிக்கால நிகழ்வுகளை சிவக்குமார் பதிவு செய்தது சோகத்தின் உச்சம் ! இப்படி சினிமா செய்திகளை விவரிக்க சிவகுமாரைத்தவிர வேறு ஒருவர் இல்லை.
மேட்டுப்பாளையம் மனோகர் , சென்னை - 18