பொக்கி­ஷம்

பொக்கி­ஷம்

Published on

ஏப்ரல் மாத ‘அந்திமழை' பத்திரிகையில் தமிழ் சினிமா சிறப்பிதழைக்கண்டு படித்து வியந்து பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளேன். கட்டுரைகள்,ஆய்வுக்கட்டுரைகள் என்று தமிழ் சினிமாவின் ஜாதகத்தை நகல் எடுத்து காட்டியதைப்போலிருந்தது. அதிலும் குறிப்பாக பாமரன் அவர்களின் நகைச்சுவைப் படங்களும், செங்கதிர் அவர்களின் புறக்கணிக்கப்பட்ட நாயகன் கட்டுரையும் பத்திரிகை கட்டுரை உலகில் மைல்கல்லாக திகழ்கின்றது. இதைப்போன்று அடிக்கடி அபூர்வ விஷயங்களை எங்களுக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ரமேஷ் கிருஷ்ணா, தருமபுரி

மகிழ்ச்சி

ஏப்ரல் மாத ‘ அந்திமழை' வெப்பம் மிகுந்த ஒரு நாளின் முடிவில் வரும் மழைபோல மனதை மகிழ்வித்தது.பக்கத்திற்கு பக்கம் ஒரு நல்ல பத்திரிகையாய் மிளிர்வதற்குரிய அடையாளங்கள் & அக்கறை தெரிகிறது.சினிமா சம்பந்தப்பட்ட தலைப்புகளிலேயே சிறந்த படைப்பாளர்களைக் கொண்டு நல்விருந்து டைத்திருக்கின் றீர்கள். சுபகுணராஜனின் ‘திரையில் வளர்ந்த இயக்கம்' நன்றாக வந்துள்ளது. திரை போஸ்டர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட ட்ராட்ஸ்கி மருதுவின் கட்டுரை ஒரு வித்தியாசமான பார்வை. சாரு நிவேதிதா ஏன் யாரையும் பாராட்டவே மாட்டேன் என்கிறார்? புறக்கணிக்கப்பட்ட நாயகன் நாகேஷை நீங்கள் கூட அட்டையில் புறக்கணித்து விட்டீர்களே! கட்டுரை நன்றாக வந்திருக்கின்றது.திரை இசையும் இளையராஜாவும் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சியே நடத்தலாம். அவ்வளவு பங்களிப்பு, அவருடையது.பாமரன் கட்டுரை நன்றாக இருந்தது. (30 வருடங்களுக்கு பிறகு ஒரு பத்திரிகைக்கு விமர்சனம் எழுதுகிறேன். என்னை எழுத வைத்ததற்கு நன்றி!)

தா.கி. பிரசன்னா, கோவை.

நியாயம்

சிவனைத்தவிர என்ற தலைப்பில் ஒரு நாத்திகனின் கைலாச யாத்திரை அனுபவம் என்னும் கட்டுரை என்னை பயணத்தோடு கூட்டிச்செ ன்றதைப்போல இருந்தது.4440 படிகள் ஏறி இறங்க வேண்டும் என்பதும் கால் தடுக்கினாலும் ஜல சமாதி என்பதை படித்தபோது பயமாகவும் இருந்தது. திரு எம்.ஸ்ரீதரன் அவர்களின் முழுப்பயண அனுபவத்தையும் படிக்க ஆசையில் உள்ளேன். பரதேசி படத்தின் உண்மையான விமர் சனத்தினை நியாயமான முறையில் ‘அந்திமழை' பத்திரிகையில் மட்டுமே படிக்க முடிந்தது. இதைப் போன்றே அனைத்து படங்களையும் விமர்சிக்க வேண்டுகிறேன்.

விக்ராந்த் பிரபா, சென்னை

அழகு

போஸ்டர்களிலிருந்து, விளம்பரங்களைக் கூட விட்டுவைக்காமல் சினிமாவின் ஒவ்வொரு அங்கத்தையும் தொட்டிருந்தது அந்திமழை. படித்து படித்து சலித்துப் போன விஷயங்களை வெளியிட்டுவிடாமல்,பார்த்து பார்த்து விவரங்களை கவனமாய் இழைத்து இழைத்து நகாசு வேலை செய்து ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறீர்கள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவுக்கு மணி மகுடம் தயாரித்து தன்பங்காய் சூட்டி அழகு பார்த்திருக்கிறது அந்திமழை! சினிமா ரசிகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த இதழ் ஒரு பொக்கிஷம் எனில் மிகையாகாது.

ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை.

நம்பிக்கை

ஈழம் என்கிற வார்த்தையைக்கூட உச்சரிக்க முடியாத நிலையிலிருந்த எம் தமிழகத்தை மாணவ மணிகள் மானமிகுந்த தமிழர்களாய் மீட்டெடுத்திருக்கிறார்கள். அவர்களின் குரல் ஐ. நா.மன்றத்திற்கு கேட்டதோ இல்லையோ ஈழத்து கல்லறைக்குள்ளேயும் கேட்டது கைத்தட்டல் சத்தங்கள்! ஈழம் ‘நாம் வாழும் காலத்து கனவாக' இருந்தாலும்,மாணவர்கள் தூவிய விதைகள் செடியாகும், மரமாகும், உலகெங்கும் வேர்பிடித்து தாவும், நாளை நிச்சயம் வென்றெடுக்கப்படும் ஈழம். மகேந்திரனின் பார்வை வழியே மாணவர்களை பார்த்தேன், நம்பிக்கை பிறக்கிறது!

தங்க. முருகதாசன், மயிலாடுதுறை.

சேகரிப்பு

தமிழ் சினிமா சிறப்பிதழ்-தமிழ் சினிமாவைச் சிறப்பித்த இதழ். யாரும் செய்யாத சிறப்பு. ஒவ்வொரு மலராய் சென்று,தேனை உண்டு, பின் அடையாய் மரத்தில் கூடு கட்டி, மொத்தத் தேனையும் ஓரிடத்தில் சேகரித்த வண்டாய், அந்திமழை திரைப்படச் செய்திகளைச் சேகரித்து, தொகுத்து, நயம்பட, அழகுற வழங்கியுள்ளது. பாராட்டுகள். அறிஞர் அண்ணா சொன்னார். ‘நான்கு படங்களை சென்சார் செய்யாமல் அனுமதியுங்கள். திராவிட நாடு வாங்கிக் காட்டுகிறேன்'. உண்மை.அந்தக் காலகட்டம் அப்படி. ‘எம்.ஜி.ராம் சந்தர், எம்.ஜி.ராமச்சந்திரன்' ஆகி பின் ‘எம்.ஜி.ஆர்' ஆகி பிறகு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று அவர் எடுத்த அவதாரங்களின் மூல புருஷர் கலைஞர். ஆனால் தன் சாகசத்தால் கழகத்தை வீழ்த்தியவர் எம்.ஜி.ஆர் என்று சொல்ல வேண்டாம். அது மிகை. திராவிட இயக்கத்தின் ஆணிவேரையும், சல்லிவேரையும் யாராலும் அசைக்க முடியாது. இதிலெங்கே வந்தன ‘சவப்பெட்டியும்,ஆணியும்'? 53 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள சிவாஜிகணேசனின்(பராசக்தி) தோற்றத்தை அழகுற வடிவமைத்து, சுவரொட்டியாக்கி ரசிகர்கள் மனதில் ஒட்ட வைத்தவர் ஜி.எச்.ராவ் (அவரை நேரில் சந்தித்து,பாராட்டி ஆட்டோகிராப் வாங்கியவன் நான். அன்று அவர் சென்னை மண்ணடியில் இருந்தார்). தமிழ் சினிமாவை படித்து, பார்த்து, திரும்பிப் பார்க்கவும் வைத்தது அந்திமழை. திரும்பவும் பார்ப்போம்; படிப்போம் .

கே.ஏ. நமசிவாயம், பெங்களூரு.

பெருமை

‘தமிழ் சினிமா' சிறப்பிதழ் பெயரை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. துறை சார்ந்த வல்லுனர்கள், ஆய்வாளர்களைக் கொண்டு எழுதப்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் தமிழ் சினிமா வரலாறா அல்லது ஆய்வா என்று வியக்கும் வண்ணம் அமைந்திருந்தன! தமிழ் சினிமாவில் ‘உண்மை' மட்டும் ஒளிந்துகொண்டிருந்தது என்பதை ஒவ்வொரு படைப்பாளரும் உணர்ந்து எழுதியிருந்தனர்! பிறமொழிப் படங்களும் தமிழ் சினிமாவிற்கு உதவிய பாங்கினையும் குறிப்பிட்டிருந்தது. சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு தளங்களிலும் சிறந்த ‘மேதை'களைக் கொண்டிருந்தது நூறாண்டு கடந்த நமது 'தமிழ் சினிமா' என்பது பெருமைகொள்ளத்தக்கது. அந்திமழை உரிய காலத்தில் சிறப்புச் செய்துள்ளது.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

மறுப்பு

தங்களின் ஏப்ரல் மாத இதழில் கோ. தனஞ்சயன் அவர்கள் எழுதிய ‘வெற்றிப்படங்கள் - வெற்றியின் சுவை இனிப்பு' என்ற தலைப்பில் வந்துள்ள சில தகவல்களுக்கு மறுப்பினைத் தெரிவிக்கிறோம்.

1. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த ‘இரும்புத்திரை' 100 நாட்கள் ஓடவில்லை.

2. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த ‘பராசக்தி' திரைப்படம் 200 நாட்கள் ஓடியதாக குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. அது 100 நாட்கள் மட்டுமே ஓடிய ஒரு வெற்றிப்படம்.

3. அதே போன்று அவரது மற்றுமொரு திரைப்படமாகிய ‘தில்லானா மோகனாம்பாள்' வெள்ளி விழா படம் என்று கூறியிருப்பது தவறு. எந்த விதமான ஆதாரபூர்வமான செய்தியும் இல்லை. சென்னை சாந்தி அரங்கில் 133 நாட்கள் மட்டுமே ஓடியது.

4. ‘சம்பூர்ண ராமாயணம்' திரைப்படம் 100 நாட்கள் ஓட வில்லை. எங்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த வெள்ளி விழாப் படங்களான ‘என் தங்கை‘ மற்றும் ‘மதுரை வீரன்‘ போன்ற வெற்றிப் படங்கள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் கதா நாயகனாக நடித்த 115 படங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட படங்கள் 100 நாட்கள் கடந்து வெற்றிகரமாக தமிழகமெங்கும் ஓடி வரலாற்று சாதனை படைத்துள்ளன. ஏனைய 45 படங்களும் குறைந்த பட்சம் 50 நாட்கள் முதல் அதிக பட்சமாக 95 நாட்கள் வரை ஓடி, தமிழ் திரை உலகில் புதிய அத்தியாயம் தோற்றுவித்தன.

1.‘உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம், 11-05-1973ல் தான் வெளி வந்தது. (1972ல் அல்ல)

2.‘உரிமைக்குரல்' 07-11-1974ல் வெளி வந்தது. (தங்கள் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருந்தது போல் 1975ல் அல்ல)

3. ‘வசந்த மாளிகை' 29-09-1972ல் வெளிவந்தது. (1973ல் அல்ல)

4. ‘பட்டிக்காடா பட்டணமா' 1972ல் வெளிவந்தது. (1971ல் அல்ல)

5. ‘திருவிளையாடல்' 31-07-1965ல் வெளிவந்தது. (1966ல் அல்ல).

6. ‘பத்ரகாளி' 1976ல் வெளிவந்தது. (1977ல் அல்ல).

7. ‘நான்' 1967ல் வெளிவந்தது. (1968ல் அல்ல).

8. ‘இரும்புத்திரை' 14-01-1960ல் வெளிவந்தது. (1961ல் அல்ல)

9. ‘பாகப்பிரிவினை' திரைப்படமும் 31-10-1959ல் வெளிவந்தது. (1961ல் அல்ல)

பேரா.எஸ். செல்வகுமார், அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com