டிக் டாக் வீடியோக்கள் சாதாரண ஆண்களையும், பெண்களையும் கூச்சமின்றி ஆட வைத்து ஒரு தெரபி அனுபவத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது. பொதுக்கூட்டங்களில் கைதட்டவே யோசிப்பவர்கள் நம் மக்கள். தொழிநுட்பம் இத்தகையவர்களை பட்டி தொட்டிகளில்கூட மகிழ்ச்சியுடன் ஆட வைக்கிறது. ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் வசதியானவர்களை ஆன்மீகத்தின் பெயரால் ஆட வைத்துக் கொடுக்கும் தெரபிக்கு இணையான அனுபவத்தை டிக்டாக் வீடியோ கொடுக்கிறது என்றுகூட நான் சொல்லுவேன். கீழ்த்தட்டு மக்களுக்கும் கிடைத்த இந்த ஜனநாயக வெளியை ஆபாசத்தின் பெயரால் தடை செய்யத் துடிக்கும் காலாசார காவலர்களையும் மீறி அந்திமழை இதழில் கட்டுரைகள் செய்திருப்பது பாராட்டத்தக்கது. அதிலும் இதுகுறித்து மனநல மருத்துவர் ஷாலினியின் கருத்தைக் கேட்டுப் பதிவிட்டிருப்பது உங்கள் சமூகப் பொறுப்பைக் காட்டுகிறது. சமூகத்தின் எல்லா நடவடிக்கைகள் மீதும் வெளிச்சம் போட்டு விவாதிக்கும் அந்திமழை டிக்டாக் வீடியோ பற்றியும் எழுதி இருப்பதினாலேயே நீங்கள் மக்களின் பத்திரிகையாளர் என்பதைக் காட்டி இருக்கிறீர்கள்.
இந்திரன், கலை விமர்சகர், சென்னை
வெளிப்பாடு
சிறப்புப் பக்கங்கள் இந்த முறை பன்முகச் சிந்தனைகளின் கோணங்களையும் சரியெனச் சொல்லத் தக்கதாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. அழுத்தமான வாதங்கள் அவரவர் வாதத்தை நியாயப்படுத்தின. ஒரே வரியில் குறிப்பிட வேண்டுமென்றால், இப்படிச் சொல்லலாம். சபரிமலைப் பயணத்தில், பெரும் பாதைப் பயணத் தொடக்கத்தில்...வாபர் சன்னிதியில்...பேட்டைத் துள்ளல் ...என்ற ஒரு ஆட்டம் பாட்டம் கொண்ட சடங்கு உண்டு. இலை, தழை ஆடைகள், முகத்தில் பல வண்ணப் பூச்சுகள் எனத் தீற்றிக் கொண்டு, கையில் வேல் /அம்பு என ஆடிக் கொண்டு செல்வார்கள்... வேட்டைக்குச் செல்வது போன்ற நிகழ்வு இது. இதைப் பற்றி குருசாமியாகிய நடிகர் எம்.என்.நம்பியார் ‘இப்படியொரு சடங்கு சபரிமலைக் குறிப்பில் இல்லை. ஆனால் எப்படியோ இது வழக்கமாகி விட்டது..இப்படி ஆட்டம் ஆடிப் பாடுவது ஏதோ உணர்வை அடக்கி வைத்திருந்து வெளிப்படுத்துவதுதான்‘ என்று சொல்லி இருக்கிறார். டிக் டாக் வெளிப்படுத்தும் உணர்வு அப்படியும் இருக்கலாம். * சந்தைப் பொருளான தமிழ்க் கவிதை, திசையற்ற தன்மையில் & இரண்டுக்கும் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நிறைவு வரி ஒன்றையே விமர்சனமாக்கலாம். ‘எத்தனை மாற்றங் கண்டாலும் கவிதையாய் நிலைத்திருப்பதால்தான் அது கவிதை‘
தஞ்சை என்.ஜே.கந்தமாறன் சென்னை - 8
ஸ்வரங்களை கோடுகளாக வளைத்து வளைத்து வத்தியங்களின் இன்னிசையை வர்ணங்களாகப் பூசி ராகதேவனை மினிமலிசத்தில் வார்த்த அதீத கற்ப்னை வித்தியாசமோ, வியப்போ அல்ல. ஏனெனில் அதுதான் சந்தோஷ் நாராயணன் உள்வாங்கிய ஞானி இசையின் வடிவம்,வெல்டன். கலாசாரம், பண்பாடு கண்ணியம் கட்டுபாடு என காலங்காலமாகப் போற்றும் தமிழ் மண்ணில் இன்றையப் பெண்களுக்கு என்னாச்சு! என அதிர்ச்சியளிக்கும் டிக்& டாக் ! சட்டம் என்பது சமூகத்திற்காக வரையறுத்துக் கொண்டது. தர்மம் என்பது நம் மன சாட்சிக்காக நிர்ணயித்துகொண்டது. இரண்டுமே அர்த்தமற்றுப்போன இன்றைய சூழலில் முறை தவறிய போக்கை சுதந்திரம் என்று சொல்லிக் கொள்ளும் அபத்தம், அசிங்கத்தின் இன்னொரு வடிவம்தான் டிக் டாக் கொடூரம். எப்படி நியாயப்படுத்திப் பேசி னாலும் தடுக்க வேண்டிய விபரீதம்.
அ. யாழினி பர்வதம், சென்னை
கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவர்களுக்கு அதனைச் செயல்படுத்திக் காட்ட தொண்டர்கள் தேவை. கொள்கையின் அடிப்படையில் கட்சியில் இணைந்தால் அவர்கள் இறுதிவரை வேறு கட்சி களுக்குத் தாவ மாட்டார்கள். அப்படிப் பட்ட கொள்கை வீரர்கள் திமுகவிலும் அதிமுவிலுமே மிகுதி. உயிரே போவதாக இருந்தாலும் உறுதி குலையாத உள்ள உரம் பெற்ற, இலட்சியவீரர்களே கட்சியின் ஆணிவேர். இதனைத் தான், கட்சி எனக்கு என்ன செய்தது? என்பவன் கட்சிக் குப் புற்று நோய்!. நாம் கட்சிக்கு என்ன செய்தோம். என எண்ணிப்பணிபுரிபவனே கட்சியின் ‘ இரத்த நாளம்' என்றார் கலைஞர். உண்மைதான்! இந்த நாளங்களாலேயே கட்சி ஓங்கி வளர்கிறது. தன்னையே அழித்துக்கொண்டு கழகத்தை வாழவைக்கும் அந்த நாளங்களை கழகங்களும் மறவாது போற்றிப் புகழும்! வரலாற்றில் பதிவு செய்யும்!
தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
கடைசியாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை திமுகவும் அதிமுகவும் டிரா செய்தன. வழக்கம் போல, ஏதேனும் ஒரு கட்சி அமோக வெற்றி பெறவில்லையே.. ஏன் ? எடப்பாடி பழனிசாமியையோ, மு.க. ஸ்டாலினையோ, ஆளுமைத் தலைமையாக தமிழகம் முழுமையாக ஏற்க வில்லையோ! அல்லது, மாற்று கட்சி இல்லாமல் திராவிடக் கட்சிகளுக்கே வாக்களித்துப் புளித்து விட்டதோ! இங்குதான் சூப்பர் ஸ்டார் பிரகாசிக்கிறார். ஆறே மாதத்தில் என். டி. ராமராவ் கட்சி தொடங்கி, முதல்வராகவில்லையா! வலுவான கூட்டணியோடு ரஜினி திடீர் தேர்தல் பிரவேசம் செய்தால் மக்களுக்கு புதிய நம்பிக்கை கொடுக்காதா! அதற்கான முயற்சியோ, தைரியமோ ரஜினிக்கில்லை என்று இப்போது சொல்லலாம். ஆனால், காலச் சுழல் அதை ஏற்படுத்தலாம் என்பதுதான் அரசியல் வரலாறு. இனிமேல்தான் பார்க்கப் போறீங்க, கபாலியோட ஆட் டத்தை!
அண்ணா அன்பழகன், அந்தணப் பேட்டை
பிப்ரவரி அந்திமழை இதழின் சிறப்புப் பக்கங்கள் அனைத்தும் அருமை! எதைப் பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. சந்தைப் பொருளான தமிழ்க் கவிதை கட்டுரை மற்றும் படங்கள் சூப்பர். இளைய ராஜாவின் படம் இனிது!
முரளிதரன், மதுரை
2021 தேர்தல்! என்ன செய்யப்போகிறார்கள் இவர்கள்! என்று அதிமுக, திமுக தரப்பும் கூட்டணிகளோடு ‘ ரஜினி' யையும் சேர்த்து அலசியது விவரமாகவும் உள்ளது விளாசல் ஆகவும் உள்ளது. கூட்டணிகளின் விரிசலும் பிறகு சரிசெய்தலும் எல்லாமே தற்காலிகமானதுதான். சசிகலா சிறையில் வாடுவது வருத்தம் தருகிறது என்ற ராஜேந்திர பாலாஜி போன்றே அதிமுகவில் பலரும் நினைக்கிறார்கள் என்றால் காரணம் சசிகலாவால் கிடைத்த வாய்ப்பு அல்லவா என்ற சிந்தனைதான். அதேசமயம் ரஜினி, கமல் நிலைப்பாடுகள் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதால் அதிமுக. திமுக, இரு அணிகளின் விருப்பம் தாண்டிய திருப்பங்கள் வரலாம் என்பதால் யாரும் யாரைப் பற்றியும் விமரிசிப்பதில் அளவு கோல் தேவைப் படுகிறது! ‘ பாஜகவின் பொன்னர் எவ்வளவுதான் உச்சத்தில் விமர்சித்தாலும் ரஜினி சப்போர்ட் கிட்டாதவரை அதிமுகவின் மிச்சத்தைதான் அனுபவிக்க நேரிடும்! கச்சை கட்டும் போக்கெல்லாமே அரசியல்ல இது சாதாரணமப்பா ரகம்தான்.
ஆர்ஜிபாலன், திசையன்விளை
2021 தேர்தல்: என்ன செய்யப்போகிறார்கள் இவர்கள்? செல்வனின் கட்டுரை வாசித்தேன். இன்றைய அரசியல் குறித்து, ஆழமாக நடுநிலையோடு எழுதப் பெற்றிருப்பது சிறப்பு. மக்க ளுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய ஊடகங்கள் வணிக நோக்கத்தோடு, வாளாவிருப்பது பெருத்த அவலம். வரும் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் அமரக் கூடிய கட்சி எவை? பி.ஜே.பி குரலை ஒலித்துவருகிறார் ரஜினி என்று ஒரு சாராரும், அவர் கட்சியே இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று பிறிதொரு சாராரும் சண்டையிட்டுக் கொள்வதை தொலைக்காட்சி விவாத மேடை களில் பார்க்கிறோம். பணம் புழக்கம் குறைந்திருப்பது, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களுக்கு விடை தெரியவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றையே நம்பியிருந்த ஏழைபட்டதாரி இளைஞர்களின் கனவும், விழைவும் மண்மேடாகிவிட்டது. ஐயகோ, தமிழகத்தை யார்வந்து காப்பாற்றப் போகிறார்களோ தெரியவில்லை.
நவீன்குமார், நடுவிக்கோட்டை
'யா தேவி' சிறுகதையை ரசித்து, லயித்த போது வலதுகையின் 4 விரல்களை மடக்கி பெருவிரலை உயர்த்தி ‘ வாவ்' என்ற வார்த்தை ‘யா' கூறிப் பாராட்டினேன்!
மணிமாறன், இடையன்குடி
தூரிகை பக்கம் பேரிகை கொட்டி மகிழ்கிறது! 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல' என்ற வரியுடன் இசையின் நாயகன் இளைய ராஜாவின் வண்ணப்படம் குளிர்வித்தது.
உமா, திசையன்விளை