அந்திமழை பிப்ரவரி 2018 இதழ் வெகு சுவாரசியமாய் இருந்தது. தங்கள் புதல் புத்தகத்தை அச்சில் பார்க்கும் அந்த இனிய தருணத்தை நினைவு கூர்ந்த எழுத்தாளர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையை விவரித்தது சிறப்பு. க.வீரபாண்டியன் அவர்களின் சிறுகதை சினிமா பார்ப்பதையே தன் தொழிலாகக் கொண்ட ஒருவன் எம்.ஜி.ஆராக தன் உடல்மொழியை மாற்றிக்கொண்டு பேச்சிலும் செயலிலும் அவராகவே மாறி அவரை வெண்திரையில் இயக்குவதாகக் கனவு கண்டு அது நிறைவேறாத சோகத்தை நெஞ்சில் நிரப்பி வாழ்வதும், தன் கனவு மகன் மூலம் நிறைவேறியதை அறிந்து மகிழ்வதும் ரசிக மனோபாவத்தை தெளிவாக உணர வைத்தது. ஞாநி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்ட நீதியரசர் சந்துருவின் கட்டுரை, ஞாநியின் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும் என்பதோடு முடிகிறது. மிஷ்கினின் விரிவான பேட்டி சமகால இளம்தலைமுறை இயக்குநர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது உண்மை. ஆழந்த வாசிப்பு அனுபவம் மட்டுமே நல்ல திரை ஆளுமையை உருவாக்கும் என்பதை நிரூபித்தது மிஷ்கினின் பேட்டி.
மனோகர், சேலம்.
அந்திமழை பிப்ரவரி 2018 இதழில் ரஜினி பற்றி கட்டுரை எழுப்பும் கேள்விகள் என்னவோ சரியானதுதான். இப்போது அதிமுகவில் பதவி ஏதும் இல்லாதிருப்பவர்கள் மட்டுமே ரஜினி பக்கம் போகலாம். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேனடையை நோக்கி சந்தர்ப்ப ஈக்கள் புறப்படலாம். மக்கள் பற்றி சொல்லவேண்டுமானால்... ம்ம்.. நிகழ் காலங்கள் எதையும் பேச வைக்கலாம். அப்போதைய மனநிலையைப் பொறுத்துதான் தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பாக கமலின் வருகையில் நுண்ணரசியல் மறைந்திருப்பதாகக் கூறும் தமிழருவி மணியன் அவர் வணங்கும் காந்தியையும் மதிக்கும் காமராஜரையும் ஒவ்வோரு அரசியல் தலைவரிடமும் தேடும் போக்கு தான் தொடர்கிறது. அவருடைய தேடல் தொடருமோ? எம்.ஜி.ஆர், சிவாஜி கால ரசிகர்களின் மனநிலையை இன்றுவரை எழுத்தும் இயக்கமாகச் சிந்தித்த பார்வை யதார்த்தம். அப்பட்டமான படப்பிடிப்பு. மிஷ்கினுடனான நேர்காணல் இயல்பான மனிதனின் சுவராசியமான பேச்சாக அமைந்திருந்தது சிறப்பு. திரையுலகில் இத்தனை வெளிப்படையானவர்கள் இருப்பது அபூர்வம்.
தஞ்சை.என்.ஜே.கந்தமாறன்.
கமலின் வருகையில் நுண்ணரசியல் மறைந்திருக்கிறது என்ற தமிழருவி மணியனின் நேர்காணல், ரஜினி பக்கம் சாய்கிறதா அதிமுக வாக்கு வங்கி, ரஜினி அரசியல் 360' பார்வை, போன்ற ஆய்வுக்கட்டுரைகள் ஆழமானவை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கருப்பு எம்.ஜி.ஆராக வலம் வந்து தமிழக அரசியலில் கால்பதித்துவிடலாம் என்றென்னி செயல்பட்ட கேப்டனின் அரசியல் கப்பல் உடைந்து சுக்குநூறாகப் போய்க்கொண்டிருக்கிற தருணத்தில் அடுத்து இருவர் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். தங்களது புகழ் வெளிச்சத்தை மட்டுமே நம்பி அரசியலில் கோலோச்சிவிடலாம் என்ற எண்ணத்தில் நாளும் ஒரு அறிவிப்பால் பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னெழுச்சியோடு போராடத் தொடங்கியிருக்கும் இளைஞர்களையும் மக்களையும் நம்பிக்கொண்டிருந்த நமக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நல்ல பாடம் கற்பித்துவிட்டார்கள். காசுக்கு முன்னால் தன்னெழுச்சியும் விழிப்புணர்வும் தடம் மாறிவிட்டது. வணிகமயமாகி வரும் அரசியலை புறந்தள்ளி மக்கள் நலனில் அக்கறை கொள்ளும், கட்சி பாகுபாடின்றி கடமையாற்றும் மனிதர்களைத் தேடிப்பிடித்து தெரிவு செய்யும் சூழலை அறிவுஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் உருவாக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியல் குறித்து ஆழமாக சிந்திக்க வைக்கிறது அந்திமழை கட்டுரைகள்.
நவீன்குமார், நடுவிக்கோட்டை.
அந்திமழை பிப்ரவரி 2018 இதழ் வாசகர்களுக்கு ஒரு பல்சுவை விருந்து. தமிழகத்தில் பிரபலமாகாத சில முற்போக்கு இளம் எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களின் படங்களோடு படைப்புகளைப்பற்றி பாராட்டி ஊக்கப்படுத்தியது அந்திமழைக்கே உரிய நற்பணி. தமிழஅக அரசியலில் ரஜினி 20 வருடங்களுக்குப் பிறகு தீவிரமாக ஈடுபடுவது குறித்து நமது நிருபர் துல்லியமாக ஆய்வு செய்திருப்பது ரஜினியின் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் அவசியமான ஆவணம். கர்ம வீரர் காமராஜரின் சீடர் தமிழருவி மணியன் ரஜினியை தமிழகத்தின் முதல்வராக முன்னிருத்தும் வாதங்கள் அர்த்தமுள்ளவை. ‘ ‘ கமலின் வருகையில் ஒரு நுண்ணரசியல் மறைந்திருக்கிறது'' என்ற அவரின் சஸ்பென்ஸ் சுவாரசியத்தின் உச்சம். மறைந்த தனிமனித இயக்கம் ஞாநியைப் பற்றிய நீதியரசர் சந்துருவின் நினைவுக்குறிப்புகள் நெஞ்சை நெகிழவைத்து கண்கலங்கச் செய்த அற்புதமான அஞ்சலி. தமிழ் சினிமாவின் அதியப் படைப்பாளி மிஷ்கினின் வாழ்க்கையும் அவரின் பட்டறிவும் படிப்பறிவும் வியக்க வைக்கின்றன. அவரின் எண்ணங்கள் மிரள வைக்கின்றன. வெகு விரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் என்று குறிப்பிடும் மிஷ்கின் சினிமாவை விட்டு விலகாமல் பல புதிய படைப்புகளை படைத்து சாதனைகள் படைத்து தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
திரைப்படத்துறையில் பயணிக்க நினைத்து ஒரு முயற்சியும் செய்து சென்னை சென்ற 1990களின் என் நினைவுகளை மீண்டும் கனவுத் தோட்டத்தில் மலரச் செய்த ‘எழுத்தும் இயக்கமும்' சிறுகதை மலரும் நினைவுகளைத் தூண்டிவிட்டது. விடா முயற்சி செய்திருந்தால் கிட்டியிருக்கலாம். பின் வந்த காலங்களில் என் பெயர் என் பெயருள்ள இயக்குநர்களின் பெயர் திரையில் தோன்றும் போது யாரையும் அறியாமல் கண்ணீர் கசியும். அந்த வலிகளை இலக்கிய வாசிப்பில் சாத்தியப்படுத்திய சிறுகதை ஆசிரியர் க.வீரபாண்டியனுக்கு என் வாழ்த்துகள்.
க.பாண்டியராஜ், அவினாசி.
அந்திமழை பிப்ரவரி இதழ் படித்தேன். ரஜினி பற்றிய கட்டுரைகள் காலத்தின் அவசியம் கருதி வந்த முக்கியமான கட்டுரைகள்தான். கமலின் வருகையில் ஒரு நுண்ணரசியல் மறைந்திருக்கிறது என்று சொல்லும் தமிழருவி மணியனின் அரசியல் சாய்வு புரிந்துக்கொள்ளக்கூடியதுதான். எழுத்தாளர் பவா செல்லதுரையின் பயணக்கட்டுரை மனிதர்கள் பற்றிப் புரிந்துகொள்ள பல இடங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நாஞ்சில் நாடன் கதையில் பயணிகளிடம் எரிந்துவிழும் ஓட்டுநர் ஒரு பாம்பு சாலையைக் கடந்து போக பஸ்ஸை நிறுத்துகிறார் என்பதைச் சொல்லும்போது அதை எழுதிய படைப்பாளியும், சரியான இடத்தில் அந்தக் கதையை நினைவுகூர்ந்த பவாவும் நெஞ்சில் நிற்கிறார்கள். படைப்பு மனம் இப்படித்தான் செயல்படும் என்பதை பவா நிறுவியிருக்கிறார். பயணங்கள் எப்போதும் நம்மை புதிதாக ஆக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை கண்டுகொண்டேன். மிஷ்கினின் மனம் திறந்த பேட்டி இதழின் ஹைலைட். பேட்டியின் பல விஷயங்கள் வாசிப்பவருக்கு பல்வேறு அனுபவங்களின் வாசல் களைத் திறந்துவைக்கும் என்பதில் ஐயமில்லை. அந்தப் பேட்டியை முழுமையாக பிரசுரித்த அந்திமழை இதழ்க் குழுவினருக்கு வாழ்த்துகள்.
கமல் சித்தார்த், ஆழ்வார் திருநகர்.
தனி மனித இயக்கம் கட்டுரையில் எழுத்தாளர் ஞானியை பற்றி நீதியரசர் சந்துரு அவர்கள் வெளிப்படுத்திற்கும் தகவல்களை பார்த்தால் ஆச்சரியம். நீதித்துறையையும், தான் பணி புரிந்த பத்திரிகையும் எதிர்த்து போராடி வெற்றி பெறுவது என்பது நம் நாட்டில் சாத்தியமா? சாத்தியப்படுத்திருக்கிறார் ஞாநி. அடக்குமுறைகளை கடந்து தன் நிலைப்பாட்டில் கொஞ்சமும் தளராமல் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளை பத்திரிகைகள் மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் உடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவருடைய செயல்பாடுகள் என்றும் மறையாது.
தமிழழகன், நாமக்கல்.
பத்து பக்கத்திற்கு இயக்குநர் மிஷ்கினின் நேர்காணல். ஒரு அருமையான நாவலை படிப்பது போல் இருந்தது. வித்தியாசமான மனிதர்களில் முதன்மையானவராக மிஷ்கின் இருப்பார் என்றே கருதுகிறேன். போலவே வலசைப்பறவையின் மரபணு அவருக்குள் இருக்கிறது.
கவின் கிஷோர், விருகம்பாக்கம்.