சிகரம்

சிகரம்
Published on

இருபத்தைந்து ஆண்டுகள் எண்ணத்தில் விதைத்து செயலாய் விளைந்த சிந்தனையை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார் அந்திமழை இளங்கோவன். அரசியல் தலைவர்களுடனான இதழாளர்களின் அனுபவங்கள் பல புதிய தகவல்களை அறியத்தந்தது. குறிப்பாக ஆர்.மணி அவர்கள் தன்னுடைய பத்திரிகை உலக ஆசானாகக் குறிப்பிட்ட விடிவெள்ளி ஆசிரியர் தெள்ளூர் மு.தருமராசன் தான் சென்னையில் 83இல் நான் இதழியல் பணிக்காக முனைப்புடன் இருந்த போது முதல் ஆதரவளித்தவர். சிறப்பிதழ்கள் வரிசையில் அந்திமழை தனித்துவமான சிம்மாச னத்தில், சிகரத்தில் ஏறிக் கொண்டுள்ளது.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,சென்னை - 89.

ஏமாறுவர்

ஆட்சியில் பங்கு இல்லேன்னா சங்கு - கட்டுரை படித்தேன். தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை, இராமாயண காலத்திலிருந்து இன்று வரை, இராம, இராவண யுத்தமாகவே அதாவது ஆரிய, திராவிட போராட்டமாகவே இருக்கிறது. இதற்கு 1971&ல் நடந்த சட்டமன்றத் தேர்தலே ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கலைஞர் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தி.மு.க வை இதோடு ஒழித்துவிட வேண்டுமென்று தேசிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கின. கீரியும் பாம்புமாக இருந்த ராஜாஜியும் காமராசரும் ஒரே மேடையில் பேசி னர். மக்கள் அலைமோதியது. காமராசர்தான் அடுத்த முதல்வர் என்று தேர்தல் முடிவுக்கு முன்பே அதிகாரிகள் பொக்கேயுடன் காமராசர் வீட்டுக்கே சென்று வாழ்த்தினர். ஆனால், தேர்தல் முடிவோ தி.மு.கவுக்கே 184 இடங்கள் கிடைத்தன.மிகப்பெரிய வெற்றி. தி.மு.கவே இதனை எதிர்பார்க்கவில்லை. அதே போல இன்றும் தி.மு.கவை ஒழிக்க வேண்டும் என்றே கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஆனால் ஏமாற்ற நினைப்போரே, ஏமாந்து போவார்கள். இது உறுதி.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

நெகிழ்ச்சி

தமிழகத்தில் அ.தி.மு.க & தி.மு.க மாறி மாறி ஆட்சியில் அமர்வதற்கு, அக்கட்சிகளுடன் அவ்வப்போது இணைந்த பிற கூட்டணிக் கட்சி களின் பலம் மிகவும் முக்கியமானது. ஆட்சியில் அமரவைக்க உதவிய அக்கூட்டணிக் கட்சி கள், தங்களுக்கும் ‘‘ஆட்சியில் பங்கு'' கேட்பது அநியாயமானது அல்ல. தற்போது, ஆட்சியில் பங்கு கோரிக்கையை மக்கள் நலக் கூட்டணி அழுத்தமாக முன் வைத்துள்ளது. இனிமேல் அ.தி.மு.க &தி.மு.க இதற்கு உடன்படுமா? என்பது ஒரு விவாதப் பொருளாகப் பேசப்பட்டாலும் ‘‘ஆட்சியில் பங்கு'' தவிர்க்க முடியாதது. விருந்தினர் பக்கம் பகுதியில் ‘‘எனக்காக இல்லை மகனே!'' &என்ற தலைப்பில் மூதாட்டிகள், முதியோர் இல்லங்களில் படும் அவஸ்தைகளையும், அவர்களுக்கு நீங்காதிருக்கும் தாய்மை உணர்வுகளையும்,மருத்துவமனை பொது மேலாளர் ராம்பாபு விவரித்தது - நெகிழ்ச்சியின் உச்சம்!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

இதயவலி

விருந்தினர் பக்கம், தலைகீழ் விகிதங்கள் மொழிபெயர்ப்பு கவிதை,படித்து தலையை ‘‘பிச்சுக்காத குறை'' இப்படி ஒரு கவிதை வாழ்நாளில் படித்ததும் இல்லை, படிக்க போவதும் இல்லை... பழைய திரைப்படத்தில் விசு சார் வசனம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி,பைத்தியக்காரர், வைத்தியர் என போகும் ஒரு டயலாக், அப்பா அதே நிலை இந்த கவிதை படித்த போது உண்மையில் இதய வலிதான், பரவாயில்லை... இப்படியும் ஒரு கவிதை படிக்க வாய்ப்பளித்த அந்திமழைக்கு நன்றி...

இ.டி.ஹேமமாலினி,அயனாவரம்

ஜனநாயகம்

தேர்தல் காலப் பரபரப்பு, அந்திமழையும் ஆக்கிரமித்து விட் டதற்கு தலைவர் முதல் தொண்டர் வரை பத்திரிகையாளர்களின் தேர்தல் அனுபவத் தொகுப்பே உதாரணமாகும். காமராஜர், இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, போன்ற தலைவர்கள் எதிர்கொண்ட சுவாரஸியமான, சோகமான, மகிழ்ச்சியான, வேதனையான, வியப்பான தருணங்களை பிரபல பத்திரிகையாளர்கள் விவரித்த விதமும், அவற்றை தொகுத்துத்தந்த நேர்த்தியும் - பாராட்டுக்குரியவை. மக்களின் மனப்பாங்கினை உணர்ந்து, அவர்களின் ஆதரவைப்பெற உருவாக்கிய தலைவர்களின் தேர்தல் வியூகங்கள் பிரமிக்க வைத்தன..! அதே சமயம் இந்தத் தலைவர்களின் நிஜ முகங்களை அறிந்து, யாரை ஆதரிப்பதென்பதை அழுத்தமாக முடிவு செய்து, தேர்தல் முடிவுகளில் அதனைப் பிரதிபலித்த ‘திருவாளர் பொதுஜனமே' இவர்களை விட நம்மை திகைக்க வைக்கிறார். இது தான் நம் தேர்தல் ஜனநாயகத்தின் பலமோ?

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தெளிவானவர்களா?

‘‘ஆட்சியில் பங்கு இல்லேன்னா சங்கு'' - அந்த சங்கின் ஒலி, எந்தச் செவியிலும் நிச்சயம் விழாது. தமிழ்நாட்டு மக்கள் என்றுமே தெளிவான முடிவை எடுப்பர். அவியல், கூட்டு, பொரியல் என்று பிற உதிரிகளுக்கு வாக்களிக்கவே மாட்டார்கள். இன்று தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டில் ஒரு கட்சிக்குத் தான் மக்கள் வாக்கு விழும். 160 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 150 இடங்களில் வெற்றி பெற்ற போது, 130 இடங்களில் திமுக நின்று 117 இடங்களில் வெற்றி பெற முடியாதா என்ன? அன்று 150 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதற்கான காரணங்கள் எதுவோ, அதுவே இன்று திமுகவிற்கு உள்ளது. என்று முடியும் இந்த ஆட்சி? என்று மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் வரும் 2016 தேர்தலில் திமுக நிச்சயம் வெல்லும். இன்று அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவை இழந்து நிற்கிறது அதிமுக. எதிர்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. உதிரிக்கட்சிகளின் பலம் என்னவென்று அவற்றுக்குத்தெரியும். பாவம், கூட்டுத்தொகை இழக்கவே களத்தில் இறங்குகின்றன. அதையும் பார்க்கப்போகிறோம். ஆட்சியில் பங்கு என்று அதிமுகவிடம் கேட் டால் அந்தக்கட்சிக்கு சங்குதான். திமுகவிலும் பங்கு கிடைக்காது. காரணம் பங்கு தந்துவிட்டால் அதனால் ஏற்படும் பங்கம் என்னவென்று திமுக நன்றாகவே உணர்ந்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி தான் தமிழகத்திற்கு நல்லது. தமிழக மக்கள் தெளிவானவர்கள்.

கே.ஏ.நமச்சிவாயம், பெங்களூரு.

பெட்டகம்

தேர்தல் பிரச்சாரத்தை வெயிலிலும் மழையிலும் சென்று பார்த்து எழுதிய பத்திரிகையாளர்களின் அனுபவங்களின் தொகுப்பு ஒரு காலப்பெட்டகம் என்றே சொல்லவேண்டும். ஐம்பதாண்டு தமிழக தேர்தல் வரலாறை பிரதிபலிக்குமாறு பல்வேறு காலகட்டங்களை அதில் பதிவு செய்தது திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை. குடிக்கும் போது ரிஸ்க் எடுப்பதில்லை என்ற ஷைலஜா எழுதிய கட்டுரையில் இடம்பெற்ற கவிதையின் மொழிபெயர்ப்பு மிக அருமை! படித்தபோது சிரிப்பில் சுளுக்கிக்கொண்டது. படித்து முடித்தபின் இதயம் கனத்தது! சிறப்பான கவிதைக்கு களம் தந்ததற்காக பாராட்டுகள்.

வெங்கடேசன், சென்னை

logo
Andhimazhai
www.andhimazhai.com