தந்தை என்னும் நாயகன் கட்டுரை மூலமாக, அப்பாவின் நினைவுகளை மீண்டும் எங்கள் நெஞ்சத்தில் கிளறிவிட்டுவிட்டீர்களே!. இந்த அரிய சிறப்பிதழை, மிகவும் தாமதமாகப்படித்த என் போன்றவர்கள் கூட நிச்சயம் மெருகு ஏற்றப்பட்ட அப்பாக்களாக மாறுவது நிச்சயம். ஒரு சிறப்பிதழ் தயாரிக்க தாங்கள் எடுக்கும் முயற்சிகள் மெனக்கெடல்கள். அனைத்து தரப்பினரையும் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்து குறிப்பிட்ட நேரத்தில் கருத்துக்களைப் பெற்று..உரிய முறையில் வெளிக் கொணரும் நேர்த்தி.. பாராட்டுவதற்கு சொற்கள் கிடைக்கவில்லை எனக்கு! மோனாகாசியின் உயிரோட்டமிக்க ஓவியங்களுக்காக எனது மேலான வாழ்த்து. பதவி அல்ல.. அது மக்கள் உனக்கு வழங்கி இருக்கும் பொறுப்பு..என்ற தன் மகன் மு.க.ஸ்டாலினிடம் கூறிய கலைஞரின் கருத்து. இன்றைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஒரு அரிய வழிகாட்டும் நல் அறிவுரையாகும். அதே போன்று தங்கம் தென்னரசு எழுதிய கட்டுரையும், அதில் வெளியிட்டிருக்கும் அவரும் அவர் தந்தையும் சேர்ந்திருக்கும் புகைப்படமும் மிகவும் நேர்த்தி.
லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை.
ஈர்த்தது!
அப்பாவைப் பற்றி எல்லோருமே சிறப்பாகச் சொல்லி யிருந்தாலும்...அதில் என்னை மிகவும் ஈர்த்துக் கொண்டது தாயைப் பற்றி எஸ்.ரா.வின் கட்டுரையில் இடம்பெற்ற ஒரு வாக்கியம்...தந்தையிடம்
சண்டையிட்டு வீட்விட்டு ஓடிய பையன்கள் இருக்கிறார்கள்..தாயிடம் சண்டையிட்டு அப்படி ஓடியவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவிலலை. நினைத்துப் பார்த்தேன். இல்லவே இல்லை. உங்களுக்காவது தெரியுமா?
அப்பா என்பது பொறுப்பு என்பதை அழகாக விளக்கிய நெல்லை கண்ணன், அதைக் காக்கின்ற பெரும் பொறுப்பு மகனுக்கும் மகளுக்கும் உண்டு என்று சுட்டிக் காட்டிய விதம் அருமை.
அப்பா பைத்தியம் சேகுவேரா தந்தை பாமரனைப் பற்றி எழுதியது சுவராசியமாய் இருந்ததோடு நிறைய சிந்திக்கவும் வைத்தது. பாக்கியம் சங்கரின் தந்தை கற்பித்த கடன் வாங்கா வாழ்வு முறையான பாதையை உணர்த்தியது.
- தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை
வீண் அல்ல!
அப்பா சிறப்பிதழ் அட்டைப்படக் கட்டுரைகள் அனைத்தும் புதிய வகை அனுபவங்களையும், அறிவுரைகளையும் ஒரு சேரத்தந்திருப்பவையெனில் மிகையல்ல! அந்திமழை இளங்கோவன் கட்டுரையில் அப்பா மகன்கள் உறவு, அப்பா மகள்கள் உறவுபோல சுமுகமானதல்ல - நடப்புலகு உண்மை. ‘காம்ப்ரேட் அப்பா' புகழ் மகேந்திரன் பதிவு உருக்கம். அப்பா கோபம் பொய்க்கோபம் - ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி, கவிஞர் கலாப்ரியாவின் மகள் அகிலாண்ட பாரதி எழுதியுள்ள அப்பா! ஒரு தலைப்பு சொல்லேன், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தந்தை எனும் அதிகாரம்' மேயர் பதவி என்றெழுதியதையெல்லாம் பொறுப்பு எனக் கலைஞர் திருத்தினார் என்ற மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த ‘பதவி அல்ல பொறுப்பு கட்டுரை, பிரம்பெடுத்து ரெண்டு அடி போட்டார், பிரபுவின் படப்பிடிப்பு, ஓர் இடம் காலி, சாட்டையால உரிச்சுட்டாங்க ‘சுதந்தரமும் அன்பும்' முறையே தங்கம் தென்னரசு, கி.ரா.பிரபி, ஹரி பிரசாத் எழுதிய கட்டுரைகள், தமிழ்ச்சிந்தர் நெல்லை கண்ணன் எழுதியிருக்கும் அப்பா என்பது பொறுப்பு, பாக்கியம் சங்கர் யாத்தளித்திருக்கும்
சொக்கலால் பீடியும் குதிரை படம் போட்ட பிராந்தியும், அருள் நடராஜனின் ‘ஆலின் நிழலில் போன்ற கட்டுரைகள் சர்க்கரைப் பொங்கலின் சுவையை விஞ்சி நிற்பவை! ஆசிரியர் குழுவினரின் உழைப்பு வீண் போகவில்லை.
நவீன் குமார், நடுவிக்கோட்டை.
சிறப்பும் மேன்மையும்
பொங்கல் சிறப்பிதழில் அப்பாக்களுடனான நினைவலைகளையும், நெகிழ்ச்சி மிக்க தருணங்களையும் பிரபலங்கள் பகிர்ந்து கொண்டது. நெஞ்சம் தொட்டது. காம்ரேட் அப்பா கட்டுரையில் புகழ் மகேந்திரன் அவர்களுடைய நினைவுகள் கண்களை கலங்கச்செய்தது. அந்தி மழையின் சிறப்பே சொல்லும் எல்லாவற்றையும் சுவாரசியம் குறையாத வகையிலும், உண்மை செய்திகளையும் சொல்வது தான். அந்த வகையில் பொங்கல் சிறப்பிதழ் அப்பாக்களின் சிறப்பையும்,மேன்மையும் சொல்லியது.
- மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி. (மின்னஞ்சல்)
பாலபாடம்
ரோமாபுரி காட்டும் வழி அரசியல் கட்டுரையில் கமல் அரசியலில் எதிரி யார் என்ற தெளிவு இல்லை என்ற மாலன் கருத்தைக் கமல் கவனிக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில்
சொல்லப்பட்ட நான்கு கருத்துக் களும் அரசியல் அவதாரம் எடுப்பவர்களுக்குப் பாலபாடம்.
- டாக்டர் குரு, சேலம். (மின்னஞ்சல்)
குறை தீர்த்தது!
அம்மாக்கள் போல அப்பாக்கள் கொண்டாடப்படவில்லை என்ற குறை தீர்த்தது 2021 புத்தாண்டின் முதல் இதழ். சூரியன்: அப்பா, சனி: மகன் - இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருந்தால் அப்பா - மகன் உறவு சீரியஸான டாம் அண்ட் ஜெர்ரி என்கிறது ஜோதிடம். இதையே தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம். தனயன் என்பது ஒரு மீறல், ஒரு விடுபடல் என்று எளிமையாக விளக்கினார், எஸ்.ராமகிருஷ்ணன், நெல்லை கண்ணன் சுட்டிக்காட்டியது போல தந்தை மகனுக்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி எனும் குறள் வழி நடந்தால் தந்தை - மகன் உறவு சீராகி, சிறப்பாகும் என்பதை சிறப்பிதழ் உணர்த்தியது.
-மல்லிகா அன்பழகன், சென்னை.
இனிப்பு
பொங்கல் சிறப்பிதழ் பொங்கலைப் போலவே இனித்தது, எதை பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை& நன்றிகள்.
அ.முரளிதரன், மதுரை.
தந்தை சொல்!
தேசியக்கட்சிகளுடன் தமிழக வாக்காளர்களின் நிலைப்பாடு இதுவரை என்ன? என்பதை ‘அரசியல்' கட்டுரை காரண காரியங்களோடு விளக்கியிருப்பது இந்திய அரசியலை திரும்பிப் பார்க்க வைக்கிறது. கமல்
சினிமாவில் உயிரோட்டமாக வசனம் பேசுவது போன்று; தன்னுடைய புலமையை அரசியலில் வெளிக்காட்டி பேசி வருவது மக்களிடையே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது நிஜம். பன்முக ஆற்றல் கொண்ட ‘கருணா' என்ற போராளியின் களப்பணி, எதிர்பாராத அவர் மறைவு நெஞ்சை நெகிழ வைத்தது. மோனா காசியின் எதார்த்தமான ஓவியங்கள் ‘வாவ்' என்று
ஆச்சர்யப் படவைத்தது. தந்தை குறித்து பிரபலங்களின் அனுபவங்களைப் படித்தபோது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை உணர்ந்தோம்.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
நல்ல பதிவு
ஜெ.தீபலட்சுமி அன்பால் நனைத்திருக்கிறார். அவர் ஆசிரமம் போல் அமைத்து அவருடைய வாசகர்கள் சந்தித்து பேசும் பாக்யம் பெற்றவர்கள். எங்களுக்கு அவரைப்பார்க்க பயம். இளையராஜா முதன் முதலாக சென்ற பொழுது யாரை நம்பி வந்தீர்கள் என்ற அவருடைய கேள்வி நியாயமானது. அன்று சென்னை வர எங்களிடம் பணம் இல்லை. இன்று ஓரளவு பணம் இருக்கிறது. தன்னுடைய படைப்புக்கு இணையாக முன்னுரை அன்றும் இன்றும் சிலாகித்துப் பேசக் கூடியவை. எங்களுக்கு ஜெயகாந்தன் மிகப்பெரிய எழுத்தாளர் ஆனால் ஜெ.தீபலட்சுமிக்கு அவருடைய அப்பா. அவருடைய அப்பா என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறார். நான் முதன் முதலில் சிறுவயதில் நூலகம் சென்ற பொழுது முதன் முதலில் சிறுகதை படித்தது ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான்! ஜெயகாந்தன் புத்தகம் அனைத்தையும் ஒரு அலமாரியில் அடுக்கி ஜெயகாந்தன் கதைகள் என்று எழுதி ஒட்டியிருந்தேன்.
எஸ்.பஞ்சலிங்கம், மடத்துக் குளம்
அந்திமழை: நூற்றுக்கு நூறு
நடிகர் கமலுக்கு நல்ல உபதேசம். தமிழகத்தில் 1967க்கு பிறகு திராவிடக்கட்சிகளின் ஆட்சி அதை வெற்றி பெற தேசிய கட்சிகளுக்கு திராணி இல்லை.
சினிமாத் துறையிலும் சிறப்பான அப்பா, பையன், மகள் பாசம்
சிறப்பாக வந்துள்ளது. அதிலும் எஸ்.வி.சகஸ்வர நாமம் போலீஸ் காரன் மகள் படத்தில் 3 வித்தியாசமான நடிப்பு. இன்றைய தலைமுறைகள் அவசியம் தெரியவேண்டியதில் ஒன்று.
தோழர் இள.சண்முகம், கீழக்கலங்கல்
உண்மை நிலை!
தமிழக வாக்காளர்களும் தேசிய கட்சிகளும் என்ற பகுதியில் காங்கிரஸின் உண்மை நிலையின் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். எனது 50வருட அரசியல் வாழ்வில் தேசிய இயக்கங்கள் தமிழகத்தில் தேய்வதை எண்ணி வருந்திய நாட்கள் அதிகம். தேசிய இயக்கங்களை வழி நடத்திய தலைவர்கள் சரியான அரசியல் வியூகத்தை வகுத்தாத நிலைதானோ? காங்கிரஸ் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத நிலை உண்டு. -
ஏபிசிவி சண்முகம், தூத்துக்குடி
பிப்ரவரி, 2021