மழை, வெள்ள நிவாரணப் பணிகளில், உண்மையான மனிதநேயத்துடன் செயல்பட்டு, பல உயிர்களைக் காத்த , முகமற்ற நாயகர்களின் உயர்ந்த உள்ளங்களின் சேவை நெகிழவைத்தது. இனம், மதம், மொழி, பணம், அதிகாரம் &என மனிதர்களை வேறுபடுத்தும் விசயங்களை, ஊழிக்காலத்தின் பெருவெள்ளமாய்ப் பொங்கி வந்த நீரின் சீற்றம் கரைத்து விட, துயரத்தில் மூழ்கி அடைக்கலமும், உதவியும் தேடியவர்களுக்கு, ஆதரவு கரம் நீட்டுவதையே முதன்மையாய்க் கருதியவர்களிடம், வழிந்த மனிதம் வரலாறாய்ப் பாய்ந்தது. அந்த முகமற்ற நாயகர்களை வாழ்த்தி வணங்குவோம்.
சம்பத், வேலாயுதம்பாளையம்
சாதி, மதம், குலம் கோத்திரம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு மனித நேயத்தை மலரச்செய்து, வெள்ளம் தந்த பாடம். இது தொடர வேண்டுமென்பதே, மானுடத் தின் விருப்பம். சமுதாயத்தின் கறைகளைப் போக்க குறைகளைக் களைய அறிய கருவியே திரை. அறியாமை இருளைக் கிழித்து, படித்தவர் முதல் பாமரர் வரைக் காணச் செய்தது பெரியத்திரையும், சின்னத்திரையுமே. பரா சக்தியும், வேலைக்காரியும், இரத்தக்கண்ணீரும் தமிழ்ச் சமுதாயத்தையேப் புரட்டிப் போட் டதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ இயலாது. இது வரலாறு! புதினங்கள், திரைப்படமாவதற்க்கு தகுதியானவையே என்ற பட்டியல், படத்தயாரிப்பாளர்களுக்கு பயனுடையது. படைப்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டால், உலகிலேயே தமிழ்த் திரையுலகம் முதல் இடத்தை பெறும். இத்தகைய சிந்தனைகளை வாசகர்களிடையே மலரச்செய்த இந்த இதழ் ஒரு சிந்தனைப் பூங்கா என்பதில் அய்யமில்லை
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக் கருப்பூர்
ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்கள் பலரை அறிய வைத்த வெள்ளம், அகமே அற்ற சில பல மனிதர்களையும் நிர்வாகம் மற்றும் நிதர்சனப்பார்வையில் அறிமுகம் செய்து விட்டுச் சென்றுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இரும்பு மனிதன் ராபர்ட் டௌனி பற்றிய செய்தி புதுமை. அருமை. குண்டு சட்டியில் குதிரையை விடாமல் விரட்டிக் கொண்டிருக்கும் நம்மூர் விடாக் கண்டர்களுக்கு இதைப் புரிய வைத்து தெளிய வைக்கலாம். புரியப்படாத பக்கப் புரட்டல்களில் தான் பல நாட்டின் புரட்சிகள் வளமாகவும் வலுவற்றதாகவும் மாறிப் போயிருக்கின்றன என்பதை புரியவைத்தது அகர முதல்வனின் ‘மோன்' சிறுகதை.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை
வெள்ளம் கட்டுரை (நிகழ்வு) படிக்கும்போது, அப்பப்பா, அந்தநாள் மறக்க முடியாத நாள்தான், பீதியைக் கிளப்பிய நாள் மழைவிட்டாலும் தூவானம் விடல..என்ற சொலவடைபோல், அந்த மழை ஞாபகம் மனதைவிட்டு அகலாதது! ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்கள் பலர் இருந்தாலும், என்றும் நிரந்தர நாயகர்கள் யார் தெரியுமா? இடுப்பொடிய வேலைச்செய்யும் மாநகராட்சியின் கடைநிலை ஊழியர்கள் தான். அவர்களுக்கு தலைவணங்கி சல்யூட் செய்ய வேண்டியது அவசியம், சாக்கடையில் போய் சுத்தம் செய்யும் பேரு, நாலு நாளு லீவு போட்டா, நாறிப்போகும் ஊரு...என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளையும் நினைவுபடுத்தியது.
இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.
சினிமாவுக்கு முதுகெலும்பு கதை. சிறந்த கதைகள் நாவல்களிலும், ஏன் சிறுகதைகளிலும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இன்று வாசகர்களின் மனதில் நீங்காது நிலைத்திருக்கும் நாவல்களை நம்பிப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை மிக, மிகக்குறைவு. எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுவதைப்போல, நாவல்கள் திரைப்படமாக்கப்படுவது வர்த்தக காரணங்களால் மட்டுமே என்பதும், திரைப்படங்களில் நாவல் தந்த முழுமையான அனுபவத்தை பெறமுடியாது என்பதும் முற்றிலும் உண்மை. அவர் குறிப்பிட்ட 10 நாவல்கள் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்றால் நல்லது. ஆனால் சாத்தியங்கள் சத்தியமாக இல்லை என்பது தான் வேதனை!
மேட்டுப்பாளையம் மனோகர், தேனாம்பேட்டை
மனிதநேயம்
‘மானுடம் வென்றது' என்பார்களே அதை, நின்று நிமிர்ந்து காட்டியது பேயாய் ஊழித்தாண்டவமாடிய அடைமழையின் போது இளைஞர்கள் ஆற்றிய அரும்பணி ; பெரும்பணி. நூறு நூறு இளைஞர்கள், முகமறியா நட்புகள் வாடிவாசல் திறந்ததும் சீறிப்பாயும் காளைகளாக வெள்ளக்காட்டில் நீந்தி, அவதிப்பட்ட மனிதர்களை ஆற்றுப்படுத்தி, அவர்களுக்கு உதவியது என்றும் போற்றி, நினைத்து நினைவில் நிறுத்த வேண்டியது ஆகும். அலைக்கழித்த வெள்ளம் அதில் அனைத்தும் இழந்த சோகம். பிச்சையிட்ட கரங்கள், பிச்சைகேட்டு, வானம் பார்த்து நின்ற அவலம்! கண்முன்னே உறவுகள், சுழித்தோடும் வெள்ளத்தில் தம் தலைச்சுழியைச் சுழித்து கொண்ட கொடுமை. இதனினும் ஒரு கொடுமை உண்டா என்று நினைக்க கூடாத ஆனால் நினைத்தே தீர வேண்டிய கையறுநிலை! ஆம் ; ஆகவே ஒரு கொடுமை, கொடுமையிலும் கொடுமை. வெள்ளத்தில் அனைத்தும் அடித்துச் சென்றிருக்கலாம்! ஆனால் அதில் அடித்துச் செல்லாத ஒன்று ‘ மனிதநேயம்' காலம் முழுக்க கருவானில் மின்னும் ஒளி மின்னல். உற்றுழி உதவி, உள்ளன்புடன் வெளிப்பட்ட மனிதம்! மானுடம் உள்ளவரை மாண்புடன் மனிதம்! அந்த இளைஞர் பட்டாளத்திற்கு ஒரு ‘ராணுவ ராயல் சல்யூட்'
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு
நாவல்களைப் படமாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஜனரஞ்சகம் என்ற பெயரில் இல்லாத நகைச்சுவையை & அதில் நகையும் இல்லை, சுவையும் இல்லை & சேர்த்து நாவலின் ஜீவனையே & உயிர்த்துடிப்பையே & சிதைத்து விடுகிறார்கள். காரணம் கேட்டால் நாங்கள் பணம் போடுவது பணம் எடுக்கத் தான் என்ற விளக்கம் ; வியாக்கியானம். அந்தக் கூற்றில் கனம் இருக்கலாம். ஆனால் நாவலின் கனம் இளைத்து ஈளை கட்டி விடுகிறதே. கல்கி, நாமக்கல்லார், சுஜாதா, தி.ஜானகிராமன், உமாசந்திரன், அனுராதா ரமணன், மகரிஷி போன்றவர்களின் நாவல்கள் படமானபோது கிடைத்த வெற்றி பிறகு மற்ற நாவல்களுக்கு கிட்டவில்லையே. ஒரு மலைக்கள்ளன் பெற்ற அபார வெற்றியை அறிஞர் அண் ணாவின் ‘ரங்கூன் ராதா' பெறவில்லையே. இரண்டுக்கும் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியவர் கலைஞர்தான். அறிஞர் அண்ணாவின் ‘ரங்கூன் ராதா' ஒரு சிக்கல் நிறைந்த கதை.
குடியாத்தம் கான், சென்னை.
ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்களுக்கு, ஸ்டிக்கர் ஒட்டப்படாத ஒரு கட்டுரைக்கு நன்றி. நம் நாட்டின் தெருவில் அனாதையாக இன்னும் எத்தனை ரவீந்திர பாட்டீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ அல்லது மரணித்தார்களோ, நம் சட்டத்திற்கு பொய் சாட்சிதான் பொருந்துகிறது. நாஞ்சில் நாடன் கட்டுரையில் சினிமா மொழி வேறு, நாவல் மொழி வேறு என்று தெளிவாக விளக்கிவிட்டு, காவிரி ஆறு கஞ்சியாகவே பாய்ந்தாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்று சாடியிருப்பது பொருத்தமான ஒன்று.
இ.இளவரசன், உடையார்பாளையம்.