மரியாதை

மரியாதை
Published on

தமிழர் திருநாளுக்குப் பொருத்தமாக திருக்குறள் சிறப்பிதழ், குறளைப்போலவே சுருக்கமாக அமைந்தாலும், சுவையாக இருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா! குறளுக்கு போதுமான விளக்கவுரைகள் மலிந்து கிடக்கின்றன. சிறப்பிதழ்களும் திருப்தியாக வந்து விட்டன. இனி சிலை எழுப்புவதும், கோட்டம் அமைப்பதும், விழா எடுப்பதும், விடுமுறை அனுஷ்டிப்பதும் போதும். கையடக்க திருக்குறள் பாக்கெட்டில் எப்போதும் இருக்கட்டும். அவகாசம் கிடைக்கும் போது ஓரிரு குறளுக்காவது விளக்கம் அறிவோம். அதன்படி வாழ்வில் நடக்க முயல்வோம். அதுவே, வான்புகழ் வள்ளுவனுக்க்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

யாழினி பர்வதம், சென்னை

காரணம்

காங்கிரசுக்கு இன்றைய தேவை இந்திராவா? காமராஜரா? என்ற கட்டுரை மன உறுதிமிக்க இந்திரா காந்தியின் துணிவுமிக்க செயல்களையும், மதியூகமிக்க காமராஜரின் அற்புதமான அணுகுமுறைகளையும் விளக்கி, தற்போதைய காங்கிரஸைக் காப்பாற்ற இந்திராவைப் போன்ற மன உறுதியுள்ள ஒருவரால் தான் முடியும் என்ற தீர்வினையும் குறிப்பிட்டுள்ளது. மதசார்பற்ற மகத்தான இந்தியத் திருநாட்டில் இந்துத்வா கொள்கைகளை நிலைநாட்ட உத்வேகத்துடன் செயல்படும் பா.ஜ.க. அரசை அகற்ற காங்கிரஸ் செயல்பட்டே ஆகவேண்டும். ஆனால் இன்று காங்கிரஸ் நம்பிக்கையிழந்து, பலவீனமாக இருப்பதற்கு, அக்கட்சி மாநில மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது, மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்காது, ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் எதுவும் இன்றி, ஊழல்களுக்கு இடமளித்து, கோஷ்டி சண்டைகளை வளர்த்து, வலுவிழந்துள்ளதே காரணம்.

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை

மகிழ்ச்சி

புத்தாண்டு இதழில் பெரியார் தேசத்தில் தாமரை, காங்கிரசுக்கு இன்றையத்தேவை இந்திரா காந்தியா, காமராசரா ஆகிய சிந்தனைக்குரிய கட்டுரைகளுடன், திருக்குறள் சிறப்பு இதழாக வெளியிட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ப.மூர்த்தி, பெங்களூரு.

பாண்டியன் மீசை

இன்று அதிகாரம் கையிலிருப்பதால் பா.ஜ.க துள்ளாட்டம் போடலாம். ஆனால் தமிழகத்தில் அது தள்ளாட்டமே. இங்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருகிவோம் என்கிறது பா.ஜ.க. பாவம் ! இவர்கள் தமிழர்களையும் அறியார். தமிழ் மண்ணையும் அறியார். தாமரைத் தண்டுகள் ஒடிந்த தண்டுகள்தாம். நீரின்றி வாடிப்போய்விடும். பெரியார் தேசத்தில் தாமரை? இது கேள்வி? பதில்: வளைந்த வினாக்குறி நீண்டு நிமிர்ந்து பாண்டியன் மீசையாகும். அப்போது புரியும் எதுவும் அதுவரை ஆட்டம் போடலாம் !

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.

நன்னாருக்கு

அந்திமழையின் அட்டைப்படம் வெகு ஜோர்! இந்திராவா? காமராஜரா? காங்கிரசுக்கு என்ற தலைப்பிலான கட்டுரை பாராட்டக்குரியது! இந்திராதான் என்பது பலே..பலே! இன்ஸ்டண்ட் இட்லி உப்புமா! திரைவலம் படித்தபோது மனகுமுறலுக்கு மயிலிறகு வைத்தியம் பேஷ்...பேஷ்.. ரொம்ப நன்னாருக்கு.

இ.டி.ஹேமமாலினி, சென்னை.

பலிக்காது

பெரியார் தேசத்தில் தாமரை மலர்வது நிச்சயம் முடியாது. இனி ஊழலுக்கு எதிராக சரியாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணமும், உங்கள் கணிப்பும் சரியாக இருந்திருந்தால் ஊழலே இல்லாத கட்சியான இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் வென்றிருப்பார்கள். மேலும் இன்றைய இளைய தலைமுறையினர் ஊழலைச்சகித்து கொள்ள மாட்டார்கள் என்று எழுதியிருப்பது மிகப்பெரிய காமெடிதான். இன்றைய தலைமுறையில் வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்.கே.ஜிக்கே ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து படித்தவர்கள். மேலும் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஒரு மாணவனுக்கு 5 இலட்சத் திலிருந்து பத்து இலட்சம் நன்கொடை என்கிற அளவில் இலஞ்சம் கொடுத்து அட்மிஷன் பெற்றுப் படிக்கிறார்கள். இலஞ்சம் வாங்கும் கல்லூரி நிர்வாகங்களை எதிர்த்து போராடாத இந்த இளைய தலைமுறையா லஞ்சம், ஊழலை எதிர்க்கப்போகிறது ? மேலும் ஊழலைவிட இந்து மதவெறிப் பயங்கரவாதம் ஆபத்தானது என தமிழர்கள் உணர்ந்துள்ளதால் சங்பரிவாரக் கழுகுகளின் சூழ்ச்சி என்றும் பெரியார் பிறந்த மண்ணில் பலிக்காது.

தமிழ்ச்செல்வன், தண்ணீர்பந்தல் பாளையம்.

பயனுள்ளது

அந்திமழை திருக்குறள் சிறப்பிதழ் கண்டேன். இதுவரையில் வெளிவந்த சிறப்பிதழ்களிலேயே இது தனித்து நிற்கிறது என்றால் மிகையன்று. இறையன்பு அவர்களொரு விரிவான முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள வழி வகுத்துள்ளார். மகுடேசு வரனின்' ‘‘குறளைப்பயின்றால் அறிஞர் ஆகலாம்'' என்ற கட்டுரை மிகவும் பயனுள்ளது. பராட்டப்படவேண்டியது. இருப்பினும் குறள் வழங்கிய கருத்துக்களோடு முதன்மையாக ஒன்றிப்போவதில்லை என்று பிற்கால உரையாசிரியர்களைப்பற்றி அவர் கருத்து பதிவு செய்துள்ளது ஏற்புடையதாக இல்லை.

புது சீனிவாசன்,பெசன்ட் நகர்

ஆய்வுக்களம்

‘ நல்வரவு ' கட்டுரையில் நாஞ்சில் நாடன், திருவள்ளுவர் காமத்துப்பாலில் கையாண்டுள்ள ‘ வல்வரவு ' என்ற சொல்லின் தனிச்சிறப்பை விவரித்திருப்பது அருமை. ‘திருக்குறள் சார்பு கடந்த நூல்' & பேரா.ம.இலெ.தங்கப்பாவின் கட்டுரை ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது. இவரே குறிப்பிட்டுள்ள சார்புணர்ந்து? என்பதில் சார்பு வருகிறதே? முதல் அதிகாரத்தில் மாணடி சேர்ந்தார், தாள் சேர்ந்தார், பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் போன்ற சொல் தொடர்கள் கட்டுரை தலைப்புக்குத் மாறுபடுவனவாகத் தோன்றுகின்றனவே? திருக்குறளை ஆழமாக ஆய்ந்திருப்பவர் இப்பேராசிரியர். ஆகவே திருக்குறள் சார்பு மேலாய்வுக்கு உரியது என்போம். மொத்ததில் அந்திமழை முன் வைத்துள்ள திருக்குறள் ஆய்வுக்களம் பாராட்டுக்குரியது.

க.சி.அகமுடைநம்பி, மதுரை

நெகிழ்ச்சி

விகடன் பாலசுப்பிரமணியன் பற்றி ‘ போய்வா எந்தையே ' என்ற தலைப்பில் ஜி.கௌதம் எழுதிய கவிதாஞ்சலி படித்தேன். அதில் ‘ நாங்கள் படிக்க இதழியல் பாடம் நடத்திய தந்தையே, நின் உடலால் மருத்துவம் போதிக்கச் சென்றாய் போய் வா எந்தையே ' என்ற உயிர்ப்பு வரிகளால், ஈர்ப்பு செய்துவிட்ட பாலா ஐயா அவர்களின் மனிதநேயமும் ஈரமும் வீரமும் தென்பட்டது.மனம் நெகிழ்ந்தது.

முத்தூஸ், தொண்டி

logo
Andhimazhai
www.andhimazhai.com