உணர்வு

உணர்வு
Published on

குடும்ப பாங்கான அந்த கால தமிழ்த்திரைப்படங்களை பார்ப்பவர்கள், திரைப்படக் காட்சிகள், அவரவர் வாழ்க்கை நிகழ்வுகளை பிரதிபலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு அதன் காரணமாக அத்திரைப்படக் காட்சிகளோடு ஒன்றிப்போய், கோபம் கொள்வதும், வெறுப்படைவதும், கலங்குவதும், கண்ணீர் விடுவதுமாக இருப்பார்கள் , அப்படி ஒரு நிலை அந்திமழை இளங்கோவனின் ‘குழந்தை செல்வமே தமிழனின் பெரும் சொத்து' என்கிற கட்டுரையைப் படித்தபோது எனக்கும் ஏற்பட்டது. இன்றைய இளைஞர்களிடம் ஒரு சிலரிடமாவது , ஒரு சிறிதாவது இந்த கட்டுரை நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இராமசுப்பிரமணியன் , தோவாளை.

சிறப்பு

ஜனவரி 2014 அந்திமழை இசை மழையைப் பொழிந்து குளிரவைத்துவிட்டது மனங்களையெல்லாம். அறிவால் செய்வது அல்ல இசை என்ற மங்கல இசையுடன் தொடங்கி அன்றைய, இன்றைய திரை இசைப்பாடல்களின் மூலமே கர்நாடக சங்கீதத்தையும், தமிழிசை யையும் கலந்து கொடுத்திருந்தது எல்லாத் தலைமுறைக்கும் இனிப்பாக இருந்தது. ஒவ்வொரு இசையமைப்பாளரையும் பெருமை கொள்ள வைத்த பாடல் வரிகளைத் தலைப்பிட்டு, அவர்களின் படங்களையும் வெளியிட்டுச் சிறப்பு செய்த விதம் பாராட்டுக்குரியது.

அ.கருப்பையா , பொன்னமராவதி.

ஒருநாள் போதுமா?

கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றிய பெங்களூரு நண்பரின் கட்டுரை இனிமை. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் உவமை கவிஞர் சுரதா எழுதிய ‘அமுதும் தேனும் எதற்கு' பாடல் அன்று பெரும் புகழ் ஈட்டியது. அது கே.வி.மகாதேவன் அவர்கள் ஆத்மார்த்தமாக இசையமைத்த பாடல். ஒரு கதாநாயகனுக்குப் பின்னணி பாடும் பெரிய வாய்ப்பை எனக்கு பெற்றத்தந்த பாடல் ‘ அமுதும் தேனும் எதற்கு' என்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் என்னிடம் பெருமையுடன் கூறியபாடல். நான் சுரதாவின் சீடன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது என் இரு கைகளையும் பிடித்து கொண்டு மகிழ்வுடன் சீர்காழி அவர்கள் சொன்னது அது. ஆம் கே.வி.எம்.அவர்களின் புகழ்பாட ஒரு நாள் போதாதுதான்.

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு

பட்டியல்

தங்களின் ஜனவரி மாத இதழ் இசையால் நிரம்பி இருந்து எங்களை இசையால் நிரப்பிவிட்டிருந்தது . இளையராஜாவின் நேர் காணலுடன் துவங்கும் இசை வரிகள் பின்பு திரை இசையின் ஜாம்பவான்களின் இசை வலிமையை நம்முள் இருந்தே பிடிங்கி நமக்கு முன்னே காலத்தின் அழியாத திரைப்பட பாடல்களின் பொற்குவியல் என மின்ன விடுகின்றது. பொய் நதி சிறுகதை ஒரு செய்தி தமிழ்நாட்டை உலுக்கிப் போட்டதை படைப்பு தளத்தில் தன்னை பதிவு செய்து கொள்கிறது.

புதுமைச்செல்வன் , இராஜபாளையம்

ஆர்வம்

இசை மேதைகள் வரலாறு படிக்கப்படிக்க ஆர்வமூட்டியது, இசையமைப்பாளர் சுதர்சனம் பாரதியார் பாடல்களுக்கு இசை அமைத்துச் சிறப்பு சேர்த்ததும் , பெரிய நடிகர்கள் அனைவரின் பாடல்களுக்கும் அற்புதமாக மக்கள் நெஞ்சைத் தொடும்படியாக பலகாலம் மறக்கமுடியாததாகவும் செய்திருந்ததை அறிந்து வியந்தேன்.

முருகேசன் , தேனி

அமர்க்களம்

ஜனவரி 2014 புத்தாண்டில் முதன் முதலாக புதிய வாச கனாய் அந்திமழை இதழ் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பமே ‘ வாவ்' வென வாய் பிழந்தேன். ஆமாம் .. அட்டை டு அட்டை வழு வழு, மொழு மொழுவென சும்மா கொழு கொழு என்றிருந்தது . யாரையுமே தொட்டவுடன் தொடர்ந்து படிக்க தூண்டி வரும் அமர்க்களம் என்றே சொல்லலாம்.

முத்தூஸ் , தொண்டி.

நெகிழ்வு

ராகதேவன் இசைஞானி அவர்களின் நேர்காணலுடன் , காவிய இசையமைப்பாளர்கள் பற்றிய தகவலுடன் குழந்தை செல்வமே தமிழனின் பெரும் சொத்து! என்ன செய்தாய் நீ எனக்கு என கேட்ட மகனுக்கு அப்பா எழுதிய பதில் குழந்தை வளர்ப்பு செலவுகள் விபரம் பகுதியும் , நீயா நானா அந்தோணி பற்றிய பகுதி என ஒவ்வொரு பகுதியும் ஆனந்தக் கண்ணீர் , நெகிழ்வு.

கி.ஜேக்கப் நற்குண ராஜா, உத்தமபாளையம்

கற்றுக்கொள்ளலாம்

எல்லா அரசியல் கட்சிகளும் கையிலெடுக்கும் எந்த யுத்தியும் இல்லாமல் வெற்றி வாகை சூட முடியும் என்பதன் இன்றைய அடையாளம் தான் கெஜ்ரிவால். அவரிடம் கற்று கொள்ள நிறையவே உள்ளது.

ஷாஹுல் ஹமீது , விருதாச்சலம்

கச்சேரி

மாதமொரு விருந்து... ஒவ்வொன்றும் ஒரு விதம் .. ஒவ்வொன்றும் ஒரு ஸ்டைல். ஒவ்வொன்றும் ஒரு சுவை.. அப்பப்பா... ஒரு முழு நேர ஜனரஞ்சகமான கச்சேரியை கேட்டது போல இருந்தது, படித்து முடித்ததும் ..

ஜெரினாகாந்த், சென்னை

மிளிர்கிறது

திருதராஷ்டன் தழுவல் கெஜ்ரிவாலையும் பாதிக்கத்தான் போகிறது, ‘நெல்சன் மண்டேலா & உலக முரண்களில் முதன்மையானது' தலைப்பு கொஞ்சம் பயமுறுத்தி விட்டது. கட்டுரையின் கடைசி வரி தெளிவாக விளக்கி விட்டது. அந்திமழை இளையராஜாவின் படத்தோடு ‘‘ அறிவால் செய்வது அல்ல இசை '' என்ற கருத்தோடும் மிளிர்கிறது.

பொன். முத்துக்குமார், பணகுடி

சிலிர்ப்பு

திரை இசை சக்கரவர்த்திகள் & சிறப்பிதழ் மனதை கொள்ளை கொண்டது. கே.வி மகாதேவன் முதல் ஏ.ஆர் ரஹ்மான், வரை இவர்களின் இசை பயணித்த அனுபவங்களைப் படிக்கையில் மனம் சந்தோஷம் கொண்டது. ஒவ்வொரு அந்திமழை இதழும் சிலிர்க்க வைக்கும் இளந்தென்றல்!

ந.பேச்சியம்மாள் , புதுச்சத்திரம்

தித்திப்பிதழ்

ஆர்.சுதர்சனம், எஸ்.என்.சுப்பையா நாயுடு , சி.என்.பாண்டு ரங்கன், என அறிந்த பெயர்களின் அறியாத தகவல்களை முழுமையாய் திரட்டிதந்த திரை இசை தித்திப்பிதழ் , சுவையான பொங்கல் விருந்து. சேர்ந்திசை எம்.பி.சீனிவாசன் , மெல்லிசை வி.குமார், தேனிசை டி.ராஜேந்தரையும் சேர்த்திருந்தால் மலர் இன்னும் சிறந்திருக்கும்.

மல்லிகா அன்பழகன் , சென்னை -78.

தூண்டுகோல்

நீயா ? நானா? அந்தோணி பேட்டிக் கட்டுரை வெகு சிறப்பு! 2014 RESOLUTION பற்றிய ‘‘ ட்விட்டர்'' கருத்துப் பதிவு சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது !

சு.சிநேகா ஷியாம், அயனாவரம்

logo
Andhimazhai
www.andhimazhai.com