‘இலக்கற்ற பயணங்கள்' என்ற தலைப்பில் தனது திசையாற்றுப் படையில் இரா. பிரபாகரின் சிங்கப்பூர் விஜயத்தின் விஷயங்கள் வினயமுடன் தரப்பட்டுள்ளன. ஒரு மாநகராட்சியை சிங்கப்பூர் ஆக்குவதாகவும் மாநிலத்தையே சிங்கப்பூர் ஆக்குவதாகவும் சிம்ம ராசிகள் முழங்கிய சங்க நாதத்திற்கு சங்கு ஊதி ஆண்டுகள் ஓடி விட்டன. சிங்கப்பூர் போல ஆக்க வேண்டாம். சிங்கப்பூர் தமிழர்களின் மன நிறைவை தமிழகத் தலைவர்கள் பெறும் படியாக ஆட்சி அமைந்தால் போதுமே என்ற பெருமூச்சு மட்டும் சற்று நீளமானது!
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை
பாதுகாக்க வேண்டிய இதழ்
இதழின் சிறப்புப் பக்கங்கள் எவற்றையெல்லாம் சுவையாகத் தரவிருக்கின்றன என்பதை நிறுவிய ஆசிரியர் எழுதும் முன்னோட்டத்தைப் படித்தால்போதும். வேக வாசிப்பிற்கு கட்டியங் கூறுவதாய் அவரது தரமான தரவுகள் தடம் போட்டு விடும். இவ்விதழில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளும் மதில்மேல் பூனைகளும் அவ்வாறே!
எந்தக் கட்சியிலும் இணையாமல் கட்சி சார்பற்ற மனநிலையில் இருப்பவர்கள் தேர்தல் அன்று யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெறுவார்கள் என்ற பொருளைத் தரும் கட்டுரையாளரின் கருத்து ஏற்கத்தக்கதே!
உலக அரசியலையே உலுக்கிப் பார்த்து, தூய அரசியல் கட்சி எப்படியிருப்பின் உகந்ததாய் இருக்கும் என்பதை தக்க தரவுகளை இணைத்தெழுதியிருக்கும் கட்டுரையே மேற்காணும் கட்டுரையாகும்.
திமுக அரசில் இயக்கமாக உருவான இடம், உருவாக்கிய ஆளுமைகள், முரண்கள் சார்ந்த தகவல்கள் தனக்கே உரிய தனிநடைச்சித்திரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் திருமாவேலன்.
மேலும் அதிமுக, அகில இந்திய காங்கிரஸ், பாஜக, சுதந்திரா கட்சி உள்ளிட்ட அரசியல் கட்டுரைகள் அனைத்தும், மிகச் சரியான உண்மைத் தன்மைகளை தகவல்களாக வைத்து எழுதப்பெற்ற, கட்டுரைகளாகும். அரசியல் சிறப்பிதழ்களின் வரிசையில் நான்காவதாக இடம்பெற்றிருக்கும் இவ்விதழ் பாதுகாக்கப் பெற வேண்டிய இதழ்.
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
மாதந்தோறும்
அரசியல் கட்சிகளின் தோற்றம் குறித்து எந்த தினசரி - வார - மாத பத்திரிகைகள் கூட கொடுக்க வில்லை. ஆனால், அந்திமழை இதழ் கொடுத்திருப்பது சூப்பர். மாதந்தோறும் வாங்கிப் படிக்கும் இதழ்!
ஜெ. ரவிபிரகாஷ், தர்மபுரி
மாயத்தோற்றம்
அரசியல் கட்சிகளின் தோற்றம் சிறப்புப் பக்கங்கள் படித்தேன்.
தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் தோன்றி, தோன்றிய சில வருடங்களிலேயே காணாமல் போய்விட்டன. இருக்கும் கட்சிகளில் 50% லெட்டர் பேட் கட்சிகள் தான். அவையும் பெரிய கட்சிகளுக்குத் துதிபாடுகின்றன. நிலைத்து நிற்கும் கட்சிகள் பெரும்பாலானவற்றில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அவை நிலைத்து நிற்பது போல் மாயத்தோற்றம் கொண்டவையே!
டி.கே. கங்காராம், மதுரை
உண்மைநிலை
சிறப்புப் பக்கங்களில் சி.மகேந்திரனின் கட்டுரை படித்தேன். அவரது கருத்துகள் நிதர்சனமான உண்மைகளைப் பிரதிபலிப்பனவாகும். உண்மை நிலையை உணர்ந்து நாட்டு மக்களுக்கும் உணர்த்தும் வகையில் கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்
வித்தியாசம்
அரசியல் கட்சிகளின் தோற்றம் சிறப்புப் பக்கங்கள் சூப்பர். அட்டைப்படம் வெளிநாட்டு பத்திரிகை போல் உள்ளது. சினிமா படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இயக்குநர் சுரேஷ் ஜி பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன். அசோக் செல்வனின் பேட்டி, அவரது படங்களைப் போலவே வித்தியாசமாக உள்ளது.
அ.முரளிதரன், மதுரை
வியப்பு
அந்திமழை இளங்கோவன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல், மதில் மேல் பூனைகளாக விளங்கும் 20% க்கு மேலிருக்கும் வாக்காளர்களே வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை நிலையாகும்.
அக்கால அரசியல் தலைவர்கள் எலியும் பூனையுமாக எதிர் எதிராக நின்றிருந்தாலும் ஒருவரை ஒருவர் மதிப்பதிலும் கண்ணியம் காட்டுவதிலும் இம்மியளவும் விலகாமல் இருந்திருக்கிறார்கள் என்பதை 70 வயதிலும் பிரதமர் நேரு, இரண்டாவது தளத்திலிருந்து மூதறிஞர் இராஜாஜியிடம் படியேறிச் சென்று அளவளாவிய நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டி வியப்பிலாழ்த்துகிறது.
மு. இராமு, திருச்சி
அழகான கதை
உதிரம், மனதை ஈரப்படுத்திய கதை. மரம் ஏறி கையை விட்டவன் கதி சங்கரியின் தலையில் விழுந்தது.
சிறிது கவனக் குறைவு. நோயாளியுடன் வாழ்பவள் எல்லாம் தனக்கு இரை என்று நினைக்கும் ஆண்களுக்கு விழுந்த சம்மட்டியடி. உதிரம் கசிந்த கதை.
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் ஆண்கள் குறைவு. அடிமை வேலை பார்த்து விட்டு உயர் அதிகாரி என்னைப் பாராட்டி விட்டார். உதிய உயர்வுக்காக ‘பிராந்தி பார்ட்டி வைக்கும்' மனிதர்கள் நடுவில் முத்துவீரன் தன் சம்பாதித்ததை, அதுவும் உடல் உழைப்பின் மூலம்…எப்படி வாழ வேண்டும் என்பதை ஆழமாக சொன்ன கதை.
கேரளத்து மலை முகடுகளில் பொழிந்த மழைநீர் என் வீட்டை ஒட்டி ஆறாக ஓடுகிறது அமராவதி.
இந்தக் கதையைப் படித்துவிட்டு ஆற்றில் குளிக்கும் போது சங்கரி என்று முணுமுணுத்துக் கொண்டு அமராவதி ஆறு ஓடுவது போல் உள்ளது... ‘கதையின் ஆழத்திலிருந்து வெளிவர நீண்ட நாட்கள் ஆகும்'.உதிரம் கதையும் அதற்கு வரைந்த ஓவியமும் அழகு; அந்திமழையைப் போல.
எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
பொதுவுடைமை
க.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரை ஆழமானதாகவும், அர்த்தபூர்வமாகவும் இருந்தது. ஆனால் ‘ஒரு நாட்டில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பது நல்லதே' என்று ஆரம்பித்து, ‘ஒரு பொதுவுடைமை அரசமைப்பின் கீழ் பல பொதுவுடைமை கட்சிகள் செயல்பட முடியும், தேர்தலில் போட்டியிட முடியும், பொதுவுடைமைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது' என முடித்துள்ளார்.
‘ஒரு நாட்டில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படும், ஆனால் புரட்சியின் இறுதி நேரத்தில் வலுவான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியோடு மற்றவை தன்னை இணைத்துக்கொள்ளும், சித்தாந்த வலுவற்றவை காணாமல் போகும். இறுதியில் எது தாக்குப்பிடித்து நிற்கிறதோ அதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி, அந்த ஒருகட்சிதான் கடைசியாக நிலைத்திருக்கும்' என்கிறார் லெனின்.
கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் இந்தக் கருத்தை வலியுறுத்தியே வகுப்பு எடுத்திருப்பார் என்பதுதான் துவக்கத்தில் கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருப்பதும்.
எஸ்.கவிவர்மன், புதுக்கோட்டை.
வெளிப்பாடு
கட்சிகள் பிறந்த கதையெல்லாம் சிறப்புப் பக்கங்களில் ரொம்ப ஜோராகத் தான் இருந்துச்சு. ஆனா, ‘ஆட்சியை பிடிச்சவங்க என்ன பண்ணி கிழிச்சாங்க! ‘ என்று ஜனங்கள் யோசிக்க ஆரம்பிச்சு, கட்சிங்க மேல இருந்த நம்பிக்கைப் போச்சு. ‘எரிகிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி!‘என்பது தான் தேர்தல் தோறும் ஜனங்களின் வெளிப்பாடாச்சு. இனி, அரசியலிலும், தலைமையிலும் நேர்மை முக்கியம் என்பது அரசியல் நோக்கர்களின் முடிவாச்சு.
அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.
பெண்மை
நெகிழ்ந்தேன், உதிரம் சிறுகதையில்... மிக தெளிவாக வீரனின் உணர்வுகளை நம்முள் கடத்தியிருந்தார் சகோதரி அகிலாண்ட பாரதி. பெண்மையின் தாய்மையை உணர வைத்த
சங்கரேஸ்வரி பாத்திரப் படைப்பு... கதை நிறைவின் சுட்டல்களும் மிகச்சிறப்பு. இலக்கற்ற பயணங்கள் தொடரில் நம்மையும் உடன் பயணிக்க வைக்கும் இரா.பிரபாகர் புதிய பல விவரங்களையும் அறியத்தருவது அருமை.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,
சென்னை - 89
களைகட்டுகிறது
இமையம் தொகுப்பில் சில சிறுகதை சுருக்கங்களை ரசித்துவிட்டு, இதுவரை அனுபவிக்காத விமான அனுபவங்களை இரா.பிரபாகரிடம் கேட்டு வாய் பிளந்து, அறிந்தும் அறியாத அசோக்செல்வனுடன் அறிமுகமாகி, போகன் சங்கரின் பருவமழைக் குறிப்புகளில் நனைந்தபடி, நவீன நளாயினியின் ‘ உதிரம்' கதையில் மனம் கனக்க, கரன் கார்க்கியின் நாவல் பிறந்த கதை சற்றே ஆசுவாசப்படுத்தியது. அதன் பொருட்டு சற்றே இளைப்பாற தூள் பக்கோடாவாய் செய்திச் சாரல். நிலத்தை விற்று படமெடுத்த எறும்பு இயக்குநரின் ஃப்ளாஷ்பேக், வீம்பான சினிமா காரர்களின் வைராக்கியத்தை எடுத்துக் காட்டியது. முத்தாய்ப்பாக ஆட்சிகளால் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் கட்சிகளின் பூர்வீகம் குறித்து அரசியலில் ஆர்வமில்லாத புதிய இளம் வாக்காளர்களுக்கு பாடமெடுத்தது, சிறப்புப் பக்கங்கள். ஆக, மாதந்தோறும் மாறுபட்ட ரசனையில், வேறுபட்ட கோணத்தில், தனிப்பட்ட படைப்புகளில் களை கட்டுகிறது அந்திமழை.
யாழினிபர்வதம்,
சென்னை. 78