ஆசிரியராய் தொடங்கிய வாத்தியார் ஜேக்கப்பின் வாழ்க்கையில், அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் சுவாரஸியமானவை. சாதீயக் கொடுமைகளுக்கு எதிராக, தனது ஆசிரியப்பணியில் போராடத்தொடங்கியவர். பொதுவுடமை சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, தூக்குத் தண்டனை வரை சந்தித்த நிகழ்வுகள், நகைச்சுவை இழையோட இருந்தது, அறுசுவைகளை உணர வைத்தது. மக்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்ட் தலைவர்களை அவர் காப்பாற்ற முனைந்ததும், நீதிமன்றத்தில் சாட்சிப் பொருளான அவரின் டைரியே, காப்பாற்றிய திருப்பமும், க்ரைம் தொடருக்கே உரித்தானவை.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்
நதிப் பிரச்சனையால் தனியாகி இருக்கும் மாநில உணர்வை வெளிப்படுத்திய நேர்க்கோடு அழுத்தமான பார்வை. இப்படியாக தேசியம் வாழட்டும். கஃஅஙு கேர்ள், கஃஅஙு பாய் கதை நடப்பு நிகழ்வுகளின் யதார்த்தத்தை அருமையாக வெளிப்படுத்தியிருந்தது. எழுத்தில் விளையாடி இருந்தார் (கஃஅஙு) ஙிணூடிttஞுணூ அராத்து. வாழ்த்துக்கள். உணவுச்சிறப்பிதழ் அறுசுவை விருந்தாக அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் தின்னு கெட்ட (வாழும்) தமிழ் மக்களின் நம்ம ஊரு சாப்பாடு பற்றி ஒரு இதழுக்குள் அடக்கி விட முடியாது. தொடர்ந்து பரிமாறுங்கள். பாரதிமணியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், என்னோட நாக்குக்கு சொந்தமாக இருக்கும் வரை உணவு என்பது ஒரு அருமையான சமாச்சாரம் மட்டுமல்ல. விருந்தும் மருந்துமாய் விளங்குகின்ற விஷயம்.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
பண்டைத் தமிழனுடைய வரலாறே சுவை மிக்கது. யாவரும் எண்ணாததை எண்ணினான். அச்சமின்றி அலைகடல் தாண்டி அவன் எங்கும் வெற்றிகொடி நாட்டினான். அகழ்வாராய்ச்சிகளும், செப்பேடுகளும் சொல்லும் செய்தி இது. மொழியையே மூன்றாகப் பிரித்து இயல், இசை, நாடகமெனவும் இலையை தாள், ஓலை, மடல், கீரை என்றும் இலையை இன்னும் பிரித்து தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு என்றும் பிரித்து வாழ்ந்தான். இவ்வளவையும் செய்தவன் உணவை மட்டும் விட்டுவைப்பானா? அப்பப்பா, உண்ணும் உணவைக்கூட எத்தனை வகையாகப் பிரித்து சுவைத்து மகிழ்ந்திருக்கிறான். காலவெள்ளத்தில் அவைகளில் பல உணவு வகைகள் அடித்துச் செல்லப்பட்டாலும், எஞ்சியவைகளை யாவது, மாவட்டம் தோறும் வரிசைப்படுத்தி அதனை, உணவுச் சிறப்பிதழின் வாயிலாக உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் பணி மிகவும் போற்றுதற்குரியது.
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
நாவிற்குச் சுவை கூட்டிய 50 தமிழ் உணவுகள் பற்றி படித்தபோது, எனக்குத் தோன்றியது இதுதான். சமையலில் வல்லவன் நளன் என்பார்கள். அதனாலேயே ‘நளபாகம்' என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த நளனுக்கே நளபாகம் & நவபாகம் & கற்றுத்தந்த ஆசான் ஒரு தமிழனாகத்தான் இருந்திருக்க வேண்டும். உலகளவில் சமையலில் அறுசுவையைக் கலந்து கட்டியவன் & வெட்டியவன் - காட்டியவன் தமிழனாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
கலாப்ரியா சார், தின்னுகெட்ட குடும்பம்ங்கிறது திருநெல்வேலில மட்டுமில்லே, தமிழனுக்கேயுரிய தனி கெத்துல! சாருநிவேதிதா சார், தமிழகத்தின் பாரம்பரிய உணவுச்சுவை இன்று எந்த ஹோட்டலிலும் இல்லை என்று தாங்கள் முன்மொழிந்த ஆதங்கத்தை நானும் வழிமொழிகிறேன். பாக்கியம் சங்கர் சார், இரு பாலரும் இன்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால் கிச்சனை மறந்து ஹோட்டல் பார்சலையும், ரெடிமேடு உணவையும் நம்ப தொடங்கி விட்டதால் சமையல் பக்குவமே பெண்ணுக்கு மறந்து போனது துர்பாக்கியம். அதனால் ஹோட்டல்களும், ஃபாஸ்ட் ஃபுட், தள்ளுவண்டி கடைகளும் தாராளம். அந்திமழை ஆசிரியர்கள் சார், இதில் வேடிக்கை என்ன தெரியுமா? டி.வி.சேனல்களும், பத்திரிகைகளும் போட்டிபோட்டு ரெசிபிகளை செய்து காட்டுகின்றனவே! இதயெல்லாம் யாரு செஞ்சு பார்க்கிறாங்க! இன்னொரு வேதனை, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் உணவிலும் மேற்கத்திய தாக்கம். அந்திமழை வாசகர் சார், வீட்டில் சமைப்பது முக்கியமல்ல, அதில் பாரம்பரிய ருசி அவசியம்.
மல்லிகா அன்பழகன்
உணவு சிறப்பிதழ் அந்தந்த உணவுகள் போலவே சுவைகளுடன் இருந்தன. தஞ்சாவூரு சாம்பாரு மிகுந்த சுவையுடன் இருந்தது. காமிரா கண்கள் சூப்பர் படங்கள், அவற்றை எடுத்த கைகளுக்கு வைர மோதிரமே போடலாம்.
அ.முரளிதரன், மதுரை.