நல்ல சிறுகதை!

நல்ல சிறுகதை!

Published on

ஆட்டனத்தி எழுதிய ‘நாச்சம்மாவின் பரிசு' கதையைப் படித்தேன். அது சிறந்த சிறுகதையாகும். குணசேகரன் விலங்கியல் முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும் - பன்றி மேய்ப்பதில் தன்னுடைய உழைப்பைத் தந்ததோடு மட்டும் அல்லாமல் தன் மனைவியை முனைவர் பட்டம் பெறவும் படிக்க வைக்கிறார். தன்னைக் காட்டிலும் தன் மனைவி அதிகம் படித்தவள் என்ற ஈகோ இல்லாமல் கதை அற்புதமாக திட்டமிட்டு சதுரங்க காய்களை நகர்த்துகிறது போல் நகர்த்தியிருக்கிறார் ஆட்டனத்தி. நன்று.

சிறுகதையின் ஊடே வாழ்விற்காக நேர்மையாக உழைக்கலாம் என்பதை வலியுறுத்துவதுடன் ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலைக்கு வாக்காளர் சென்று விட்ட நிலையில் பன்றி வளர்ப்பதில் குணசேகரன் காட்டும் ஆர்வம் மனதை நெகிழவைக்கிறது. கண்முன்னே குணசேகரனின் ஓட்டுவீடும் பன்றித் தொழுவமும் வந்து போகிறது.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

 ஜொலிக்கிறது

சிறப்புப் பக்கங்கள் என்றால் போதும்! அந்திமழையில் விடிய விடிய நனைந்து விடுவேன்! மீனும் மிதி வண்டியும் என்று அந்திமழை இளங்கோவன் ஸ்டார்ட் பண்ண, தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல என்று பாமரன் சாமரம் வீச, முந்தானை முடிச்சு + அனல் மேல் பனித்துளி + அறம் + சம்சாரம் அது மின்சா ரம் + கார்கி + வடசென்னை + சலங்கை ஒலி + அரங்கேற்றம் + நட்சத்திரம் நகர்கிறது + நேர்கொண்ட பார்வை + அவள் ஒரு தொடர்கதை + கனா + சில நேரங்களில் சில மனிதர்கள் + அவள் அப்படித்தான் + கோலமாவு கோகிலா + காற்றின் மொழி + 36 வயதினிலே + அழகி + கருத்தம்மா + மயக்கம் என்ன + விதி + இறுதிச்சுற்று + பிரியங்கா + சிந்து பைரவி + கற்பூரமுல்லை + மகளிர் மட்டும் + இன்னும் மிகைப்பட்டாலும் வகைப்படுத்தித் தரப்பட்ட தொகுப்பு திரையுலகின் சிகை அலங்காரம் என ஜொலிக்கிறது.

ஆர்.உமாராமன், திசையன்விளை

கிளரும் வரிகள்

அமெரிக்க அதிபரின் ரகசிய உக்ரைன் பயணம் ஏன்? என்ற கட்டுரை தொகுப்பு உலகாதய வகுப்புதான்! ஆம்! எண்ணூறு கோடி மாணவர்களின் வகுப்பு! பலர் நெஞ்சங்களைக் கிளறும் வரிகள் கர்னலுடையது எனினும் ‘பைடன்' அரசியலுக்கு பைன்! உக்ரைனுக்கு அது பைனா! ஃபைனா? ஹரிஹரன் சாரோடு சேர்ந்து நாங்களும் வெயிட்டிஸ்!

என்.ஜே. ராமன், திசையன்விளை

நினைவுபடுத்தியது

1.செய்திச்சாரல் பக்கம் அருமையாக உள்ளது! (மு.மேத்தாவின் கவிதை சூப்பர்)

2.நடிகைகளின் போட்டோக்களையே பார்த்து பார்த்து சலித்து கண்களுக்கு அவர்களின் ஓவியங்களைக் கொடுத்தது அழகாக உள்ளது.

3.நடிகர் கவினைப் பற்றிய

கட்டுரை, புகைப்படம் அருமை. 4.திசையாற்றுப்படை கட்டுரை படிக்கப் படிக்க மேன்மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது. அமெரிக்க அதிபரின் ரகசிய உக்ரைன் பயணம் ஏன்? கட்டுரை க்ரைம் நாவல் போல் உள்ளது.

5. ஓபிஎஸ் பற்றிய கட்டுரை அருமை. கட்டுரையின் கடைசி வரிகள், அவரை நிச்சயம் சிந்திக்க தூண்டியிருக்கும்.

6.சிறப்புப் பக்கங்கள் அனைத்தும் அருமை. பழைய கால படங்களையும் நினைவுபடுத்தின.

அ.முரளிதரன், மதுரை

விடாதீர்கள்

மார்ச் மாத அந்திமழை இதழில் பிரசுரமான சிறப்புப் பக்கங்களில் எண்பதுகளிலிருந்து இன்று வரை பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களையும், அந்த அந்த காலகட்டத்திற்கு ஏற்ப அதன் மாறுதல் களையும்,முக்கியத்து வத்தையும், அலசி ஆராய்ந்து பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். காலம் கடந்தும் சில திரைப்பட கதாபாத்திரங்கள் நினைவில் வருவதற்கு இன்னும் கூட உண்மையில் சிலர் அப்படியானவர்களை கடந்து வருவதால் கூட இருக்கலாம். பெண்களைக் கொண்டாட மனம் இல்லாதவர்கள் கூட அவர்களை தம் வாழ்வைக் கூட வாழமுடியாமல் திண்டாடவைத்துவிடாதீர்கள்.

மீ. யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

சிறப்பு

பல தமிழ்த் திரைப்பட வரலாற்றைத் திரும்பிப் பார்த்து பெண்களைப் பெருமைப்படுத்துகிறது. பெண்களின் தனித்தன்மைகளைப் புலப்படுத்துகிற பெண்களின் மனப்பாடுகளை அழுத்தமாக அடிக் கோடிட்டு காட்டுகிற 26 படங்களைத் தேர்ந்து எடுத்துப் படக் கதையின் பேசு பொருளை பகுத்தும், தொகுத்தும், அலசி, ஆராய்ந்து படங்களின்

சிறப்புகளை ஒளிவட்டமிட்டு காட்டுகிற ‘வெள்ளித்திரைப் பெண்கள் தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல' என்ற பொருள் பொதிந்த தலைப்பிலான சிறப்புப் பக்கங்கள், எத்தனை பார்வை, எத்தனை கோணம் என்று வியக்க வைத்தன. மேலும் மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் திங்களில் இத்தகு தலைப்பில் சிறப்புப் பக்கங்களைக் கொண்டு வந்த அந்திமழையின் சிறப்பான பணியும் பாராட்டிற்குரியதாகும்.

மு.இராமு, திருச்சி

ஏழரை!

இந்த ஏழாம் நம்பர் ஆண்டுக்கு (2+0+2+3) செய்திச்சாரல் செவனுமே செம! செமதான்! ஆனால் 31ஆம் பக்கத்தில் பாதியாக...(உடல்பாதி + உடைபாதி) வெளியிட்ட படம் மட்டும் ஒரு அரை கூடி ஏழரை ஆனது சார்!

ஆர்.ராஜகோபாலன், நெல்லை

முன்னோட்டம்

மார்ச் மாத அந்திமழை இதழ் மகளிர் சிறப்பிதழா அல்லது திரைச்சிறப்பிதழா என்று வியக்கும் அளவுக்கு சிறப்புப் பக்கங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். 27 திரைப்படங்களின், பெண் கதாபாத்திரங்களை அலசி எடுத்துவிட்டார்கள் எழுத்தாளர்கள். ஏற்கெனவே பார்த்த படங்களின் பின்னோட்டமாகவும், பார்க்காத படங்களின் முன்னோட்டமாகவும் அமைந்துவிட்டன.

அமெரிக்க அதிபரின் ரகசிய உக்ரைன் பயணம் கட்டுரை சிறப்பாக இருந்தது. பல வெளிநாட்டு அதிபர்களின் ரகசிய பயணங்களையும், அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதையும் கட்டுரையாளர் விவரித்திருந்த விதம் சிறப்பு.

டி.கே. கங்காராம், மதுரை

எதார்த்தம்

செல்பேசியைப் பற்றி இரா.பிரபாகர் எழுதிய கட்டுரை எதார்த்தமாக அமைந்துள்ளது. கலீல் ஜிப்ரானின் மேற்கோள் சிறப்பு. அதை அந்த துணைவியார் ஏற்றுக் கொள்ளவில்லை. செல்பேசி மனித குலத்திற்கு அவசியம். ஆனால் தவறான நடவடிக்கையால் எத்தனை குடும்பம் பாழ்பட்டுப் போனது.

நாச்சம்மாவின் பரிசு இறுதியில் சிறப்பான முடிவு. பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகள் என்ற தலைப்பில் கதை கச்சிதமாக அமைந்துள்ளது.

உக்ரைனுக்கு அதிபர் பைடன் பயணம் மேலும் சண்டை விரிவடையும். உக்ரைன் பாதிக்கப்படும், ரஷ்யாவும் பாதிக்கப்படும். உலக சமாதானம் என்று வர. நாட்டில் சமுதாயங்கள் சீரழிவை நோக்கி செல்கிறது. அதுபோல் நாடு பிடிக்கும் ஆசை யாரைவிட்டது. கடந்தகால

சினிமாவின் விமர்சனம் சிறப்பு. முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், கார்கி, வடசென்னை, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர் கதை, சில நேரங்களில் சில மனிதர்கள், கருத்தம்மா, சிந்து பைரவி படங்கள் எல்லாம் சிறப்பான விமர்சனம்.

இரா. சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

செல்பயனாளிகள்

செல்...செல்...என்று வில் போன்ற புருவங்களின் கீழே விழிகள் செல், செல் என்று கட்டளையிட விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லா பஞ்சாமிர்த வரிகளை மேய்ந்து கடந்ததும் புரிந்தது! இது கதையல்ல...தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்களே...அப்படி ‘செல்‘ பயனாளிகளின் ஆட்டம் சதை மீதான நாட்டமாகத் தொடர்வதைத் தான் போட்டுத் தீட்டிய கூர்மைக் காதுக்குச் சொந்தக்காரர் இரா. பிரபாகரின் ‘தசை‘ சாரி...திசையாற்றுப்படை...அசைத்தேவிட்டது ஆன்மாவை! நியூட்டனின் செல்பேசி கியூட்! குட்.

ஆர்.ஜி பாலன், நெல்லை

எழிலாக...

அடடே! நூல்கள் அறிமுகம் பகுதி கூட “அந்திமழை'யில் பொழிகின்றபோதுதான் எத்தனை எழிலாக உள்ளது! ‘நறுக்‘, ‘சுருக்‘ ஆக பொருத்த விமரிசனமும் அர்த்த பாவத்துடன் ஆர்ப்பரிக்கும் விதமும் அப்ளாஸை அள்ளுகிறது.

ஆர்.ஜே.கல்யாணி, திசையன்விளை

ஆழமான பார்வை

தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல... வெள்ளித்திரை பெண்கள்... சிறப்புப் பக்கங்கள் அருமை. மகளிர் தினம் முன்னிட்ட சராசரி சிந்தனைகளை முன் வைக்காமல், ஆழமான பார்வையில் கட்டுரைகள் அமைந்தது வரவேற்புக்குரியது.

தனக்கேயுரிய தனித்துவமான விதத்தில் அதை தெளிவாக உணர்த்தியிருந்தார் நிறுவிய ஆசிரியர்.

பெண்கள் விரும்பும் பொழுது போக்கு களத்திலிருந்தே இம்முறை தேர்ந்தெடுத்த சிறப்புப் பக்க உள்ளடக்க கருத்து குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சார்ந்து முக்கியமாக ஆழ்ந்து பேச வேண்டிய களங்கள் இன்னும் அடுத்தடுத்த தளங்களில் அழுத்தமாக உண்டு. வருங்காலத்தில் அதையும் அந்திமழை தரும் என்ற நம்பிக்கை எனக்குள் மிகுதி.

ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற கருத்து அயலி முத்துக்குமாருக்கும் பொருந்தும் தானே...

ஒரு பிரச்சினையின் முதற் புள்ளி என்பது அதை உணர்ந்து முன்னெடுக்கும் நல்ல நோக்கமுள்ளவர்களால்தான் உருவாகும். அது தங்களுக்கான குரல் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பாட்டை முன்னெடுப்பார்கள். வரலாறு கள் சொல்லும் வரலாறு இது...

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.

சென்னை. - 89

நான்கு புள்ளிகள்

ஒரு பட்டாம் பூச்சி + ஒரு சர்க்கஸ் பஃபூன் + ஒரு சினிமாக்காரன் என்று நான்கு புள்ளிகளை ‘அகம் முகம்‘ என்று புரட்டிக் காண்பித்த விதத்தில் புரட்சி வெடித்துள்ளது.

ஆர்.விநாயகராமன், மருதூர்

ஏப்ரல், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com