கடந்த இதழ் படிப்பதற்கு வெகு சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. கனவுப் படிக்கட்டுகள் ஒவ்வொருவரின் கருத்துகளும் வித்தியாசமான கோணத்தில் அமைந்திருந்தன. அதிலும் மருத்துவர் சிவபாலன், மருத்துவர் முரளி, பேராசிரியர் முரளி ஆகியோரின் கட்டுரைகள் மூளை மற்றும் மனதின் செயல்பாடுகள் குறித்தும் கனவுகளைப் பகுப்பாய்வு செய்தும் அலசப்பட்டிருப்பதுசிறப்பு. யுகபாரதியின் கனவுகள் குறித்த பாடல் விளக்கங்கள் குறிப்பிடத்தக்கது.நீதிபதி சந்துருவின் நீதிபதிக்கனவுகள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டபின் கிடைத்தது என்பதை நினைக்கும் போது சிந்திக்க வைக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நேர்காணலில் தமிழ் மீது அவருக்குள்ள ஆர்வம் வெளிப்படுகிறது. தமிழ் மொழியின் பெருமையும் வலிமையும் நேர்காணலில் வலுவாகப் பேசப்பட்டுள்ளது. காமுத்துரையின் சிறுகதை ‘பெண் பார்க்கும் படலம்' இரண்டு படலங்களை இயல்பாய்ப் பதிவு செய்துள்ளது.
விழி.பா. இதயவேந்தன், விழுப்புரம்
வித்தியாசத் தேடல்
குக்கிராமங்களில் ‘பெண் பார்க்கும் படலம்‘ கதையில் வரும் யதார்த்தமான உரையாடல்கள் இன்றும் நிகழ்ந்து வருவதை அப்படியே படம் பிடித்திருக்கிறார் காமுத்துரை.
‘வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும்' நேர்காணல் சிறக்கிறது. அகழ்வாராய்ச்சியின் பயன்கள் யாது? தமிழக வரலாற்றில் எதைப் பொற்காலம் என்றுசொல்லலாம்? கொற்கை ஆய்வுகள் கூறுவது என்ன? உங்களைப் பரவசப்படுத்திய தொல்பொருள் எது? போன்ற பொருள் பொதிந்த கேள்விக்கு ஆழமாகப் பதிலளிக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்! கீழடி அகழாய்வுக்குப் பின்னரே தமிழர் வரலாறு ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வு முடிவுகளுடன் தான் நாம் எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டியுள்ளது எனும் பதிலும் கூட சிந்திக்கத் தக்கதாகவே இருப்பது சிறப்பு!
‘கற்பனையோ கனவோ இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு செயலின் மீதான பரவசமே இருக்காது; கனவு காணுதல் என்பதே ஒரு விதமான திட்டமிடல்தான்' என்று அந்திமழை இளங்கோவன் தொகுத்து வழங்கியிருக்கும் கனவுப் படிக்கட்டுக்கள் அத்துணையும் புதுமை! அருமை!! வித்தியாசமான தேடல்கள் தொடரட்டும்!
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை - 614602
நேரில் சந்தித்த உணர்வு
கனவுப் படிக்கட்டுகள் தலைப்பிலான சிறப்புப் பக்கங்கள் சூப்பர்! உண்மையிலேயே எதைப் பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.டைரக்டர் மணிரத்னத்தின் பேட்டி, கட்டுரை டபுள் சூப்பர்! படங்களும் அப்படியே உள்ளன. நன்றிகள்! மணிரத்னத்தை நேரில் சந்தித்து உரையாடிய உணர்வைத் தந்தது.பீனிக்ஸ் பறவை (கட்டுரை) அருமை. எனக்கும் அந்த (ஆவண) அருமைப் படத்தை உடனே காண வேண்டும் எனும்ஆசையை உண்டாக்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேட்டி சிறப்பு!
அ.முரளிதரன், மதுரை -03
கூர்மை
‘படம் முடியும் வரை இருந்த அந்த பயம்‘ என்ற மணிரத்னம் நேர்காணல் நயம்! திரையுலகின் லேட்டஸ்ட் லோட்டஸ் பொன்னியின்செல்வன். இதை எடுத்த அனுபவத்தின் மீது முத்துராம லிங்கம் தொகுத்த கணைகள் கூர்மை!
என்.ஜே. ராமன்,திசையன்விளை
வலம்
அந்திமழை கைக்கு வந்ததுமே ஒருவலம் அதுவும் திரைவலம் வரை இமைத்திரைகள் விலகி வேகம் எடுக்க 65 ஆம் பக்கத்தில் நிலைகுத்தின கண்கள்! கோப்ராவில் விக்ரம்சொல்ல வேண்டாம் என்று டபுள் கேம் ஆடிய சாணக்கியத்தில் &நட்சத்திரம் நகர்கிறது நோக்கி நகர்ந்து & பா.ரஞ்சித்தைப் பாராட்டிப் பகிர்ந்து & கேப்டன் வெல்டன் என்றில்லாவிட்டாலும் வெல்கம் என்று வரவேற்று வெந்து தணிந்தது காடு வந்ததால்.. பார்ப்போம் என்று பார்த்து பிரமித்து பின் பாதியில் பின் வாங்கினாலும் வின் பண்ணியதை ஃபன்னாக கூறி, பபூனுக்குள் சாடினால்... நாடித்துடிப்புகள் ஓகே! இதயத் துடிப்புகள் ‘லபோலபோ'ன்னு அமைய திரைவலம் ருசிகரம்!
ஆர்.ஆர்.உமா, திசையன்விளை
பசிப்பிணி
பொன்னியின் செல்வன் நாவலைசிறுவயதில் படித்தவன். எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம். தங்கம் தென்னரசு பேட்டி ரொம்ப சிறப்பு. நம் முன்னோர் வாழ்ந்துவிட்டுச்சென்ற நாகரிகத்தை நாம் பெருமை படலாம். கடவுள் சிறுவர்களின் கனவில் தோன்றி சிரிக்க வைப்பார், வரவில்லை என்றால் அது அழும் நேரமாக மாறிவிடுகிறது என்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். காலையில்சாப்பிடாத பையன்கள் பற்றிய கட்டுரையில் வருவதுபோல் பையன்கள் சுருண்டு விழும் காட்சியை நானும் பார்த்திருக்கிறேன். நியாய விலைக் கடையில்சிறப்பான அரிசி, மதியம் சிறப்பான மதிய சத்துணவு. அதை நான் விரும்பி சாப்பிடுவேன். அதைசாப்பிடாத குழந்தையை என்ன சொல்வது? காலத்தின் கோலம். கண்ட பண்டங்களை வாங்கிசாப்பிட்டு தன் உடலை கெடுத்துக் கொள்கிறார்கள். இது தான் யதார்த்தம். காற்றோட்டம் இல்லாத இடத்தில் படுப்பதால் கனவு வருகிறது. காற்றோட்டமிருந்து அசதியாக இருந்தால் கனவுக்கே வழியில்லை. வைகைச்செல்வன் எழுதிய கட்டுரையில் புரட்சித் தலைவி என்ற தாயை நன்றியோடு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சண்முகவேல், கீழக்கலங்கல் - 627 860
கரைசேர்க்கும் கனவுகள்
வயதுக் காலத்தில் காதலின் ஈர்ப்பையும், தவிப்பையும் கண்முன்னே காட்சிகளாக நிறுத்தியது காமுத்துரையின் ‘பெண் பார்க்கும் படலம்' சிறுகதை.
கனவுகள் தான் நம்மைக் கரைசேர்க்கின்றன. சாதனை--களுக்கு வழி காட்டு--கின்றன. விருட்சங்களாக விளங்கி நிற்பதற்கு வித்திடுகின்றன. ஒவ்வொரு-வருக்கும் கனவுகள் இருக்க வேண்டும். அவை லட்சியங்-களாக அமைய வேண்டும். மொத்தத்தில் ‘கனவுப் படிக்கட்டுகள்' என்ற தலைப்பிலான சிறப்புப் பக்கங்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்போரின் விதவிதமான வித்தியாசமான வண்ணக் கனவுகளின் எண்ண வெளிப்பாடாக, கருத்து முத்து-களாகத் தந்திருப்பதுசிறப்பானது. பாராட்டிற்குரியது.தங்கம் தென்னரசுவின் நேர்காணல் தமிழனைப் பெருமை கொள்ள வைப்பதாக சிறப்பாக இருந்தது.
மு.ராமு, திருச்சி- 08
அசத்தல்
மாதந்தோறும் அந்திமழை வாசிப்பது உண்டு. சுவாரஸ்ய தலைப்புகளுக்குப் பஞ்சமில்லாத அந்திமழையில், சென்ற மாதம் கனவுப்படிக்கட்டுகள் என வைத்து அசத்தியிருந்தார்கள். இதழில் இடம்பெற்றிருந்த அனைத்துகட்டுரைகளும் பிடித்திருந்தன. சில கட்டுரைகளை என்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிடமுடிந்தது. அவற்றில் சில... குழந்தைகளின் கனவில் கடவுள்வருவார், குழந்தையோடு குழந்தையாக மாறி குஷிப் படுத்துவார் என்று எழுதியிருந்தார் ஒருவர். இதை எப்படி உங்கள் வாழ்க்கையில் ஒப்பிட முடியும்? என்றுகேட்பீர்கள். சொல்கிறேன் (பின் குறிப்பு எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை)என்னுடைய மாமாவின் குழந்தை தூங்கும் போது இந்த மாதிரியான அறிகுறிகளைப் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரியாது அவர்களின் கனவில் கடவுள் வந்திருக்கிறார் என்பது.கனவுகள் குறித்த பல கேள்விகள்அவ்வப்போது எழுவதுண்டு. அதற்கான பதில் இந்த இதழில் கிடைத்துள்ளது என்றே சொல்வேன்.ஒவ்வொரு வயதிற்கேற்ப கனவுகள் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. அதை இந்த இதழ் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
அட்ட சூர்யா, கீழ்வில்லிவலம் -604408
எளிமை
கனவு என்றாலே குழப்பங்கள் நிறைந்தது. கனவு ஏன் வருகிறது? அதற்கு என்ன காரணம்? வரும் கனவுகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை சென்ற மாத அந்திமழையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் கனவும் அவரின் வாழ்க்கை அனுபவம் சார்ந்தது என்பதை, கனவு பற்றிபேசியுள்ள பிரபலங்களின் கருத்துகள் மூலம் அறிய முடிகிறது.பென் ஸ்டோக்ஸ் பற்றிய ஆவணப்பட அறிமுகம் வெகு சிறப்பு. ஓய்வு பெற்றநீதிபதி சந்துரு, நீதிபதியான கதை பல உண்மைகளைப் பேசுகிறது. குழாயடிச் சண்டைக்குநீதிமான்களும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் கனவு பற்றிய பார்வை என்னவாக இருந்து வந்திருக்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார் பேரா.முரளி. பலவிஷயங்களை எளிமையாகசொல்ல முற்பட்டிருக்கிறார். தத்துவக் கடலில் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார்.
தாமோதரன், திருவண்ணாமலை
டிசம்பர், 2022