அர்த்தம்

அர்த்தம்
Published on

 எல்லா விஜய்சேதுபதி படங்களிலும் அவர் நடிக்கிறார் என்பதே தெரியாமல் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக்காரரை கவனிப்பதுபோல எதார்த்தமாக கதாபாத்திரம் ஆவதை கவனிக்கிறேன். நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் ஸ்டில்லுக்கும் சீதக்காதி ஸ்டில்லுக்கும் உள்ள வித்தியாசம்தான் விஜய் சேதுபதியின் பரிணாமம். தனித்துவமானதொரு ஹீரோவை குறுகிய காலத்தில் பலவித பாத்திரங்களில் வித்தியாசமான திறமையை வெளிப்படுத்திய உண்மைக் கலைஞரை உச்சி முகர்ந்து அட்டைப் படத்தோடு அந்திமழை கொண்டாடியதில் அர்த்தம் உண்டு.

அ.யாழினி பர்வதம், சென்னை -78

ஆழ்ந்த பார்வை

அவர்கள் அவர்களே தொடர் வரிசையில், இன்குலாப் பற்றிய ப.திருமாவேலனின் எழுத்துக்கள் உண்மையின் பிரதிபலிப்பு. அவரை போல் சொல்லும் செயலும் ஒன்றாக வழ்ந்தவர்கள் இலக்கிய உலகில் மிகச் சிலரே.

நாஸ்டால்ஜியா பாணி (திரைப்படங்களைப்) பற்றிய அந்திமழை இளங்கோவனின் முகப்புரை அருமை. பலவற்றை தேடித் தொகுத்த விதம் மிகச் சிறப்பு. பாலைவனச் சோலை போன்ற சில குறிப்பிட்டப் படங்களை அடுத்த பதிவில் இடம் பெறச் செய்யுங்கள்.

மனித நேய மருத்துவர் ஜெயராஜின் நேர்காணல் நெகிழவைத்தது. மனிதம் இன்னும் உயிர்த்திருப்பதற்கு இவர் போன்ற நல்ல நெஞ்சங்கள் தான் காரணம்.

 வட சென்னை பற்றிய திரை வலப் பார்வை தெளிவான ஆய்வுப் பார்வையாகவே அமைந்திருந்ததையும் குறிப்பிட வேண்டும். காதம்பரியின் திறனாய்வு கனக்கச்சிதம்.

கலாப்பிரியாவின் மொழியில் நான் எப்போதுமே கட்டுண்டு வருபவன். அதிலும் கலை சார் மொழி என்றால் அது கற்கண்டு மொழிதான். திகட்டாத இனிப்பு.

விஜய் சேதுபதியின் வித்தக திறமை பற்றிய இயக்குநர்களின் ஆழ்ந்த பார்வை அருமை. காலம் தந்த கலைஞன் அவர்.

 தஞ்சை என்.ஜே.கந்தமாறன்.

ராமாபுரம், சென்னை. 

மீடூ இயக்கம்

அந்திமழை நவம்பர்-2018 தீபாவளி சிறப்பிதழில் கோவை மண்ணின் மைந்தர் ராஜேஷ்குமார் எழுதிய ‘சுடும் தாமரைகள்' என்ற சிறுகதை ‘மீடூ'-வினால் இப்படி ஒரு நன்மையா என்ற வியப்பையும் புன்முறுவலையும் பூக்கச் செய்தது. 

இன்று சில ஆண்களின் அத்துமீறல்களினால் சில பெண்கள் சிதைக்கப் படுவதை மீடூ இயக்கம் தட்டிக்கேட்டு, அந்த அல்பர்களுக்குத்தண்டனை பெற்றுத்தர செயல்படுவதை ஆதரிக்கத்தான் வேண்டும். அதே நேரம் அது வசதியான பிரபலங்களை மட்டும்குறிவைத்து பல ஆண்டுகள் கழித்து அகழ்வாராய்ச்சி போல் தோண்டித்துருவி குற்றம் சுமத்துவது நிச்சயமாக பழிதீர்க்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.

மேட்டுப்பாளையம் மனோகர்

கோவை -14

சரியான கணிப்பு

இதழ் அட்டை நாயகன் விஜய் சேதுபதி திரைப்படத்தில் சந்தித்ததையும் சாதித்ததையும் மாற்றத்தின் கலைஞன் என்ற கட்டுரை வடிவில் பதிவாக்கி அளித்திருக்கிறார் அந்திமழை இளங்கோவன். தியேட்டர்களில் கிடைக்கும் கைதட்டல்களே என் வேலையை நான் சரியாக செய்திருக்கிறேன் என்ற திருப்தியையும், கடும் முயற்சி இருப்பின் எதையும்

சாதிக்க முடியும் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு என்ற பொருள்தரும் வண்ணம் அவரது தன்னம்பிக்கை தரவுகள் புதிதாய் திரைத்துறையில் கால் பதிப்பவர்களுக்கு வழிகாட்டும் என்பது திண்ணம். ஒரே பாத்திரத்தை எந்திரம்போல் திரும்பத்திரும்ப செய்வது தாங்க முடியாத ஒன்று. மாறுபட்ட பாத்திரங்களை ஒர் நடிகருக்கு கொடுக்காததும் ஒன்றுதான்; நட்டசெடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருப்பதும் ஒன்றுதான் என்று அகிராகுரசோவா கூறியதை அடியொற்றி பின்பற்றியதால்தான் விஜய்சேதுபதி வெற்றி பெற்றிருக்கிறார் என்ற கட்டுரையாளரின் கணிப்பு சரியே.

நவீன்குமார், நடுவிக்கோட்டை

சிறப்பு

நினைவில் எரியும் காதல் பக்கங்கள் சிறப்பு. படித்ததும் மகிழ்வுடன் கலந்த சோகமே ஏற்பட்டது. ராஜேஷ்குமாரின் கதை அருமை. வெற்றிச்செல்வன் உருவான கதையும் சிறப்பே.

 அ.முரளிதரன், மதுரை

கலாம் கனவு

ஐசியு வார்டில் மூன்றுநாட்களாக பிணத்தை வைத்து வைத்தியம் பார்த்ததாக மெடிக்கல் பில் வசூலிக்கும் கலியுகத்தில் பீஸ் வாங்காத டாக்டரா? அதுதான் தர்மம் என்று தத்துவம் பேசுகிறாரா? அடடா அவர்தான் அப்துல்கலாம் கண்ட கனவு. அந்த மனிதநேய மருத்துவருக்கு கடவுள் நீண்ட ஆயுளைக் கொடுக் கட்டும். இன்ஷா அல்லா!

அதுசரி, தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாலா அல்லது எந்த மாற்றமும் இல்லாமல் சூனியம் தொடர்வதாலா இரண்டு இதழ்களாக அந்திமழை பக்கங்களில் அரசியல் வாடையே காணோமே? நல்லதுதான். உபயோகமான பல விஷயங்கள் அதனால் கிடைக்கின்றன.

மல்லிகா அன்பழகன்,

சென்னை-78

சிறுகதை

 

சுடும் தாமரைகள் சிறுகதை படித்தேன்.

நானும்கூட (மீ டூ)

என்ற இயக்கம் நன்றா தீதா என்று

வீணாய் குழம்பி விசும்பிடுவோர்க்கு

விவரம் சொன்ன சிறுகதை

துருப்புச்சீட்டாய் நெருப்புப் பாட்டாய்

வாசகர் நெஞ்சில் அமருது கதை.

கவிஞர் சித கருணாநிதி, 

மருதூர் தெற்கு.

வாழ்த்து

 வில்லுக்குறி சகானாவின் கண் அறியா காற்று கவிதைத் தொகுப்பு விற்று இரண்டாம் பதிப்பு அச்சில் ஏற உள்ளது. ஒரு லட்சியவாதியாக மாறிய அந்த குழந்தையை ஜீவா படிப்பகம் வாழ்த்துகிறது. திருவான்மியூரில் டாக்டர் ஜெயராஜ் பற்றிய கட்டுரை என்னை மெய்மறக்கச் செய்துவிட்டது. பணிஓய்வு பெற்றபிறகு காசே வாங்காமல் மக்களை காப்பாற்றும் மருத்துவருக்கு நன்றி!

 இரா.சண்முகவேல்

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்.

காதலில் நனைந்து!

 இளமைத் துடிப்புடன் காதல் பக்கத்துக்குப் பக்கம் கடந்த இதழில் மிளிர்ந்தது. 96 திரைப்படத்தில் ஆரம்பித்து மக்களின் மனதில் இடம்பிடித்த காதல் திரைப்படங்களை நினைவூட்டி மொழி கடந்த காதல் உணர்வுகளையும் அணுக வைத்தது சிறப்பு. ஆளுமைகளின் நினைவுகள் சுகமானவை. என் பதின்பருவத்தில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் பார்க்க வீட்டில் தடை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தடையை மீறியே ஆகவேண்டிய ஆர்வத்தில் அப்படத்தைப் பார்த்தபோது விச்சுவும் மேரியும் என்னை வசீகரித்தார்கள். ஒரே நேரத்தில் வெளியான மூன்றாம் பிறை சீனு விஜி, வாழ்வே மாயம் ராஜா தேவி ஆகியோரின் காதல் மனதைப் பாதித்தது. அந்திமழையின் காதலில் நனைந்து மூழ்கி கரைந்தேன் இந்த தீபாவளி நாளில்.

ஆர்.மோகன், சேலம்

மனதில் பெய்தது

கண் அறியாக் காற்று தொகுப்பு மூலம் கவிதை உலகில் பிரவேசித்துள்ள கவிஞர்  சஹானாவை குறித்தும் அவர்தம் படைப்பு குறித்தும் அறியச் செய்துள்ளார் கட்டுரையாளர் மா. கண்ணன். இவரின் தந்தையும் ஒரு கவிஞரே என்பது குறிப்பிடத் தக்கது. மக்கள் நலனில் மட்டுமே அக்கறைக் கொண்டு பணம் வாங்காமலே நேரம் காலம் பார்க்காமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஜெயராஜ் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அவரே நடமாடும் தெய்வம். கோவேறு கழுதைகள் நாவல் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அது பேசப்படுவது, விவாதிக்கப் படுவது எழுத்தாளர் இமையத்தின் சிறப்பாகும்.  தமிழின் அனைத்து படைப்புகளும் பாரபட்சமின்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் போதே தமிழ் இலக்கியத்தின் உண்மையான முகம் வெளியில் தெரியும்.  நடிகர் விஜய்சேதுபதி ஓர் இயல்பான நடிகர். படத்திற்கு படம் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ஆற்றல் பெற்றவர். அவர் குறித்து மூன்று இயக்குநர்கள் கூறியிருப்பது கவனிப்பிற்குரியது. அவரின் பலம், பலவீனங்களையும் அறியச் செய்துள்ளனர்.  கவிஞர் இன்குலாப் குறித்து எழுதியுள்ளார் ப. திருமாவேலன்.  மக்களுக்காக எழுதிய கவிஞர் கவிதை குறித்து எத்தகைய விமரிசனம் எழுந்த போதும் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாத மாபெரும் கலைஞன். அவர் ஆத்மாவும் மக்களுக்காகவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்.

சிறப்புப் பக்கங்கள் சிறப்பாகவே இருந்தன. காதல் திரைப்படங்கள் குறித்த அனுபவங்களை இனிமையாக பகிர்ந்துள்ளனர். இதற்காகவே அந்தி மழை இளங்கோவன் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அந்தி மழை மனத்தில் பெய்தது போலிருந்தது.

பொன். குமார்,

 சேலம் 636006.

logo
Andhimazhai
www.andhimazhai.com