உலகின் மிகப்பெரிய நாற்காலி சிறுகதையில் எதார்த்தங்கள் நிறைந்த கதாபாத்திரத்தை எஸ்.ராமகிருஷ்ணன் கதைப்போக்கில் விஸ்தாரமாகத் தீட்டிக்காட்டியிருக்கிறார். இந்த உலகப் பெரு வெளியில் ஒவ்வொரு மனிதனும் தனக்கான ஆசைகளை நிலைநிறுத்தத்தான் போராடிக்கொண்டிருக்கிறான். வெற்றி என்னவோ உழைப்பவனுக்குத்தான் கிடைக்கிறது. யார் யாரோ ஆசைப்பட்டாலும் சிற்சபை' தன்னுடைய கல்லறைக்கு தான் செய்த நாற்காலியை அடையாளமாக விட்டுச் சென்றிருப்பது அடர்த்தியான கதைக்கருவுக்கு மெருகூட்டியிருக்கிறது.''மனுஷப்பயலாலே உட்காரவே முடியாத ஒரு நாற்காலியை செய்யணுமின்னுதான் ஆசை'' என்கிற சிற்சபையின் வார்த்தைகள் இந்தக் கதைக்கு அழகூட்டியிருக்கிற சொற்கள்.
கவிஞர் சித. கருணாநிதி, மருதூர் தெற்கு.
நவம்பர் 2017 அந்திமழை கதம்ப மலர் என்று கருதுகிறேன். சிறப்புப் பக்கங்களாக தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் குறும்பட உலகம், அசத் தலான 25 இயக்குநர்களைப் பற்றிப் படித்தபோது வியப்பும் மலைப்பும் ஏற்பட்டது. அருமை. அருமை. அந்திமழை ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா பற்றிய புகைப்படங்களுடனான தொகுப்புக் கட்டுரை பேஷ். பேஷ். படித்து முடித்தபோது விழாவில் கலந்துகொண்ட திருப்தி. நன்றி. உலகின் மிகப்பெரிய நாற்காலி சிறுகதை இதயத்தைத் தொட்டது. சிற்சபை கதாபாத்திரம் கண்களை குளமாக்கியது. சிறுகதை ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
இ.டி.ஹேமமாலினி, ஆவடி - 54
2ஜி வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்கு கணிக்க முடிகிறது, ஆனால் தீர்ப்பு எப்போது வரும் என்பது கன்னித்தீவு கதையாக இருக்கிறது. மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட எதிர்வினையால் அந்தப்படத்தை பார்க்கும் ஆர்வத்தில் தியேட்டரில் போய் படம் பார்த்தேன். மூன்று மணி நேரம் வீணானதுதான் மிச்சம். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அவலங்களை வைத்து படம் எடுத்தால் பத்து பார்ட் எடுக்கலாம். காமிரா கண்கள் பகுதியில் யானை படமும், வயல் ஓரம் சைக்கிள் அருகே அமர்ந்திருக்கும் குழந்தைகள் படமும் அருமை.
நிரஞ்சன், விருகம்பாக்கம்.
நவம்பர் 2017 இதழில் 2.0 கட்டுரை கண்டேன். மகிழ்ச்சியை தந்தது. என்னவாகும் 2ஜி வழக்கு கட்டுரையின் கடைசி பத்து வரிகள் சூப்பர். அந்திமழை விழா பற்றிய கட்டுரை அழகு. சென்னையைத்தவிர்த்து மற்ற ஊர்களிலும் இதே போல விழாக்கள் நடத்தி எங்களையும் சந்தோஷப்படுத்துங்கள், நன்றி.
அ.முரளிதரன், மதுரை - 3.
குறும்பட இயக்குநர்கள் பற்றிய சிறப்புச் செய்திகளோடு வந்திருக்கும் நவம்பர் 2017 இதழ் படித்தேன். அதில் என்னவாகும் 2ஜி வழக்கு கட்டுரை பற்றி சில வரிகள். மக்களாட்சியில் மக்கள் ஆதரவோடும் நம்பிக்கையோடும் ஆட்சிக்கு வருபவர்கள் பதவிக்கு வந்ததும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்கிற சிந்தனையே இல்லாமல் தன்னை எதிர்க்கும் எதிர்க்கட்சியை அழித்தொழிப்பது ஒன்றே தனது லட்சியமாகக் கொள்வதால்தான், பழிவாங்குவதாக நினைத்து எதிர்க்கட்சியினர் மீது பழி சுமத்திப் பொய் வழக்கு போடும் இழிநிலைக்கு ஆளாகின்றனர். பழி சுமத்தும் போது அதனை அறியாமல் பொது மக்களும் அதனை உண்மை என நம்புவதால் பல நல்லாட்சிகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன. நீதிக்கு சாட்சியங்கள் தேவையே தவிர, உண்மையல்ல. சட்டங்களில் உள்ள குறைபாடுகளில் இதுவுமொன்று. மத்திய மாநில அரசுகள் இதை மனதில் கொண்டால் பிறகு நீதிமன்றமே அவதூறு வழக்குகளே எங்களுக்கு வேதனை தரும் செய்தியாக இருக்கிறது எனப் புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது.
நெய்வேலி.க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
எழுதிய அரசியல் மருத்துவத்தில் எல்லாரையும் இழுத்துப்போட்டு கண்டபடி கலாய்த்துவிட்டு, நமக்கெதுக்கு ஊர் வம்பு என்று முடித்திருப்பது கோயம்புத்தூர் குசும்பு. இயக்குநர் அருண்குமார் ‘‘எ பிலிம் பை என்று போட்டுக்கொள்ள மாட்டேன்'' என்று கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டியிருக்கிறது. தமிழ் சினிமாத் துறையில் இப்படியொரு மனிதரா? ஆச்சர்யம்தான். தமிழ் சினிமாவில் காசிமேடு, புதுப்பேட்டை போன்ற ஏரியாக்களை கெட்டவர்களின் கூடாரமாக காட்டுவது வழக்கம். இப்பொழுது ஜாதி, தொழிலை மையமாக வைத்து படங்கள் அதிகமாக வருகிறது. இக்கருத்தை விருந்தினர் பக்கத்தில் வன்னி அரசு சுட்டிக்காட்டி இருப்பது சிறப்பு.
தமிழழகன், நாமக்கல்.
டெங்கு ஒழிப்புக்கு தமிழக அரசியல் அறிஞர்கள் கொடுத்த அறிவுரைகள் கேட்டு நொந்து போயிருந்தேன், இதில் கமல் தன் பங்குக்கு ஒரு கருத்தைச் சொல்லி குழப்பத்தை உருவாக்கினார். சித்த மருத்துவம், அக்கு ஹீலிங், நவீன மருத்துவம் என்று பல வகையான மருத்துவ தகவல் களை மருத்துவத்துக்கு வந்த சோதனை - கட்டுரையில் படித்தேன், உபயோகமாக இருந்தது. ‘‘அறிஞர் அண்ணாவைக் கவர்ந்த அமெரிக்க இயக்குநர்'' என்ற தலைப்பே ஈர்த்தது. இந்தியத் திரைப்படங்களுக்கு அடிப்படையாக நாடகங்களை சொல்லுவார்கள், ஆனால் ஆவணப்படங்களும் இருந்திருக்கின்றன.
காவினி, சென்னை.
நவம்பர் 2017 இதழில் கருந்தேள் ராஜேஷின் குறும்பட உலகத்திலிருந்து வெள்ளித்திரைக்கு என்னும் கட்டுரை நன்றாக இருந்தது. வணிக வெற்றியடைந்த இயக்குநர்களான நலன் குமார சாமி, கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இயக்குநர்களைப் பற்றி விரிவாகப் பேசும் ராஜேஷ் தன் குறும்படங்களின் மூலம் சினிமாவில் தனித்துவத்தைப் பதிவு செய்த காக்கா முட்டை மணிகண்டன், ப்ரேமம் படத்தின் மூலம் உயரம் தொட்ட அல்போன்ஸ் புத்திரனைப் பற்றி ஓரிரு வரிகளிலேயே சுருக்கமாக முடித்துக்கொள்கிறார். கொஞ்சம் விரிவாக அவர்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.
மது நீலகண்டன், திருவண்ணாமலை.
குறும்பட ஆவணப்பட இயக்குநர்கள் சிறப்பிதழான அந்திமழை நவம்பர் 2017 இதழில் பேராசிரியர் சொர்ணவேலின் நேர்காணல் நன்று. உலகெங்கிலுமுள்ள ஆவணப்பட இயக்குநர்களை அவர் மூலம் அறிந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இருபத்தைந்து ஆவணப்பட இயக்குநர்களை வரிசைப்படுத்தி பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இவ்வளவு பேரைப்பற்றிய குறிப்புகளை இதுவரை ஒரே இதழில் எங்கும் படித்ததுபோல் நினைவில்லை.
வாசுதேவன், சென்னை - 87.
அந்திமழை நவம்பர் 2017 இதழில் பலதரப்பட்ட அருமையான பதிவுகள். அழகான , நேர்த்தியான கருத்துக்களடங்கியப் பெட்டகமாய் ‘அந்திமழை‘. குறிப்பாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அய்யா அவர்களின் ‘உலகின் மிகப் பெரிய நாற்காலி‘ சிறுகதை என் சிந்தனையை கிளறி விட்டது.
தா.பிரபுபாரதி. விருத்தாசலம் .