பொழுதுபோக்கு என்றே அவதானிக்கப்படுகிற திரைப்படம் மூலமாகவும் கற்றுக்கொடுக்கிறார் கமல் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இதை அவருடைய ரசிகர்களில் கூட எத்தனை சதவீதம் பேர் அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூட கேள்விக்குரிய இடத்தை ஆக்கிரமிக்கிறது. கோடீஸ்வரனான ஆபீஸ்பாய் புதிய தகவலை தந்தது. அந்திமழையில் இடம்பெறும் நூல் அறிமுகம் பகுதி நூலை வாங்கும் ஆர்வத்தை தொடர்ந்து ஏற்படுத்துகிறது. உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.
பெண்கள் படம் போடாத அட, அசத்தலோ, அசத்தல் தீபாவளி சிறப்பிதழ். இதயத்துக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு ‘எக்செம்ப்ளெரி' எனலாம். அதைவிட இன்னும் உயர்ந்த வார்த்தை சொல்ல முடியுமா? உண்மையான சொல், இதயத்துக்கு ‘மிக' நெருக்கமான ஒரு ரொமாண்டிக் ரீவைண்ட், பக்கத்துக்கு பக்கம் அப்பப்பா உணர்வால் உருகி வாசகர்களையும் உருக வைத்து அந்த காட்சிகளையும், கண்முன் நிறுத்தி, மலரும் நினைவுகளாக நிழலாடியது! அந்திமழைக்கு ஒரு ‘ஓ'...
இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.
இத்தனை ஆளுமைகளைத் தொடர்பு கொண்டு, இத்தனை இதயத்திற்கு நெருக்கமான படங்களைத் தேர்வு செய்து, இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்ய வேறு யாரால் முடியும், அந்திமழையைத் தவிர?
பழமன், கோவை
முயற்சிக்கடலில் மூன்றாவது அணி கட்டுரை படித்தேன். தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் சந்தர்ப்பவாத கூட்டணி என்றுமே வெற்றி பெற்றதில்லை. தமிழ் மக்கள் நலன்காக்க கொள்கைக்காக கூட்டணி வைப்போர் யார்? பதவிக்காகக் கூட்டணி வைப்போர் யார்? என்பதை தமிழக வாக்காளர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். எனவே எவ்வளவு தான் முயற்சி செய்து மூன்றாவது அணி அமைந்தாலும் அது யாருக்கு லாபம் என்பதையும், யாரைப்பழிவாங்க நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் தெளிவாகவே புரிந்து கொண்டிருப்பவர்கள் தான் தமிழ் நாட்டு வாக்காளர்கள். மூன்றாவது அணி அமைப்போம் முந்தைய வரலாறும் அவர்களுக்கு தெரியும். ஆகவே முயற்சி கடலில் மூன்றாவது அணி என்பது ஓட்டைக்கப்பலே. எத்தனை மாலுமிகள் இருந்தென்ன பயன்? நம்பி ஏறியோர்களோடு மூழ்கப்போவது உறுதி. அதற்கு முன்பே விழித்துக்கொண்டு மக்கள் தங்கள், இருள் அகல எதிர் பார்க்கும் துடிப்புமாக இளைஞர்களையும், அனுபவம் வாய்ந்த அரசியல் நுண்ணறிவாளரையும் கொண்ட கட்சியை ஆதரிப்பதே அவர்களுக்கும் ஒரே வழி. திரைப்படங்களின் தொகுப்பு அருமை.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
தங்கள் மனங்களுக்கு நெருக்கமான திரைப்படத்தின் சிறப்புடன், அது தன்னை பாதித்த காரணத்தையும் விவரித்த, ‘நெஞ்சை அள்ளும் 40 திரைப்படங்கள், தொகுப்பு, தமிழ்ப்படவுலகின் பாதையில் ஒரு அழுத்தமான வரலாற்றுப் பதிவு. இந்த உன்னதமான பணியில் ஈடுபட்டவர்களின் உணர்ச்சிகளின் பண்முகங்களை நாம் பகிர்ந்து கொள்ளும் சுகானுபம் எனலாம். இந்த முயற்சி முடிவானதல்ல என்பதால், வாசகர்களையும் இக்களத்துக்கு வரவேற்றதில், அந்திமழையின் தனித்துவம் மிளிர்கிறது. காய்தல், உவத்தலின்றி திரைக்கலையின் வருங்காலம் சிறக்க வேண்டுமென்ற நோக்கிலான கவர் ஸ்டோரி மிகச்சிறந்த வழிகாட்டி. நாளைய கலைஞர்கள் இது போன்ற தொகுப்புகளை அறிந்து தெளிந்தாலே, நல்ல திரைப்படத்தின் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
‘முயற்சிக் கடலில் மூன்றாவது அணி' தலைப்பிலேயே குறிப்பிடப்பட்டு விட்டது கடலில் அணி என்று. கடலில் தோணி மிதக்கும், ஆனால் இந்த அணி முத்தெடுக்கப்போய் கிளிஞ்சல் கூட கிடைக்காமல் கடலில் கரைந்த உப்பாக, பெருங்காயமாக பெரும் காயத்துடன் வரப்போகிறது. இந்த அணி அமையும் போதே ம.ம.க தனியாகப் போய்விட்டது. அது இந்த அணியின் வலையில் விழுந்த ஒரு பொத்தல். இந்த அணியால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. வேறு ஒருவருக்கு மறைமுகமாக உதவும் அணியாக மாறப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை! ஆம்; வாக்குகளைப் பிரித்து, அதிமுகவுக்கு உதவப்போகிறது! வைகோ எப்போதும் சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவர் என்ற பெயரெடுத்துவிட்டார். இந்த அணி தமிழகத்தைப் பொருத்தவரையில் ஒரு பிணி, அவ்வளவே! திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளைத் தவிர மற்றவையெல்லாம் உதிரிகள்தாம், புரிந்து செயல்பட்டால் சரி.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு
திரைப்படங்கள் இன்று சமூகத்தில் ஓர் இன்றியமையாத இடத்தைப் பிடித்துவிட்டன. பொழுது போக்கு படங்கள் என்றும், மனத்தில் நின்று நிலைக்கும் படங்கள் என்றும் தாம் பிரிக்கப்பட்ட படங்களின் வரிசையில் இதயம் தொட்ட படங்கள் என்று திரைப்படங்களை நன்கு அறிந்த வித்தக எழுத்து இயக்குநர்களாக கொண்டு தொகுக்கப்பட்ட படங்களின் வரிசை சிறப்பு. ஒன்றுக்கொன்று சளைக்காத படங்கள். திரை ரசிகர்கள் சலிக்காமல் பார்த்த படங்கள் வரிசையில் குறிப்பாக ‘புதுவசந்தம்', ‘முதல்மரியாதை','ஆட்டோகிராப்' போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். அணிவகுத்த படங்களின் தொகுப்பு, தொகுப்பிற்கு அணி &அழகுச்சேர்த்தன. ஆம் அவை ‘இதயத்துக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்'.
குடியாத்தம் கான்,சென்னை
ஒரு நிகழும் அற்புதம் கமலைப்பற்றிக் கட்டுரை அவரது நடிப்பை போல் அற்புதமாகவும், ஈடிணையற்றதாகவும் இருந்தது.பருப்பு சாம்பார் வச்சிருப்பானோ - வாட்ஸ் அப்பில் வந்த கலாட்டாவை வெகுவாக ரசித்தோம்.
அ.முரளிதரன்,மதுரை
எஸ்.எஸ்.சிவசங்கர் ‘‘ பூப்போட்ட தாவணி'' தலைப்பில் விவரித்த பழைய பாடல்களின் இசையின் தாக்கம் ஒவ்வொரு இளவயது இருபாலரையும் பாதிக்காமல் விட்டதில்லை! இசை ஒருவரை ஆற்றுப்படுத்தும் என்பதைவிட பண்படுத்தும், மனிதனாக்கும் என்பது தான் சரி. காதலிக்கு உணவு இசை என்றார் ஷேக்ஸ்பியர். மனமுடைந்த கவிஞர் வாலிக்கு மனவலிமையை அளித்தது கவியரசன் கண்ணதாசனின் மயக்கமா? தயக்கமா? பாடல். பகுத்தறிவுவாதிகளுக்கும், தேசபற்று மிக்கவர்களுக்கும் உர மூட்டுவது இலட்சிய பாடல் இசையே! நாத்திகர்களை, ஆத்திகர்களாக்கியதும் தெய்வீக இசையே! முதுமையிலும், இளமைக்கால நினைவுகளை நெஞ்சில் நிழலாட வைக்கும் இசை ஒரு தெய்வீக வரம் தான்!
மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை