தீர்வு காணவேண்டும்

தீர்வு காணவேண்டும்
Published on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த மாலன், ஆர்.முத்துக்குமாரின் கட்டுரைகள் படித்தேன். அ.தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கும், தி.மு.க.வின் எதிர்பாராத தோல்விக்குமான காரணங்கள் முழுமையானதாக இல்லை! ஜனநாயக நெறிமுறைகளை குழிதோண்டிப் புதைத்த பல நிகழ்வுகளை வசதியாக மறந்துவிட்டு, தி.மு.க.வின் கோஷ்டி மோதல்களை துல்லியமாகக் குறிப்பிட்ட விதம் சர்ச்சைக்குரியது. ஆயினும் மிக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக தி.மு.க. பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஜெயலலிதா பின்பற்ற வேண்டிய நிதானம், பொறுமை, மரபு மீறாமை போன்ற விஷயங்களை நினைவுபடுத்தியதற்கு பாராட்டியே தீரவேண்டும்..! மாலன் குறிப்பிட்டபடி குதிரையை ஓட்டும் ஜெயலலிதாவும், கடிவாளத்தைப் பிடித்திருக்கும் ஸ்டாலினும் இணைந்து, மக்கள் நலன் என்ற இலக்கை அடைய வேண்டும். அதேசமயம், திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்று கருதப்பட்ட தே.மு.தி.க, வை.கோவின் புண்ணியத்தில் பூஜ்ய நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் தீர்வு காண வேண்டும்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்

வாழ்த்து

முதல் புத்தகத்தின் வாசனை & கட்டுரை சூப்பர் எனில் அதற்கான படங்களோ மேலும் அருமை. படிக்கப் படிக்க எழுத்துலகின் முதுகுப் பக்கத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நடுப்பக்க காமிரா கண்களுக்கு உரிய அஷ்வின் ரவிசங்கரனுக்கு வாழ்த்துகள்.

அ.முரளிதரன், மதுரை

அப்பாவின் வாசனை

அட்டைப்பட கட்டுரை நல்லதோர் திறனாய்வு கட்டுரை! முதல் புத்தகத்தின் வாசனை வெரைட்டி! சாரு நிவேதிதா அவர்களின் முதல் புத்தகம் பற்றிய கட்டுரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது! எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ''வெண்நுரை'' கதை கண்களைக் குளம் ஆக்கியது! மகள் என்றாலே அப்பா மீது மிக பாசமாக இருப்பார், படிக்க, படிக்க, மலரும் நினைவுகள் கண்முன் நிழலாடியது! அப்பாவை அண்மையில் இழந்து வாடுவதாலோ என்னமோ, நிறைந்த கண்களோடு தான் ஒவ்வொரு வரியையும் படிக்க முடிந்தது! இந்த மாத அந்திமழை ‘‘முதல் புத்தகத்தின்'' வாசனை, ஆனா எனக்கு ‘‘வெண்நுரை'' படித்தபோது ‘‘அப்பாவின் வாசனை தான் வந்து மறைந்தது!

இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.

மென்மையானதல்ல!

ஒளி வட்டத்திற்குள் அடைபடுவதற்கு முன்னால், அடையாளங்களைத் தேடிய அனுபவத்தைப் பற்றி எழுத்தரசர் கள் மிகச் சிறப்பாகவே விளக்கியிருந்தார்கள். மலர் மலர்வது போன்று மென்மையான காரியமல்ல, எழுத்தாளன் தன் முதல் புத்தகத்தின் வாசனையை நுகர்வதென்பது என்பதை உணர முடிந்தது. தங்களின் கடின முயற்சிக்குப் பின்னர் அவர்கள் பெற்றிருக்கும் இடத்தை விருந்தினர் பக்க எழுத்தாளரான கே.வி.ஷைலஜா அவர்களின் வார்த்தையில் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். ‘‘வாழ்க்கை மிக அற்புதமான ஒன்று தான். அது ஒரு போதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை நமக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும் எப்போதும்''. மேற்கண்ட இந்த வார்த்தைகளின் ஆழமான அனுபவத்தை சிறப்பு பக்கங்களின் மூலம் அந்திமழை வாச கர்களுக்கு வழங்கியிருக்கிறது.நன்றி என்ற மூன்றெழுத்துக்கும் மேலாக வேறு வார்த்தை அறியேன்!

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.

சுவாசிப்பு

பணவாசனை அறிவோம், புத்தம் புது ரூபாய் நோட்டுக் கட்டைக் கையில் எடுக்கும் போது ஒரு வாசனை வரும். அந்த வாசம் வாழ்க்கை மூச்சு. அது போல முதல் புத்தகத்தின் வாசனை என்பது பிறந்த குழந்தையை முதன் முதலில் அதன் பிஞ்சு விரல்களையும், கருமை போர்த்திய தலை முடியையும் மெல்ல வருடும் போது ஏற்படும் சிலிர்ப்பு, உணர்வு போன்றதே முதல் புத்தகத்தின் பக்கங்களை மெல்ல மெல்ல புரட்டும் போது ஏற்படும் உணர்வு. ஒரு நல்ல வாச கனின் இதயத்தை வருடும் ஒரு புத்தகம், அவனின் மூச்சு, சுவாசம். எழுத்துலக ஜாம்பவான்களின் முதல் புத்தகத்தின் வாசனை, அவர்கள் நுகர்ந்தது ஆகும். அதில் அவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி; இன்பம் அதை வாசகர்களோடு பங்கு போட்டுக் கொண்டது, பகிர்ந்து கொண்டது, அவர்களின் பரந்த எழுத்து ரசனைக்கு ஓர் எடுத்துக்காட்டு! வாசிப்பின் அருமையை உணர்ந்தவர்கள் வாசகனின் வாசிப்பின் மேன்மையை உயர்த்தியுள்ளார்கள், உணர்த்தியுள்ளார்கள்! அவர்கள் வாசித்தது, வாசகர்கள் சுவாசித்தது இரண்டுமே புத்தகம் தான்!

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு

சாரல்

எழுத்தாளர்கள் நூல்களைப் பதிப்பிக்கப்பட்ட சிரமங்கள் மிகுந்த வலியைக் கொடுத்ததோடு நிதர்சனத்தையும் காட்டின. அனைவருமே தங்கள் நூல்களைப் பதிப்பிக்க உதவிய நண்பர்களை நினைவுகூர்ந்திருப்பது நெகிழ்ச்சி கொள்ள வைத்தது. பெயர்களைப் படிக்காமலும் புகைப்படத்தைப் பார்க்காமலும் கூட இவர்தான் எழுதியிருப்பார் என்று யூகித்து விடக்கூடிய அளவுக்கு அவரவர் எழுதும் பாணியிலேயே எழுதியிருக்கிறார்கள். எஸ்.ரா. சிறுகதையில் வயதாகிப்போனதால் குழந்தை போலாகிவிட்ட தகப்பனுக்கு ஷேவிங் செய்வதில் நெருக்கமாகிய மகள் அவர் இறந்தபின் அழுகையில் நெஞ்சு கலங்கியது. மொத்தத்தில் ஜுன் மாத அந்திமழை வெயில் நேரத்திய சாரல்!

ஆர்.ஷமீமுன்னிசா, புதுதில்லி

சுகானுபவம்

அந்திமழை இதழைத் தொடர்ந்து படித்துவருகிறேன். வண்ணமயமான அழகிய வடிவமைப்பில் எப்போதும் ஈர்க்கிறது அந்திமழை. ஒவ்வொரு இதழும் சிறப்பிதழாக மலர்வதும் சிறப்பு. இந்த இதழ் முதல் புத்தகத்தின் வாசனை என மலர்ந்து உழைப்பையும் எழுத்தாளர்கள் பட்ட பாட்டையும் அவர்கள் வாயிலாகவே நாங்களும் அறிவது ஒரு சுகானுபவம் தான். நாஞ்சில் நாடன்,ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,கி.ரா.என ஆளுமைகளின் அனுபவம் நல்ல பாடம். எஸ்.ராவின் வெண்நுரை சிறுகதை மிக துல்லியமாக ஒரு தந்தைக்கும் மகளுக்குமான நெருக்கத்தை படம் பிடித்துக் காட்டியது. காமிராக்கண்கள் நிழற்படங்கள் தேர்ந்த கைவண்ணம். அந்திமழையில் நனைய ஒவ்வொரு திங்களும் கடையில் காத்திருப்பேன். புதுவைக்கு தாமதமாகவே வருகிறது. அதனால் சில மாதங்களில் மழையில் நனையமுடிவதில்லை.

மு.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி

குளிர்ந்தது!

இருபது ரூபாயில் என் இதயம் குளிர்ந்தது! முதல் புத்தகத்தின் வாசனை... பல எழுத்தாளர்களின் அனுபவங்கள் வீசின! சிந்திக்க வைக்கும் சிறப்புக் கட்டுரைகள்! தன்னம்பிக்கை ஊட்டிய விருந்தினர் பக்கம்! உறவின் மேன்மையை உணர்த்தும் சிறுகதை! புத்திக்குள் புதுயுகம் கண்ட களிப்பில் நான்..!

எஸ்.டி.பிரபுபாரதி, விருத்தாசலம்

logo
Andhimazhai
www.andhimazhai.com