மிகவும் பயங்கர கர்ஜனையுடன் மனதைக் கிழித்தது (உத்தம) வில்லன்கள் சிறப்பிதழ். அன்றைய, இன்றைய வில்லன்களென்று அனைத்து வில்லன்களையும் ஒரே கூட்சி ல்(அந்திமழை)ஏற்றி, எங்களை கலங்கடித்து விட்டீர். அவர்களின் பரிமாணங்கள், சறுக்கிய வரலாறு என்று விலாவாரியாக ‘வூடுகட்டி' அடித்து விட்டீர்கள். மொத்தத்தில் வில்லன்களைப் பற்றிய என் சைக்ளோபீடியோவாக இவ்விதழ் அமைந்துள்ளது. கட்டுரையாளர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்தை உள்வாங்கியபடி சிறப்பிதழை வெற்றி பெற வைத்துள்ளார்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்!
சூர்யநிலா, சேலம்
மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் : கடின உழைப்பாலும் தியாகத்தாலும் செயற்கரிய சாதனைகளை செய்தவர் என்பது போல் மோடி பிராண்ட் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதையும் தாண்டி, எந்த ஒரு பிராண்டையும் ஒரு சில மாதங்களில் உருவாக்கிவிட முடியாது. கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக மோடி செய்தது அவருக்கு கை கொடுத்தது என்பன போன்ற பாஸிட்டிவான கருத்துகளே மோடி பிராண்ட் வெற்றியின் ரகசியம். கட்டுரை அற்பதமுங்கோ!
முத்தூஸ், தொண்டி
உத்தம வில்லன்கள் கட்டுரை, படங்கள், பேட்டிகள் அருமை! அதை விட ஒவ்வொரு கட்டுரையிலும் கடைசியில் வரும் சில வரிகள் சும்மா ‘நச்'னு இருக்கு தலைவா. அட்டைப்படத்தில் நிச்சயம் மாற்றம் தேவை...!
அ.முரளிதரன், மதுரை.
வில்லன்களுக்கும் ஒரு சிறப்பிதழா... சிறப்பிதழ்களிலே இதுதான் தனிச்சிறப்பிதழ் எனத்தோன்றியது. வில்லன்களையே கதாநாயக ரேஞ்சில் வைத்துப் பார்த்தாற் போல் அமைந்திருந்தது. உங்கள் முயற்சியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! அந்திமழையின் சிறப்பிதழ்கள் எப்போதும் தனிச்சிறப்புதான்! பலே அட்டகாசம்தான்!
ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்
கோடையின் தாகத்தால் வாடியிருக்கும் வாசகர்களுக்கு ‘‘கதம்பமாலையாக'' கோர்த்து அந்திமழை குளிர்வித்தது! பிரமாண்ட மோடி வெற்றிவியூகம், பேரறிவாளனின் சிறப்பு பேட்டி என, அதிரடி தொகுப்புகள்,வில்லிகளையும் விட்டு வைக்கவில்லை, நன்றி! கேரளாவில் உம்மர் என்ற வில்லன் நடிகருக்கு ‘சுந்தரனாய வில்லன்' என்று பெயருண்டு, அந்த தகுதி நம்ம வீரப்பாவுக்கும் தகும்!
இ.டி.ஹேமமாலினி,சென்னை
உத்தம வில்லன்கள் என்னும் தலைப்பில் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியான ‘நெகட்டிவ் ரோலை' அங்குலம் அங்குலமாக படம்பிடித்திருந்தது. கட்டுரை தீட்டியவர்கள் அனைவரும் நம்முடைய வில்லன்கள் ஒருவரையும் விடாமல் எப்படித்தான் குறிப்பிட்ட வசனம் அல்லது காட்சியோடு தொகுத்தார்களோ தெரியவில்லை. நன்றி!
அ.கருப்பையா, பொன்னமராவதி
தோடியா? முகாரியா? ஒவ்வொரு இதழின் வாயிலாக ஒவ்வொரு புதுமை நிகழ்த்திவரும் அந்திமழை ஜூன் தமிழ் சினிமா ஒரு புதுமையே. புதிய பிரதமர் பற்றிய சிறப்புக்கட்டுரை பிராண்ட் மோடி படித்தேன். அது மோடி அரசின் குறுக்கு வெட்டு தோற்றம். நாட்டை ஆள்வதற்கு மூளை மட்டும் போதாது; இதயமும் வேண்டும்! அன்று வேதம் படித்தவன் அறிவாளி. ஆனால் இன்று அறிவியல் அறிவு படைத்தவனே அறிவாளி. மாரடைப்பு என்றால் உடனே மருத்துவமனையில் சேர்க்காமல், அவனுக்கு வேப்பிலை அடித்து விபூதி பூசிவிடக்கூடாது. இதனை உணர்ந்து பணியாற்றினால் ‘மோடி ஆட்சி' தோடி ராகம்.
நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன் முதலானோரை, திரையில் காணும் போது, சபித்துக் கொட்டாத அந்தக்கால ரசிகர்/ ரசிகைகள் இல்லையென்றே சொல்லலாம். அத்தகைய தீய குணங்களை திரையில் கண்டவர்கள், அவற்றை வெறும் நடிப்பு என்று புரிந்துகொள்ள பல ஆண்டுகளாயிற்று. ரத்தமும் சதையுமாக நமது வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது சினிமா என்றால் அதில் மிகையுமில்லை. ரஞ்சன்(சந்திரலேகா) எனும் வில்லன் குறித்து விரிவாக எழுதியிருக்கலாம். எனினும், எழுபதாண்டு கால தமிழ் சினிமாவின் வில்லன்,வில்லிகளின் நடிப்பாற்றலை அந்திமழை பதிவு செய்துள்ளது. கட்டுரைகளில் இடம்பெற்ற புகைப்படங்கள் மனதை கொள்ளை கொள்ளச் செய்தன.
கு.இரவிச்சந்திரன், ஈரோடு
மோடியின் பின்புலமாக இருந்தது மிகப் பிரமாண்டமான மார்க்கெட்டிங் யுத்தி என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் கட்டுரையாளர் ஆதித்தன். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு மீது மக்களிடயே நிலவிய கசப்புணர்வு காங்கிரஸ் எதிர்ப்பலையாக இந்தியா முழுவதும் எழுந்தது. இதனை மோடியின் கூட்டாளிகளான கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊடகங்கள் வலைத்தளங்கள் போன்றவை மூலம் மோடி அலையாக உருமாற்றம் செய்வது எளிதாயிற்று. பல ஆயிரம் கோடிகள் இதற்காக செலவிடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் இத்தகு அலை இராது என்று நம்பலாம். வட இந்தியர்களும் மத நல்லிணக்கத்திற்கு விரைவில் வந்து விடுவார்கள்.
க.சி.அகமுடைநம்பி, மதுரை
சொல்லில் குரலில் வித்தகம் காட்டிய ‘உத்தமர்கள்' பலர். அவர்களில் தலையாய ஒருவர் எம்.ஆர்.ராதா. ‘நடிகவேள்' பட்டம் பெற்றவர். அந்தக் கரகர குரல் ஒரு காராசேவு. அந்தக்குரலில் இருக்கும் கேலி,ஒரு ஜாலி. ‘ அடியே காந்தா...' என்று அவர் உச்சரித்த குரல் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது.சபாஷ் மாப்ளே படத்தில் சிவாஜி மாமா என்பார், ராதா மாப்ளே என்பார். அந்த மாமா, மாப்ளே பல இல்லங்களில் உறவின் உன்னதமாக விளங்கியது. அவரைப்போல் அரசு அடக்கு முறைக்கு ஆளான நடிகர்கள் கிடையாது. அவரின் ‘கீமாயணம்' பட்ட பாடு அந்த ராமன் கூட பட்டிருக்கமாட்டான். இந்தப் பெயருள்ள நாடகம் நடத்த அனுமதி கிடையாது என்று அரசு மறுத்தால்,மறு நாள் அதே நாடகத்திற்கு வேறு பெயர் சூட்டி அனுமதி பெற்று நடத்தி விடுவார். அவர் மேடையில் நடிக்கும்போது கலாட்டாக்கள்,கல்லடிகள் சர்வ சாதாரணம்.தைரியமாக மேடைக்கு வருவார்.என் நாடகத்தை பார்க்கப் பிடிக்காதவர்கள் எழுந்து போங்கள் வெளியே என்று சிங்கமென முழங்குவார்.கடைசிவரைத் தந்தை பெரியார் ஒருவரை மட்டுமே தலைவராக ஏற்று நின்றார்.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.