மே மாத அந்திமழை, கோடையில் அபூர்வமாய்ப் பெய்யும் மழையாகக் குளிர்வித்தது. அரசியல் முதல்வர் ஸ்டாலினுக்குப் புதிதல்லதான். ஆனால், அவர் தனித்துத் தலைமை ஏற்று முதல்வராகப் பணிபுரிவது புதிது. அதற்கு அவருக்கு வழிகாட்டும் விதமாக வாசகர்களை யோசனை சொல்ல வைத்து அதனை புதிய அரசு என்ன செய்யவேண்டும் என்று வெளியிட்டு, அரசு இயந்திரத்திரத்திற்கு மசகுபோல வெளியிட்டு பிசகு இல்லாமல் பெருமை தேடிக் கொண்டுவிட்டது அந்திமழை. ஓடிடி என்றால் என்ன என்றே தெரியாத பாமரர்க்கும் விளங்கும்படி மாற்றத்தை எளிமையாகப் புரிய வைத்த கட்டுரை அருமை!
மாபெரும் தாய் சிறுகதையில் ஆச்சியின் பாத்திரம் அச்சமூட்டுவதாக இருந்தாலும் அவளை மக்கள் பயத்தோடு இல்லாமல் பயபக்தியோடு தாயாகவே பார்ப்பதும், அவளே வாழும் பூமியாகப் பரிமளிக்கிறாள் என்பதை வார்த்தைகளாலேயே உணரச் செய்திருப்பதும் புதிரான புரிதல்!
-ஆர்.ஜெயராமன்,சென்னை.
இதயம் கனத்தது!
அச்சத்தை விட கொடிய வைரஸ் உண்டா? என்ற தலைப்பிலான கட்டுரை மற்றும் படங்கள் சூப்பர். எழுதிய விரல்களுக்கு வைர மோதிரம் அணிவிக்கத் தோன்றியது; பாராட்டுகள். மக்கள் தீர்ப்பில் மலர்ந்த சூரியன் அட்டைப் படம் மற்றும் கவர் ஸ்டோரி நன்று.
பெரியாரிய தொகுப்பாளர் & தலைப்பிலான கட்டுரை சூப்பர். கட்டுரையைப் படிக்கும் போது இதயம் கனத்தது என்னவோ நிஜம்!
ஒற்றைக் குழந்தைகளின் நாடு தலைப்பிலான கட்டுரை அருமை!
-அ.முரளிதரன், மதுரை
பாராட்டுக்குரியது!
மக்கள் மாற்றம் காண நினைத்தார்கள், அது நடந்துவிட்டது. முக்கியமான ஐந்து கோப்புகள் கையெழுத்தாகி உள்ளன. பாராட்டுகள்.
பிரசாந்த் கிஷோர் பல முதலமைச்சர்களை உருவாக்கியுள்ளார். தடுமாறும் போது கைப்பிடித்து உதவுவது போல் உதவியிருக்கிறார். மாதந்தோறும் கால்நடை மருத்துவர்கள் பற்றி அரிய கருத்துகளை பதிவு செய்கிறீர்கள். வாயுள்ள ஜீவனைக் காப்பாற்றும் போது வாயில்லா ஜீவன்களைக் காப்பாற்றுவது, பாராட்டுக்குரியது!
பெரியார் பெருந்தொண்டர், ஆனைமுத்துவின் சாதனை பாராட்டுக்குரியது. கடைசி வரை பெரியாரிடம் தாக்குப்
பிடிக்கமுடியவில்லை தோழர் ஜீவா போல். முகிலன் எழுதியிருப்பது அவரோடு இருந்ததால், சில செய்தி புதுமையாக இருந்தது. பிற்படுத்தப் பட்டவர்களின் இடொதுக்கீடு 31 விழுக்காடில் இருந்து ஐம்பது சதவீதமாக உயர்ந்தது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் என்பது பெருமைக்குரிய விஷயம். பெரியார் வயதிற்கு ஈடுகட்டி வாழ்ந்தவர்.
கொரோனா என்ற நோயைச் சொல்லி பயமுறுத்துவது மனிதர்களை கொல்வது மாதிரி எனச் சொன்ன கட்டுரை தெளிவு. One Child Nation ஆவணப்படம் பல கருத்துகளை கூறுகிறது.
மொத்தத்தில் அந்திமழை இந்த மாத இதழ் வெகு சிறப்பு.
-இரா.சண்முகவேல் , கீழக்கலங்கல்
ஒரு நாவலைப் போல்!
அந்திமழை மே இதழ் - அத்தனை பக்கங்களும் அடர்த்தி மிகுந்த அழகு நிறைந்த செவ்விதழ். 'மக்களின் தீர்ப்பில் மலர்ந்த சூரியன்' திடீரென்று முளைத்த தீப்பொறி அல்ல, ஆர அமர உழைத்துக் களைத்த ஒப்பற்ற சேவைக்குப் பின்னால் வந்த உழைப்பின் உச்சம் என்பதை அரசியல் கட்டுரை அலசி அரங்கேற்றியிருக்கிறது. கிஷோரின் மேற்கு வங்க ஆரூடம் வெகுவாக விமர்சிக்கப்பட்டு உண்மையானதை உணர்த்தும் ‘‘மதிமலர்'' கட்டுரை வெகு சிறப்பு. ராமரின் கதையை ஆதியோடு அந்தமாக அமர்க்களப் படுத்தியிருக்கிறார், பிரகாஷ். பொன்னுப்பாண்டியனின் கால்நடைகள் பற்றிய கட்டுரை ஒரு நாவலைப் போல சென்று நம் மனதை உற்சாகப்படுத்துகிறது.
ஆனைமுத்து அய்யாவின் பதிப்புகள் பற்றிய விமர்சனமும் இன்றைய அவரது தேவையையும் வெகுவாகப் பேசப்பட்டது மகிழ்ச்சி. அச்சத்தை விட கொடிய வைரஸ் இல்லை என்பதை அந்திமழை இளங்கோவன் அவர்கள் வெகுசிறப்பாய் பதிவு செய்திருக்கிறார்.
-கவிஞர் சித. கருணாநிதி, மருதூர் தெற்கு
பயனுள்ள கட்டுரை
அந்திமழை இளங்கோவனின் 'அச்சத்தை விட கொடிய வைரஸ் உள்ளதா?' என்ற கட்டுரை என்னைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. 'வெறும் அச்சத்தை விட, மரண அச்சம் மிகக் கொடூரமானது. அதை எப்படி வெல்வது?' என்ற மிக முக்கியமான கேள்விக்கு விடையாக ஏராளமான சிந்தனையாளர்களின் கருத்துகளைத் தொகுத்துச் சொல்லியிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. ‘விழிப்புடன் இருங்கள்.
அச்சத்தைப் பெருக்கும் எந்தக் காணொலியையும் காணாதீர்கள். பெருந் தொற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்காதீர்கள்' போன்ற அறிவுரைகள் நடைமுறைக்கு ஏற்றது. இறுதியாக 'எத்தனையோ இடர்களை வென்ற மானுடம் கொரோனாவையும் வெல்லும்' என்று தெளிவாக தன்னம்பிக்கையூட்டும் அந்திமழையின் இந்தக் கட்டுரை, சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட பயனுள்ள கட்டுரையாகும்.
- சின்னஞ்சிறுகோபு, சிகாகோ.
தீர்க்கதரிசி
'அந்தி மழை' இதழ் திரைப்பட த்துறையின் புதிய பரிணாம வளர்ச்சியை வாசகர்களுக்கு வழங்குவதில் எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது.திரைப்படம் வெளிவந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. அது டெண்டுக் கொட்டாய், திரையரங்கம், மால் என்று வெளியாகி தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. அதை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கோ. தனஞ்செயன் கட்டுரை இருந்து. அவர், திரைப்படத்துறை எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை நிகழ் காலத்தில் உணர்த்தும் திரைப்படத் துறையின் தீர்க்கதரிசி. இந்தக் கட்டுரையை வாசித்தால், நிகழ் காலத் தமிழ் திரைத் துறையை அறிந்து கொள்ளலாம்.
டாக்டர் குரு, சேலம்.
எளிமை!
முகப்பில் மலர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓவியம், அதற்கான பொருத்தமான தலைப்பு, அவரிடம் மக்கள் வைக்கும் எதிர்பார்ப்புகள் என அனைத்துமான அம்சங்களையும் தந்தமைக்கு நன்றிகள். ஓடிடி தளங்களின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக எளிமையாக உணர்த்தி விட்டார், நிறுவிய ஆசிரியர். சிறப்புப் பக்கங்கள் மிகச் சிறப்பு. நெகிழ வைத்தது சீன ஆவணப்படமான ஒற்றைக் குழந்தைகளின் நாடு விமர்சனப் படைப்பு.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89
மாற்றம்
மே மாத அந்திமழை இதழில் ஓடிடி எனும் இணையதளம் வழியே திரைப்படம் வெளியிடுதல் பற்றிய கட்டுரைகள் காலத்தின் மாற்றத்தையும்,தற்போதைய தேவையையும் பொட்டில் அடித்தது போல புரிய வைத்தது. தமிழ் சினிமா ஓடிடியில் பயணித்த விதமும், சாதனை செய்து இன்று திரையரங்குகள் அளவில் வசூலையும் அள்ளி வெற்றி நடை போடுவதும் ஆச்சரிப்படுத்தியது. ஒவ்வொரு மொழியிலும் ஓடிடி தளங்கள் திரைப்படங்கள்,வெப்சீரியஸ்கள் வெளியிட்டு சினிமா வரலாற்றையே புரட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. மாற்றத்தை ஏற்றுகொள்வது மனித வாழ்க்கைக்குப் புதியதல்ல.
- மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.
யோசிக்க வேண்டியது!
மாற்றம் மட்டுமே மாறாதது! என்ற கார்ல் மார்க்ஸின் இந்த வார்த்தைகளைத் தவிர மற்ற எல்லாமும் இன்று வரை மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் திரைத்துறையிலும் எத்தனையோ மாற்றங்கள், காலங்கள் தோறும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தொலைக்காட்சி வந்தபோது அது சினிமாவை அழிக்கும் என்றார்கள். ஆனாலும் சினிமா, தளராமல் வளரத்தான் செய்தது. இப்போது ஓடிடி, திரையரங்குகளை நசியச் செய்துவிடும் என்று
சொல்கிறார்கள். இந்த நிலையில் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பலரது கருத்துகளை அலசி ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையிலான கட்டுரைகளை வெளியிட்டு, பிரமாதப்படுத்திவிட்டீர்கள்.
தமிழில் வெப் சீரிஸ் ப்எழுத்தாளர்கள் இல்லை என்ற கட்டுரை, இலக்கியப் பஞ்சமா? அல்லது வெப் சீரிஸை யாரும் இன்னும் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளவில்லையா என்று யோசிக்க வைக்கிறது!
புதிய படங்களை முதலில் தியேட்டரில் வெளியிட்டு பிறகு ஓடிடியில் வெளியிட்டால், திரையரங்குகளின் நசிவைத் தடுக்கலாம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் சொன்னது, அவசியம் யோசிக்க வேண்டியது.
-என்.ஜெயசீலன்,காரைக்குடி
ஜூன், 2021