நாஞ்சில்நாடன் பலாப்பழம் குறித்து எழுதிய கட்டுரை பலாவினும் கூடுதல் சுவையூட்டிய அற்புதமான கட்டுரையாக அமைந்தது எனக்கு. அடுத்ததாக எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காற்றைப்போல பயணி' கட்டுரை கே.பாலசந்தரின் நூல்வேலி திரைப்படத்தில் இடம்பெற்ற காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி என்ற பாடலை நினைவுபடுத்தத் தவறவில்லை.‘வாடகை வீடு' பகுதியில் இளவரசு மகனின் கல்விக்கு உதவிய பெருமிதத்துக்குரிய மனித நேயரான அவரது வீட்டு ஓனரின் உதவி காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது என்பதையே எனக்கு நினைவூட்டியது.
பா.செல்வநாயகம், சென்னை -82
சிறப்பிதழ் தலைப்புகளைத் தேடிப்பிடிப்பதில் தங்களுக்குள்ள தனித்துவம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. வீடு, வாடகை, மனிதர்கள் சரியான பார்வை. ஆனால் எல்லோருமே பேசியது வாடகை வீட்டில் இருந்தபோது சந்தித்த அனுபவங்களை. மருத்துவர் புகழேந்தியின் அனுபவங்கள் மட்டுமே வீட்டுக்குச் சொந்தக்காரராக. நாஞ்சில் நாடனின் சிறுகோட்டுப் பெரும்பழம் முக்கனிகளில் ஒன்றைப் பற்றியதே என்றாலும் ஒருங்கிணைந்த சுவையைக் கொண்டிருந்தது. அவரைக் கொஞ்சம் மற்ற கனிகளைப் பற்றியும் எழுதச் சொல்லுங்களேன். பயணம் பற்றிய மூன்று படைப்புகளுமே அருமை. எஸ்.ரா வழக்கம் போலவே மனதில் சிம்மாசனம் போட்டுக்கொண்டார். இரா.கௌதமனின் சாலையின் பாடல் சரியான திறனாய்வு.
-தஞ்சை. என்.ஜே.கந்தமாறன், சென்னை -89
நடிகர் இளவரசு, தாமிரா, பாமரன், வண்ணநிலவன், உள்ளிட்ட கலைஞர்கள் வாடகை வீட்டில் வசித்த அனுபவங்கள் சுவாரஸ்யமானது. புதிதாக வாடகை வீடு தேடுபவர்களுக்கு அறிவுரைகள் எனலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையான காற்றைப்போல பயணியில் பயணங்களின்போது பெற்ற எழுத்தாளனின் அனுபவத் தேடல்கள் அழகுணர்ச்சி குன்றாவண்ணம் பதிவாகியிருக்கிறது. நாஞ்சில் நாடனின் கட்டுரை பலாப்பழத்தை விரும்பாதவர்களையும் விருப்பத்தோடு உண்ண வைக்கும் வண்ணம் வகைவகையான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தி அசத்த வைத்திருப்பது அருமை. உஷா தீபனின் புகைச்சல் சிறுகதை ஒரே கதாபாத்திரத்தை அக புற வாழ்வைச் சித்தரிக்கும் விதமாக கதைசொல்லி கட்டமைத்து சிறக்க வைத்திருப்பது அருமை.
-நவீன் குமார், நடுவிக்கோட்டை.
இல்லம் என்பது தங்குமிடம் மட்டுமல்ல. மகிழ்ச்சி பொங்குமிடம். 1962ல் நெய்வேலி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த போது நிறுவனமே வழங்கிய குடியிருப்பில் மொத்தம் நான்கு பேர். நினைத்தாலே இனிக்கும் அந்த வாழ்க்கை. பிறகு அதே நெய்வேலி மந்தார குப்பத்தில் திருமணத்திற்குப் பிறகு 1963ல் தனி குடியிருப்பு. 1992ல் பணி ஓய்வு பெறும்வரை அதே இல்லம்தான். 1993ல் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான கொரநாட்டுக் கருப்பூருக்கு குடும்பத்தோடு வந்துவிட்டேன். ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நெய்வேலி சென்றபோது நாங்கள் வாழ்ந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றோம். குறுகிய காலத்தில் எத்தகைய மாற்றம்? 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட அந்தப் பகுதியில் கருவை மரக்காடு களுக்கு நடுவே அந்த குடியிருப் பைத் தவிர அத்தனை வீடுகளும் நிறுவனத்தால் இரண்டாம் சுரங்க விரிவுக்காக இடிக்கப்பட்டுவிட்டன. வாடகைதாரர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அத்தனையும் அனுபவ கருப்பஞ்சாறு. மற்ற கட்டுரைகள், சிறுகதைகள் அனைத்தும் அந்திமழைக்கே உள்ள தனி முத்திரை. வாழ்க்கையே மகிழ்ச்சி நிறைந்த வாடகை வீடே என்பதை அந்திமழை அழகாகச் சுட்டிக் காட்டிவிட்டது.
நெய்வேலி.க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்.
திரைவலம் கட்டுரை மற்றும் படங்கள் சூப்பர். அட்டையில் தாடியுடனான இரு தலைவர்களின் படங்கள் நன்றாகவே இல்லை. திருஷ்டி படம் போல இருந்தது. இனியாவது பார்த்துப் போடுங்கள். இது எனது ஆர்டர் இல்லை, வேண்டுகோள்தான்.
-அ.முரளிதரன், மதுரை -3
பயணம் தொடர்பான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை பயணம் மூலம் ஏற்படும் அனுபவம் வெளியுலக தொடர்பின் அவசியம், தேவையற்ற பயம், சூழ்நிலைக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை தெளிவுபடுத்தியது. பயண நூல்கள் அறிமுகம், பயணம் தொடர்பான சினிமாக்களைப் பற்றிய விமர்சனம் ஒரு சிறந்த முயற்சி. பயணம் சார்ந்த திரைப்படங்கள் தமிழில் நிறைய வரவேண்டும்.
முக்கனிகளில் பலாவும் ஒன்று. ஒரு முழு பலாப்பழத்தையும் சுவைத்து சாப்பிட்ட அனுபவத்தை கொடுத்தது நாஞ்சில் நாடனின் கட்டுரை. சர்க்கரை குறைபாடு உள்ள எண்ணற்ற இந்தியர்களில் நானும் ஒருவன். என்னை பலாப்பழத்தை சாப்பிடத் தூண்டியது கட்டுரை.
-ஆர்.மோகன்,
சேலம்-1
அந்திமழை மே-2018 இதழில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய காற்றைப்போல பயணி என்ற கட்டுரை உலகத்தைச் சுற்றிவர வேண்டும் என்ற உத்வேகத்தை எல்லோருக்கும் தூண்டும். உலக நாடுகள் பலவற்றுக்குப் பயணித்த பேறு பெற்ற எஸ்.ரா ‘‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'' என்று வாசகர்களை ஊக்கப் படுத்துவது அவரது நல்ல மனதின் வெளிப்பாடு.
வாடகை சிறப்பிதழ் வெளியானது மிகவும் அவசியமான ஒன்று. பொதுவாக வீட்டுக்காரர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் நல்ல உறவு இருப்பது அரிது. இவ்விஷயத்தில் நடிகர் இளவரசு கொடுத்து வைத்தவர். அவருக்கு தந்தையைப் போன்ற வீட்டுக்காரரரை இறைவன் அமைத்துக் கொடுத்தது அதிர்ஷ்டம்தான். ஆனால் தாமிராவின் அனுபவம் சோமானமானது. தாமிரா முஸ்லிம் என்று தெரிந்ததும் அவரின் வீட்டுக்காரர் முகம் மாறி வெறுப்பைக் காட்டியது, தாமிராவுக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கே தலை குனிவு. இயக்குநர், ஒளிப்பதிவாளர் செழியன், மருத்துவர் புகழேந்திக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் கேவலமான மனித மனோபாவங்களின் வெளிப்பாடுகள். எழுத்தாளர் பாமரனின் வாடகை வீட்டு அனுபவங்கள் சுவாரசியமானவை. கடைசியாக அவர் 30 வருடங்களுக்கு மேலாக கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருந்த ஜீவனுள்ள வாடகை வீட்டை காலி செய்து அவ்வீட்டு நீங்கா நினைவுகளுடன் வேறு வீட்டுக்குச் சென்றதை விவரித்தது நெகிழவைத்த கவிதை.
-மேட்டுப்பாளையம் மனோகர்,
கோவை - 14.
அந்திமழை மே-2018 இதழில் முத்துமாறன் கைவண்ணத் தில் முகிழ்த்திருந்த முகப்புக் கட்டுரை கர்நாடகா காலிறுதி ஆட்டம்! காத்திருக்கும் காவேரி, காலா& ஐ.பி.எல் கிரிக்கெட் ஆட்டத்தைப்போல் அத்தனை விறுவிறுப்பு. பரபரப்பு. அதுமட்டுமல்லாமல் விருப்பு வெறுப்புகளற்ற நடுநிலை நற்சான்றுப் பத்திரமாய் அலசலாகவும் சிந்தையை ஈர்த்தது.
வாடகை வீடு சிறப்பிதழாகவும் வடிவம் கொண்ட இவ்விதழில் பல்வேறு பிரமுகர்கள், பிரபலங் கள் கலைஞர்கள் தங்களின் வாடகை வீடு பற்றிய உள்ளத்து உணர்வுகளை அனுபவித்த நிறை குறைகளை பகிர்ந்திருந்த பாங்கு நெஞ்சை நெகிழச் செய்தது.
எங்கள் அகமும் புறமும் செழிக்க அந்திமழை ஓர் அருங்கொடையாய் விளங்கிவருவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கொ.சி.சேகர், பெங்களூரு.
அந்திமழை மே 2018 இதழில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரை வியக்கவைத்தது. தின்று செரித்த மாம்பழ வகைளின் பட்டியல் அசத்தியது. எழுத எடுத்துக் கொண்ட விஷயம் தொடர்பான சகல தகவல்களையும் முன் வைப்பதில் அவர் பொறுப்பு ஓர் ஆய்வுப் பார்வையை நமக்குத் தருகிறது. கட்டுரை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. ஓர் எழுத்தாளர் அறிவுசார்ந்து நிற்கும் நிலைப்பாடுதான் அவரை ஒரு சமூக ஆசானாக உயர்த்தும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்,
திருச்சி – 6
‘சிறுகோட்டுப் பெரும்பழம்' மிக இனிமை. என் அப்பாவுக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது அப்பா உயிருடன் இல்லை. பலாப்பழத்தை வாங்கிவந்து விதவிதமாக சமைக்கச் சொல்லி பிரியத்துடன் சாப்பிடுவதுண்டு. வாசிக்கும்போது என் கண்கள் நிறைந்தது. ‘பலா' குறித்த ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வாசித்த நிறைவு. நாஞ்சில் நாடனின் ஆதங்கம் நமக்குள்ளும் இருக்கிறது.''புகைச்சல்'' நல்ல எண்ணம் இல்லாத ஒருவரைக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திய அற்புதமான சிறுகதை.
-வளர்மதி, கொட்டாரம் - 629703.