இந்த மாத அந்திமழை வசனத்தில் வாழ்தல் ஆஹா அருமையோ அருமை! எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை, எப்படி தான் ஒவ்வொரு சிறப்பிதழ்களையும் வித்தியாசமாக யோசிப்பீங்களோ? பிரமிப்பு! வியப்பு! அட்டைப்படமே அசத்தல் செய்தி சொல்லுது, வைகை புயல் வசனமும் செம தூள் கிளப்பியது! நச்சென்று நாலு வார்த்தை படிக்க, படிக்க சுவாரஸ்யம், மறக்கவே முடியாத பஞ்ச்! திரும்ப, திரும்ப எத்தனை கோடி முறை கேட்டாலும் சலிப்பே வராது. வார்த்தையில் வாழ்தல், இனிக்கும் இமாலய வார்த்தைகள்! தோட்டா ஜெகனின் தொகுப்பு, சிரிப்பு சரவெடி! படித்து சிரிப்பை அடக்க வெகுநேரமானது, அந்த தெர்மாகோல் மேட்டர், கொஞ்ச நாளாகவே வீட்டில் சிரிப்பு அலை மாறாதபோது, மீண்டும் அதை ஞாபகப்படுத்தியது இக்கட்டுரை!
இ.டி.ஹேமமாலினி, ஆவடி.
‘வசனத்தில் வாழ்தல் சிறப்பிதழ்' சிறப்பிதழ் மட்டுமல்ல நல்ல சிந்தனைப் பெட்டகமும் ஆகும். ஒற்றை வரிகளில் நம்மை உற்சாகப்படுத்திய வார்த்தைகளை அடையாளம் கண்டு அதை அற்புதமாக இதழ் மூலம் வெளியிட்டுள்ளீர்கள். ஆகாசக் கங்கையின் குளிமையை, இனிமையை, மணத்தினை அந்திமழையில் கண்டோம். அந்திமழை தமிழர்களுக்கென்றே வாய்த்த அமிர்தமழை. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘நஜீப்' பற்றி மம்முட்டியிடம் பவா செல்லதுரை எளிய மனிதர்களின் உயரம் நம் தொடுதல்களுக்கும் அப்பாற்பட்டது என்கிறார். இன்று அந்திமழை இதழின் உயரம் மிகவும் தரமானது. உயர்வானது. ஆகும். அந்திமழையின் உயரம் நம் தொடுதல்களுக்கும் அப்பாற்பட்டது. கையால் தொடுவதைவிட உள்ளத்தால் தொட்டுப்பார்த்தால்தான் அதன் உயரம் நமக்குத்தெரியும். இத்தகைய அந்திமழையைப் பார்த்து வையம் பெருமை கொள்ளும்.
இராம.முத்துக்குமரனார், கடலூர் துறைமுகம்.
திருக்குறளை ‘பொதுமுறை' என்று அறிவித்தது வரை மகிழ்ச்சிதான். இதன் பிறகாவது குறளை மதச் சிமிழ்களுக்குள் அடைக்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானது. ‘வசனத்தில் வாழ்தல்' என்பது சுவாரசியமான தலைப்பு அதில் போய் வசனத்தால் வாழ்ந்தவர்கள் என்பதையும் இணைத்து விட்டீர்களே. என்.எஸ்.கே காலம் தொட்டு அதற்கென தனி வரலாறு உண்டு. காமராஜரை மலிவாக விமரிசித்ததை நாஞ்சில் நாடன் கட்டுரையில் வைத்துவிட்டு, அதே வகையில் தோட்டா ஜெகன் கட்டுரையில் நினைக்கிறேன் என்று திராவிடக் கட்சிகள் பற்றி எழுதியது என்ன நாகரீகம்? தொடுதலுக்கு அப்பாற்பட்ட உயரத்தைக் கொண்ட நஜீப் பற்றி பவா எழுதியது நெஞ்சைத்தொட்டது.
தஞ்சை என்.ஜே.கந்தமாறன், ராமாபுரம்.
பாஜகவின் வெற்றி எளிதாக இருக்குமா & கட்டுரை சூப்பர். மறையல்ல முறை கட்டுரை அருமை. பள்ளி, கல்லூரிகளில் இனி குறளின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதென்னவோ நிதர்சனம். சத்தியம் தான்!
அ.முரளிதரன், மதுரை.
தமிழினத்தின் வாழ்வோடு ஒன்றிப்போன, இயல், இசை, நாடகத் தமிழில், நாடகத் தின் பரிணாம வளர்ச்சியே திரைப்படங்கள். பாமர மக்களின் எண்ணத்திலும், புரட்சிக் கனலை மூட்டக்கூடியது திரைப்படங்களே! திரைப்படக்கலையை, கை கொடுத்து கரை சேர்த்து; பொலிவும் வலிவும் உள்ள கலையாக மாற்றியது திராவிட இயக்கங்களே. பேரறிஞர் அண்ணாவின் வசனங்களும், முத்தமிழறிஞர் கலைஞரின், தேன், தென்றல், தீ போன்ற வசனங்களும் திரையுலகையே திருப்பிப்போட்டன. கலைஞரின் மந்திரிகுமாரி, மனோகரா, பராசக்தி, திரும்பிப்பார் போன்ற திரைக்காவியங்களும், அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு, சொர்க்க வாசல் போன்ற எழுத்தோவியங்களும் மற்றும் திராவிட இயக்க எழுத்தாளர்களான, முரசொலி மாறன், சொர்ணம், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, அரங்கண்ணல் போன்ற கூர்மை மிகு எழுத்துக் கணைகளும் அதுவரை, திரையை ஆட்சி புரிந்த பழமையை, அறியாமை எனும் திரையைக்கிழித்து, புதிய நம்பிக்கை ஒளியை தமிழ் நாட்டிற்களித்தது. இன்றுவரை, அவைகளை வெல்லக்கூடிய திரைக்காவியங்களை காண முடியவில்லை. தமிழில் இத்தனை சுவையா? என இளைஞர்களை மட்டுமல்ல, இதயமுள்ளோர் அனைவரையும் வியக்க வைத்த நம் அன்னை மொழியான செம்மொழித் தமிழை மீண்டும் திரையில் ஒலிக்கச்செய்யவேண்டியது, இன்றைய இளம் எழுத்தாளர்களின் நீங்காக் கடமையாகும். செய்தால், யார் மறந்தாலும், வரலாறு மறக்காது போற்றும்!
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்.
பாஜகவின் வெற்றி எளிதாக இருக்குமா - எளிதாக்கிக்கொண்டார்கள். உதாரணமாக தமிழ்நாட்டில் பாஜகவின் பின்வாசல் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லலாம். வசனத்தில் வாழ்தல் - அநீதியைக் கண்டு பொங்கினால் நீயும் என் தோழனே என்று புரட்சியாளர் சே கூறுகிறார். ஆனால் இந்தியாவில் பொங்கினால் தேசதுரோகிகள் என்று ஒரு கூட்டம் சொல்கிறதே...வார்த்தையில் வாழ்தல் என்ற இசையின் கட்டுரை இசைபோன்றே இனிமையாக இருந்தது. ‘‘அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைத்துவிடும்'', போன்ற பொன்மொழிகள், கண்டேன் சீதையை என்று கம்பரின் பாடலில் இருந்த வரிகளின் விளக்கம் அருமை.
தமிழழகன், நாமக்கல்
நாட்டு நடப்பு பகுதியில் உஸ்ஸ்ஸ்.. இப்பவே கண்ணக் கட்டுதே புகைப்படம் & அதிமுகவின் நிலைமை மட்டுமல்ல தமிழ்நாட்டின் நிலைமையும் இதுதான். திருக்குறளை உலகப்பொதுமுறை நூல் என்று அழைப்பதே சாலச்சிறந்ததாகும். ‘‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்'' என்ற காமத்துப்பாலில் வரும் குறளை பள்ளிக்கூட பிரேயரில் சொல்லி , ஆசிரியர்களிடம் அடிவாங்கியது என் நினைவுக்கு வந்து போகிறது. பள்ளிக்கல்விதுறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணை தமிழார்வலர்களிடம் மட்டுமல்ல, என்னை போன்ற சாமானியனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. திருக்குறள் ஆர்வலர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
காவினி, சென்னை.