தமிழர் பெருமை

தமிழர் பெருமை
Published on

சென்ற இதழில் வெளியான தமிழர் போர்வரலாறு சொல்லும் கட்டுரைகளும் சரி; அதற்கு ஓவியர் மருது அவர்களின் படங்களும் சரி... மிக உயர்வான முறையில் அமைந்திருந்தன. அட்டையில் இருந்த மருது அவர்கள் வரைந்த ஓவியம் காலத்தைக் கடந்து சென்று பழங்காலத்தில் நம்மை நிறுத்துகிறது. வரலாற்றுத்தகவல்களை ஆதாரங்களுடன் சொல்லும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது. அதேபோல் ஜெயகாந்தன் குறித்து ஜேகே அவர்கள் கூறியிருந்த தகவல்களும் அந்த எழுத்தாளுமையை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தின.

ச. மன்னன் மைந்தன், தஞ்சாவூர்

சமூக சேவை

மலை வாழ் பழங்குடியினரின் உணவு தானியங்களை ஆர்கானிக் என லேபிள் ஒட்டி, மேட்டுக்குடி உணவாக்குவது ஒரு ஃபாஷனாகி வருகிறது. பீட்ஸா,பர்கர் என அந்நிய மோகத்தில் திளைக்கும் இன்றைய தலைமுறையிடம் சுவை குறைவான சிறுதானிய உணவு வகைகள் எடுபடுமா என்றாலும், ஊட்டச் சத்து குறைபாடுள்ள அனைவருக்கும் ஆரோக்கியம் கருதி, அவ்வப்போது சிறுதானிய அவசியத்தை வலியுறுத்துவது ஒரு வகை சமூக சேவைதான்.

மல்லிகா அன்பழகன், சென்னை

கில்லாடி

நடிகர் இளவரசு பேட்டி அற்புதம்! ஒரு நடிகரின் திறமை, எத்தனை படங்களில் நடித்தது என்பதல்ல! எத்தனை விதமான கதாபாத்திரங்களில் நடித்தது என்பது தான்! சில நேரங்களில் படத்தின் ஹீரோவை விட, கேரக்டர் ரோல் மனதில் இடம் பிடித்துவிடும். அந்த விஷயத்தில் நடிகர் இளவரசு படு கில்லாடி..

ம.பேச்சியம்மாள், புதுசத்திரம்.

இட்லி மேன்!

உலகம் உன்னுடையது பக்கத்தில் இட்லி டாக்டர் பற்றிய கட்டுரை படித்தபோது ஆஹா... என்று மலைத்துப்போனேன்!! எத்தனையோ டாக்டர்கள் பார்த்ததுண்டு. ஆனால் இட்லிக்கும் டாக்டர் பட்டம் வாவ் கிரேட்.! அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது என்பது அவரின் சாதனையே நிரூபிக்கிறது. இட்லி டாக்டர் போலவே இனியவனின் இட்லி வடிவங்களும் அருமை! புதுமை, பிரமிப்பு! மேலும் உயர வாழ்த்துகள்!

இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.

அக்கப்போர்!

இமயத்தில் கொடிநாட்டி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் ஆட்சி செய்து, இறுதியில் சோழ & பாண்டிய(சகோதர) யுத்தத்தோடு வீரம் தொலைத்து, ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டு, அந்த விடுதலை போராட்டமும் தெரியாத இன்றைய தலைமுறையும் அந்நியமயமாக்கலுக்கு அடிமையானது. விவசாயம் பொய்த்ததால் வைக்கோல் ‘போர்' மறந்து போனது. அக்கப் ‘போர்' பழக்கமானது. ஜாதி & மத சண்டையே வீரமென கருதும் நம்மவர்களின் மூட நம்பிக்கை களைய கரிகாலன் முதல் பிரபாகரன் வரை நடத்திய வீரப் போர்களை ஞாபகப்படுத்தியது, காலத்தின் கட்டாயமானது.

யாழினி பர்வதம், சென்னை

வியப்பு

இட்லி டாக்டர் கட்டுரை வியக்க வைத்தது. படிக்கையிலேயே அதை சாப்பிட தோன்றுகிறது. வாயில் நீர் ஊறுகிறது.

அ.முரளிதரன்,மதுரை

கருத்துக் குருடர்

பரணி பாடிக்கிடந்த பாபிலோன்; செல்வச் செருக்கால் இறுமாந்துகிடந்த ஏதென்ஸ் எழிலைக் கலையாக்கி ஏற்றம் பெற்ற எகிப்து; இந்த நாட்டினரோடு போட்டிபோட்டு பொன்னையும் பொருளையும் குவித்தனர் பண்டைத்தமிழர். தமிழர்களின் போர் முறைகளும், போர்க்களங்களும் வரலாற்று சிறப்பு மிக்கது. வீரத்தால் வரலாறு படைத்தவன். தமிழினப்பகைவர்களின் சூது, சூழ்ச்சி, வஞ்சகத்தால் வீழ்ச்சிப்பள்ளதாக்கில் வீழ்ந்து, இன்றுவரை கரையேற முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறான். வீரத்தின் விளை நிலமான தமிழ்நாடு, இன்று வஞ்சகர்களை வேட்டைக்காடாக மாறிவருவது கொடுமை. வரலாற்றுச் சோகம். தாய்நாட்டை, தாய்மொழியை நேசிகாதவனால், தரணியில் வேறு எதையுமே நேசிக்க முடியாது. மனிதநேயம், மன உறுதி என்ற இருகண்களையும் இழந்து விட்டால் தமிழர்கள் கருத்துக்குருடர்களாக, இனப்பகைவர்களின் தாழ்பணிந்து நடக்கும் அடிமைகளாகவே வாழ நேரிடும்

நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர்

சொல்லாமல் விட்டது

சங்ககாலப் போர் முதல் கடற்போர் வரை எல்லா விதமான போர்களையும் நேரில் பார்த்தாற்போலிருந்தது. ஒரு வரலாற்று ஆவணப்படம் கண்டாற்போல் இருந்தது என்னுடைய கல்லூரி கால வரலாற்று வகுப்பை நினைவு படுத்தியது. வேண்டுமென்றே விட்டுவிட்ட அந்த கறுப்புப் பக்கம் நீங்கள் சொல்லாமல் விட்ட ஆயிரமாயிரம் விஷயங்களின் சொல்லிவிட்டது.

ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

நினைவு

ஒலிப்பதிவுக் கருவிகளே, பதிவு செய்ய இயலாமல் தோற்றுப்போன, உச்சக்குரலோசை கொண்ட இசை முரசு நாகூர் அனிபாவின் நிரந்தர ஓய்வு. நிச்சயம் ஈடுசெய்ய இயலாத ஒன்றே. தி.மு.கவின் அரசியல் வெற்றிகளில், நாகூர் அனிபாவின் குரலுக்கு தவிர்க்க முடியாத பங்கிருப்பதை, யாரும் மறுக்க முடியாது. அவர் குரலில் கிளம்பிய துந்துபி ஓசையே, பட்டி தொட்டியெலாம் தி.மு.கவின் சிறப்புகளைக் கொண்டு சேர்த்தது. வாழ்ந்த காலம் வரை, அரசியலில் பெரிய பயன் எதையும் காணாத அவருக்கு,மறைந்த பிறகேனும் தி.மு.க மறையாத நினைவுச் சின்னம் எழுப்பி, மரியாதை செய்ய வேண்டும்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையும்.

ஆவண இதழ்

இன்றைய தமிழர்களின் காலம் & பொய்க்காலம்! தமிழர்கள் தங்களின் அடையாளங்களையே இழந்துகொண்டு ‘‘ஆங்கிலோ தமிழர்களாக'' உருமாறிய கொடுமையான காலமிது. இவர்களுக்குள் ஒற்றுமையில்லை, தன்மானமும் இல்லை. பிறர் தமிழர்களைக் கொன்றாலும், பழித்தாலும் வீரமுடன் எதிர்த்துப் போராடும் திறனுமில்லை. அதனால் தமிழர்கள் இலங்கையிலும் அண்டை மாநிலங்களிலும் கொன்று குவிக்கப்பட்டபோதும் மனித உணர்வுகூட இல்லாது தமிழகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இன்றைய தமிழர்களுக்கு, அன்றைய தமிழர்களின் ‘‘போர்கள்'' பற்றிய & வரலாறு, கல்வெட்டு, இலக்கிய, ஊடகச் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு, தமிழர் வாழ்வியல் ஆர்வலர்களின் ஒன்பது ஆய்வுக்கட்டுரைகள் அந்திமழையில் வெளியிட்டது பாராட்டுக்குரியது! இது தமிழர்களைத் தலை நிமிர்ந்திருக்கச் செய்யும் நற்பணியாகும்!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

நெஞ்சை நிமிர்த்து

‘ கதிகலங்க வைத்த கடற்புலிகள்' கட்டுரை நம் நெஞ்சை நிமிர்த்துகிறது. சிங்களர்களால் வெல்லவே முடியாத நிலையில் வீறுடன் இருந்த பிரபாகரனை இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வஞ்சகத் துணையால் சிங்கள இன வெறியர்கள் தோற்கடித்தனர்.இந்தத் தோல்விக்கு இன்னொரு காரணம் தமிழ்நாட்டுத் தமிழர்கள்டையிலும் தமிழன் என்ற இன உணர்வற்ற பலர் தமிழர்களின் ஒருங்கிணைப்பைச் சீர்குலைத்தார்கள். தமிழகத் தமிழர்கள் ஒருமித்த குரல் கொடுத்திருந்தால், இந்திய அரசு சிங்கள இன வெறியர்களுக்குத் துணை போனதைத் தடுத்திருக்கலாம்.

க.சி.அகமுடை நம்பி, மதுரை

logo
Andhimazhai
www.andhimazhai.com