பாடம்

பாடம்
Published on

மனக்கணக்கு கட்டுரை படிக்கும் போது, மனம் மிக மிக வருத்தமடைய செய்கிறது. ஸ்ரீவித்யாவின் உணர்ச்சிவசப்பட்ட செயலால்தான் இந்த விபரீத முடிவுக்கும் காரணமாக அமைந்ததோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அவர் சம்பாதித்தது முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டதால் அவர் சம்பாதித்த பணம் அவருக்கே உதவாமல் போனதே என்று படித்து உணரும் போது கண்கள் குளம் ஆகிறது. அவரது மனக்கணக்கு தவறான கணக்கு போட்டு விட்டதே... விரக்தியில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு வாழ்க்கைக்கு மிக ஆபத்தானது என்பது இவரது வாழ்க்கை நமக்கு பாடம் கற்று தருகிறது

இ.டி.ஹேமமாலினி , சென்னை -23

கவனம்

ஒருவனைக் குற்றவாளி என்று சுட்டுவிரல் நீட்டும் போது மூன்று விரல்களை அழுந்தபிடித்து கட்டை விரல் உன்னைச் சுட்டிக் காட்டுகிறது. பல பெரிய புள்ளிகள் இதைச் ஜாக்கிரதையாக மறந்து விடுகிறார்கள். விளைவு? சுட்டிய கட்டைவிரல் அவர்களையே சுட்டுவிடுகிறது. இதோ ஒரு மனிதர். அவர்தான் எங்கே ஊழல் நடக்கும்? எங்கே லஞ்சம் தாண்டவமாடும் ? எங்கே? எங்கே என்று அலைந்த மனிதர். தான் விரித்த வலையில் தானே விழுந்துவிட்டார் பரிதாபமாக. அறிந்தும் அந்தத் தவறை தேஜ்பால் செய்தார் என்றால் நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற மெத்தனம் . இல்லை ஆணவத்தின் அகங்காரத்தின் பிரதிபலிப்பு . மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் தேஜ்பால் . இன்று அவரே மற்றவர்கள் படிக்க வேண்டிய - மிக கவனமுடன் - படிக்க வேண்டிய பாடமாகிவிட்டார்.

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.

பாராட்டு

நல்ல காகிதத்தில் எவரும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய தமிழில் மிக அழகான முறையில் அச்சிட்டு வெளிவரும் அந்திமழைக்கு எனது பாராட்டுகள். மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கலாமே ? என்ன செய்வீர்களா?

சு.ப.இராமமூர்த்தி, மும்பை.

சபாஷ்

அந்திமழை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் , நான் அரசுக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன் . வயது 79 , 100 புத்தகங்களுக்கும் அதிகமாக மொழி பெயர்த்து இருக்கிறேன். அந்திமழையை தொடர்ந்து படிக்கிறேன். தரமான கட்டுரைகள் , மற்றும் ஓவியங்களை வெளியிடுகிறீர்கள். 2013ல் தமிழ் நாட்டின் மிகச்சிறந்த இதழ் எது என என்னிடம் கேட்டால் அந்திமழையின் பேச்சாளர்கள் சிறப்பிதழ் என்று கூறுவேன் . தமிழ் நாட்டின் வரலாற்றை உருவாக்கிய பல பேச்சாளர்களை பற்றிய கட்டுரைகளும் சித்திரங்களும் தமிழ் இதழியலில் ஒரு சாதனை ஆகும். நான் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன் . பெர்னார்ட் பேட் என்னும் அறிஞருடைய பேட்டியை வெளியிட்டு என்னைப் பரவசப்படுத்தினீர்கள். கோடிக்கணக்கில் நிதி உள்ள மற்ற பத்திரிகைகள் செய்யாத காரியத்தைச் செய்துள்ள அந்திமழையைப் பாராட்டுகிறேன்.

நா. தர்மராஜன், சிவகங்கை

அட்டகாசம்

இந்த இதழின் எல்லா போட்டா போட்டியுமே ஆரோக்கியமான அட்டகாசம்... வான வில்லின் நிறங்களில் எதை விட , எதை சொல்ல ? ஆனாலும் மனதுக்கு அணுக்கமானது என்ற ஒன்று உண்டே... அப்படி பார்த்தால் விகடன் திண் குமுதம், வாவ்... ரசித்து ரசித்து எழுத்து எழுத்தாய் படித்தேன்; என் பால்ய பருவத்துக்கே இழுத்துச் சென்றது இந்தக் கட்டுரை .. அந்த அட்டைப்படங்களை பார்த்ததும் சிலீர் என்று மழைச்சார லில் நனைந்தாற்போல இருந்தது .. விகடனுக்கும் , கல்கிக்கும் மட்டுமே அனுமதியுண்டு வீட்டில் .. தீபாவளி மலர்களாய் விகடனும், கல்கியும் வீட்டுக்குள் பூத்து நிற்கும்... நா.பா, கல்கி , ஜெ.கா, லஷ்மி , சுஜாதா, அனுராதா ரமணன், மணியன், இப்படி வலை விரிந்தது, அதில் சிக்கிக் கொண்ட பின்பு மீண்டு வர விருப்பமேயில்லை... அந்த நாட்களை மீண்டும் தரி சிக்க வைத்து கூடு விட்டு கூடு பாய வைத்து விட்டீர்கள் .. கட்டுரையாளருக்கு நன்றி. பி.கு : என் தோழியர் ஐவருக்கும் அந்திமழை பொழிந்ததாம், நன்றிகள்

ஜே.சி . ஜெரினாகாந்த், சென்னை

பட்டியல்

1931ல் ராஜாஜி vs சத்திய மூர்த்தியில் தொடங்கி 2014ல் கருணாநிதி vs ஜெயலலிதா வரை ஈகோ யுத்தங்களினால் தான் கட்சிகள் பெருகி , அரசியல் நடக்கிறதே தவிர கொள்கை அடிப்படையிலோ , மக்கள்வளர்ச் சிக்காகவோ அல்ல ! என்பதை அழகாக பட்டியலிட்டிருக்கிறார் ஆர்.முத்துகுமார். திமுக வில் நீயா நானா என ஸ்டாலினுக்கும் , அழகிரிக்கும் அடுத்த ஈகோ யுத்தம் தொடங்கி , பாரம்பரிய பெருமையை காக்கிறார்கள்.

அ. யாழினி பர்வதம் , சென்னை - 78

அருமை

விகடன் Vs குமுதம் பத்திரிகை மோதல் பற்றிய கட்டுரை படிக்க, படிக்க சுவாரஸ்யம். நான் பிறந்திருக்க முடியாத காலகட்டத்து பத்திரிகையை பற்றிய தகவல்கள் படிக்கும் போது ஒரே வியப்பாகவும் , ஆச்சர்யமாகவும் இருந்தது. வளர்ச்சி, வீழ்ச்சி என விரிவாக விளக்கமாக கூறிய விதமும் பாராட்டுக்குரியது. குமுதத்தில் ஜெயலலிதா ஒரு தொடரை எழுதினார் என்பதும் புதுமையான செய்தி. ரோஜா பற்றிய செய்தியும் புதுமை எல்லாம் படித்தபோது கண்முன் வந்து போனது அருமை

- சு.சிநேகா ஷியாம், சென்னை - 23

வியப்பு

டிசம்பர் மாத ‘அந்திமழை' வித்தியாசமான கட்டுரைகள் பலவற்றை அழகுற தாங்கி வந்தது. போட்டோ கலைஞர் ராதிகா ராமசாமி அவர்களின் துல்லிய திறமை நம்மை வியக்க வைக்கிறது. வழமை போல் சிறுகதை சிறப்பாக வந்துள்ளது. செயந்தன் எழுதிய ‘கிழவனின் உயிர்' ஈழத் தமிழர்களின் துயரை கண்ணீருடன் நம்மிடம் பகிர்கின்றது. அந்த கிழவன் கிளறிய மண் நம் இதய நரம்புகளில் அவரது சோகத்தையும் பாவமன்னிப்புக் கோரும் இதயக் குமுறல்களையும் தீண்டியபடித் துடிக்கிறது. அவல வாழ்வு, ஹிட்லரின் இன்னொரு பாசிச நகல் எழுப்பி விட்டிருக்கும் மனித சித்திரவதை என அம்மண்ணின் வேதனைக்குரல்கள் ஒலிக்கின்றன.

புதுமைச் செல்வன், ராஜபாளையம்

நல்விருந்து

திரையுலக முடிசூடா மன்னர்களில் தொடங்கி இக்கால திரையுலக நடிகர்கள் வரை வெகுசுவாரஸ்யமான நிகழ்வுகளைச் சற்றும் மிகையின்றி உணர்த்திய ஸ்டார்களைத் துரத்தும் ஹீரோக்கள், கட்டுரையும்,படங்களும் மன நிறைவைத்தந்தன. அந்தந்த காலகட்டங்களில் நிகழ்ந்தவை பற்றி குமுதத்தையும் - விகடனையும் இணைத்து அலசி ஆராய்ந்து சுவைபட வடிவமைக்கப்பெற்ற பத்திரிகை மோதல் கட்டுரை வெகுஅருமை! எம்மைப்போன்ற வாசகர்களுக்கு இக்கட்டுரை நல்விருந்தாய் அமைந்திருந்தது.

எஸ்.எம்.பாலசுப்ரமணியன், போடிநாயக்கனூர்

logo
Andhimazhai
www.andhimazhai.com