எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அந்திமழையின் ‘எப்போதும் வெல்லும் அரசியல்' கட்டுரை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.முக்கியமாக அவர் கொண்டு வந்த பல நல திட்டங்கள் இன்றுவரை உயிர்ப்புடன் இருப்பதற்கான தங்களின் வரிகள் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டியவை.ஏழைப் பங்காளன் என்ற அடைமொழி அவருக்கு நூற்றுக்கு நூறு சதம் பொறுத்தமானதே.சரியான சமயத்தில் அவரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. இன்று பொறியியல் வல்லுனர்களாக வலம்வரும் சென்ற தலைமுறை கிராமப்புற மாணவர்கள் அவரை கடவுளாகவே பார்ப்பதற்கு முக்கியமான காரணம் நுழைவுத்தேர்வில் அவர் கொண்டுவந்த வெளிப்படையான தேர்வுமுறையே.சினிமாவில் மட்டுமல்ல தமிழக வரலாற்றில் எவராலும் நிரப்பப்பட முடியாத இடம் அவருடையது.
பேராசிரியர் எஸ்.செல்வக்குமார், இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு.
அந்திமழை டிசம்பர் இதழ் படித்தேன். அறிஞர் அறிவோம் தொடரில் மு.இளங்கோவன் பாவலரேறு பெருஞ்சித்திரனாரையும் அவரது படைப்புகளையும் சுருக்கமாகவும் சிறப்பாகவும் நன்கு அறிமுகப்படுத்தி எழுதியுள்ளார். அவருக்கும் அந்திமழைக்கும் வாழ்த்துக்கள்.
கோவைவாணன், கோவை.
திசைமாறிய பறவைகளென உருமாறிய திருநங்கைகளின் திருப்புமுனை அவல வாழ்க்கை நிகழ்வுகளை மிகையின்றி உணர்த்திய உயிர் வலிக்கிறதே யாத்தே!சிறுகதையின் முடிவு உயிரோட்டமாய் மனநிறைவைத் தந்தது.
எஸ்.எம்.பாலசுப்ரமணியன், போடிநாயக்கனூர்.
அட்டைப்படத்தில் நடிக நடிகையரின் படங்களுக்கு விடை கொடுத்தது பற்றிய கடிதம் வந்த இதழின் அட்டைப் படத்திலேயே நடிகர் விஜய் - அப்படியெல்லாம் நாங்கள் செய்யமாட்டோம் என்று சொல்கிறீர்களா?- இருந்தாலும் இந்த இதழில் துப்பாக்கி தோட்டாவின் நெடி அதிகமே. நாசரின் ஒன்றரை மணிநேர பட முயற்சியைப் பாராட்டலாம். சிவகுமார், ஸ்ரீதேவி நடித்து தேவராஜ் மோகன் இயக்கி வெளிவந்த கவிக்குயில் படமே முதலில் வந்த ஒன்றரை மணி நேரப்படம். சொல்வதற்கென்ன? சாதிக்க முடியாத ஒன்றைப் பிடித்துக் கொண்டு வாக்கு வங்கியில் சாதித்துக் கொண்டிருக்கிற கேவலம் இங்கு மட்டும்தான் தொடர்கிறது.
தஞ்சை என்.ஜே. கந்தமாறன், சென்னை 99
நடிகர் விஜய் பற்றிய துப்பாக்கி அலசல் விறுவிறுப்பாக இருந்தது. இந்த ஆண்டின் படங்களில் துப்பாக்கியே அதிகவசூல்.
வி.குமரன், திருவான்மியூர், சென்னை