குளமான கண்கள்

குளமான கண்கள்
Published on

  பத்தினிப்பாளையத்தில் பிறந்த பிரான்சிஸ் கிருபா ‘கன்னி' நாவலாசிரியர், கவிஞர் என்பதோடு தகவல்களைப் படிக்கப் படிக்க 'காமராஜ்' படத்தில் பணியாற்றும் வாய்ப்பும், பழநெடுமாறன் கதாபாத்திர நடிப்பும் கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டதும் அவரின் தேசியநெஞ்சம் என் நெஞ்சில் பதிவானது. அவரின் ‘மல்லிகை கிழமைகள்' விகடனில் 52 வாரங்கள் தொடராக வந்து நெஞ்சில் மணத்தது! வலிப்பால் இறந்தவர் ஒருவரை வைத்து வலிய இவர்தான் கொலைகாரர் என்று அவரை குற்றம்சாட்டிய நிலைப்பாட்டின் வலியிலிருந்து அவரை மீட்ட மனிதநேயச் செயல்கள் மனதளவில் நெகிழவைத்தது! ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன் என்ற அவரது கவிச் சொற்கள் கண்களை ஈரமாக்கிப் பின் குளமாக்கி விட்டன.

விநாயகராமன், திசையன்விளை.

கொழுப்பு அதிகம்

மனித உடல் புரோட்டின், கார்போஹைட்ரேட், கொழுப்பு, மினரல், வைட்டமின், தாது உப்புகள் கொண்ட மிகப் பெரிய கிடங்கு. கடந்த முப்பது வருடத்திற்கும் மேலாக கொழுப்பினால் எல்லா நோய்களும் வருகிறது என்று  அறிவியல் மேதைகளும் & மருத்துவர்களும் கூறிவந்தனர். அது இல்லை என்று படிக்கின்றபோது,  அசைவப் பிரியர்களுக்கும் & கொழுப்பு தின்னும் உயிரினங்களுக்கும் மிக மிக சந்தோஷமே தரும் தங்களின் கட்டுரை. அதிகமாக பேசும் நபர்களை 'அவருக்கு ரொம்ப கொழுப்பு' என்று கூறுவோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கை மனித உடல். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

வேதவள்ளி சரவணன் , அந்தியூர்.

உள்ளத்தின் குரல்

சினிமா எடுத்துப் பார்த்தவர்கள் சொல்லத் தவறிய கதைகளைத் தேடிப் பிடித்துத் தந்த சிறப்பிதழின் பக்கங்கள் ஆழமான அழுத்தமான கருத்துகளை கொண்டுள்ளது. தனித் தனியே பாராட்ட வேண்டாம். 80&களில் திரைப்பட வாழ்வுக்கு முயற்சித்தவன், பிழைப்பிற்காக திரையுலகச் செய்திகளைத் தேடியவன் என்ற வகையில் சென்னை வாழ்க்கையைப்பற்றி அழகிரி சாமியின் வார்த்தைகளில் குறிப்பிடலாம் 'சென்னையின் வாழ்வு பிறர் மனைவியுடனான உறவு போல இனிக்கும். வாய் விட்டு பிறரிடம் சொல்ல முடியாது'.

திராவிடத்தின் குரல் என்று வைகோ பற்றி சொன்னது சரியே. ஆனாலும் அந்த குரல் உணர்ச்சிகளின் பிசிறில்தான் அவ்வப்போது தரை தட்டுகிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

நாஞ்சில் நாடனின்'தன்னை அறியாமல் தானே கெடுகிறார்' கட்டுரை  பல கற்பிதமான நம்பிக்கைகளை வெடி வைத்ததுத் தகர்த்தது எனலாம். வணிகம் வழிதேடி வளர்விக்கப்படும் விற்பனைக்கலை இது.

பிரான்சிஸ் கிருபாவின் 'வாழும் வரை ஈரத்தோடு இருந்து விட்டுப்போகிறேன்' கருணை உள்ளத்தின் வாக்குமூலம். காமிராக் கண்கள் மூடிக் கொண்டதன் பொருளென்ன? பல பக்கங்கள் பேசும் பகுதி அது அல்லவா?

தஞ்சை கந்தமாறன், சென்னை.

திறமையாளர்

 

சினிமா பொழுதுபோக்கு அம்சமுள்ள ஒரு மிகச் சிறந்த
 சாதனம். தெருக்கூத்து, மேடை நாடகம், டிவி சீரியல்கள் இப்போது பல பரிணாமம் பெற்று பண முதலைகள் வாழ்ந்ததும் & வீழ்ந்ததுமான மிகப் பெரிய மைதானம். தேச விடுதலையில் இவற்றின் பங்கும் மிக அதிகம். ஆனால் அதே சமயத்தில் அதற்குப் பிறகு பல படங்களில் கடத்தல் & சூதாட்டம் & குடி என அனைத்து சீரழிவுகளையும் மக்கள் மனம் ரசிக்குமாறு படத்தை எடுக்கிறார்கள். தேச நலனுக்காக இவர்கள் செய்தது என்ன? மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் இதுபோன்றவர்கள் பொது சேவை செய்து வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நாடும் நலம் பெறும்.

வைகோ ஒரு தமிழ் மொழி ஆர்வலர். மிகச் சிறந்த பேச்சாளர். பன்முகத்தன்மை கொண்டவர். மிகச் சிறந்த ராஜதந்திரி, அரசியல் சாணக்கியர். எல்லாம் இருந்தும் பதவி இல்லாமல் நீண்ட காலம் மக்களுக்காக குரல் கொடுத்தவர். இதுபோன்றதொரு திறமையானவரை தக்க வைத்துக் கொள்வது மிகச் சிறந்தது.

அருணகிரி, ஆலம்பாளையம்

சிலிர்ப்பானது

 

விகடன் ஆசிரியராக இருந்த அன்பன் இரா. கண்ணன் மூலம் தியாகி ஐமாபாவை பார்க்க நேர்ந்தது முதல் அவர் இப்போது இருந்தால் என்ன பதவி வகித்திருப்பார், என்ன திட்டங்களை எப்படி எதிர்த்திருப்பார், கூடவே அவருக்கும் 'ஆன்ட்டி இந்தியன்' பட்டமும் கட்டிவிடுவர் என்றெல்லாம் திருமாவேலன் தந்த தொகுப்பு  சிலிர்ப்பானது!. 'எங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார்' என்ற தலைப்பின் தொகுப்பாளருக்கு அது தூரம், ஆனால் தொகுப்பைப் படித்த எங்களுக்கோ 'ஐமாபா' ஐமாபாவாக அமர்ந்திருப்பார் நெஞ்சிலே!

மணிமாறன், இடையன்குடி

வரவேற்கக்கூடியது

 

அட்டையிலேயே கம்பீர தோற்றத்துடன் சிரிக்கும் வைகோ! கட்டுரையாளர் கருத்துப்படி முந்தைய ஆண்டுகளில் டெல்லியில் ஒலித்த வைகோவின் குரல் மீண்டும் டெல்லியில் ஒலிக்க வேண்டும். சினிமா எடுத்துப்பார் சிறப்பிதழாக இந்த இதழ் அமைந்தது சிறப்பே! திரைத்துறைப் பற்றி பலரது கருத்துகள் தெளிவானதாக இருந்தது. கோடிகளைக் கொட்டி திரைப்படம் தயாரிக்கும்போது வெற்றி தோல்வி மாறி மாறி ஏற்பட்டாலும் சலிப்பின்றி நிலைத்து நின்று ''எத்தனை முறை விழுந்தாலும் ஒவ்வொரு முறையும் எழுவேன்'என்ற அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவாவின் அசையாத  நம்பிக்கையான வார்த்தைகளே அவரை மீண்டும் எழவைக்கிறது. அவருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! திரைத்துறையில் பல பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் சிந்திக்க வேண்டியவை. நடிகர்களும்
யோசிக்கும் விதத்தில் அவர்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டார். 'கதையை தயாரிப்பாளர்தான் கேட்கணும். அந்த கதைக்கு எந்த நடிகர் பொருத்தமானவர் என்று அவர் முடிவு எடுக்கணும்' என்ற அவரது கருத்து முழுமையாக ஏற்கக்  கூடியது.. வரவேற்கக் கூடியது.

எட்வர்டு, கோவை

வியப்பு

கொழுப்பு வாழ்க - கௌதமனின் கட்டுரை வியப்பைத் தந்தது. பிரான்சிஸ் கிருபா என்ற படைப்பாளியின் பேட்டி சூப்பர். சினிமா எடுத்துப்பார்& சொல்லத் தவறிய கதைகள்... கட்டுரைகள் சூப்பர் எனில், அவற்றுக்கான படங்களோ டபுள் சூப்பர்.

முரளிதரன், மதுரை.

மறுபரிசீலனை

 'செய்நன்றி' சிறுகதை திகிலாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. வழக்கமாக பேய் படங்களில், கதையில் லாஜிக் தாறுமாறாக மிஸ் ஆகும். இக்கதை அந்தகுறை இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. நாஞ்சில் நாடனின் 'தன்னை அறியாமல் தானே கெடுகிறார்' கட்டுரை தமிழர்கள் அவசியமின்றி கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் பற்றி சிந்திக்க வைத்தது. சிறப்பு பக்கங்களில் வெளிவந்த தயாரிப்பாளர் பற்றிய கட்டுரைகள் தமிழ்
 சினிமாவின் ஒட்டுமொத்த வியாபார சிக்கல்களையும் தெளிவுபட சொல்கிறது. வைகோ பற்றிய கட்டுரையில் அவர் குறித்து இதுவரை அறிந்திராத பல தகவல்கள் இருந்தன. வைகோ பற்றி கூறப்படும் எதிர்மறை கருத்துகளை அவரது செயல்பாடுகளுக்காக சற்று மறுபரிசீலனை செய்யலாமென தோன்றியது.

கலையரசன், பேராவூரணி.

பயனுள்ளவை

 

முதல் கட்டுரையாக இரா. கௌதமன் எழுதிய 'கொழுப்பு வாழ்க'&வில் தொடங்கி, மலையாள ஒளிப்பதிவாளர் ஜே. ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை வரை கடந்த இதழில் வந்த அனைத்தும் பயனுள்ளதாய் இருந்தன. தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் கதை சினிமா தயாரிப்பு உலகில் இருக்கும் சவால்களை கூறுகிறது. அவற்றை அவர் எதிர்கொள்ளும் விதத்தை சொன்னதில் தன்னம்பிக்கையும் வழங்குகிறது. கதையல்ல நிஜம் பகுதியில் வந்த 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' கட்டுரை உண்மையான நட்புகள் நம் வாழ்கையின் ஊன்றுகோலாக இருப்பார்கள் என்பதற்கான
சான்று.

பாஸ்கரன், திண்டிவனம்.

வருத்தம்

சிறப்புப்பக்கங்களாக வந்த
'சினிமா எடுத்துப் பார் பகுதி' தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் கடந்துவந்த, எதிர்கொள்ளும் பாதையின் வரலாற்று ஆவணம். புகழ்பெற்ற படங்களை, பிரம்மாண்ட கதாநாயகர்களின் படங்களை தயாரித்தவர்கள்கூட காலபோக்கில் காணாமல்போனது வருத்தமே. பிரான்சிஸ் கிருபாவின் குறிப்புகள் எல்லா கலைஞனுக்குமான அடிப்படை. இரக்கமும், மனிதமும்தான் தனது எழுத்தின் ஆதாரம் எனும் அவரது கருத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவின் முதல்பட வெளியீட்டு அனுபவம் மற்றொரு முக்கியமான பதிவு.

ரமேஷ், பட்டுக்கோட்டை.

logo
Andhimazhai
www.andhimazhai.com