இயக்குநர் ரஞ்சித்தின் நேர்காணல் அவரைப் பற்றிய முழுமையான பார்வையைத் தந்தது. இந்தத் தடம் சுவடாய் மாறினால் மிக்க மகிழ்ச்சி. கூடு திரும்புதலின் சிறப்புப் பக்கங்களில் இடம் பெற்ற விட்டதும் பெற்றதும் தனித்துவமான ஆய்வுக் களமாக அமைந்திருந்தது. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் இனிமையான இழப்புகளும் உண்டு. பெறுதலின் கசப்புகளும் தொடர்கின்றன என்பது அதன் மற்றோர் பக்கம். அதெல்லாம் சரி. ஓரளவு எழுதத் தெரிந்த வாசகர்களும் பங்கேற்கும் சிறப்பிதழ் ஒன்றை அந்திமழையால் தரமுடியாதா? ஆசிரியர் குழுவுக்கு பணிச்சுமை சற்றே கூடுதலாக அமையும் என்றாலும் அது புதிய முயற்சியாகுமே! கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள். காமிரா கண்கள் பகுதியைத்தான் அந்திமழை இதழை வாங்கியதும் என் கண்கள் தேடும். அருமை! சிறப்பு!
தஞ்சை என்.கந்தமாறன், சென்னை.
ராம்பாபு அவர்களின் விதி என்பது என்ற கட்டுரை வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்ற குறளுக்கு விளக்கமாக அமைந்து விட்டது.
அ.சம்பத், சின்னசேலம்.
அய்யன் திருவள்ளுவருக்கு இந்தியாவிலேயே அவமதிப்பு என்பது உலகத்தமிழர்களின் உள்ளத்திலேயே ஒரு ஆறாத வடுவைப் பதித்துவிட்டது. இந்தியா ஒரே நாடு என உதட் டளவில் பேசிப்பயனில்லை. அது செயலிலும் இருக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாடு ஏட்டளவில் இருப்பதால் வரும் கேடுதான் இது.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
கூடு திரும்புதல் பக்கங்கள் படிக்கப் படிக்க வியப்பாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. ப.ரஞ்சித் பேட்டி நன்று, கடைசி வரிகள் மிக நன்று.
அ.முரளிதரன், மதுரை
இந்த மாத அந்திமழை மனதை வெகுவாக பாதித்தது! ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..என்ற ஆட்டோகிராஃப் பாடலை, முணுமுணுக்க வைத்தது பக்கத்துக்கு பக்கம். அடுத்த தலைமுறைக்கு கட்டாயமாக கிடைக்க வாய்ப்பில்லாத, நமக்கு மட்டும் நுகரக்கிடைத்த அனுபவம். படிக்க, படிக்க நெஞ்சாங்கூட்டில் ஏதோ செய்தது. முதலில் மைப்பேனா, ஆஹா மறக்க முடியுமா? மறந்துவிட்டோமே? கட்டுரை வரிகளில் அத்தனையும் உண்மை! அடுத்து எளிமையான அரசியல், அது மறைந்து போன ஒன்று.. மஞ்சள் பூச்சும் தோள் துண்டும், மறுபடியும் அப்பாவை ஆணித்தரமாக ஞாபகப்படுத்தி, கண்களை குளமாக்கியது. அடுத்து கடிதம், கடிதமா? என்று தந்திபோல் அதிர்ச்சி! இப்போது முகநூல், குறுஞ்செய்தி, சேட்டிங், சீட்டிங் காலம் அதுவும் மண்ணோடு மண்! ஐயோ மறக்க முடியாத பாம்பட பாட்டிகள், அம்மம்மா, அப்பாவின் அம்மா, என் சிறுவயதில் காது வளர்த்தல் பார்த்து, ரசித்து, தொட்டு தொட்டு விளையாடியதும், அதையே பிரமித்து ‘‘எவ்வளோ பெரிய காது? என்று மதி மறந்து நின்ற அந்த நாட்கள் கண்முன் வந்து மறைந்தது. தையல்காரர்கள் அனுபவம் எனக்கும் உண்டு. எப்படா தைத்துப்போடுவோம் என்று ஏங்கிய நிமிடங்களையும் மறக்க முடியாது. மாட்டு வண்டி பயணித்ததில்லை என்றாலும் எட்ட நின்று ரசித்தது, உண்டு. தமிழ் பேசும் சர்வர், இழந்த கொண்டாட்டம், பாயீசம், மறையும் சடங்குகள், ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம்,(ஈயம் பூசுபவரை விட்டு விட்டார்கள்), வாட்ச் மிட்டாய் அதையும் விட்டீர்கள், நாம பாக்கிய சாலிகள் தான். அதை எல்லாம் அனுபவித்தமையால் அல்லவா? மகிழ்ச்சி!
இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்.
கருந்தேள் நன்றாகவே கொட்டியுள்ளது. எதிலும் பணம், எல்லாவற்றிலும் பணம். பணம் பணம் என்று ஆலாய்ப் பறந்து, பணத்தைப் பார்த்தவர்களைப் பற்றி என்னதான் சொல்வது? கபாலி படத்தை எடுத்துக்கொண்டால் அதன் தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே முதலீடு செய்த பணத்துடன் லாபமும் பார்த்துவிட்டார். அந்தப் பணத்தையும், லாபத்தையும் எப்படியெல்லாம், எதன்மூலம் சம்பாதித்தார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் படத்தைத் திரையிட்ட தியேட்டர்களில் அநியாயத்திற்கு டிக்கெட் விலை வைத்து விற்றது சரியா? ஐநூறு, ஆயிரம் என்று கொட்டி டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்த்த ரசிகர்கள் முகம் போன போக்கை காண வேண்டும். இதற்கா என்று ஒரு வெறுப்புடன் சலித்துக் கொண்ட ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனியாவது இப்படி அநியாயத்திற்கு டிக்கெட்டிற்காக பணத்தைக் கொட்டி அழவேண்டாம். அதைக் குடும்பத்தில் கொட்டுங்கள். குடும்பம் சிரிக்கும். மகிழும். படம் பார்த்தோமா, தியேட்டர் கேட்டை விட்டுத் தாண்டியதும் அனைத்தையும் மறந்தோமா என்ற நிலை வரவேண்டும். காரணம் திரையில் காண்பது ஒரு பொய்த்தோற்றம். அது நிஜம் அல்ல; நிழல்!
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
சிறப்புப் பக்கங்களை அலங்கரித்த கூடுதிரும்புதல் & விட்டதும் பெற்றதும் தொகுப்பு இறந்த காலத்திற்குள் எங்களை அழைத்துச் சென்று உலவ வைத்தது. மைப்பேனாவிலிருந்து நீங்கள் கேட்டவை வரை எல்லாப் பக்கங்களிலுமே இழந்த சொர்க்கத்தின் சுவாரஸியமான சுவடுகள் தோய்ந்திருந்தன..! ஆரவாரமற்ற அன்றைய வாழ்க்கையின் இயல்புக்கேற்ப, நாம் பயன்படுத்திய பொருட்களும், சந்தித்த மனிதர்களும், அனுபவித்த சுகங்களும் & சோகங்களும், நினைவு கூர்தலிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக நம் உணவு முறையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம், இன்றைய & வருங்காலத் தலைமுறைகளையே நோய்களின் பிடியில் சிக்க வைத்திருப்பதை நினைக்கவே நெஞ்சம் பதைக்கின்றது. உடை, உணவு, விளையாட்டு, கல்வி, கலாச்சாரம் போன்றவற்றில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் நன்மை தரவில்லை என்பதும் நெருடலான நிஜம். இந்த பக்கங்களைப் பாதுகாத்து நம் பேரன், பேத்திகளுக் குக் காட்டுவது, எத்தகைய நல்வாழ்வை, நாகரிகம் விழுங்கிவிட்டது என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.