சிலிர்ப்பு

சிலிர்ப்பு

 ‘பிறவி குண்டர்கள் நேரங்காலம் பார்க்காமல் உட்கார்ந்து வேலை பார்க்கக் கூடாது’, ‘துயரத்தை கொண்டாடிக்கொண்டிருந்தால் மீளவே முடியாமல் போய்விடும்’, ‘நாவலில் ஒரு சதவீதம் கூட சொந்த அனுபவத்துக்கு அப்பாற்ப்பட்ட (உய்த்துணராத) எதுவும் இருக்கக்கூடாது’ போன்ற எழுத்தாளர் பா.ராகவனின் வரிகள் அர்த்தமுள்ளவை. ‘தொலைக்காட்சி தொடர் எழுதும் போதெல்லாம் ஒரு பேயாய் அல்லது பிசாசாக மட்டுமே வாழ்ந்திருக்கிறேன்’ என்ற வரிகள் ஓர் எழுத்தாளனின் உண்மையான சொரூபத்தை காட்டுவதாக இருந்தது. ‘ஒரு செட்யூல் டைரக்டர் இரண்டு பெண்களை மணந்தவர் போலத்தான் படப்பிடிப்புத் தளத்தில் செயல்படுவார்’  என்ற தொடர் அவரது அடிமனதிலிருந்து கிளம்பிவந்த முத்தாய்ப்பான வரிகள். செட்யூல் டைரக்டர்களை அவர் காட்சிப்படுத்தியிருந்தவிதம் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாகயிருந்தது.  பா. ராகவனின் ‘உரித்து எடுத்தவைத்த உண்மைகளின் உலகம்’ சிலிர்ப்பூட்டியது.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரியகாரை - 630 311

தவறில்லை

இரா. பிரபாகரின் இளையராஜாவும் சங்கீத மும்மூர்த்திகளும் கட்டுரை படித்தேன். இயற்கையும் இசையும் பிரமாண்டமானவை. வழிபாட்டிற்குரியவை. யாரும் பூர்வீகச் சொத்தென்று உரிமை கோர இயலாதவை. குருகுலக் கல்விமுறை இருந்த இடத்தில் இன்று பல்வேறு கல்விமுறைகள் உள்ளன. காலத்தால் எல்லாமே மாற்றத்திற்குட்பட்டதால், ஒரு காலத்தில் கைக்கொண்ட அளவுகோலை எல்லாக் காலத்திலும் கைக்கொள்ள இயலாது.

அந்தக் காலகட்டத்தில் இசை மும்மூர்த்திகள் உச்ச அளவாகக் கொள்ளப்பட்டது சரியெனில், திரையிசை ஆதிக்கத்திலிருக்கும் இக்காலத்தில் இசைஞானி இளையராஜாவை உச்ச அளவாகக் கொள்ளப்படுவதில் தவறேதுமில்லை.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

முக்கிய செய்திகள்

பா.ராகவனின் பூனைக் கதை கட்டுரை வாசித்தேன்.அவரைப் பாராட்ட வேண்டும். தலைப்பிரசவம் என்ற தலைப்பு ஒரு புதிய அனுபவத்தைக் கூறுகிறது. ஜெயமோகன் கட்டுரை வாசிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. நடிகர் சிவகுமார் ஓர் ஓவியக் கலைஞர் சென்னை வந்து ஒரு சிறந்த நடிகனாக, அப்பழுக்கற்ற நடிகராக வாழ்ந்து காட்டியவர். இந்த இதழில்் பெண்கள் படிக்கின்ற மாதிரி கட்டுரைகள் வந்துள்ளது. அதில் கலாப்ரியாவின் கட்டுரையில் பழைய காலத்தில் பிள்ளைப்பேறு பார்ப்பதை எவ்வளவு தெளிவாக எழுதியுள்ளார். தி. பரமேசுவரியின் அனுபவம் ஒரு சிறப்பு. தா. பிரகாஷ், கருந்தேள் ராஜேஷ் கட்டுரைகள் நன்று. முதல் குழந்தைக்கு மருத்துவர்கள் ஆலோசனை எல்லோரும் படிக்க வேண்டிய செய்திகள்.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

இனித்த பதிவு

சிறப்புப் பக்கங்களாக முதல் பிள்ளைப்பேறு அனுபவங்களை – சோகம், நெகிழ்ச்சித் தருணங்கள் போன்றவை பல்துறை கலை, இலக்கிய ஆளுமைகளிடம் கேட்டுத் தொகுத்தளித்திருப்பது வித்தியாசமானது, வியக்கவும் வைக்கிறது. திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் குழந்தையைப் பேறு காலத்தில் கூட துணைவியாருடன் இருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவதுடன், குழந்தையின் வாயில் சீனித் தண்ணியைத் தொட்டு வைத்து வாழ்க்கை முழுக்க இந்த இனிப்பு போல இனிச்சுக்கிடக்கட்டும் என விளித்து ஆனந்தத்தின் மழை உன் மீது இடையறாது பெய்யட்டும் என இறைவனிடம் வேண்டினேன் என்ற பதிவு இனித்தது. அடுத்து ஜெயமோகனின் ‘புதியவன்’ அஜிதன் பிறந்த சூழலை விவரிக்கும் விதம் அழகு! பழைய துணியின் சிறப்புகளை சொல்லுமிடத்து,”பழைய உலகம்தான் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.” சிந்தனை வரிகள்! மேலும், நடிகர் சிவகுமார், பாமரன், மருத்துவர் தணிகைவேல், கலாப்ரியா, பாரதி தேவி, பரமேசுவரி உட்பட்டோர் அளித்திருக்கும் முதற் பிரசவ அனுபவங்கள் அனைத்தும் மிக அருமை!

பிரேமா அரவிந்தன், பட்டுக்கோட்டை

மகிழ்வும் நிறைவும்

தலைச்சான் பிள்ளையைப் பெற்ற பிறகே ஒரு ஆண் தன்னை முழுமையான ஆணாகவும், ஒரு பெண் தன்னை முழுமையான பெண்ணாகவும் நிரூபித்தவர்களாக நினைக்கிறார்கள்.

மகப்பேறு நல்ல முறையில் நடக்க வேண்டும். தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும். பிள்ளை எப்படி இருக்கும்? யார் சாயலில் இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல்லா தலைச்சான் பிள்ளையைப் பெற்றெடுக்கின்ற பெற்றோர்களுக்கு இருக்கவே செய்யும்.

ஓர் ஓவியத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் வித்தியாசமாக கருத்து கூறுவதுபோல, பல்வேறு துறை சார்ந்தவர்களின் முதற் குழந்தைக்குத் தாய், தந்தையான அனுபவங்களும் உணர்வுகளும் வெவ்வேறானவையாகவே இருக்கும்.

அவற்றையெல்லாம் தொகுத்துத்தந்து சிறப்புப் பக்கங்களைப் படித்தவர்களின் மனங்களிலெல்லாம் மகிழ்வும், நிறைவும் பெருகும்படி செய்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

மு. இராமு, திருச்சி

வழிகாட்டல்

பாரத தேவியின் அனுபவம் படித்தேன். கி.ரா. கதை சொல்வது போல் இருந்தது. என் அம்மாவிற்கு தொடர்ந்து ஏழு பெண் குழந்தைகள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்திமலை சிவபெருமானை வேண்டி பிறந்ததால் ‘பஞ்சலிங்கம்’ என்ற நாமம் பெற்றேன்.

பெரியப்பா உன்னுடைய பையனை எனக்கு தத்துக் கொடு என்ற உடன் என்னைத் தத்து கொடுத்துவிட்டார்.  என்னை நன்றாக வைத்துக் கொண்டார்கள், படிக்கவும் வைத்தார்கள். .  சிவகுமாரின் அனுபவம் ஆச்சரியமாக இருந்தது. ஆயிரம் ரூபாயை முழுதாக பார்த்ததில்லை என்று அந்திமழையில் படித்தபோது போராடாமல் வாழ்வில் வெற்றி இல்லை என்று நிதர்சனமாகத் தெரிந்தது.

அட்டையில் நடிகர் சூர்யா கம்பீரமாக. முதுகலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு பொறுப்பான பதவியில் இருக்கும் என் நண்பனின் மகளை பார்க்கச் சென்றிருந்தோம். வரவேற்பறையில் மன்மோகன் சிங் படமும் சூர்யா படமும் மாட்டி இருந்தது. சூர்யாவின் ரசிகையாம்மா நீங்க என்று கேட்டதற்கு, இல்லை அங்கிள் என் தோழிகள் அகரம் கல்வி உதவிக் குழுவால் படித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் சூர்யா மீது மரியாதை என்றார். அவர் அந்திமழை அட்டையை மட்டும் அழகுபடுத்தவில்லை. கல்வி வாயிலாக மீசையை முறுக்கி வழிகாட்டுகிறார்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

அப்பட்டமாக...

தற்காலத்தில் வயிற்றுப்பாட்டிற்கு அல்லது வசதிக்கு என்று ஒரு தொழிலையும் இலட்சியத்திற்கு அல்லது ஆத்ம திருப்திக்கு என்று வேறொரு தொழிலையும் மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க இயலாத நிலை இருப்பதை பா. ராகவனின் பூனைக்கதை கட்டுரை உள்ளங்கை நெல்லிக் கனியாக உணர்த்தியது.

நெடுந்தொடர்களின் தயாரிப்பாளரையும், இயக்குநர்களையும் திருப்திப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களான செட்யூல் டைரக்டர்கள் பணிப்பளு காரணமாக உஸ் என்று உட்காரவோ, ஓய்வெடுக்கவோ முடியாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் உண்மை நிலையை இவ்வளவு அப்பட்டமாகவும் ஆணித்தரமாகவும் வேறு யாரும் சொல்லிவிட முடியாது.

தி. வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி

அடையாளம்

பெருவழிப்பாதையில் வளர் திரை மாற்றம் என்று அண்ணா காலம்தொட்டு, கலைஞர் காலம் கடந்து பாரதிராஜாவின் புதிய பரிமாணங்களால் திரை புதிய வாசத்தில் பூத்துக்குலுங்கிய கோணங்களை கவிபாரதி பிட்டு வைத்துள்ள விதம் லட்டு...கூர்மையும் ஓர்மையும் சீர்மையுடன் ஒருங்கிணைய பாரதிராஜாவின் திரைப்பயணம் திரை உலகின் தனித்துவ கவித்துவ அடையாளம்.

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு

சுவாரஸ்யம்

இந்த மாத சிறப்புப் பக்கங்கள் அருமையாகவும் சுவாரஸ்யம் மிகுந்தும் இருந்தன.   ரிஸ்க் அனுபவம் பரிசு ரூ. 750 பெற்ற முக்கியமான வாசகர் அண்ணா அன்பழகன். அவரது அனுபவமும் சுவாரஸ்யம். அவருக்கு வாழ்த்துகள்.

ந.மனோகரன், கோவை

வழக்கம் போல் விறுவிறுப்பான திரைப்படம் ஒன்றைப் பார்த்த திருப்தியை திரைவலம் ஏற்படுத்துகிறது!  ‘ஹாட்ஸ்பாட்’ முயற்சியைப் பாராட்டியது  ‘ஹார்ட்’ பூர்வமானது. கள்வன் படமோ பாரதிராஜாவால் காப்பாற்றப்படுகிறது.வெப்பம் குளிர் மழையோ- சாதாரண சுமங்கலிக்கான எதிர்பார்ப்பை மையப்படுத்தி நகர்கிறது. டியர்தீபிகா + ரோமியோ + ஆவேஷம் + அமர்சிங் சம்கீலா என்று மிடுக்கான விமர்சனங்கள் அடுக்கப்பட்டாலும் தவறவிடக்கூடாத ‘அமர்சிங் சம்கீலா' வுக்குரிய வக்கலாத்து வகை தொகையாக பரிமளிக்கிறது.

ஆர். உமா காயத்திரி, திசையன்விளை

logo
Andhimazhai
www.andhimazhai.com