சரியான புரிதல்

சரியான புரிதல்
Published on

2024- நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகளுக்கும் கற்றுத் தந்த பாடங்கள் என்னென்ன? அவைகளை எப்படிச் சரிப்படுத்திக் கொள்ளலாம், அவைகளுக்கான எதிர்காலம் எப்படி அமையக்கூடும் என்று வாசகர்களுக்குச் சரியான புரிதல்களை ஏற்படுத்தும் வண்ணம் விரிவாகவும் விளக்கமாகவும் துல்லியமான கணக்கீடுகளுடன் காரண காரியங்களுடன் ‘மாறும் காட்சிகள்… கலக்கத்தில் கட்சிகள்’ கட்டுரைகள் நான்கும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

தி.வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி 

தொடர்க!

தோழர் சுப.வீ அவர்களைப் பற்றிய கவிதா பாரதியின் எழுத்தோவியம் அருமையிலும் அருமை. தோழர் சுப.வீ.யின் திராவிடர் இயக்க உணர்வு பாராட்டத்தக்கது. கூரை மீது ஓர் அறை ரஸ்கின் பாண்டின் ஒப்பற்ற பயணம்’ என்னும் படைப்பை அற்புதமாய் மாலன் மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு என் உளங்கனிந்த பாராட்டுகள். மதிமலரின் அறிமுகப் பகுதி மிகுந்த பயனுள்ளது. அப்பகுதி தொடரட்டும். பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜாவின் இசை என்னும் இரா.பிரபாகரின் திசையாற்றுப்படை சிறப்புடன் விளங்கியது. சிறுகதைகளைவிட அதை எழுதிய ஆசிரியர் பற்றிய அறிமுகங்கள் மகிழ்ச்சியைத் தந்தன. ஆர்தர் வில்சன் நேர்காணல் நன்று.

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

முதல் சோதனை

தேர்தல் முடிந்ததும் வந்த இதழ், மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியில் அமரும் சபதம் நெடுவழியாக நிறைவேறிவிட்டது. தமிழகத்தில் 40க்கு 40 ஒரு வித்தியாசமான வெற்றி. இதை இவர்கள் காப்பாற்றி ஆகவேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் இவர்களுக்கு முதல் சோதனை.

திவ்யபிரபந்த் எழுதிய கட்டுரையில் கடைசியில் காங்கிரஸ் சந்தித்த 18 தேர்தல்களில் இது மூன்றாவது மோசமான தேர்தல் எனக் குறித்துள்ளார். இளையராஜாவைப் பற்றி பிரபாகர் கட்டுரை ஆழ்ந்த ஞானத்தோடு எழுதியுள்ளார். சவக்கிடங்கு கதை ஒரு தாய் தன் மகளை எப்படி பராமரிக்கிறாள், தகப்பனுக்கு அந்தக் கடமை இல்லை என்பதைச் சுட்டுகிறது. புளியாமரக் கதை சாதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் அவமரியாதையைச் சுட்டிக்காட்டுகிறது.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

காவிய வரி

கணவன் சிறையிலிருந்தால் மனைவிக்கு அது நிச்சயமாகத் தண்டனையாகவே இருக்கும் என்ற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த சுப. வீரபாண்டியனின் சிறை எனக்கு தண்டனை உனக்கு என்ற கடித வரி கட்டுரையாசிரியர் குறிப்பிடுவதுபோல காவிய வரியே!

இயற்கையின்பால் மாளாத காதல் கொண்டவராகவும் தான் படைக்கும் கதைகளின் கருப்பொருள்களின் மையப்புள்ளியாகவும் மனித வாழ்வை ஆக்கிக் கொண்டவராகவும் கிராம மக்களுடன் வாழ்நாள் முழுவதும் உறவாடுபவராகவும் நவீன காலக் கதைசொல்லிகளில் ஆகச்சிறந்த ஒருவராகவும் விளங்குகிற ரஸ்கின் பாண்ட் குறித்த கே னிவாசராவ் எழுதி மாலன் மொழிபெயர்த்த ரஸ்கின் பாண்டின் ஒப்பற்ற பயணம் கட்டுரை அவர் குறித்த ஆகச்சிறந்த அறிமுகம் எனலாம்.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

கோபம்

கடந்த இதழில் வெளியான புளியாமரம் சிறுகதையில் கூட்டத்தில் சேர்வதற்காக ரவி கெட்டவார்த்தை பேசுவது வருத்தமாக இருந்தாலும் வகுப்பில் வந்ததும் தமிழ் ஆசிரியர்கள் நடத்தும் குறள்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று… என்பது.

நல்ல வார்த்தைகள் இருக்க தவறான வார்த்தைகள் எதற்கு? சாக்கடையில் விழுந்த பந்தை எதற்கு எடுக்க வேண்டும்? ரவியின் அம்மாவின் கோவம் நியாயமானதே! தனி வீட்டில் வேலை செய்பவளின் மகன். மனித உறவுகள் பணத்தை அடிப்படையாகக் கொண்டு செல்வது நியாயமானது அல்ல. வாழ்வதும் கூட கோபப்பட வேண்டிய இடத்தில் கோபம் பட்டுத்தான் ஆக வேண்டும்.

எஸ். பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

ஆனந்த மழை

'வாசிப்புத்திருவிழா 2' என்று அந்திமழையின் 6 கதைகள் கொண்டாட்டம் மூளைக்கு யோசிப்புத் திருவிழாவாகவும் நெஞ்சுக்கு நேசிப்புத் திருவிழாவாகவும் மாறி அந்திமழையை ஆனந்த மழையாக நிரூபித்துவிட்டது.

ஆர்.உமா காயத்ரி, மணலிவிளை 

ஆழமான கட்டுரை

இறந்துகிடக்கும் அப்பாவை அப்பா என சொல்லத் தயங்கும் மகளின் மன ஓட்டத்தை சொல்கிறது ராஜமாணிக்கம் எழுதிய சவக்கிடங்கு.

கதையில் சவக்கிடங்கு பற்றிய சித்திரிப்பு, வேப்ப மரம் பற்றிய உவமை, பதின் பருவப் பெண்ணின் மனதை உறுத்தும் சம்பவம் போன்றவை கதைக்கு பலம். பலரும் பேசத்தயங்கும் விஷயத்தை கதைக்களமாகக் கொண்ட சவக்கிடங்கு, மற்ற கதைகளையும் படித்தேன் மகிழ்ந்தேன்.

‘பாடல் வரிகளைத் தாண்டிய இளையராஜாவின் இசை’ என்ற கட்டுரையை ஆழமாகவும் அடர்த்தியாகவும் எழுதியிருக்கிறார் பேராசிரியர் பிரபாகர். வெகுஜன இசையில் ராஜாவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை.

 தாமோதரன், செங்கல்பட்டு

புதுமை

மூன்றாம் பாலினத்தவர் பற்றிய பார்வை இன்னும் நம் சமூகத்தில் மாறவில்லை. அதுவும் ஆசிரியராக இருக்கக் கூடியவர்களிடமே இந்த புரிதல் ஏற்படவில்லை என்பதை சொல்லும் கதைதான் வெயில் தணியும். இந்த கதையில் அப்பா – மகள் இடையேயான புரிதலை ரொம்ப நுட்பமாக பதிவு செய்துள்ளார் கதாசிரியர். தன் தோழியைப் புரிந்துகொள்ளும் பாரதி உண்மையில் பாரதியார் கண்ட புதுமைப் பெண்தான்.

 கீர்த்திகா, சைதாப்பேட்டை

பாண்ட்... ரஸ்கின் பாண்ட்!

‘நிலையான வாழ்க்கை… நிலையான வளர்ச்சி…’ ரஸ்கின் பாண்ட் பற்றிய கட்டுரையில் இந்த வரி, நீண்ட ஒரு யோசனைக்கு அழைத்துச் சென்றது.

ரஸ்கின் எந்தளவுக்கு இயற்கையையும், வாழ்க்கையும் நேசித்தார் என்பதை ‘கூரை மீது ஓர் அறை: ரஸ்கின் பாண்டின் ஒப்பற்ற பயணம்’ என்ற இந்த கட்டுரை உணர்த்துகிறது.

இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் ரஸ்கின் பற்றிய அறிமுகத்தை டீ குடிக்கும் நேரத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும்படி மிக எளிமையான மொழிநடையில் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் சாகித்ய அகாதெமி செயலாளர் கே. னிவாசராவ். அதை அப்படியே இலகுவான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

சிவக்குமார், திருவண்ணாமலை

சிரிப்பு

'கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்?' என்று ஓபிஎஸ்,ஈபிஎஸ் மேட்டரை படித்ததும் நிறையவே சிரிப்பு வந்தது.

எஸ்.எல்.ஜார்ஜ் அருண் சொக்கன்குடியிருப்பு,

அரசியல்

இந்த மாத இதழில் வெளிவந்திருக்கும் அரசியல் கட்டுரைகள் சிறப்பானவை. சரியான கோணத்தில் பார்க்கப்பட்டு எழுதப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட கட்சிகள் எச்சரிக்கை மணியாக எடுத்து ஆலோசனையாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றியே. ஊக்கப்பரிசுக் கதைகளும் சிறப்பானவையாக உள்ளது.இளையராஜா கட்டுரை நன்றாக உள்ளது.

ந மனோகரன், சிங்கை கோவை

அபாரம்

‘காத்திருக்கும் வேகத் தடைகள்” என்ற தொகுப்பு 40/40 என்று எம்பி தேர்தலில் வென்ற திமுக அணிக்கு 2026 எப்படி அமையும் என்பதற்கான அடிப்படைகளை அலசியிருப்பது அபாரம்! 'ஓய்வூதியம்' போன்ற மேட்டர் ‘மனப்பாரம்'! பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் லஞ்ச முறைகேடுகளும், மக்கள் அலைக்கழிக்கப்படுவதும் 2026ல் கடும் பாரம் என்றாகிவிடும்!

ஆர்.ஜி.பாலன்,  திசையன்விளை

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com