ஆறுதல்

ஆறுதல்
Published on

அந்தி மழை ஏப்ரல் 2019 இதழில்  பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண்களுக்கு ' அந்த படங்களை அழிக்கலாம் அஞ்சாதே' என்று ஆறுதல் கூறியுள்ளார் செய்தியாளர். பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். சினிமா பள்ளியில் தேறியவர்கள் வெளியில் தோற்றதில்லை என நேர்காணல் மூலம் கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. தி. மு. க. ஒரு தேர்தல் இரண்டு வெற்றிகள் சாத்தியமா? என்னும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் யூகி. தி.மு.க. பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெறும் பட்சத்தில் சட்டமன்றத்திலும் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.  எனவே இரண்டு வெற்றிக்கு சாத்தியமுண்டு என்றே கூறவேண்டும். அமரர் அறையைக் காட்சிப்படுத்தியுள்ளார் புகைப்படக் கலைஞர் அருண் விஜய் மாதவன். அது பாக்கியம்சங்கர் வார இதழ் ஒன்றில் எழுதும் நான்காம் சுவர் தொடரை நினைவுபடுத்தியது.

-பொன். குமார், சேலம்  - 636006

சமூகப்பொறுப்பு

பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்திற்குக் கொதித்து, குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டுமென துடித்து கட்டுரை, கவிதை எழுதுவதைவிட, அதுபோன்ற பிரச்சனைகளில் சிக்காமல், சிக்கினாலும் மீள வழிமுறைகளை இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பது தான் சரியான தீர்வாகும், அந்திமழை சமூகப் பொறுப்போடு அதைச் சரியாக செய்திருக்கிறது.

-மல்லிகா அன்பழகன், சென்னை

ஏமாற்றமாட்டார்கள்!

1971 - ல் பேரறிஞர் அண்ணா இல்லை. காமராசரோடு இராஜாஜி கூட்டணி. இருதுருவங்கள் இணைந்தன, அதுவே வெல்லும் என அனைவரும் எண்ணினர். தி.மு.கவுக்கோ கூட்டணி பலம் இல்லை. அதனால், காமராசரே வெற்றி பெறுவார் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் புரட்டிப்போட்டது தி.மு.க. 184 இடங்களை வென்றது.

வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒருபக்கம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணி. கொள்கை முரண்பாடுகளைக் கொண்ட அதிமுக கூட்டணி  சாதனையாகச்
சொல்ல ஏதுமில்லாத காரணத்தால், எதிர்க்கட்சியைத் திட்டித்தீர்ப்பதே
சாதனை என பரப்புரை செய்துகொண்டிருக்கிறது.

இன்று மக்கள், குறிப்பாக தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஏமாறத்தயாராக இல்லை!

-நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

போர்முனை

போரில் பெற்ற வெற்றியை சிலாகிக்கும் தேசம், அதற்கு காரணமானவர்களின் பின்னணியில் இருக்கும் துயரங்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை முன்வைத்து வந்திருக்கும் 'போர் முனை' பக்கங்கள் மனதை நெகிழச் செய்கின்றன. இந்த தலைப்பை தெரிவு செய்தவர்களுக்கு வாழ்த்துகள்.

-கலையரசன்,பேராவூரணி

‘மணம்' நிறைந்தது!

இணையக் குற்றங்களில் இதயம் இடிந்து போகாதே என நம் வீட்டு சிறு மலருக்கு அறிவுறுத்தி வழி உணர்த்திய படைப்பு  முத்தாய்ப்பானது. விளைவை எதிர்கொள்ளவும் ரௌத்திரம் பழகவும் சொல்லிக் கொடுத்தது சரியான வழிகாட்டல்.

வட்டங்களும் சதுரங்களும் படைப்பில் அறிமுகமான விஜி அக்கா  மற்றுமோர்
சிறந்த எடுத்துக் காட்டு. எல்லா களங்களிலும் ஆடி வென்ற அவரின் உழைப்பும் துணிவும் அடுத்த வழிகாட்டல்.

அமரர் அறை புகைப்படக் கலைஞரின் அனுபவம் தனித்துவம்.

மதங்களை மையப்படுத்திய நிகழ்வில் மென்மையாக அதைக்கட்டுப்படுத்திய நியூசிலாந்து பிரதமர் ஜாசிந்தாவின் அணுகுமுறை மிகச் சிறப்பானது. தேர்தல் காலங்களில் பிரபலங்கள் பற்றிய ஆய்வு அலசல் சரியாக இருந்தது. சிறப்புப் பக்கங்களாய் இடம்பெற்ற 'போரின் மறுபக்கம்' அரிய விவரங்களின் அறிவுக் களஞ்சியம்.  காலத்திற்கேற்ற உண்மையின் ஒளி அதில் மிளிர்ந்தது. 'அவர்கள் அவர்களே' பகுதியில் இடம்பெற்ற 'சோலை' பற்றிய செய்தி மணம் நிறைந்தது.

-தஞ்சை என்.ஜே. கந்தமாறன்,

 சென்னை - 89.

கணிப்பு

முகப்புக் கட்டுரையான ஒரு தேர்தல் இரண்டு வெற்றிகள் சாத்தியமா? கட்டுரை படித்தேன். யூகி அரசியல் களநிலவரத்தைக் கச்சிதமாக ஆய்ந்து எழுதியிருக்கிறார் என்றே நம்புகிறேன். திமுகவுக்கு சாதகமான அம்சங்களை சான்றுடன் எடுத்து வைத்தும், வாரிசுகள் களம் இறங்க வழி விட்டிருப்பது சரிவுக்கு வித்திடாதா? என்றும் சுட்டிக்காட்டியிருப்பது சிந்திக்கவைக்கிறது. திமுக பலப்பட்டு வருவதை பல்வேறு செய்தி - ஊடகங்கள் உணர்த்திவருவதையும் புறம்தள்ள முடியவில்லை. எப்படியாயினும் மத்திய மாநில அரசுகள் மக்கள் மேம்பாட்டுப் பணிகளில்
சிரத்தை காட்டாததை அறிந்தே உள்ளனர். புதிய வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது மாற்றம். கட்டுரையாளர் கணித்திருப்பதுபோல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் கனிந்திருக்கிறது என்ற கூற்றுக்கு தேர்தல் முடிவு தான் விடை அளிக்கும்.

-நவீன் குமார், நடுவிக்கோட்டை

போர்முனை

'போரின் மறுபக்கம்' கவர் ஸ்டோரி நாட்டுக்காக தினம்தினம் போராடும் இராணுவ வீரர்களின் மறுபக்கத்தை திறந்து காட்டியது. மறுபக்கத்தில் அவர்களுடைய தேசப்பற்றும், நேசமும், கடமையும், எத்தகைய ஆபத்திலும் தன் தாய் நாட்டை காட்டிக்கொடுக்காத வீரமும் தெளிவாக தெரிந்தது.

அவர்களின் குடும்ப சோகம், அரசுகளின் போக்குகள் இவற்றை படிக்க படிக்க நெஞ்சில் சுமை அழுத்துகிறது. தேசம் தேர்தல் திருவிழாவில் திளைத்துக்கொண்டிருக்கும்போது, இவர்களைப் பற்றி கவலைப்பட்டது அந்திமழை மட்டுமே.

-ஆர். மோகன்,சேலம்

logo
Andhimazhai
www.andhimazhai.com