ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா சொதப்பல்கள் பற்றிய எல்லாச் செய்திகளுமே சிறப்பாக இருந்தன. காணாமல் போன சென்னையின் காதலர் மா.சு. சம்பந்தம் அவர்கள் பற்றிய ப.திருமாவேலனின் கட்டுரை கண்ணீர் வரவழைத்தது. இந்தத் தமிழ்த் தொண்டர் காணாமல் போனது என்பது சென்னை வரலாற்று& ஆர்வலர்களின் தீராத துயரந்தான். மதிமலர் எழுதிய வறுமை ஒழிப்பு விஞ்ஞானி அபிஜித் பானர்ஜி பற்றிய பல செய்திகளை அறிந்து மகிழ்ந்தேன். கட்டுரையாளர்களுக்கு பாராட்டுகள்.
மோகனசுந்தரம், சென்னை
மும்பை முதல் விக்கிரவாண்டி வரை சாதி அரசியல்
சாணக்கியத்தன்மை புகுந்து விளையாடியிருப்பதை கூறி அரசியல்வாதிகளுக்கு ஒரு வகுப்பு நடத்திவிட்டது அந்திமழை. உயர்ஜாதி உட்பட வணிக இனத்தவர் என்று ஆக்கிரமித்து பற்றாக்குறைக்கு மத உணர்வையும் பற்ற வைத்த 'பாஜக'வும் பழைய வெற்றியைப்பெறவில்லை என்றாலும், பாரத சமூகத்திற்கு நல்ல வழிகாட்டும் நல்ல பாதையில் அதுவும் நடக்கவில்லை என்பதும் பாடமாகவே தொடர்கிறது. மகாராஷ்ட்டிரா, அரியானா, அனைத்துக்கும் சாதி மட்டுமே அரசியல்வாதிகளுக்கு நாதி என்றான நிலையில் ஜனநாயக 'ஜோதி' அணைந்து விட்டால்? மீதி இருப்பது இருட்டுதானே?
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை
சினிமாவின் அபத்தங்களை தொகுப்பாக ரசிப்பது சினிமாவைவிட சுவாரசியம் என்பதை மீண்டும் நிரூபித்தது சிறப்பிதழ். மகேந்திரன் பாணியில் பூமணியின் வெக்கை நாவலை வெற்றிமாறன் நேர்த்தியாய் திரைகதையாக்கினாலும் தமிழ் சினிமாவுக்கே உரிய ஹீரோயிசமும், தூக்கலான வன்முறை சண்டைகளும்தான் அசுரனுக்கு நூறு கோடிக்கு மேல் தந்தது. ஆக 'அபத்த படங்கள் மக்களுக்கு அலுக்கவில்லையே!' என்ற தமிழ் படம் சி.எஸ் அமுதனின் வியப்பில்தான் விபரீதமிருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன ! என்று யோசித்தால் 'மக்கள் ரசனையும் நிறைய மாற வேண்டும் என்ற சுரேஷ் கண்ணன் கட்டுரை வரிதான் நெத்தியடி அறிவுரையாகும் மாறுவீர்களா....மக்களே !
மல்லிகா அன்பழகன், சென்னை
நாங்கள் பேப்பர் புக்ஸ் படிக்கிறதில்லீங்க, எல்லாம் தான் செல்லில் கிடைகிறதே! என்று பம்மாத்தும் இன்றைய ஃபேஷனில், வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் போன்றவற்றை ஏதோ நியூஸ் சேனல் அல்லது அரசு ஆவணம் போல நம்பும் மூடத்தனம்...அதையே பொது அறிவாக பாவித்து, பொது வெளியில் விவாதிக்கும் அபத்தம்.....இதுவே இணைய சமூக குழப்பங்களுக்கு மூல காரணம். ப்ராயிலர் சிக்கன் நல்லதா! கெட்டதா! என்று தீர்மானிக்கவே முடியாத அளவுக்கு அவதூறு பரவல் தொடர்வதை நம்பி அருவம் படமெடுத்தது, அரை வேக்காட்டுத்தனம். அட்மின் என்ற தலைவரின் கீழ் நூறு பேரோடு கூட்டணி போட்டு, தமிழனாக இருந்தால் ஷேர் செய் என்ற மிரட்டலுக்கு பயந்து வதந்திகள் பரவ நாமும் காரணமாயிருப்பது அயோக்கியத்தனம். கொஞ்ச காலத்திற்கு இணையத் தொடர்பை குடும்ப, நட்பு, உறவு வட்டாரங்களில்
சொந்த உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்துவதே அவசர, அத்யாவசிய சமூக சேவையாகும்.
யாழினி பர்வதம், சென்னை
நீர்வண்ணம் தைல வண்ணங்களில் ஆர்வம் மேலிட வாசுதேவன் தந்துள்ள ஓவியங்கள் நிச்சயம் காவியங்கள்தான்! 'பிரம்மா'&வின் பதவி ஆஞ்சனேயருக்கு என்றெல்லாம் ஆன்மிக உலகம் கூறினாலும்கூட, இடையே அந்தகண்ணனின் நாமத்தை வாசுதேவன் பெற்றிருப்பதால் அவரின் படைப்புத்திறன்கண்டு மனம் கூறியது இடைக்கால பதவி (பிரம்மா சீட்) இவருக்குத்தான் தரப்பட வேண்டும் என்று!
ஆர்ஜே கல்யாணி, மணலிவிளை
அமர்தியாசென்னுக்குப் பின் பொருளாதார நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் வறுமை ஒழிப்பு ரூட் பெருமைப்பட வைக்கிறது! சேம்பிளுக்கு விவசாயி ஒருவரின் வாழ்வின் மூலம் ஒரு குடும்பத்தை வறுமை எப்படி பீடிக்கிறது என்பதுதான் அவரது ஆய்வின் அலசல்! ஒலிம்பிக்கில் பெற்ற மெடல்கள் விகிதத்தைக்கூட இந்தியர்களின் வாழ்வுக்கான வளர்ச்சிக்கான ஒப்பீடாக மதிப்பிட்டு, பின்னர் சீனாவோடு அதனை சமப்படுத்த முடியாதபடி இந்தியா படும் சஞ்சலங்களை வெளிப்படுத்தி உள்ளார். உலகில் 100 கோடி பேர் பசியுடனே உறங்கச்செல்வதை பாரதியின் பாடலுக்கு அல்ல
சாடலுக்கு ஒப்பிட்டு நிம்மதி எப்போது என்பதற்கு மார்க்கம் கூறும் அவரது தீர்க்கம் நிச்சயம் 720 கோடிகளுக்குமான தீர்த்தமேதான்!
ஆர்.மணிமாறன், இடையன்குடி
சாதி அரசியலும் சாணக்கிய அரசியலும் குறளைப் போன்று ஆழ்ந்த பார்வையைக் கொண்டிருந்தது. தேர்தல் கணக்குகளில் விடையைக் கண்டுபிடித்துவிட முடியாதே. மகாராஷ்டிரமும் அதை நிரூபித்திருக்கிறது.
சும்மா சொல்லக்கூடாது,
சினிமா சொதப்பல்கள் பற்றி பிரித்து மேய்ந்துவிட்டீர்கள். சரியான பார்வையில் அமைந்த படைப்புகள்.
கொஞ்சம் அக்கட தேசம், ஸாண்டல்வுட் எனவும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கலாம். அங்கும் சுவாரசியங்கள் பல உண்டு. சரி அடுத்த முறை நடக்கட்டும்.
அதுசரி, இங்கே வேலையில்லா பட்டதாரி வேலை தேடி அலையும்போது, தொப்பையை மறைக்க கோட் மாட்டிக்கொண்டு அலைந்த சொதப்பல்களையும் தர விட்டு விட்டீர்களே.
இசை வணிகத்தில் பயணித்த தன் வாழ்க்கையை இயல்பாகச் சொல்லும் ஷாஜியின் எழுத்து கள் ஈர்க்கின்றன. தூரிகைப் பக்கங்கள் நினைவில் நிற்கும் தேர்வுக்கலை அந்திமழையின் பல தனித்துவங்களில் ஒன்று.
உலர் சிறுகதை மனதில் நைப்பு மிக்க ஈரத்தை ஏற்படுத்தி கண்ணில் ஒரு சொட்டு நீரோடு பெற்ற விதம் நெகிழ்ச்சி. மா.சு சம்பந்தம் அவர்கள் பற்றிய விவரம் தெரிந்தால் உதவக்கோரிய சுவரொட்டிகளை கண்டு பதைத்துபோன நாள் நினைவுக்கு வருகிறது.
தஞ்சை என்.ஜே கந்தமாறன்,
சென்னை.
மா. சு. சம்பந்தம் வரைந்த
சென்னை மாநகர் புத்தகம் வைத்து திருமாவேலன் தந்த தொகுப்பு தமிழர்களுக்கான தனி இனிப்பு! படிக்கப் படிக்க சென்னை மாநகர் புத்தகம் எங்கே என்ற பரிதவிப்பு! சம்பந்தம் சென்னையின் காதலர் என்ற சித்தரிப்பு மனதுள் எழ வைத்தது பூரிப்பு! அதே சமயம் சமகால சென்னைக்கும் அப்போதைய சென்னைக்கும் சம்பந்தமே இல்லாதுபோனதை குறித்த கட்டுரையாளர் வருத்தத்தில் ஏராளமான அர்த்தங்கள்.
-விநாயகராமன், செல்வ மருதூர்
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா சொதப்பல்கள்! சிறப்புக் கட்டுரைகளில் விரிந்திருக்கிற தகவல்கள் சினிமா பார்க்காதவர்களையும் ரசிக்கவும், வியக்கவும் வைத்திருக்கின்றன. இளங்கோவன் தோற்றுவாயில் ''நீங்கள் திரையரங்கில் இருப்பதை மறக்கச் செய்வதே சினிமா. என்று ரோமன் போலன்ஸ்கி சொல்லியிருப்பதைச் சுட்டியும் சினிமாவின் சுவாரசியசத்தைக் கெடுப்பது எது? நல்ல சினிமாவின் இலக்கணம் எவை? கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது நன்று. பிராய்லர் கோழிகளால் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலையும் அளவாக உண்பதற்கு லாயக்கற்றவை என்பதையும் அறிவியல் பூர்வமாக ஆய்ந்து. வயசுக்கு வருவதற்கும்
சிக்கனுக்கும் தொடர்புண்டா? கட்டுரை இரா. கௌதமன் எழுதி விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார்.
நவீன்குமார், நடுவிக்கோட்டை
வறுமை ஒழிப்பு விஞ்ஞானி குறித்த கட்டுரை அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அபிஜித் பானர்ஜி தன் மனைவி எஸ்தர் டப்ளோவுடன் இணைந்து எழுதிய நூல் மிக முக்கியமானது. உலகத்தின் மிகப்பெரிய துன்பம் பசி ஒன்றுதான். சமீப காலங்களில் சோமாலியா தேசத்தின் பசியால் வாடிய குழந்தைகளின் படங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்திருக்கிறேன். வயிற்றுக்குச் சோறிட வேண்டும்' என்று முழங்கிய பாரதியும். 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்'' என்ற வள்ளுவனின் வாய்மொழியும் எவ்வளவு உண்மை என்பதை இந்தோனேசிய விவசாயி ஒருவரின் வறுமை சார்ந்த வாழ்வியல் வழியாக அபிஜித் பானர்ஜி சுட்டிக் காட்டுவதைக் கட்டுரை ஆசிரியர் விவரித்துச்
சொல்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில் மக்கள்
தொகைக்கு ஏற்ப நாம் மெடல்களை பெறவில்லை என்ற உண்மை வேதனையான விஷயமாகும்.
இலக்குமணன், திம்மராஜன்பேட்டை