கற்கண்டு

கற்கண்டு
Published on

சிறப்புப் பக்கங்களுக்கான தலைப்புகளை எப்படித்தான் தேடிப் பிடிக்கிறீர்களோ! அருமை! அதிகார மையங்களை நடுங்கவைத்த என்ற அந்த முத்திரை வாக்கியம் சிறப்பு. புலனாய்வு தொடர்பான தொகுப்புப் படைப்புகள் அனைத்துமே தனித்தனி பார்வையைத் தந்தன. தங்களின் தேடல்கள் அனைத்துமே எங்களுக்கு அடுத்தடுத்த எண்ணங்களைத் தூண்டும். நிக்சனின் வாட்டர் கேட் ஊழல் போல கர்நாடகத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே பதவி இறங்கிடக் காரணமும் சுவாரசியமானது. ஒரிசாவின் முன்னாள் முதல்வர் நந்தினி சத்பதி கூட அப்படியான ஒரு நிகழ்வில் பதவி இறங்கிய நினைவு உண்டு. சிறப்புப் பக்கங்கள் அனைத்துமே கற்கண்டு. இதில் எதை தனித்து பாராட்ட !

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,சென்னை – 89.

சான்று

வண்ணதாசன் எப்பொழுதும் உணர்வுகளினூடே வாசகர்களை ஈர்க்கும் தனித்துவம் கொண்ட அற்புதமான எழுத்தாளர். கூர்ந்து நோக்கி வாசிக்கும் ஒவ்வொரு வாசகனையும் தன்னோடு அரவணைத்துத் தனக்கிணையான ஆற்றலோடு கொண்டு செல்கிற எழுத்தாளுமை எல்லா எழுத்தாளருக்கும் கிட்டுவதில்லை. தன்னுடன் வாசகனை இணைத்துக் கொண்டு சென்று அவர் ஆளுமைக் குள்ளாக்கிக் கொள்வதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுல் நானும் ஒருவன் என்பதே உண்மை. வித்தை என்ற இந்தக் கதையும் அதற்கு சான்றாக நிற்கிறது.

பா.செல்வவிநாயகம், சென்னை – 82.

சிறப்பு

ஆரம்பத்திலிருந்து அந்தோனிதாசனது பேட்டி சொடக்குமேல சொடக்கு போட்டது போல், எதார்த்தமாக சாதாரண வாழ்வு முறையினை வெளிப்படுத்தும் வண்ணம் இருந்தது.

 'உன்னைப் பெத்த வயித்தில பெரண்டையை வெச்சுத்தான் கட்டிக்கிறணும்' என்ற சொலவடைக்கு விலாவாரியாக அதன் புராணமே வெளிக் கொணர்ந்துவிட்டார் பாரதி மணி.

 பாரதி தம்பியின் 'கண்ணீரில் மூழ்கடித்த கஜா' கட்டுரை எங்களது விழிகளிலே செந்நீரை யல்லவா வரவழைத்து விட்டது.

 அரசியல் அறமும், சினிமாவின் தாக்கமும், சில கட்டுரைகளாக வெளிவந்துள்ளது சிறப்பு.

வண்ணதாசனது 'வித்தை' ஆழ்ந்த உள் மனதிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளால் பின்னப்பட்ட சிறுகதை. என்றும் போல் இயற்கையோடு இணைந்தே பயணிக்கிறார் வண்ணதாசன்.

 'அன்புடன் திருப்பித்தருக' என எழுதி புத்தகத்தை தந்த வீர சந்தானம் அவர்களை நினைவு கொள்கிறேன். என்னிடம் இரவலாக வாங்கிச் சென்றவர்களிடம் இது போல் எழுதித் தந்திருந்தால் வந்திருக்குமே திரும்பி அவை என நினைக்கும் அளவிற்கு சிறப்பாக இருந்தது அவருடைய கட்டுரை.

லயன் கா.முத்துகிருஷ்ணன், மதுரை – 20.

பாடம்

அந்தோனி தாசனின் நேர்காணலில் கஷ்டகாலத்தை அனுபவித்து இன்று சிறப்பாக வாழ்பவரைப் பற்றி அறிந்தோம். அவரைப் பாராட்ட வேண்டும். அவர் தன்னம்பிக்கைக்கு ஓர் எடுத்துக் காட்டு. பிரண்டையின் மூலிகை குணங்கள் பலரை அதைத் தேடிப்பிடித்து துவையலாக சாப்பிடத்தூண்டும். கஜா புயலின் தன்மையை நடந்ததை அதில் ஆட்சியாளர்களின் ஏதோ கடமைக்கு சென்றதும், செல்லாமல் இருந்ததையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தீர்கள். இயற்கை சீறினால் என்ன நடக்கும் என்பதற்கு கூடுதலான பாடம். அந்திமழை இளங்கோவன் எழுதிய ஜெர்மனிய & அமெரிக்க கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நிகழ்ச்சி புதிய செய்திகளை தருகிறது. அந்திமழை பெய்து கொண்டே இருக்க வேண்டும்.  

இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம்,  கீழக்கலங்கல் - 627860.

பந்தம்

ஒரு முறை நாவலாசிரியர் படுதலம் சுகுமாருடன் பேசிகொண்டிருந்த போது, நாயைக் கதாபாத்திரமாக்கி கதை எழுதாத எழுத்தாளர்களே இல்லை, போலும் என்று வியந்தார். வாஸ்தவம்தான். ஓரிடத்திலாவது நாய் குறித்து விமர்சிக்காமல் எந்த எழுத்தாளரும் எழுதியதில்லை என்று வழிமொழிந்தேன். விகடனில் நானும் ஒரே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அதில் ஹீரோ நாய்தான். இந்த நினைவுகள் கிளர்ந்தது எப்படி தெரியுமா! சமீபத்தில் ஒரு வார இதழை வாசித்த போது, அதில் இந்திரா சௌந்தர் ராஜனின் மானுடம் சிறுகதையில் ஒரு நாய் பாத்திரம். அடுத்து அந்திமழையை எடுத்து வாசித் தால் வண்ணதாசனின் வித்தை சிறுகதையிலும் நாய் பாத்திரம். ஓ... இது ஆதி மனிதனுடன் வேட்டைக்கு போனது முதல், இன்று அப்பார்ட்மென்ட் வாசலில் காவலாளியாக இருக்கும் வரை நாயுடன் நம் பந்தம் தொடர்வதன் வெளிப்பாடோ!

அண்ணா அன்பழகன், சென்னை - 78.

வியப்பு

தவறுவது எங்கே ? -  கட்டுரை அருமை

மகேந்திரனின் காமிரா கண்கள் சிறப்பு. எதை பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை. புலனாய்வு & ராவ் அவர்களின் கட்டுரை அருமை. கழுகைப் பற்றிய செய்திகள் வியப்பை தந்தன.

அ.முரளிதரன், மதுரை - 3.

புலனாய்வு

மாலன் சொன்னது போல புலனாய்வு இதழியலை தொடர்ந்து மேற்கொள்ள நெருக்கடிகளை தாங்கும் உறுதி வேண்டும். அத்தகைய சவாலான பணியை செய்வது சமுக வளர்ச்சிக்கு ஒரு பங்காகும். இதை உணராமல் சில இதழ்கள் விற்பனை என்ற வணிக நோக்கில் அரசியல் ஜோசியம் சொல்வதும், வதந்தி அக்கப்போர் விஷயங்களை பரபரப்புக்காக ஊதிப் பெரிதாக்குவதும், அரசியல், சமூக பிரச்சனைகள் சிக்காவிட்டால் செக்ஸ் சப்ஜெக்ட்டை தொட்டு படத்துடன் விளக்குவதும், சில இதழ்கள் கட்சி சார்புடன் இட்டுக்கட்டி எழுதுவதும் புலனாய்வு தர்மமல்ல. இதைத்தான் புலனாய்வு என்ற பெயரில் அவதூறு பரப்பும் விஷயங்களும் நடக்கின்றன என்று மாலனும் குறிப்பிட்டிருக்கிறார். மேலை நாட்டு புலனாய்வுக் கட்டுரைகளை வாசித்த போது, அவை கிராஃபிக்ஸ் ஜாலம் என்றால், நம்ம ஊரு புலனாய்வுகள் விட்டலாச்சாரி யாரின் வேலைகள்.

அ.யாழினி பர்வதம், சென்னை - 78.

சூடும் சுவையும்

அந்திமழை டிச18 இதழில் இடம் பெற்றிருந்த சிறப்புப் பக்கங்களில் விரிந்திருந்த புலனாய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சூடும், சுவையும் நிறைந்ததாகவும், சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவையாகவும், சுவாரசியம் குறையாமல் பதிவாயிருப்பது சிறப்பு. புலனாய்வு இதழ்களின் பெருக்கம் பாராட்டுக்குரியது எனினும் குற்றச் செயல்கள் குறைந்த பாடில்லையே  என்ற ஆதங்கமும் எனக்குண்டு. நிற்க, சிறுமியை விலை கொடுத்து வாங்கிய பத்திரிகையாளர் வில்லியம் தாமஸ் ஸ்டெட் தன்னுடைய கட்டுரையால் பெண்களுக்கான பாலியல் உறவுக்கான வயது 16 ஆக உயர்த்தும் சட்டம் இயற்ற காரணமாக இருந்தது பற்றி படித்த போது, அவரது தரத்தை மெச்சத் தோன்றியது. ஒரு நேர்மையான பத்திரிகையாளரால் ‘முடியாது என்பது கிடையாது'' என்பதை நிரூபித்த ஸ்டெட் பாராட்டுக்குரியவரே. துணிச்சலுடன் நேர்மையும் ஒன்றிணைந்த இதழாளர்கள் இருப்பின் சமூகக் கேடுகள் வெகுவாகக் குறைந்து விடலாம் என்ற எண்ணமும் கூட எழுந்தது. போலிகளையும் புகழ் பெற வைக்கும் சில பத்திரிகையாளர்கள் சிந்திப்பார்களாக! படிக்க வேண்டிய வரைவுகள் இவை. 

நவீன்குமார், நடுவிக்கோட்டை - 614602.

முத்திரை

தமிழ்நாட்டில் குறிப்பாக கணினி காலத்தில் இதழ் நடத்துவதென்பதே கடினமான முயற்சி. அதிலும் இலக்கிய இதழ் நடத்துவது மிகக் கடினம். ஆனால் இதனை திறமையாகக் கையாண்டு புலனாய்வுத் துறையில் முத்திரை பதிப்பவர்களும் உண்டு. புலனாய்வுத் துறைக்கு இங்கு மட்டுமல்ல; வெளி நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பு உண்டு. ஆளுங்கட்சியின் தாக்குதல்களைச் சமாளித்து, அடக்கு முறைகளை வெற்றி கண்டு நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு வெற்றிகரமாகக் கரையேறிய இதழ்களே பெரிதும் பாராட்டப்படுகின்றன.வெளி நாடுகள் பலவற்றில் புலனாய்வுச் செய்திகளால் பெரும் அரசியல் மாற்றங்களே நிகழ்ந்திருக்கின்றன. நமது தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பல ஏடுகள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றன.இந்தத் துறையில்  பணியாற்றுபவர்கள் உயிரையே பணயம் வைத்துப் பணியாற்றுவது பலருக்குத் தெரியாது. பொது மக்களுடைய ஆதரவும் இருக்குமேயானால், இங்கேயும் புலனாய்வுத்துறை இதழ்களால் வரலாறு படைத்திட முடியும்!

நெய்வேலி க.தியாகராசன்,கொரநாட்டுக்கருப்பூர் - 612501.

logo
Andhimazhai
www.andhimazhai.com